திருவாவடுதுறை ஆதீனம்

எட்டாவது உமாபதிசிவாசாரியர் சரித்திரம்

திருமறுமா லயன்முதலோர் மணிப்பிரம்பின் வழிபுரியத் தேவ தேவன்

கருணைவிழி கடைக்கணித்த பணிகள்புரிந் தத்துவிதக் கலப்பான் மும்மைப்

பொருள்வினவிப் பெறுஞான போதத்தைச் சனற்குமாரர் போற்ற நல்குங்

குருமணியைத் திருநந்தி நாயகனைப் பரம்பரையிற் குறித்து வாழ்வாம்.

 

பன்னரும் பெருமைச் சைவசித்தாந்த பரம்பரை நந்தியால் விளங்கத்

தென்மொழி முறையாற் போதமெய்ச் சித்தி சிவப்பிரகாசமென் றின்ன

முன்வழி சார்பி லுமாபதி யார்க்கு முதன்மை சா லருணந்தி  தேவர்

பொன்னடி பரவும் வெண்ணெய்  மெய் கண்டதேசிகர் பூங்கழல் புகழ்வாம்.

 

கட்டளைக் கலித்துறை

திருவார்  கயிலைத்  திருநந்தி  தேவர்  திருமரபில்

வருமா  சிரியன்  மறைஞான  சம்பந்த  மாகுரவன்

அருள்சா  ருமாபதி  தேசிகன்  செஞ்சர  ணாம்புயமென்

மருவார்  மலரிணை  யுள்கி  வழுத்தி  வணங்குதுமே.

அநாதிமலமுத்தராயும், உயிர்களுக்கு மாதாவும், பிதாவு மாவாராயுமுள்ள நடராசப்பெருமானே, ஓர் காலத்தில் மீ நாம் அவர்களுள் ஒருவரென்றருளிச்செய்யப் பெற்ற பெருமையையுடைய தில்லை வாழந்தணர் மரபிலே சைவசித்தாந்த சன்மார்க்கமும், ஸ்ரீ கைலையிலே எழுந்தருளியிருக்கும்

ஸ்ரீ கண்டபரமசிவன்பால் ஞானதீக்ஷையும் ஞானாபிடேகமும் சிவஞானபோதோபதேசமும் பெற்ற திருநந்திதேவர் அருளுபதேசமரபினராகிய  மெய்கண்டதேவர்  சந்ததியும்,    மேலோங்கும் வண்ணம் ஓர் சற்புத்திரர் திருவவதாரஞ்செய்தார்.  அவர், தம்மரபினுக்குரிய  சாதகன்மமாதியான சற்கருமங்களும், உமாபதி என்னும் நாமகரணமும், தந்தையார் செய்யப்பெற்று, முன்னைத்தவத்தானெய்திய முதுக்குறைவு துணையாக நிற்ப ஆரியமும் செந்தமிழும் அமைவு பெறப் பயின்று, வேதசிவாகமமாதியான மெய்க்கலைகள் யாவும் விரைவிற்றானே விழைந்தோதி வருவாராயினர்.

இங்ஙனமாகச்  சில ஆண்டுகளுள் எக்கலைகளும் எளிதிற் பயின்று சகலகலாவல்லுநராய் விளங்குந் தவப்புதல்வராகிய உமாபதியார், பின்னர் தந்தையாரால் சிவதீக்ஷைபெற்றுத் தமக்குரிய ஆன்மார்த்த பூசையையும், கோயிற் பூசையையுங் கைக் கொண்டு உரியகாலங்களில் திருக்கோயிலிற் சென்று, உள்ளத்துப் பதிந்த உழுவலன்பினால் நடராசப்பெருமானைப் பூசித்துவரும் பெரும்பேறுடையராய்

வாழ்ந்து வருவாராயினர். அக்காலத்தில்;  அவர்தமிழில் கோயிற்புராணம், திருமுறை கண்டபுராணம், திருத்தொண்டர் புராணசாரம், திருத்தொண்டர்புராண வரலாறு, திருப்பதிக் கோவை, திருப் பதிகக்கோவை என்னும் நூல்களை இயற்றினர்.  அன்றியும் வடமொழியில் பெளட்கராகம வியாக்கியாநம் முதலியனவுஞ் செய்தனர்.

பின்னர் உமாபதியார்க்கு முற்பிறவிகளிலும் இப்பிறவியிலும் உள்ள சிவபுண்ணியப்பயன்க ளெல்லாம், ஒருங்கே முற்றி இருவினை யயாப்பும் மலபரிபாகமும் எய்துவிக்க;   நாலாஞ்சத்திநிபாதம் வந்துசார்தலால், அப்பெருந்தகையார், வீடுபேற்றின் கண் அவா மிகவுடையராகி, “”ஞானாசாரியரை எங்ஙனம் நேடி எப்போது காண்பேம்”  எனக்  கவலை கூர்ந்திருந்தனர்.  இங்ஙனம் கவலை கூர்ந்திருப்பவராகிய உமாபதியார், சின்மய வியோமமாகித்  திகழுஞ் சிற்சபையிற்றிருநடனம்புரியுஞ் சிவபிரான் திருவருள் பிரேரித்திட  “”மறைஞானசம்பந்தர்  என்னும் ஞானாசாரியர் ஒருவர் திருக்களாஞ்சேரியிலுள்ள சிருங்காரவனத்தில் எழுந்தருளி யிருக்கின்றார்”  எனத்தேர்ந்து,  அங்குச்சென்று, ஞான தேசிகரைத் தரிசித்து, ஞானதீக்கையும், சிவஞானோபதேசமும், ஞானாபிடேகமும் பெற்று, அவ்வாசிரியருக்குத் துவிதீய ஆசிரியராகிய பெரும்பதவியையும் எய்தினர்.  பின்பு உமாபதிசிவாசாரியர் தமது ஞானாசிரியர்பால் அத்துவித சித்தாந்த நுண்பொருள் அமைதிபெற நன்காராய்ந்து,  அருட்பணி விடைபுரிந்து வருநாட்களில், ஞானதேசிகர் சிவபரிபூரணமுற்றருளத்தாம் வேதசிவாகம விதிப்படி ஞானதேசிகருக்குப் பூசை மாகேசுரபூசை சிறப்புறச் செய்து, அங்கு எழுந்தருளியிருந்தனர்.

அக்காலத்தில் சித்தாந்த சூத்திரமாகிய தமிழ்ச்சிவஞான போதத்திற்குச் சார்புநூலாகச் சிவப்பிரகாசமும், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை வெண்பா, மீகொடிக்கவி, உண்மைநெறி விளக்கம், நெஞ்சுவிடு தூது, மீமீ சங்கற்பநிராகரணம் என்னும் சித்தாந்த சாத்திரங்களும் இயற்றியருளினர்.  அன்றியும் தம்பால் அன்பாற் சரண்புகுந் தகைசால் மாணவர் பற்பலருக்கு ஞானதீக்ஷை செய்து, சிவஞானபோதம், சிவஞானசித்தி, இருபாவிருபது என்னும் மூன்று ஞான நூல்களையும், தாம் இயற்றிய சிவப்பிரகாச முதலாகச் சங்கற்பநிராகரணம் ஈறாயுள்ள எட்டு ஞான நூல்களையும் உபதேசித்து அங்கு நெடுங்காலம் வசித்திருந்தருளினர்.

அங்ஙனம் வசிக்கு நாட்களிலே, ஞானதேசிகர் அன்பர்கள் பிரார்த்தனைக்கு இயைந்து, கொற்றவன்குடிக்கு எழுந்தருளி அன்பர்களால் நிருமிக்கப்பட்ட திருமடத்திலே அமர்ந்து, பரிபக்குவம் ஆராய்ந்து, மாணவர்களுக்கு ஞானோபதேசஞ்செய்து வருவாராயினர்.  இது நிற்க.

சிதம்பரத்தின் எல்லைக்காவற்றொழில்புரியும் பெத்தான் என்னும் பெயருடைய சாம்பானார் ஒருவர், முன்னைப்பிறவிகளில் மூதறிவானியற்றிய பெருந்தவத்தாற் கருணைப்பெருங்கடலாகிய நடராஜப்பெருமானிடத்துத் தமக்கு மெய்யன்பு பெருகா நிற்பத், திருக்கோயிலையடைந்து, மதிற்புறத்தே நின்று சுவாமிதரிசனஞ் செய்து வெளியேவருஞ் சிவனடியார்களைத் தரிசித்து, அன்பினால் நெக்கு  நெக்குருக

நிலமிசை வீழ்ந்து நமஸ்கரித்தெழுந்து, ஆனந்தபரவசராய் ஆடிப்பாடிச் செல்வாராயினர்.  இங்ஙனமாக நிகழுநாளினில் ஓர் நாள், நடராஜப்பெருமான் திருவருளால் அப்பெருமானுக்கு நிவேதனம் அமைத்தற்கு நாடோறும் விறகுகொடுக்குந் திருத்தொண்டு நாம் செய்யத்தக்கதே எனத்துணிந்து அந்நாள் தொடங்கி அத்திருத்தொண்டினை அன்போடு அடைவே இயற்றி வருவாராயினர்.

இங்ஙனஞ் சிலநாட்சென்றபின் ஓர்நாள் சாம்பானார் வழக்கப்படியே விறகுகட்டினைக்கொண்டு, கீழைக்கோபுரவாயினிலிறக்கி வைத்துவிட்டு  நிற்கும்போது நடராசப்பெருமான், தம்மை அருச்சிக்கும் அந்தணர் ஒருவர்போல அங்குச்சென்று, சாம்பனாரைநோக்கி “”அன்பனே! நீ நாளைமுதலாகக் கொற்றவன்குடியில் உமாபதிசிவாசாரியசுவாமிகள் திருமடத்திற்கும் விறகுகொடுத்து வருவாயாக”   எனப்பணித்து அக்கணத்திலே மறைந்தருளினர்.  உடனே சாம்பானார் மனந்திகைத்துச், சிறிதுபோழ்து மரம்போல அசைவற்றுநின்று, பின் ஒருவாறு தெளிந்து, இங்கு எழுந்தருளியவர் நம்மிறைவராகிய ஞானநடராஜர் எனநிச்சயித்துத், திருவருளை நினைந்து நினைந்து மனம் உருக, உரோமஞ்சிலிர்ப்பக், கண்ணீர் ஆறாகப்பெருகிவழிய, நாத்தழுதழுப்பப் பலவாறு துதித்துக் கொண்டு சென்று, தெற்குக் கோபுரவாயிலை அடைந்து பலமுறை வீழ்ந்து நமஸ்கரித்துத், திருவீதி வலம்வந்து மீண்டும் நமஸ்கரித்தெழுந்து விடை பெற்றுக் கொண்டு அரிதின்நீங்கித் தமது குடிசைக்குச் சென்றனர்.

பின்பு சாம்பானார் மற்றைநாண் முதலாக உமாபதிசிவாசாரிய சுவாமிகள் திருமடத்திற்கும் விறகு கொடுத்துவந்தனர்.  அங்ஙனமாக நாடோறும் அவர் மெய்யன்பினோடு அப்பணிபுரிந்துவரு நாட்களிலே,  ஞானநடராசப்பெருமான், அத்திருப்பணிக்கு இரங்கி, ஓர்நாள் சாம்பானார் வழக்கப்படி மத்தியான பூசையில் சுவாமி தரிசனஞ்செய்து வெளியேவந்த சிவனடியார்களைத் தரிசித்துக்கொண்டு வீதிவலம் வரும்போது, தெற்குவீதியிற் கோபுர வாசலுக்கு நோராக இரண்டு பணம் வைத்தருளினர்.  சாம்பானார் அதனைக்கண்டு, இஃது வழிச்செல்வோர் ஒருவர் கையினின்றும் வழுவியதாகுமெனக் கழித்துவிட்டுத் திருவடித்தியானம் இடையறாது செய்துகொண்டு தாம் முன்போல் வீதிவலம்வந்தனர்.  அப்பொழுதில் அம்பலவாணர் அசரீரியாக நின்று, “”அன்பனே!  இந்த இரண்டுபணமும் உனக்காகவே வைத்தோம்.  எடுத்துக்கொள்வாயாக” எனத் திருவாய்மலர்ந்தருள, அதைக்கேட்ட சாம்பானார் அதிசயமுற்று எம்பெருமான் திருவுள்ளமிருந்தவண்ணம் இதுவோ!  என்று நினைந்து, அன்பினால் கண்களினின்றும் ஆனந்த அருவிபொழிய நின்று, சிவநாமங்களையோதி வழிபட்டுப் பின்பு அப்பணத்தினை எடுத்து இருகண்களினுமொற்றிக் கொண்டு சென்று, வீதிவலம் வந்து விடைபெற்றுக் கடைவீதியிற் சென்று உணவிற்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு, குடிசைக்குச் சென்று அங்கே தமக்குநிகழ்ந்ததை மனைவியாரிடத்துக் கூறினர்.  அதனைக் கேட்ட அவர் மனைவியார் ஆராமையும் அதிசயமும் எய்தித் தம்நாயகரிடத்து மிகவும் அன்புபாராட்டி யயாழுகினர்.  இங்ஙனமே அடியார்க்கெளியராகும் அம்பலவாணர் நாடோறுந் தெற்குக் கோபுரவாயிலுக்கு நேராக இவ்விரண்டு பணம் வைத்தருளச்; சாம்பானார் அதனையயடுத்துப் போய் யாதொரு குறைவுமின்றி வாழ்ந்திருந்தனர்.

இங்ஙனம் நிகழுநாளிலே திருச்சிற்றம்பலவர், பெத்தான் சாம்பானார்க்குப் பிறவித்துன்பம் ஒழித்தருளவும், தலையன்பு சார்ந்த அச்சாம்பானாராகிய தவப்பெரியார் செய்துவரும் மெய்மைத் திருத்தொண்டின்றிறத்தை நாமெல்லா முணர்ந்துய்யவும் திருவுளங் கொண்டு ஓர்நாள் எங்கும் வெள்ளம்பெருகுமாறு மழை பொழியச் செய்தனர்.  அதனாற் சாம்பானார் காட்டிற் செல்லுதற்கு வழிதெரியாது மயங்கிச் செய்வதொன்று முணராமற் கவலைக்கடலுளாழ்ந்துகிடந்தனர்.  அன்று மாலையில் அம்பலவாணர் ஓர் அந்தணர்குலத்து மெய்யடியார் போல் அங்குச் சென்று, சாம்பானாரைக் கூவியழைத்து “”நீ இன்றைய தினத்தில் திருக்கோயிலுக்கும், திருமடத்திற்கும் ஏன் விறகு கொடுக்கவில்லை” யயனவினாவியருள; அவர் அதனைக் கேட்ட அளவில் முன்னையினும் மிகுந்த அச்சமுடையராகி நின்று, “”சுவாமி! இவ்விடம் எங்கும் மழைபெய்து காடு முழுதும் வெள்ளம் நிறைந்துகொண்டதனால் விறகு வெட்டிக் கொண்டு போய்க்கொடுத்தற்குத் தடைநேர்ந்தது” எனக்கூற; அதற்கு அடியவர் வடிவந்தாங்கி வந்த அம்பலவாணர், “”நீ இன்று கொடுக்கவேண்டிய விறகையுஞ்சேர்த்து நாளைக்குத் தவறாது கொடுப்பாயாக” எனத் திருவாய்மலர்ந்தருள;  அதனைச் செவியிற் கொண்ட சாம்பானார்,  “”சுவாமிகள் கட்டளையிட்டருளியவண்ணமே செய்கிறேன், வழியில் வெள்ளப்பெருக்குத் தடைசெய்கின்றதே” என மீண்டும் விண்ணப்பஞ் செய்ய;  அம்பலவாணர் சாம்பானாரை நோக்கி, “”அன்பனே! நீ விறகுகொண்டுபோகும்போது வெள்ளப் பெருக்கினைப்பார்த்து, யான் சிற்சபேசன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்கும், கொற்றவன்குடியில் உமாபதி சிவாசாரியசுவாமிகள் திருமடத்திற்கும், விறகுகொண்டுபோவதற்கு இப்போது வழிவிடவேண்டுமெனக் கேட்டால் உடனே அவ்வெள்ளப் பெருக்குப் பிரிந்து வழிவிடும்” எனத் திருவாய்மலர்ந்து,

அடியார்க்  கெளியன்சிற்  றம்பலவன்  கொற்றங்

குடியார்க்  கெழுதியகைச்  சீட்டுப்  ‡  படியின்மிசைப்

பெத்தான்சாம்  பானுக்குப்  பேதமறத்  தீக்கைசெய்து

முத்தி  கொடுக்க முறை.

என்னும் திருப்பாசுரம் வரையப்பட்டசீட்டைப் பூமியில் வைத்து, “”திருமடத்தில் எழுந்தருளியிருக்கும் ஆசாரியசுவாமிகள் திருமுன்பு அடைவிப்பாயாக” எனப்பணித்துவிட்டு உடனே மறைந்தருளினர்.  சாம்பானார் பேரதிசயமுற்று, இஃதென்ன விந்தை!  இவ்விடத்தில் அன்பர் வடிவந்தாங்கி யயழுந்தருளியவர் சிற்சபேசர் எனத்தேறி, எம்பெருமானுக்கு எளியேன்பாலும் இத்தகைய பெருங்கருணையுளதோ!  எனநினைந்து, அன்பினால் மனங்கரைந்து, கண்ணீர்வார ஆனந்தக்கூத்து ஆடியும் பாடியும் நெடிதுபோழ்து நின்று, பின்பு தன்குடிசைக்குச் சென்று, மனைவியார்பால் நிகழ்ந்தனயாவுங்கூறி மகிழ்ந்திருந்தனர்.  இஃதிங்ஙனமாக,

ஞானதேசிகர், அன்று திருமடத்தில் மாகேசுரபூசைக்குக் காலந்தாழ்த்தமை யாதுபற்றி? என அமுதமைப்போரை வினாவியருள; அதற்கு அவர்கள்  “”வழக்கமாக ஓர்பஞ்சமன் விறகுகொடுத்துப் போவான். இன்று அவன் வராமையால் திருவமுதமைக்கக் காலந்தாழ்த்துவிட்டது” என்று விண்ணப்பஞ் செய்தனர்.  அதனைத் திருவுளத்திற்கொண்டருளிய ஞானதேசிகர் அவ்வடியவர்களை நோக்கி, “”அவன் நாளைக்கு இங்குவந்தால் நம்மிடத்துத் தெரிவிப்பீராக” எனத் திருவாய்மலர்ந்தருளினர். இது நிற்க.

பின்பு சாம்பானார், அடியவர் வடிவந்தாங்கிவந்த அம்பலவாணர் ஆணையளித்தருளியவாறு திருக்கோயிலுக்கும், திருமடத்திற்கும், மறுநாட்காலையில் விறகுசேகரித்து மனைவியுடன் செல்வார், வழியிற் பெருகியோடும் வெள்ளத்தை நோக்கி அம்பலவாணர் தமக்கருளியவாறு வேண்ட ;  அத்தருணத்தில் அவ்வெள்ளமானது பிரிந்து வழிவிட்டு நிற்ப ; அதுகண்ட பெத்தான் சாம்பானாரும் அவர் மனைவியாரும் பெரிதும் ஆச்சரியமுற்று, அம்பலவாணரது அருள்விளையாடலே எனச் சிந்தித்து, மகிழ்ந்து, துதித்துக் கொண்டு, அவ்வழியே திருக்கோயிலுக்குச் சென்று, வழக்கப்படி திருவிறகுப் பணிவிடை புரிந்து, அங்குநின்றும் புறப்பட்டுக் கொற்றவன்குடிக்குச் சென்று, உமாபதிசிவாசாரிய சுவாமிகள் திருமடத்தின் சமீப எல்லையை யடைந்து, அங்கு விறகுக்கட்டுக்களை மனைவியுடன் கீழே இறக்கிவைத்துக் கொண்டு நின்றனர்.  அதை அடியவர்களில் ஒருவர் ஞானதேசிகர் திருமுன்புசென்று “”விறகு கொண்டுவரும் பஞ்சமன் இப்போது இங்குவந்து நிற்கின்றான்” என்று விண்ணப்பிக்க ;  ஞானதேசிகர் திருவுளம் மகிழ்ந்து தமது அடியார்களோடு திருமடத்து வாயிலிலே எழுந்தருளிவந்தனர்.  அங்ஙனம் ஞானதேசிகர் எழுந்தருளியதைக் கண்டமாத்திரத்தே பெத்தான் சாம்பானார் அடியற்ற மரம்போல் வீழ்ந்து, பலமுறை நமஸ்கரித்தெழுந்து, உடனே அம்பலவாணர் அளித்தருளிய திருமுகத்தைத் திருமுன்னர்வைத்து, மீண்டும் நமஸ்கரித்து நின்றனர்.  அத்தருணத்தில் அங்குநின்ற அடியவர்களில் ஒருவர் அத்திருமுகத்தை யயடுத்துவந்து கொடுக்க; ஞானதேசிகர் தமது கரத்திலேற்று வாசித்துத் திருவுளம் மகிழ்ந்து, பெத்தான் சாம்பானாரைப் பெரிதும்நோக்கி, அவர்தம் பக்குவமேன்மையை முற்றவோர்ந்து திருவருள் சுரந்தருளுவாராயினர்.

பின்பு ஞானதேசிகர் பெத்தான்சாம்பானாருக்கு உடனே பரமுத்தியைப்பயப்பதாகிய சத்தியோ நிருவாண தீக்கைசெய்யத் திருவுளங் கொண்டு அங்ஙனமே திருநோக்களித்தருள ;  அக்கணமே யாவருங் காணும்படி அத்தவப்பெரியோரைச் சூழ்ந்து ஓர் சோதி தோன்றிச் சிறிது போழ்தினுள் அவரது பொய்யுடலை மறைத்தது.  அதனைக் கண்ணுற்று நின்ற அடியவர் யாவரும் பேரற்புதமெய்தி, ஆனந்தபரவசராய்த் தமது ஞான தேசிகர் திருமுன்பு வீழ்ந்து, நமஸ்கரித்து நின்றனர்.   அப்பொழுது அங்கு நின்ற பெத்தான்சாம்பானார் மனைவியார், தங்கணவரைக் காணப்பெறாது மயங்கி, அச்சமும் அவலமும் எய்தி, நிலத்தில் விழுந்து கிடந்து புலம்பினர்.  அதனைக்கண்ட திருக்கூட்டத் தன்பர்கள் அவருக்கு நிகழ்ந்த உண்மையை எடுத்துக் கூறிப்பலவாறு தேற்றவும்; அவர் செவிக்கொள்ளாது எழுந்து புலம்பிக்கொண்டு விரைந்தோடிச் சென்று, தமது சுற்றத்தாரோடு அரசனது அரண்மனையின் புறத்தையடைந்து, அங்குமுறையிட்டு நின்றனர்.  அதனைக் காவலாளரால் உணர்ந்த அரசன், பெரிதும் வியப்புற்று, இதனை யிப்பொழுதேசென்று ஆராய்தல் வேண்டுமெனத் தன்னுள்ளத்திற் கொண்டு, மந்திரிமுதலானோர் புடைசூழ்ந்துவரப் புறப்பட்டுத் திருமடத்தை யடைந்து, அவ்விடத்து ஞானதேசிகரைத் தரிசித்துப் பணிந்து நிற்க, ஞான தேசிகர் அவ்வரசனைத் தம் அருகிருக்கப்பணித்து, அன்புமீதூர அளவளாவிக்கொண்டிருந்தனர். பின்பு ஞானதேசிகர் அரசன் உள்ளத்திற் கொண்டுவந்த ஐயத்தை நீக்கியருளத் திருவுளங்கொண்டு நிகழ்ந்தன யாவும் எடுத்துரைத்தருள, அரசன் பேரற்புதமெய்தி, ஞானதேசிகரை நோக்கித், தேவரீர் இங்ஙனமியற்றிய திருவருட்செயல் யாவருக்கும் புலப் படுமாறு செய்தருளவேண்டுமென வேணவாவோடும் இரந்து விண்ணப்பஞ் செய்து நிற்ப; ஞானதேசிகர் அதனைத் திருவுளத்திற் கொண்டு, அவ்விடத் திற்றானே கோமுகையின் பக்கத்தில், தாம் நாடோறும் அழகிய திருச்சிற்றம்பல  உடையவருக்கும், அம்பலவாணருக்கும் ஆட்டும் அபிடேக நீரால் வளர்ந்து   மாகேசுவர பூசையிற் கறியமுதுக்குக் காய்கொடுத்துவந்த முள்ளிச்செடி ஒன்று பரிபக்குவம் வாய்ந்திருப்பதையோர்ந்து, அதற்கு முத்தி கொடுத்தருளத் திருவுளங்கொண்டு, அதனை அரசனுக்குத் தெரிவித்தருள;  அரசன் ஆணையால் யாவரும் வந்துகூடினர்.  பின்பு ஞானதேசிகர் அரசன் முதலானோரை அழைத்துக் கொண்டு முள்ளிச் செடிக்கு முன்னாக வெழுந் தருளி, அதனிடத்துத் தாம் திருவுளநோக்கஞ் செய்தருள ;  அங்கு யாவருங் காணும் படி ஒர்சோதி வடிவந் தோன்றி, அம்முள்ளி வடிவத்தை மாற்றி, ஆகாயத்தில் எழுந்துமறைந்தது.  அதனைக் கண்ணுற்ற அரசனும் மற்றுமுள்ளோரும் பேரற்புதமெய்தி, ஞானதேசிகர் திருவடிகளில் வீழ்ந்து நமஸ்கரித்து மெய்யன்பினால் பலவாறு துதித்துக் கொண்டு விடைபெற்றுச் சென்றனர்.

பின்பு சிலகாலங்கழித்து ஞானதேசிகர், “”நான் பெற்ற வின்பம் பெறுகவிவ்வையகம்” எனத்தமது சந்தான முதற்குரவராகிய திருநந்தி தேவரிடம் அருளுபதேசம்பெற்ற மீதிருமூலநாயனார்  திருமந்திரத்துத் திருவுளம்பற்றியருளியவாறே, தாமும் அச்சந்தான முறையிற்பெற்ற அருளுபதேசமாண்பினால் அநுபவிக்கும் மெய்யின்ப வாழ்வினை இத்தமிழுலகம் வழிமுறையிற் பெற்றுய்யும் வண்ணம் திருவுளம்பற்றித், தம்பால் மூவகைத் தீக்கையுஞ் சித்தாந்தோபதேசமும் பெற்ற அருணமச்சிவாயர்க்கு ஓர்சுபதினத்திலே ஞானாபிடேகஞ்செய்து தமக்கு துவிதீய ஆசிரியராக வைத்தருளினர். பின்னர் சில பகல் சென்று,  தாம் பூசித்து வந்த ஆன்மார்த்த அழகிய திருச்சிற்றம்பலவுடையவரையும் அம்பலவாணரையும் என்றும் பூசித்துவரும் அதிகாரத்தையுங் கொடுத்து, வீடுபேற்றினை விரும்பிவந்தடைவர்க்குப் பரிபாக நோக்கி அருளுபதேசஞ்  செய்யும் முறைமையை விளக்கி, அந்நெறிநிற்க வைத்துத்தாம் கொற்றவன்குடியிலே சித்திரை மாதத்து அத்தநட்சத்திரத்திலே தமது   திருவுருஜோதிர்மயமாக, அம்பலவாணர் திருவடிநீழலை அடைந்தருளினர்.

உமாபதிசிவாசாரியசுவாமிகள், திருநந்திதேவர் அருளுப  தேச மரபினராகிய மறைஞான சம்பந்தசுவாமிகள்பால் அருளுபதேசம் பெற்றனர் என்பதூஉம், திருச்சிற்றம்பலவர் திருமுகம் பெற்றுப் பெத்தான் சாம்பானுக்கு முத்திகொடுத்தருளினர் என்பதூஉம், இவ்வாசிரிய சுவாமிகள் இயற்றிய சிவப்பிரகாச முதலிய ஞான நூல்களிற் கூறிய சந்தான பரம்பரைக் குருதோத்திரங்களானும் சேக்கிழார் பிள்ளைத் தமிழுள் செங்கீரைப்பருவத்தில் நான்காவது செய்யுளானும் இனிது புலப்படும்.

சிவப்பிரகாசம்

தேவர்பிரான்  வளர்கயிலை  காவல்  பூண்ட

திருநந்தி  யவர்கணத்தோர்  செல்வர்  பாரிற்

பாவியசத்  தியஞான  தரிசனிக  ளடிசேர்

பரஞ்சோதி  மாமுனிகள்  பதியா  வெண்ணெய்

மேவியசீர்  மெய்கண்ட  திறலார்  மாறா

விரவுபுக  ழருணந்தி  விறலார்  செல்வத்

தாவிலருண்  மறைஞான  சம்பந்த  ரிவரிச்

சந்தானத்  தெமையாளுந்  தன்மை  யோரே.

 

பார்திகழ  வளர்சாம  வேத  மல்கப்

பராசரமா  முனிமரபு  பயில  ஞானச்

சார்புதர  வந்தருளி  யயம்மை  யாண்ட

சைவசிகா  மணிமருதத் தலைவ  னந்தண்

கார்மருவு  பொழில்புடைசூழ்  மதின்மீதே  மதியங்

கடவாமை  நெடுங்கொடியின்  கரந்தகையுங்  கடந்தைச்

சீர்நிலவு  மறைஞான  சம்பந்த  னெந்தை

திருவளரு  மலரடிகள்  சென்னி  வைப்பாம்.

 

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்

 

தாயவொளி  யிருடபுபொன்  மாளிகைத்  தில்லைச்

சபாநடன  நாதர்  பெத்தான்,

சாம்பானை  யுய்த்தனம்  நிருவாண  தீக்கையாற்

றகுமுத்தி  யடைவி  யயன்றே,

யாயதிரு  முகமுய்த்  திடப்பெற்ற  கைலாய

வம்பரம்  பரையி  லளவா,

வருளுருவ  மாயவ  தரித்திட்ட  மெய்ஞ்ஞான

வற்புத  வுமாபதிசிவ,

னேயமிக விம்மைக்கு மறுமைக்கு  மாதார

நிலயதீ  தென்றுணர்ந்து,

நினதுவர  லாறருமை  பாராட்டி யருள்செய

நிரம்புமான்  மியமடைந்தாய்,

தேயநிகழ்குன்  றையம்  பதியருண்  மொழித்தேவ

செங்கீரை  யாடியருளே,

திருத்தொண்டை  நன்னாட்டு  வேளாளர்குலதிலக                                                               செங்கீரை  யாடியருளே.

 

மெய்கண்டசாத்திரம்  பதினான்கு

வெண்பா

                                                “”உந்தி  களிறு  வுயர்போதஞ்  சித்தியார்

பிந்திருபா  வுண்மை  பிரகாசம்  ‡  வந்தவருட்

பண்புவினா  போற்றிகொடி  பாசமிலா  நெஞ்சுவிடு

வுண்மைநெறி  சங்கற்ப  முற்று”.

 

சந்தானகுரவர் திருநட்சத்திரம்

சித்திரை யத்த  முமாபதி  யாவணித்  திங்கடனி

லுத்திரஞ்  சீர்கொண்  மறைஞான  சம்பந்த  ரோதுகன்னிச்

சுத்தமெய்ப்  பூர  மருணந்தி  யைப்பசிச்  சோதிதனில்

வித்தக  மெய்கண்ட  தேவர்  சிவகதி  மேவினரே.

 

Menu Title