திருவாவடுதுறை ஆதீனம்

முதலாவது திருநந்திதேவர் சரித்திரம்

அங்கணன்கயிலை காக்குமகம்படித்தொழின்மை பூண்டு

நங்குரு மரபிற் கெல்லா முதற்குரு நாத னாகிப்

 பங்கயந் துளவ நாறும் வேத்திரப் படைபொ றுத்த

  செங்கையயம் பெருமானந்தி சீரடிக் கமலம் போற்றி.

 

பூர்வகாலத்திலே சகல வேதாகமங்களையும் உணர்ந்து சிவஞானச் செல்வராய்ச் சிவபெருமானிடத்து மெய்யன்புடையராய், ஐம்புலன்களுந் தம் ஏவல்வழிநிற்ப அறநெறிவழுவாதொழுகும் அந்தணர்குல திலகராய், மீசிலாதரென்னுஞ்      சிறப்புப் பெயர்வாய்ந்த       ஒருமுனிவர்    இருந்தார்.

அம்முனிவர் தாம் புத்திரப்பேறு கருதித் திருவையாற்றை அடைந்து, அயனரி தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து, சிவபூசைமுடித்துத், திருக் கோயிலைப் பிரதக்ஷணஞ் செய்து, சிவபெருமான் திருமுன்புநின்று வணங்கி, ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைச் செபித்துப் பஞ்சாக்கினிமத்தியில் ஒருகாலினின்று, அநேக நாட்கள் தவஞ்செய்து கொண்டிருந்தார்.

சிவபெருமான் அதற்கிரங்கி இடபவாகனத்தின்மேற் பார்வதி சமேதராய் எழுந்தருளிவந்து, முனிவனே!  நீ விரும்பிய வரத்தைக்கேள்.  என்ன; அவர் எம்பெருமானே!  அடியேனுக்கு ஒரு சற்புத்திரரைத்       தந்தருளவேண்டுமென்று பிரார்த்தித்தார்.  அதற்கு எண்ணிரண்டாண்டு வாழ்நாள்பெறும் ஒருசற்புத்திரன் நீ செய்யும் யாகபூமியில் உழுபடையின் மூலமாக வெளிப்படுவர் எனக்கூறி மறைந்தனர்.

பின்னர் அவ்வாறே சிலாதமுனிவர் யாகஞ்செய்யக்கருதி, பொன்னேர்பூட்டி யாகசாலையை யுழுதபொழுது உழுபடைச்சாலின் மூலமாக ஒரு மாணிக்கப்பெட்டி தோன்ற, அதனை முனிவரர் திறந்து பார்த்தனர்.  அதனுள்ளே நெற்றிக்கண்ணும், இளம்பிறை தவழுஞ் சடையும்,  நான்கு தோளுமாக விளங்குஞ் சிவ மூர்த்தத்தைக்கண்டு, மயங்கி  தோத்திரஞ்செய்து நின்றார்,  அப்போது முனிவனே! பெட்டியை மூடித்திற என்று, ஆகாயத்தில்  ஓர்   அசரீரிவாக்குத்    தோன்றலும்,  அவ்வாறே மூடித்திறந்தபொழுது அப்பெருமானார் முன்தோன்றிய திருவுருமாறி ஒரு இளங்குழவியாகி அழுதனர். முனிவர்,  திருவருளை  நினைந்து,   ஆனந்த சாகரத்தழுந்தி, ஒருவாறுதெளிந்து, அக்குழந்தையையயடுத்து மார்போடணைத்து, உச்சிமோந்து, தமது மனைவியாரிடத்துக் கொடுப்ப; அவ் வம்மையார் அக்குழந்தையைத் தமது இருகரங்களாலும் ஏந்தி வாங்கிப் பாலுட்டி வளர்த்து வந்தனர். முனிவர் அக்குழந்தைக்குப் பெரியோர்களால் செப்பேச்சுரன் என்று நாம கரணஞ்செய்வித்து, கல்வி பயிலச் செய்து வரு நாட்களில் அப்பிள்ளைக்கு எண்ணிரண்டாண் டெய்தாநிற்ப; தாய் தந்தையர் அது நோக்கி வருந்துவாராயினர்.

அதனையுணர்ந்த அப்புத்திரர், பெற்றோரைநோக்கி நீங்கள்  மனம்புலர்தற்குக் காரணம்  யாதென வினாவ,  அவர்கள்  தமது  கருத்தைத் தெரிவிக்க, அவர் தாய் தந்தையரை நமஸ்கரித்து “”நீவிர் வருந்தற்க யான் தவஞ்செய்து அழியாவரம் பெறுகின்றேன்” என்று தேறுதல்கூறி, அனுமதிபெற்று அவ்விருவரையும் வணங்கி விடைபெற்றுத் திருவை யாற்றை அடைந்து, திருக்கோயிலின் பாங்கருள்ள அயனரிதீர்த்த மத்தி யினின்று அருந்தவஞ்செய்ய, அதற்கு இரங்கிச் சிவபெருமான் இடப வாகனத்தின்மீது உமாதேவியாரோடும் எழுந்தருளி நித்திய தேகந்தந்து, ஞானதீக்கைபுரிந்து, அவருக்கு நந்தி யயன்னுந் திருநாமஞ்சாத்தி, ஞானா பிடேகஞ்செய்து சாரூப்பியமளித்து, அவரோடு திருக்கயிலை யடைந்து, அங்குச் சிவகணங்களுக்கெல்லாம் தலைவரா யிருந்து, காவற்றிருத் தொண்டு புரிந்து வரும் வண்ணம் அவருக்குச் சுரிகையும் பிரம்பும், கொடுத்துத் திருமுடிசூட்டியருள, அவர் அவ்வாறே அங்கமர்ந்து அருட் பணிபுரிந்து வருநாட்களில் ஸ்ரீகண்டபெருமான் கருணைகூர்ந்து வேதசிவாகமங்களை உபதேசித்து அபரசிவனென்னும் சிறப்பபிதானங் கொடுத்தருளினர்.

அங்ஙனம்,  வேதசிவாகமங்களெல்லாம் கேட்டருளிய நந்தி பெருமான் சீகண்டமுதல்வரை வணங்கிநின்று, வேதசாரமாகிய சிவாகமங்கடோறும் சரியை முதலிய நாற்பாதங்களுஞ் சிறுபான்மை வேறுவேறாகக் கூறப்பட்டன. அவற்றுள் உண்மையாவது இதுவென்று அருளிச்செய்ய வேண்டுமென இரந்து விண்ணப்பஞ்செய்து வினாயவழிச், சீகண்டமுதல்வர் கருணைகூர்ந்து  “”நன்றே வினாவினாய்! மீஅநந்ததேவர் எமக்கு அருளிச்செய்தவாறே கூறுகின்றோம்; கேட்பாயாக”  என்றருளிக், “”கற்பந்தோறும் படைப்பு வேறுபாடுங் கேட்போர்கருத்து வேறுபாடும் பற்றி அவற்றிற்கு இயையச் சரியை முதலிய மூன்றுபாதங்களும் ஆகமங்களின் வெவ்வேறாகக் கூறப்பட்டன.  ஆகலான்; அவற்றுள் எவ்வாகமத்தின்வழி யார்தீக்கைபெற்றார்?  அவ்வாகமத்தின் வழி அவர் ஒழுகற்பாலர்.  இனி, ஞானபாதமாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலான் அது பல திறப்படுதல் பொருந்தாமையின், அவையயல்லாந் தூலாருந்ததி முறைமைபற்றிக் கூறப்பட்டனவன்றி மாறுகோளல்லவென்பது  வகுத்துணர்த்துதற் பொருட்டு, இரெளரவாகமத்துட் பன்னிரு சூத்திரத்தாற் கூறப்பட்டது சிவஞானபோதம்  என்பதோர் படலம்:  அது கேட்டார்க்கு எல்லாவாகமப் பொருள்களும் மாறுகோளின்றி இனிது விளங்கும்” எனக்கூறி, அச்சிவஞானபோதத்தை நந்தி பெருமானுக்குஅருளிச்செய்தார்.

நந்தி பெருமானும் அது கேட்ட துணையானே எல்லா ஐயமும் நீங்கி, மெய்ப்பொருள் தெளிந்து, சிவாநந்த வாரிதியின் மூழ்கி, முன்போலச் சிவபிரான் திருவணுக்கத்திருத்தொண்டு புரிந்து வருவாராயினர்.

அங்ஙனம் நந்திபெருமானுக்குச் சிவபிரான் வேதாந்தத் தெளிவாஞ் சைவசித்தாந்தத்தரும் பொருளுண்மையை விளக்கியருளிய திருவருட்டிறத்தினை, பிரமபுத்திரராகிய சனற்குமார முனிவர் முதலாகிய எண்மருந்தெரிந்து, திருக்கயிலையடைந்து, சிவபிரானைத்தெரிசித்துத், தமக்கும் அங்ஙனம் பதி, பசு, பாசத் துண்மையை உபதேசித்தருள வேண்டு மென இரந்து விண்ணப்பஞ்செய்துநிற்ப; சிவபிரான் அவர்களது பரிபாக நிலைமையைத் திருவுளத்திற்கொண்டருளி நந்திபெருமானை அழைத்துக்  மீமீ குரு சந்தானம் விளங்க அவர்களுக்கு முறையானே அருளுபதேசஞ் செய்யும்படி ஆணைதந்தருள, நந்திபெருமான் அவர்கட்குச் சிவதீக்கை புரிந்து ஞானாபிடேகஞ்செய்து தமக்குச்சிவபிரான் உபதேசஞ்செய்தருளிய முறையாக சிவஞானபோதமென்னும் ஞானநூலினைஉபதேசித்தருளினர்.

இங்ஙனம், முனிவர்கட்கும், தேவர்கட்கும், சிவகணங்கட்கும், ஞானோபதேசஞ்செய்துகொண்டு, அங்கணன்கயிலை காக்கும் அகம்படித் தொழின்மையை இடையறாப்பேரன்போடு இயற்றி, நங்குருமரபிற் கெல்லாம் முதற்குருநாதனாகி அங்கு வீற்றிருந்தருளினர்.

திருநந்திதேவர் திருக்கயிலாயபதியாகிய சீகண்ட பரமசிவனால் சாரூப்பியமும், சிவகணங்களுக்குத் தலைவராய்ச் சுரிகையும் பிரம்பும், பெற்று அங்கணன் கயிலைகாக்கும் அகம்படித் தொழின்மையும் அபரசிவனென்னுஞ் சிறப்பபிதானமும் பூண்டருளினர் என்பதூஉம், குருசந்தானம் விளங்க இவர்பால் அருளுபதேசம்பெற்றவர் சனற்குமார முனிவர் முதலாகிய எண்மர்என்பதூஉம், திருத்தொண்டர் பெரியபுராணம் சிவநெறிப்பிரகாசம் திருமந்திரம் முதலிய நூல்களிற் கூறியவாற்றால் இனிது புலப்படும்.

Menu Title