திருவாவடுதுறை ஆதீனம்

இருபத்து நான்காவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்

திருக்கயிலாய பரம்பரைத் திருநந்தி அருள்மரபு சுத்தாத்வைத சைவ சித்தாந்த சமயாசாரிய பீடமாய் விளங்குகின்ற திருவாவடுதுறை ஸ்ரீமுக்தி பஞ்சாக்கர ஞான சற்குருதேசிக சுவாமிகள் ஆதீனம் இருபத்து மூன்றாவது குருமகாசந்நிதானமாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக மூர்த்திகள் அவர்கள் நந்தன வருடம் விருச்சிகரவி ஏழாம் நாள் (22.11.2012) குருவாரத்தன்று பரிபூரணமானார்கள், அற்றை நாளில் திருக்கூட்டத்துத் தம்பிரான்கள் ஒன்று கூடி அத்திருக்கூட்டத்துத் தம்பிரான்களில் மூத்தவர்களும், சமய, விசேட, நிர்வாண  தீட்சைகள் மூன்றும்  பெற்றுச் சிறந்தவர்களும் திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் கட்டளை ஸ்தானீகமாக விளங்கியவர்களுமாகிய ஸ்ரீமத் மீனாட்சி சுந்தரத் தம்பிரான்  சுவாமிகள் அவர்களை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்து நியமனம் செய்து ஆதீனக் கிரமப்படிக்கும் சம்பிரதாயப்படிக்கும் அபிஷேகம் செய்து “அம்பலவாண பண்டார சந்நிதி’ என தீட்சா நாமம் புனைந்து அவர்களால் 23ஆவது குருமூர்த்திகள் அவர்களின் திருமேனிக்கு ஆதீன மரபுப்படி அபிஷேக ஆராதனைகள் செய்தருளி திருவீதிகளில் எழுந்தருளச் செய்து திருவாவடுதுறை ஸ்ரீ மறைஞான தேசிகர் தபோவனத்தில் ஞானசமாதி  செய்வித்தருளப் பெற்றது.

அதுசமயம் தருமபுரம் ஆதீனம் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம், மதுரை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், செங்கோல் ஆதீனம், பேரூர் ஆதீனம், விருத்தாசலம் ஸ்ரீ குமாரதேவர் ஆதீனம் முதலான சைவ ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள், திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து ஸ்ரீமத் முத்துக் குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள், இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் மெளன சுவாமிகள் மடத்து அதிபர், வடலூர் ஊரன் அடிகள் முதலானோர்களும், தமிழகத்து முக்கிய பிரமுகர்களும், உள்ளூர் ‡ வெளியூர் ஆதீனத்து அன்பர்களும், அடியார் பெருமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

மாலையில் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் ஆன்ம மூர்த்திகள் ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமானை வழிபட்டு, ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் பூஜையும் செய்தருளி மாகேஸ்வர பூஜைக்கு எழுந்தருளினார்கள். இரவு பூஜை வழக்கம் போல் நடைபெற்றது.

முதல் நாள் தொடங்கி பத்து தினங்களிலும் காலை, மாலை என இருவேளைகளிலும் இருபத்து மூன்றாவது குருமூர்த்திகள் சமாதியில் வழிபாடு நிகழ்த்தியருளினார்கள். பத்தாம் நாள் (30‡10‡2012) குருமூர்த்தத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதியம் மாகேஸ்வர பூஜையும் அன்னதானமும் நடைபெற்றன.

இரவு  பூஜை முடித்து ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் ஸ்ரீ கோமுக்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனம் செய்து, சிவிகையில் எழுந்தருளினார்கள். மங்கள இசையும் பேரிகையாதிகளும் முழங்க, வான வேடிக்கைகளுடன் வீதியுலா எழுந்தருளி அன்பர்கள் யாவருக்கும் ஆசியருளினார்கள். பட்டணப் பிரவேசத்தின் நிறைவாக ஆதீனக் குருமுதல்வரை வழிபட்டு வேணுவனலிங்க விலாசத்திற்கு (கொலு மண்டபம்) எழுந்தருளி சிவஞானக் கொலுக்காட்சியருளி, வந்திருந்த அன்பர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கி வாழ்த்தியருளினார்கள்.

 

திருமுகம் திருநாள்

ஆதீனக் குருமுதல்வர் மகரத் தலைநாள் குருபூஜை விழாவிற்கான பத்திரிக்கை எழுதத் தொடங்கும் நிகழ்வான திருமுகம் திருநாளில் (கார்த்திகை ‡ அசுபதி) காலையில் சுபவேளையில் கைச் சாத்திட்டருளினார்கள். இரவு பூஜை நிறைவில் இலங்கை சிவத்தொண்டன் சபையின் 80 ஆண்டு கால சைவத் தொண்டுகளைப் பாராட்டி ரூ. 5000/‡ பொற்கிழியும் “சைவச் சுடர் நிலையம்’ எனும் விருதும் வழங்கி ஆசிர்வதித்தருளினார்கள்.

தை அசுவதி குருபூஜை விழா

பத்து தினங்களும் ஆதீனக் குருமுதல்வருக்கு காலை, இரவு இருவேளைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தியருளுகின்றார்கள். இவ்விழா நாட்களில் மாலையில் வேணுவனலிங்க விலாசத்தில் திருமுறை விண்ணப்பமும், வேத, சிவாகம, புராண, சித்தாந்த, திருமுறைகள் குறித்த சிந்தனைப் பொழிவுகளும், சிவாச்சாரியார்கள், ஓதுவாமூர்த்திகள், சித்தாந்த ‡ திருமுறை அறிஞர்கள், கலைஞர்கள் முதலான பல்துறைகளில் சிறந்த தக்கோர்க்கு சிறப்பு விருதுகளும் பொற்கிழிகளும் வழங்கியருளப் பெறுகின்றன.  திருக்கோயிலில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நிகழ்வுறுகின்றன. பத்தாம் திருநாளாகிய குருபூஜை நாளில் ஆதீன அன்பர்கள், முக்கியஸ்தர்கள், அடியார் பெருமக்கள் அனைவரும் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளின் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். இரவு அடியார் பெருமக்கள் நேத்ரானந்தமுற்று அகமகிழ சிவிகாரோஹணம் செய்து பட்டணப் பிரவேசம் தந்து வேணுவனலிங்க விலாசத்தில் சிவஞானக் கொலுக்காட்சியருளி அருட்பிரசாதத்துடன் ஆசிர்வதித்தருளுகின்றார்கள்.

தல யாத்திரை

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் ஞானபீடம் ஏற்றருளிய நாளிலிலிருந்து ஆதீனத் திருக் கோயில்கள், ஆதீனக் கிளை மடங்கள் அனைத்திற்கும் எழுந்தருளி நிர்வாகம் தொடர்பான தக்க ஆலோசனைகளை வழங்கி, சீர்த்திருத்தம் செய்தருளி, திருப்பணிகள் நடைபெறுகின்ற இடங்களில் மேலும் சிறந்து இயங்க ஊக்கம் அளித்தருளி ஆசிர்வதிக்கின்றார்கள்.

இவை தவிர, தமிழகத்து சிவாலயங்கள் பலவற்றுக்கு ஆதீன அன்பர்கள் அடியார் பெருமக்கள் புடை சூழ எழுந்தருளி சுவாமி தரிசனம் செய்து அருட்பிரசாதம் வழங்கியருளுகின்றார்கள். சைவ சித்தாந்தம், திருமுறை மன்றங்கள் நடாத்தும் பெருவிழாக்களுக்கும் சிவாலய குடமுழுக்கு, திருவிழாக்களுக்கும் எழுந்தருளி அருள் வாழ்த்துரை தந்தருளுகின்றார்கள்.

 

ஆதீன ஆளுகைக்குப் புதியபள்ளி

திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட முத்தூர் ‡ மகாஜனக்குடி கிராமத்தில் 1940ல் துவங்கப்பெற்றும் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக பாராட்டுப் பெற்றதுமான கலைமகள்  தொடக்கப் பள்ளியை, அதன் செயலாளர் ஆதீனத்தில் சமர்ப்பிக்க விண்ணப்பிக்கும் நிலையில் கருணை கூர்ந்து அக்கோரிக்கையை ஏற்றருளி 17.04.2013ல் அப்பள்ளியை ஆதீன அருளாளுகைக்கு ஆட்படுத்தியருளினார்கள்.

நூல் வெளியீட்டு விழா

சென்னை, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக தயாரிக்கப் பெற்ற பத்து தொகுதிகள் கொண்ட “சைவ சமயக் களஞ்சியம்’ எனும் நூலின் ஒரு தொகுதியை 12.5.2013ல் வெளியிட்டருளினார்கள். இவ்விழாவிற்கு தமிழக கவர்னர் மேதகு ரோசய்யா அவர்களும் கலந்து கொண்டார்கள்.

தமிழக அரசின் உயர் நிலைக் குழு

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை அலுவல் சாரா உறுப்பினர்களில் முதன்மையாக ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களை தமிழக அரசு நியமித்தமையை ஏற்றருளி 25.06.2013ல் நடைபெற்ற அக்கூட்டத்திற்கு எழுந்தருளி அருள்வாழ்த்துரை வழங்கியருளினார்கள். தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஆதீன வெளியீட்டு நூல்களையும் அருட்பிரசாதமும் வழங்கி வாழ்த்தியருளினார்கள்.

 

ஆடிப்பூர அம்மனுக்குப் புதிய தேர்

திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் அருள்பாலிக்கும் ஆடிப்பூர அம்மனுக்குப் புதிய (மரத்தாலான) தேர் செய்துவித்து 09.08.2013ல் அத்தேரில் ஆடிப்பூர அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.

நல்லூர் கும்பாபிஷேகம்

நனைந்தனைய திருவடியை அப்பர் சுவாமிகள் தலை மீது சூட்டியருளியதும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமாகிய திருநல்லூர் ஸ்ரீ கிரிசுந்தராம்பாள் உடனாய ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பெரும்பொருட்செலவில் அன்பர்கள் பங்களிப்புடன் திருப்பணிகள் செய்யப் பெற்று ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் திருமுன்னர் 30.08.2013 விஜய ஆண்டு ஆவணி 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை கன்யாலக்னத்தில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கும்பாபிஷேக மலர், விருதுகள், கணையாழி, பொறிகிழிகள் வழங்கியருளினார்கள்.

திருவீழிமிழலை கும்பாபிஷேகம்

சோழநாட்டு காவிரி தென்கரைத் தலங்களில் 61ஆவது தலமாகியதும், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய தேவார மூவரால் பாடல்கள் ( 23 பதிகங்கள்) பெற்றதுமாகிய ஆதீனத்திற்குச் சொந்தமான திருவீழிமிழலை ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை சமேத ஸ்ரீ வீழிநாதசுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் திருமுன்னர் 11.09.2013 விஜய ஆண்டு ஆவணி 26ஆம் நாளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கும்பாபிஷேக மலர், விருதுகள், கணையாழி, பொறிகிழிகள் வழங்கியருளினார்கள்.

திருமூலர் விழா

ஆண்டுதோறும் திருமூலர் குருபூஜை விழா (ஐப்பசி ‡ அசுவதி)வில் திருமூலருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடும் திருமந்திர முற்றோதலும் நடைபெறும். இவர்களது அருளாட்சியில் திருமூலர் குருபூஜைத் திருநாளில் திருமந்திரம் குறித்த சிறந்த சொற்பொழிவுகளைத் தக்கப் பேரறிஞர்களைக் கொண்டு நிகழ்த்தியும், திருமந்திரம் தொடர்பான நூல்களும் குறுந்தகடுகளும் வெளியிட்டும் திருமந்திரம் பாராயணம் செய்யும் பள்ளிச் சிறார்களுக்குப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கியருளி திருமந்திரச் சிந்தனை எல்லா தரப்பினர்களுக்கும் சென்றடையச் செய்தருளுகின்றார்கள்.

மூவலூர் கும்பாபிஷேகம்

ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் அவதரித்தருளிய தலமான மூவலூரில் அமைக்கப் பெற்றுள்ள ஸ்ரீ அம்பலவாண விநாயகர் திருக்கோயிலுக்கும் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளுக்குத் தனிக்கோயில் எழுப்பித்து புதிய திருமேனியைப் பிரதிட்டை செய்தும் 09.12.2013 அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகங்கள் செய்தருளினார்கள்.

 

திருவள்ளுவர் குருபூஜை

திருவள்ளுவ நாயனார் குருபூஜைத் (மாசி ‡ உத்திரம்) திருநாளில் திருக்குறள் முற்றோதலும் திருக்கோயிலிலுள்ள திருவள்ளுவருக்குச் சிறப்பு வழிபாடும், வேணுவனலிங்க விலாசத்தில் திருக்குறள் பற்றிய சிறப்பு சொற்பொழிவுகளும் இரவு பூஜை நிறைவில் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் திருச்சந்நிதியில் திருக்குறளில் சிறந்தார் ஒருவருக்கு ரூ. 5000/‡ பொற்கிழியும் விருதும் வழங்கியருளலும் இவர்கள் தம் அருளாட்சியில் சிறப்புற நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீ மாதவச் சிவஞான சுவாமிகள் திருக்கோயில்

ஆதீனத்து மாதவச் சிவஞான சுவாமிகள் ஞான சமாதி கொண்டருளும் திருக்கோயிலை முழுவதுமாக புதுப்பித்து கற்றளியாக எழுப்புதற்குத் திருப்பணிகள் பெரும் பொருட்செலவில் நடைபெற்று வருகின்றன. விரைவில்  இச்சமாதித் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் மகாசந்நிதானம் அவர்கள் திருவுளப் பாங்கின் வண்ணம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

 

திருப்பெண்ணாகடம் கும்பாபிஷேகம்

ஆதீனத்திற்குச் சொந்தமான திருப்பெண்ணாகடத்தில் (அவதாரத் தலம்) புதிதாக எழுப்பபெற்ற ஸ்ரீ மெய்கண்டார் திருக்கோயிலுக்கு 22.06.2014ல் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் திருமுன்னர் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினத்தில் விழா மலர் வெளியீடும், சித்தாந்த அறிஞர்க்கு விருதும் பொற்கிழியும் வழங்கியருளலும் நிகழ்ந்தன.

கல்வி ஊக்கத் தொகை

ஆண்டுதோறும் தை அசுவதி குருபூஜைத் திருநாளில் ஆதீன மேனிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் இப்பள்ளியில் முதலிடங்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்குப் பொருட்செல்வமும் பரிசிலும் வழங்கியருளுகின்றார்கள். ஆதீனத் தலைமை மடத்திலும் ஆதீனத் திருக்கோயில்களிலும் பணிபுரியும் சிப்பந்திகளின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை அளித்து ஆசிர்வதிக்கின்றார்கள்.

 

அருட்கொடை

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள், “தினமலர்’ நாளிதழ் ஒருங்கிணைப்பில் இயங்கி வரும் “”எண்ணங்களின் சங்கமம்” என்னும் சமூக சேவை அமைப்பைச் சேர்ந்த பத்து சமூக சேவகர்களுக்கு ஆண்டு தோறும் தலா ரூ.10,000 வீதம் ரூ.1,00,000/‡ வழங்கி அவர்கள் சீரிய முறையில் பணி செய்யஅருள்கின்றார்கள்.

 

குருமூர்த்தக் கும்பாபிஷேகம்

திருவீழிமிழலையிலுள்ள சூரியனார்கோயில் ஆதீனம் 2ஆவது குருமூர்த்திகள் ஸ்ரீவீழி சிவாக்கிர யோகிகள் குருமூர்த்தக் கும்பாபிஷேகம் 10.09.2014ல் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் அருளாணையின் வண்ணம் அவர்களது திருமுன்னர் சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் சூரியனார்கோயில் ஆதீன 27ஆவது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க பரமாசாரிய சுவாமிகள் அவர்களும் எழுந்தருளி வழிபாடாற்றினார்கள்.

 

மூவலூர் நூலக வெள்ளி விழா

ஸ்ரீ நமசிவாயமூர்த்திகள் அவதரித்தருளிய மூவலூரில் ஆதீனக் கிளை மடத்திலுள்ள “ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள்’ நூலகத்தின் 25ஆம் ஆண்டு விழா (வெள்ளி விழா) ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம்அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சொற்பொழிவும், நூல் வெளியீட்டருளலும், விருதும் பொற்கிழியும் வழங்கியருளலும் நிகழ்வுற்றன.

 

சைவ சித்தாந்த திருமுறை நேர்முகப் பயிற்சி

தமிழ் பேசும் பெருமக்கள் யாவரும் சைவ சித்தாந்தம் பயின்று பயன்கொள்ளும் வகையில் ஆதீனத்தால் நேர்முகப் பயிற்சித் தொடங்கப் பெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவர்கள் தம் அருளாட்சியில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையங்கள் மேலும் விரிவாக்கம் செய்யப்பெற்று இற்றை நாளில் 72 மையங்களில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, இங்கிலாந்து நாடுகளிலும் சிறப்புற நடைபெற்று வருகின்றன.

சைவத் திருமுறை நேர்முகப் பயிற்சி வகுப்புகளும் மேலும் விரிவாக்கம் செய்யப்பெற்று 50 மையங்களில் தமிழகம், பிறமாநிலங்கள், இலங்கை, மலேசியா நாடுகள் ஆகிய இடங்களில் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் அருளாணையின் வண்ணம் மிகவும் சிறப்புற நடைபெற்று வருகின்றன.

 

தீட்சை வழங்கியருளல்

ஆண்டுதோறும் மகாசிவராத்திரித் திருநாளிலும், கார்த்திகை மாதத்து அனைத்து சோம வாரங்களிலும் (திங்கட் கிழமைகள்) பக்குவர்களுக்கு சமய, விசேட தீட்சைகள் ஆதீனத் தலைமை மடத்து ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் சந்நிதியில் முறைப்படி வழங்கி வாழ்த்தியருளுகின்றார்கள்.

 

புதிய தேர் அமைத்தல்

திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் சுவாமி தேருக்குப் பிறகு இவர்களது அருளாட்சியில் அம்பாள் தேரின் திருவீதியுலாவில் எழுந்தருளி தரிசனம் செய்தார்கள். தற்போது ஆனைக்கட்டி பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் பெரும் பொருளாதரவுடன் ஸ்ரீ சுப்பிரமணியர் திருத்தேர் திருப்பணி நடைபெற்று வருகிறது.

ஆதீனத்திற்குச் சொந்தமான திருநெல்வேலி குறுக்குத்துறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பழைய திருத்தேர் சிதலமடைந்ததால், புதிய தேர் செய்யப் பெற்று, ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களால் திருத்தேரோட்டம் தொடங்கிவைக்கப்பெற்றது.

 

நல்லூரில் பிரதிட்டாபிஷேகம்

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் அருளாட்சியில் திருநல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெற்கு உட்பிரகாரத்தில் வடக்கு நோக்கி திருமுறை ஆசிரியர்கள், சந்தானாசாரியர்கள் புதிய கற்றிருமேனிகள் அமைக்கப்பெற்று பிரதிட்டாபிஷேகம் செய்யப்பெற்றது.

கிளை மடம் திருக்கோயில் கும்பாபிஷேகம்

ஆதீனத்திற்குச் சொந்தமான சிதம்பரம் மாலைக் கட்டித் தெருவிலுள்ள கிளைமடத்தின் கண் உள்ள ஸ்ரீ சிவகாமியம்மை உடனாய ஸ்ரீ நடராஜப்பெருமான் திருக்கோயில், ஸ்ரீ மெய்கண்டார் திருக்கோயில் ஆகியவை திருப்பணிகள் செய்யப்பெற்று 14.11.2013ல் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கிராமக் கோயில்கள் கும்பாபிஷேகம்

ஆதீனத்திற்குச் சொந்தமாயுள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமக் கோயில்கள் நன்முறை பராமரிக்கப்பெற்று வழிபாடுகள் அந்தந்த கிராம மக்கள் பூரண ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் ஞானபீடம் ஏற்றருளியபின் நடைபெறும் முதல் கும்பாபிஷேக விழாவாக திருவாவடுதுறையிலுள்ள நினைத்ததை முடிக்கும் ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோயில் முழுவதும் நன்கு திருப்பணி செய்யப்பெற்று மகாசந்நிதானம் அவர்கள் திருமுன்னர் 01.05.2013ல் மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

 

இலண்டனில் திருமுறைப் பெருவிழா

இங்கிலாந்து நாட்டுத் தலைநகர் இலண்டனில் உள்ள சிவன் திருக்கோயிலில் இரண்டாவது உலகத் திருமுறைப் பெரு விழாவும் ஆய்வு மாநாடும் 19.09.2014ல் நடைபெற்றன. அப்பெருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக எழுந்தருளிய ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் திருமுறைப் பேரறிஞர்களும் ஓதுவா மூர்த்திகளும், தமிழ் அறிஞர்களும் கூடிய சபையில் அருள் வாழ்த்துரையும் அன்பர்களுக்கு அருட்பிரசாதமும் வழங்கியருளினார்கள்.   திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி (இலண்டன் மையம்)யை நிறைவு செய்த மாணாக்கர்களுக்கு “சைவ சித்தாந்த ரத்தினம்’ எனும் பட்டம் வழங்கி வாழ்த்தியருளினார்கள்.

 

மலேசியாவிற்கு விஜயம்

திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சியின் கோலாலம்பூர் (மலேசியா) மையத்தின் 2012‡2013 தொகுப்பின் வகுப்புகள் நிறைவுற்ற நிலையில் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் மலேசிய நாட்டிற்கு எழுந்தருளி அத்தொகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு “சித்தாந்த ரத்தினம்’ எனும் பட்டம் வழங்கி வாழ்த்தியருளினார்கள். அருகிலுள்ள சிவாலயத்திற்கும் பத்துமலை முருகப் பெருமான் திருக்கோயிலுக்கும் எழுந்தருளி சுவாமி தரிசனம் செய்தார்கள்.

 

23ஆவது குருமூர்த்திகள் குருமூர்த்தம்

ஆதீனத்து 23ஆவது குருமூர்த்திகளாக வீற்றிருந்து அருள்பாலித்த ஸ்ரீ சிவப்பிரகாச தேசிகர் குருமூர்த்தத் திருக்கோயில் முழுவதும் கற்றளியாக ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் அருளாணையின் வண்ணம் எழுப்பப்பெற்றுள்ளது.  ஆண்டுதோறும் இக்குருபூஜை விழா (கார்த்திகை ‡ சதயம்) சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சமயசொற்பொழிவுகள், நூல் வெளியீடுகள், பொற்கிழியும் விருதுகளும் வழங்கியருளல் என சீர்பெற நடத்தியருளுகின்றார்கள்.

Menu Title