திருவாவடுதுறை ஆதீனம்

இருபத்து மூன்றாவது சிவப்பிரகாச தேசிகர் சரித்திரம்

பவப்பெருங் கடலைக் கடந்திடு தற்குப்

பரமன் வகுத்த அருள்நெறியை

உவப்புடன் உயிர்கள் கடைப்பிடித் துய்ய

உதவும் துறைசை ஆதினத்தில்

தவப்பிர காசம் தரணியில் ஓங்கத்

தண்ணருட் செங்கோல் ஓச்சியஎம்

சிவப்பிர காசத் தேசிகன் மலர்த்தாள்

சென்னியிற் கொண்டு போற்றுதுமே.

 

சித்தாந்த அருட்பரிபாலனம் புரிந்தருளிய அம்பலவாணதேசிகர்பால் ஞானோபதேசம் பெற்றுத் துவிதீய ஆசிரியராக விளங்கி வீற்றிருக்கும் சிவப்பிரகாச தேசிகர், திருவாவடுதுறை திருத்தலத்தில் தம் ஞானதேசிகருக்குத் தசதினத்தினும் குருபூஜை சிறப்புறச் செய்து, ஞான மாநடராஜப் பெருமானையும், பரமமுதற் குரவராகிய நமசிவாய மூர்த்திகளையும் தரிசித்து வழிபாடியற்றி, இருபத்து மூன்றாம் குருபீடத்தில் எழுந்தருளியிருந்து சீடர்களுக்குத் தீக்கையாதிகளும், சித்தாந்த ஞானோபதேசமும் செய்து வரலாயினர்.

ஆதீனத் திருக்கூட்டத்தில் பரிபாகத்திற் சிறந்த ஸ்ரீமத் சம்பந்த மூர்த்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்களுக்கு அம்பலவாணதேசிகர் என்னும் தீட்சா நாமம் சூட்டியருளி துவிதீய தேசிகராக நியமித்தருளினர்.

ஞானதேசிகரது அருளாட்சியில் ஆதீன பாரம்பரியத்துக்கு உகந்த முறையில் ஆலய கும்பாபிஷேக விழாக்களும், குருபூஜை மாகேசுவர பூசைகளும், ஓதுவார்கள், சிவாசாரியர், வித்வான்கள், உட்பட சிறந்தோர் பலருக்கும் விருது பொற்கிழி வழங்கிச் சிறப்பிக்கும் வைபவங்களும் தொடர்ந்து நடைபெற்று வரலாயின.

ஆதீனத்திற்கு வந்து சித்தாந்தமும், திருமுறைப்பண்ணிசையும் பயிலும் வாய்ப்பு தற்காலச் சூழலில் அருகி வருதலைத் திருவுளத்தில் அறிந்த ஞானதேசிகர், அவரவர் ஊர்ப்பகுதிகளிலேயே இந்தச் சிவஞானக் கல்வியினைப் பயிலுவதற்கு வாய்ப்பாக நேர்முகப் பயிற்சி மையங்கள் அமைந்திட அருளாணை பிறப்பித்தனர். இவ்விரு மையங்கள் வாயிலாக ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர்.

ஆதீன பரமமுதற்குரவர் நமசிவாய மூர்த்திகளின் குருபூஜை விழாக்களில் ஒன்பது நாட்கள் பிரசங்கங்கள் நிகழ்ந்து அன்பர்களுக்கு பெருவிருந்தாய் விளங்கின. வேத உபநிடதங்கள், சிவாகமங்கள், திருமுறைகள், புராணங்கள், மெய்கண்ட சாத்திரங்கள், ஆதீனப் பண்டார சாத்திரங்கள், ஆதீன அருள் நூல்கள், இலக்கிய இலக்கண நூல்கள் ஆகிய அரும்பெரும் பரப்பில் வேணுவனலிங்க விலாசத்தில் தக்க வித்வான்கள் மூலமாக ஆய்வுரைகள் சீர்மையுற நிகழ்ந்து வரும். திருமந்திர நூல் வெளியீடும், விருது வழங்கும் வைபவமும் விழாவை மேலும் அணி செய்யும்.

ஆதீன மாபாடியகர்த்தர் மாதவச் சிவஞான யோகிகளின் சித்திரை ஆயிலியத் திருநட்சத்திரத் திருவிழாவினை யோகிகள் அவதரித்த விக்கிரமசிங்கபுரம், துறவு பெற்ற சுசீந்திரம், நூல்கள் பல இயற்றிய காஞ்சிபுரம், சுத்தாத்துவித முத்தி அடைந்த திருவாவடுதுறை ஆகிய நான்கு தலங்களிலும் சிறப்புரை விருது வழங்கல் நூல் வெளியீடுகளுடன் நடைபெற்று வரச்செய்தமை குறிப்பிடத்தக்கது. சிவஞான யோகிகளின் இருநூறாம் ஆண்டு விழாவினைத் திருவிடைமருதூரில் சிறப்புற நிகழ்த்தி யோகிகள் அருளிய 28 நூல்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் மலரினை அருள்நூல் கட்டுரைகள் என்ற பெயரில் வெளியிட்டருளினர்.

ஆதீனப் பண்டாரசாத்திரங்கள் பதினான்கினையும் உரையுடன் வெளியிட்டருளியதோடு அச்சாத்திரங்கள் குறித்த ஆய்வுக்கட்டுரை மலர்களையும் வெளியிட்டருளினர்.

திருவிடைமருதூர், திருவாவடுதுறை ஆகிய திருத்தலங்களில் விளங்கும் ஆலயங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நிகழ்த்தியதோடு, மயிலாடுதுறை, திருப்பெருந்துறை முதலிய ஆலயங்களுக்கு இருமுறை கும்பாபிஷேகம் நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கன. குருமூர்த்தங்கள், கிளைமடங்கள் திருப்பணிகளும், புதிய மடங்கள் வாங்கிப் புனரமைத்தலும் சிறப்பாக நடைபெற்றன.

ஆதீன ஆன்மார்த்த மூர்த்திகள் ஸ்ரீ ஞான மாநடராஜப் பெருமானுக்கு நிகழ்த்தப் பெறும் திருமஞ்சன நாள்களில் ஓதுவார், தமிழறிஞர் முதலியோருக்கு விருது வழங்கியருளலும், பிரசங்கங்களும், திருவள்ளுவ தேவ நாயனாரின் குருபூஜைத் திருநாளில் (மாசி ‡ உத்திரம்) பிரசங்கமும், தமிழறிஞர் ஒருவருக்கு விருது வழங்கலும் நிகழ்த்தி வரலாயினர்.

அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க வெளிநாட்டு யாத்திரைகளை மேற்கொண்டு மேன்மை கொள் சைவநீதி உலகெலாம் தழைத்திட வழிவகை செய்தனர். இலங்கைக்கும், மலேசியாவிற்கும் விஜயம் செய்து அருளாசி வழங்கிச் சிறப்பித்தனர்.

திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலுக்கு தமிழக அரசின் அன்னதானத் திட்டத்திற்கு நிரந்தர வைப்பு நிதிக்காக ரூ. 1,05,000/‡ஐ 2.10.2002 அன்று தஞ்சை மாவட்ட இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் திருமதி. பாரதி அவர்களிடம் வழங்கியருளினர்.

திருவிடைமருதூர் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ மகாமேரு சிதலம் அடைந்ததால் நூதனமாக ஸ்ரீ மகாமேரு பிரதிட்டை 26.01.1992ல் செய்யப்பெற்றது. சுசீந்திரம் கிளை மடத்தில் ஸ்ரீ காலபைரவர் பிரதிட்டை செய்யப்பெற்றது. திருநீலக்குடி, திருவாலங்காடு, திருமாந்துறை ஆகிய திருக்கோயில்களில் செப்புத்தகடு வேய்ந்த கொடிமரங்கள் புதிதாக அமைக்கப்பெற்றன. திருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோயிலில் திருவள்ளுவ நாயனார் திருமேனியும் திருவாவடுதுறை, திருவாலங்காடு, திருமங்கலக்குடி ஆகிய திருக்கோயில்களில் அரதத்த சிவாசாரியர் திருமேனியும் 26.01.2011ல் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகையடி குருபூஜை மடத்தில் 31.11.2000ல் ஆதீனக் குருமுதல்வர் திருவுருவம் பிரதிட்டை செய்யப்பெற்றது. திருச்செந்தூர் விசாகக் கட்டளை மடத்தில் நூதனமாக அருள்தரு வள்ளி, தெய்வயானை உடனாய ஸ்ரீ சண்முகர் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. பேரூர் ஸ்ரீ வேலப்ப தேசிகர் குருமூர்த்தத்தில் ஸ்ரீ மாதவச் சிவஞான முனிவர், அருள்தரு கச்சியப்ப முனிவர் திருமேனிகள் 18.06.2003ல் பிரதிட்டை செய்யப்பெற்றன.

செங்கோல் ஆதீனத்திற்கு தக்கவரைத் தேர்ந்தெடுத்து துறவும், தீக்கையும் வழங்கி செங்கோல் ஆதீனம் 102ஆவது குரு மகாசந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ கல்யாணசுந்தர சத்திய ஞான பரமாசாரிய சுவாமிகள் அவர்களை எழுந்தருளச் செய்தார்கள். சூரியனார்கோயில் ஆதீனத்திற்கு திருவாவடுதுறை ஆதீனத் திருக்கூட்டத்திலிருந்து தக்கவரைத் தேர்ந்தெடுத்து திருக்கயிலாய பரம்பரை வாமதேவ சந்தானம் ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார்கோயில் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகளை எழுந்தருளச் செய்தார்கள். இவர்கள் அருளாட்சியில் சின்னப்பட்டமாகத் திகழ்ந்த ஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் கல்லிடைக்குறிச்சியில் 02.05.1992ல் பரிபூரணம் எய்தினார்கள். அவர்களது குருபூஜை  விழா (தை‡ உத்திரட்டாதி)  சிறப்பாக நடைபெற அருள்பாலித்தார்கள்.

தஞ்சையில் தமிழக அரசு நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில் ஆதீனம் சார்பில் தஞ்சாவூர் என்னும் நூல் விழா மலராக வெளியிடப்பெற்றது.  கோவை செம்மொழி மாநாட்டில் சங்க இலக்கிய சொற்களஞ்சியம், செந்தமிழ் வளர்த்த சிவநெறிச் சான்றோர், தமிழ்உரைமணிக் கோவை என்னும் மூன்று புத்தகங்கள் வெளியிடப்பெற்றுள்ளன.

இராமேஸ்வரம் திருக்கோயில் ஸ்ரீ நடராசப் பெருமான் ஆறு கால அபிடேகத்தில் ஐந்து  அபிடேகத்திற்கு  வைப்பு  நிதியாக 1,20,000/‡ அளித்தார்கள். ஏழை மாணவர்கள் கல்வி பயில  உதவி, சாதுக்களுக்கு உதவி, முதியோர்களுக்கு உதவி, நூலகங்களுக்கு நூல்கள் வழங்கல், நூலக புரவலர் திட்டத்திற்கு நிதி வழங்கல், திருக்கோயில் குடமுழுக்கு விழாவிற்கு  அட்டபந்தன மருந்து அளித்தல் போன்ற அருட்கொடைகளை அளித்து மகிழ்ந்தார்கள்.

திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர் மூவர் பயன் பெற வைப்பு நிதியாக ரூ. 60,000 அளித்தார்கள். மதுரை தமிழ்ச் சங்கக் கட்டடம் கட்ட ரூபாய் ஒரு 1,10,000/‡ வழங்கினார்கள். திருச்சி ‡ மண்ணச்சநல்லூர் ஸ்ரீ பூமிநாதசுவாமி திருக்கோயில் இராஜகோபுரம் ஆதீனம் செலவில் திருப்பணி செய்து 27.08.2004 கும்பாபிஷேகம் நடத்தினார்கள்.

ஆதீனப் புலவர்களாக திருச்சி திரு.ஆதி.முருகவேள், பொறையாறு திரு.தா.ம.வெள்ளைவாரணம், திருவாவடுதுறை திரு.சு.குஞ்சிதபாதம் , இலங்கை திரு.ஞ.அனுசாந்தன்,மயிலம் திரு.வே.சிவசுப்பிரமணியம், விக்கிரமசிங்கபுரம் சிவஸ்ரீ. சை. செல்லமணிபட்டர் ஆகியோரை நியமித்தருளினார்கள்.

இருபத்து மூன்றாவது குருமூர்த்திகளாக ஞானச் செங்கோலோச்சிய ஸ்ரீ சிவப்பிரகாச தேசிகர் 22.11.2012ல் (கார்த்திகை ‡ சதயம்) சுத்தாத்துவித முத்தி எய்தினார்கள்.

Menu Title