திருவாவடுதுறை ஆதீனம்

பத்தாவது சித்தர்சிவப்பிரகாசதேசிகர் சரித்திரம்

உத்தமக்கோ  முத்திபெறு  மொருபதியின்  வதிந்தருளி

எத்திறத்த  வுயிர்களுக்கு  மெளிதாக  வொளிர்ஞானம்

பத்திகொள  வறிவுறுத்திப்  பரவீடு  தரும்பெரிய

சித்தர்சிவப்  பிரகாச  தேசிகர்தாள்  சிரத்தணிவாம்.

திருக்கயிலாயமலையில்  ஸ்ரீ கண்டபரமசிவன் திருவருளாணை  மேற்கொண்டு, சித்தாந்த ஞானபாநுவாய் சீடர்கள் பக்குவம் நன்காராய்ந்து மீ எழுவகைத் தீக்கையுள் ஞானஅவுத்திரி  சாத்திரம் முதலிய சிவதீக்கைகள் செய்து வீற்றிருக்கும் திருநந்திதேவர்க்கு ஒன்பதாவது பிற்றோன்றலாகியும், தமிழ்ச்சிவஞானபோத வழி நூலென வழங்குஞ் சிவஞானசித்திக்குப் பதவுரைசெய்தருளிய துறைசைச் சுப்பிரமணியதேசிகர்க்குப் பதினெட்டாவது முற்றோன்றலாகியும், விளங்கும் அருணமச்சிவாயதேசிகர்பால் அருளுபதேசம் பெற்றுக் கொற்றவன்குடியில்  அமர்ந்தருளுஞ் சித்தமூர்த்திகளாகிய சிவப்பிரகாச தேசிகர் தமது ஞானாசிரியர் திருவருளாணையின் வண்ணம் நித்தியநைமித்திக ஆராதனையை நியமமாகச் செய்து, அங்குத் தம்பாலுற்ற பக்குவர்களுக்குச் சித்தாந்த ஞானோபதேசஞ் செய்தருள்வாராயினர்.  இஃதிங்ஙனமாக.

சோழமண்டலத்திலே திருமூவலூரிலே, சைவவேளாளர் குலத்திலே முழுதுலகும் புகழ்ந்தேத்தும் முன்னைத் தவமுடையார் ஒருவர், தமக்கு நெடுநாளாக புத்திரப் பேற்றின்மையால் வருத்தமுற்று மனைவியாரோடு புள்ளிருக்கு வேளூரையடைந்து, அவ்விடத்திற் கோயில்கொண்டெழுந் தருளியிருக்கும் வைத்தியநாதரையும் தையல்நாயகியையும் மெய்யன் பினால் வழிபட்டு அருந்தவமியற்றினர்.  அந்நாளில் வைத்தியநாதர் அவ்வருந்தவத்திற்கு இரங்கி அவர்க்கு வரமளித்தருள, அவ்விருவரும் மகிழ்ச்சிகொண்டு, வைத்தியநாதரையும் தையநாயகியையும் வணங்கி விடை பெற்றுச் சென்று தம்மூரையடைந்து வாழ்ந்திருந்தனர்.  அங்ஙனம் வாழ்ந்திருக்குநாளில் வைத்தியநாதர் திருவருளால் அவர் மனைவியார் திருவயிற்றில் கருப்போற்பத்தியுளதாக, அதனையுணர்ந்த அறப்பெருந் தலைவர் அளவுகொள்ளா மகிழ்வுகொண்டு, தம்மரபினுக்குரிய மங்கல வறங்கள் மதிதொருமியற்றி, மாநிலமதிப்ப வதிந்து சிறந்தனர்.  அங்ஙனம் ஐயிருமதியும் அடைவினில் அமைய வையகமுய்ய மாணுயர் சைவமெய்ந் நெறியோங்க வெண்ணெய் மெய்கண்டார் சந்ததி யயன்றுந் தழைத்தினிது வைக ஓர் சற்புத்திரர் திருவவதாரஞ்செய்தார்.

அவர் தாம் வைத்தியநாதர் திருவருளால் அவதரித்தமையால், தந்தையாரால் வைத்தியநாதன் எனப் பிள்ளைத்திருநாமஞ் சாத்தப்பெற்று வளர்ந்து, ஐந்தாம்பிராயத்தில் வித்தியாரம்பஞ் செய்யப்பெற்று கல்விபயின்றுவருங்  காலையில், அவர்க்கு ஏழாம் பிராயம் எய்திநிற்ப, ஒர்நாள் முன்பு தம்பொருட்டாகச் செய்து கொண்ட பிரார்த்தனையை முடித்துவருமாறுநிச்சயித்து, சுற்றத்தாருடன் புறப்பட்டுச்செல்லும் தாய் தந்தையரோடு தாமுஞ் சென்று புள்ளிருக்கு வேளூரையடைந்தனர்.  அங்கு அவர்கள் திருக்கோயிலிற் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு வைத்தியநாதரையும் தையல்நாயகியையும் வணங்கி விடைபெற்றுச் சண்டேஸ்வரர் சந்நிதியையடையத், தாம் மெய்யன்பின்வயத்தால்  வைத்தியநாதசுவாமியின் சந்நிதியை விட்டு நீங்காமல் அங்கு வழிபட்டு நின்றனர்.  அப்பொழுது சண்டேஸ்சுவரர் சந்நிதியையடைந்த தாய் தந்தையர்கள் அவ்விடத்தில் தமது தனயராகிய வைத்தியநாதரைக் காணாமல் மனக்கலக்கமுற்று, உடனே அங்குநின்றும் திரும்பி வைத்திய நாதசுவாமியின் சந்நிதியை நோக்கிவர அவ்விடத்தில் தம்  மைந்தர் சந்நிதி யினின்றும் வெளியே வருதலைத் தூரத்திற்கண்டு, மகிழ்வுற்று நின்றனர்.  அவர்  தம்  சமீபத்தில் வரவும் அவரது கையில் ஓர் சிவலிங்கமிருக்கக்கண்டு, “”இதனை யாவரிடத்துப் பெற்றாய்?” என வினாவ,  அதற்கு அப்புதல்வர், “”ஆதிசைவாசாரிய சுவாமிகள் ஒருவர் உள்ளேநின்று, இப்பெருமானாரை எழுந்தருளப் பண்ணிக்கொடுத்து உறுதிமொழியு முரைத்து விட்டு உள்ளே சென்றனர்” என, விடையளித்தனர்.  இதைக் கேட்ட இருமுதுகுரவரும் சுற்றத்தினரும் பேரற்புதமெய்தி, இது வைத்தியநாதர் திருவருட் செயலாகு மென

மதித்து, அக்கடவுளின் திருவருட் பெருமையையும்,  அப்புதல்வரின் புண்ணியப் பேற்றினையும், நினைந்து நினைந்து அன்பும் மகிழ்ச்சியும் பொங்கிவழிவது போல் கண்களினின்றும் அருவிநீர் பொழிய நாத்தழு தழுப்பப் பலவாறு துதித்துநின்று, பின்னர் அவ்விடத்தினின்றும் அரிதினீங்கி, புதல்வரை முன்னாக நடத்திக்கொண்டு சென்று சண்டேஸ்வரர் சந்நிதியை யடைந்து வணங்கி விடைபெற்று வெளியே சென்றனர்.  பின்பு அங்கு நின்றும் புறப்பட்டு இடையிலுள்ள சிவஸ்தலங்களையுந் தரிசித்துக் கொண்டு திருமூவலூரையடைந்து தமது இல்லத்திற்சென்று மகிழ்வோ டிருந்தனர்.  பின்னர் சிறுவராகிய வைத்திய நாதர், தாம் திருவருளாற் பெற்றுக்கொண்ட வைத்தியநாதத்தம்பிரான் என்னுஞ் சிவலிங்கப் பெருமானைத் தமது இல்லத்துச் சிறுகோயிலில் எழுந்தருளப்பண்ணி மெய்யன்போடு பூசித்துக் கொண்டிருந்தனர்.  இஃதிவ்வாறாக.

முன்பு கொற்றவன்குடி யிலெழுந்தருளியிருந்து குருசந்தான மோம்பிவரும், ஞானாசாரியராகிய சிவப்பிரகாசதேசிகர், ஏனையோர்க் குளவாகிய பற்பலவாண்டுகள் தமக்குச் சிற்சில பகலாகக் கழியாநிற்பத், தாம் நெடுங்காலமாக வீற்றிருந்த நகரங்கள் இரண்டனுள் ஒன்றாகிய வேதாரணியத்திற்கு எழுந்தருளத் திருவுளங்கொண்டு, தமது அடியவர் கூட்டத்துடன் அங்குநின்றும் புறப்பட்டு, சிதம்பரத்தையடைந்து சபா நாயகரைத் தரிசித்து விடைபெற்று வழியிடையிலுள்ள சிவஸ்தலங் களையும் தரிசித்துக் கொண்டு திருமூவலூரையடைந்தனர்.  அங்கு ஞானதேசிகர் திருக்கோயிற் சந்நிதியின்முன்னர் பணிந்துசென்று சுவாமிதரிசனஞ் செய்து வெளியேவந்த தவப்பெருஞ் செல்வராகிய வைத்தியநாதர், அங்குத் திருவருள் கூட்ட, ஞானதேசிகரைத் தரிசித்து, அப்பொழுதே பெருங்கருணைக்கடலாகிய சிவபெருமானே ஏழையேனை அடிமைகொண்டருளும் பொருட்டு இங்ஙனம் மானுடச் சட்டைசாத்தி எழுந்தருளியதாகுமெனச் சிந்தித்து அழலிற்பட்ட மெழுகென அகமுருகிப் பரவசமுற்று வேணவாவோடு விரைந்து சென்று, ஞானதேசிகர் திருவடிகளில் வீழ்ந்து பன்முறை நமஸ்கரித்தெழுந்து உச்சிமேற்கரங்கள் கூப்பிநின்று, தமியேனுடைய தவப்பயனாக ஈண்டெழுந்தருளிய சற்குருபரனே!  ஏழையேனையிப் பொழுதே அடிமைகொண்டு, தேவரீரது திருவடித்தொண்டு பூண்டொழுகும் இத்திருக்கூட்டத்தினர்க்கு என்றுங் குற்றேவல் செய்தொழுகும் பெருவாழ்வினை அடியேனுக்கு அளித்தருள வேண்டுமென இரந்து நின்றனர்.

அத்தருணத்தில் அடியவர் குழாத்தினுட்டலைமையயய்திய ஒருவர், இவரது இளமைச் செவ்வியினையும் பேரின்பநுகர்ச்சிக்கண் இவர் மனத்துற்ற பெருவேட்கையினையும் உய்த்துணர்ந்து பரிவெய்திய சிந்தையராய், ஞானதேசிகர் திருமுன்புவந்து பணிந்துநின்று, ஐயனே!  இம்மெய்யன்பனை இப்பொழுதே ஆண்டருளவேண்டுமென இரந்து விண்ணப்பஞ்செய்தனர்.  ஞானதேசிகர் அதனைத் திருவுளத்திற்கொண்டு, சிறுவராகிய வைத்தியநாதர்பாற் றிருவருணோக்கஞ்செய்து, அன்பனே!  நம்முடன் வருவாயாகவெனப் பணித்தருளிச்செல்ல, அவர் இரும்பைக் காந்தம் இழுக்கின்றவாறுபோலத் தம்மை ஞானதேசிகர் திருவருணோக்கம் முன்னின்றிழுக்கவும், தம்மிடையறாப் பேரன்பு பின்னின்று  தள்ளவும், தாம் ஞானதேசிகர் பின்னாகநடந்து செல்வாராயினர்.

பின்பு ஞானதேசிகர், முறையே வீதிவலம்வந்து திருக்கோயிலிற் சென்று சுவாமிதெரிசனஞ்செய்து, அங்குநின்றும் புறப்பட்டுப் பாங்கருள்ள ஓர் திருமடத்தையடைந்து அன்பர் பலரும் ஒன்று கூடிவந்து மாகேசுரபூசையியற்றி வழிபட, அவர்களுக்கெல்லாந் தண்ணருள் சுரந்து அங்குவீற்றிருந்தருளினர்.  அத்தருணத்தில் வைத்தியநாதர், தமது ஆன்மார்த்த சிவலிங்கப் பெருமானை வீட்டினின்றும் எழுந்தருளிப்பண்ணி வருவதற்கு,  இதுவே சமயமென நினைத்து, ஞானதேசிகரிடத்து விண்ணப்பித்து விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்குச் சென்று, தாய்தந்தையரிடத்து நிகழ்ந்ததைத் தெரிவித்துத் தமக்கு விடையளிக்கும் வண்ணம் பணிந்துநின்று வேண்டினர்.  அதனைத் தாய் தந்தையராகிய இருவரும் அதிசயமும் ஆற்றாமையும் பெரிதுமுடையராய், முன்னாளிலே புள்ளிருக்கு வேளூரின்கண்  திருக்கோயிலினுள்ளே தமது புதல்வர்க்கு வைத்தியநாதர், தம்மை பூசனைபுரியும் ஓர் ஆதி சைவாசாரியர் போல் வெளிவந்து அநுக்கிரகித்தருளிய திருவருட்செயலினுக்கு இயைய இந்நாளில் நிகழ்ந்த செயலை உற்று நோக்கி, இதுவும் வைத்தியநாதர் திருவருட் செயலேயாகுமெனத் தெளிந்து, எல்லாமுடைய இறைவன் திருவுளம் இதுவேயாயின் யாம் செய்யக்கடவது யாது எனச்சிந்தித்து, மனம் நெக்குநெக்குருகி  கண்ணீர்வாரத் தமது புதல்வரைத் தழுவிக்கொண்டு ஆராமைப்பெருக்கினால் நெடிதுபோழ்து நினைந்து நினைந்து பலவாறு புகன்று, பின்னர் ஒருவாறு தம்மனத்து ஒருப்பாடுற்று, விடையளிக்க, வைத்தியநாதர் என்னும் பெயரிய அப்புத்திரர் உடனே அவர்கள் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்தெழுந்து சென்று, தமது ஆன்மார்த்தசிவலிங்கப்பெருமானை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு, தம்பெற்றாரும் உற்றாரும் பின்றொடர்ந்து வரப்புறப்பட்டுத் திருமடத்தை யடைந்தனர்.   அங்கு அவர் தம் இருமுதுகுரவரும் ஏனையோரும் ஞானதேசிகர் திருமுன்பு சென்று நமஸ்கரித்து நிற்ப ;  ஞானதேசிகர் அவர்மாட்டுத் திருவருள்சுரந்து அவரைநோக்கி இதுவரை நுமக்குப் புதல்வனாகயிருந்த இச்சிறுவன்,  இன்று எமக்குப்புதல்வனாக ஏன்று கொள்ளப்பட்டான்.  ஆதலால், இனிமேல் நீவிர் இவனைக்குறித்து வருந்துவது தகுதியல்ல எனவும், இன்னும் இவ்வரும்பெறற் புதல்வனைப் பெற்றளித்ததனால், நீவிர் எடுத்த மானுடப்பிறவியின் பயனைமுற்ற அடைந்துகொண்டீர் எனவும் திருவாய்மலர்ந்து, பின்பு அவர் கவலைநீங்கி இன்புற்று வாழுமாறு திருவருள் பாலித்து விடையளித்தருளினர்.

பின்பு ஞானதேசிகர் அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையிலுள்ள சிவஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு, வேதாரணியத்தையடைந்து திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ் செய்து, அந்நகரின் பாங்குள்ள ஓர் வனத்தில், தாம் முன்பு வீற்றிருந்த தபோதனர் வசிக்கும் ஓர் சூழலில், எழுந்தருளியிருந்து தமது மாணவர்களுக்குச் சித்தாந்த ஞானோபதேசஞ் செய்து கொண்டு அத்தலத்திற் சிலகாலம் வசித்திருந்து, பின்பு அங்குநின்றும் புறப்பட்டு இடையிலுள்ள பல ஸ்தலங்களையுந் தரிசித்துத் திருவாவடுதுறையை அணுகுவார், தம்சிந்தை நெகிழ்ந்துருகக் கண்களினின்றும் ஆனந்த அருவிபொழிய, முகிழ்த்த திருக்கரங்கள் முடி மீது பொருந்தப் பின்றொடருந் திருக்கூட்டம் தேவாரத் தமிழ் மறையைப் பண்முறையோடு பாடிவரத், தாம் மென்மெல நடந்து திருக்கோயிலின் முன் சென்று பணிந்து உள்ளேபுகுந்து இடப நந்தியின் பாங்கர் இறைஞ்சி, இரண்டாவது கோபுரவாயிலைக் கடந்து, மூன்றாவது கோபுரவாயிலில் நங்குருமரபிற்கெல்லாம் முதற்குருநாதனாகிய நந்திபிரானை வணங்கி யருள் பெற்று, உள்ளே சென்று மாசிலாமணியீசரையும், செம்பொற் றியாகரையும் தரிசனஞ்செய்து வெளிவந்து, ஒப்பிலாமுலையம்மையை உழுவலன்புடன் தரிசித்து, வலமாகவந்து திருமூலநாயனாரைத் தரிசனஞ் செய்து, படரரசினையும் பணிந்து மகிழ்வெய்தி அங்குநின்றும் அரிதினீங்கிப் புறத்தேவந்து, கோயிலுக்குத் தென்பாங்கரிற், குருவடிவங்கொண் டெழுந்தருளியிருக்கும் திருமாளிகைத் தேவரைத் தரிசனஞ்செய்து அங்குத் தமது திருமடத்தில் வீற்றிருந்தருளுவாராயினர்.

இங்ஙனம் வீற்றிருந்தருளும் ஞானதேசிகர் தம்பாலுற்ற சத்திநிபாதத்துத்தமராகிய வைத்தியநாதர்க்கு ஓர் சுபதினத்திலே ஞானதீக்கை புரிந்து, தமது ஞானாசாரியசுவாமிகள் திருநாமமாகிய பஞ்சாக்கரப் பெரும் பெயரையே   அவர்க்குத் தீக்ஷா நாமமாகச் சாத்தித் திருவுளம் மகிழ்ந்தனர்.   பின்னர் தமது நற்றவச்சீடராகிய நமச்சிவாயர்க்கு சிவஞானபோதமுதலாகிய சித்தாந்த நூல்கள்யாவும் உபதேசித்தருள, அவர் அவற்றின் பொருள்களெல்லாம் அடியவர் குழாத்தோடிருந்து சிந்தித்துத் தெளிவாராயினர்.  இங்ஙனமாக நமச்சிவாயர் தாம் தீவிரதர பக்குவ முதிர்ச்சியால் விரைவாகவே ஞானநூற் பொருள்களை முற்றத் தேர்ந்து உண்மைநிட்டை பொருந்திச் சிவாநுபூதிச் செல்வராய்ச் சிறந்து திகழ்ந்தனர்.  இதுநிற்க.

எக்காலத்தினும் தன்னையடைந்தவர்க்கு மெய்ஞ்ஞானமும், வீடும், ஒருதலையாகப் பயப்பதும், ஈசுவரிக்குப் பசுத்துவநீக்கியதும், நவகோடி சித்தர்கள் நாளும் வாசஞ்செய்யப் பெறுவதும், ஆகலான் அநாதிமுக்தி க்ஷேத்திரம்,  ஞானக்கோமுத்தி, நவகோடி சித்தவாசபுரம் எனபனமுதலாகப் பலநாமங்கள் கொண்டு பராவப்படுவதாய்ச், சைவசந்தான முதற்குரவராகிய நந்திபெருமானிடத்தே ஞானோபதேசம் பெற்றுவந்து சிவயோகிகளில் ஒருவர், சிவபிரானது திருவருளாணையால் தன்னகத்து மூவாயிரமாண்டு மெய்ஞ்ஞானநிட்டை பொருந்தியிருந்து திருமந்திரம் எனப் பெயரிய தென்மொழிச் சிவாகமந் திருவாய்மலர்ந்தருளப் பெற்ற திவ்விய ஞானாபீடமாய்,  இன்னோரன்ன சிறப்புக்களால், எவற்றினும் மேலாக விளங்குவது திருவாவடுதுறை எனப்படும் இத்திவ்விய ஸ்தலமே ;  தமது சந்தானோபதேச பரம்பரை யயன்றுந்தழைத்தோங்குதற்குத் தகுதியாகிய ஸ்தானமெனத் திருவுளங்கொண்டு, தேசிகோத்தமராகிய  மெய்கண்டார் பொல்லாப்பிள்ளையாரை வழிபட்டுச் சித்தாந்த ஞானோபதேசமரபை விளக்கி வந்தனரென்பதனைத் தமதிருதயத்திற்கொண்டுந் தமது திருமடத்திற்கு என்றும் ஆக்கந்தழையுமாறு சிந்தனைசெய்தும் அம்மடத்தின் வடக்குப்பிரதான வாசலின் மேற்றிசைத் தெற்றியில் ஓர் சிறுகோயில் கட்டுவித்து அதில் விநாயகரைப் பிரதிஷ்டைசெய்து பூசித்து, தந்திருநாமத்தையே அவ்விநாயகர்க்குத் திருநாமமாகச் சாத்தி இன்றும் அப்பெயர் வழங்குமாறு செய்தருளினர்.

பின்பு சிலகாலஞ்சென்று ஞானதேசிகர், தமது வாச ஸ்தானங்களாகிய வேதாரணியம் திருவாவடுதுறை என்னும் இரண்டனுள்ஒன்றாகிய இத்திருவாவடுதுறையிலே தமது ஞானோபதேச மரபு என்றுந் தழைத்தோங்கும் வண்ணம் திருவுளங் கொண்டு தமது நன்மாணாக்கர் பலருள்ளுஞ் சிறந்த நமச்சிவாயருக்கு ஞானாபிடேகஞ் செய்து தமக்குத் துவிதீய ஆசிரியராகவைத்துப்பின் ஓர்நாளில் வைகறைப் போதில் தாம் எழுந்தருளியிருந்த தானத்தைச் சூழவரைகீறித் திருவறை யமைத்து,  அங்குநின்று தமது சீடர்களை நோக்கி, “”நாம் இப்போது திருமறைக்காட்டிற்குச் செல்கின்றோம் ;  இன்றுமுதலாக அழகிய திருச் சிற்றம்பலவர் பூசையையும் அம்பலவாணர் பூசையையும் ஏற்றுக்கொண்டு இங்கு வரைகீறியமைக்கப்பட்ட அறையினுள் அமர்ந்து, நமது சைவ சித்தாந்த மரபு தழைக்க ஞானோபதேசஞ் செய்துவருமாறு ஆணை தந்தோம் என்று நமது நமச்சிவாயனுக்கு உரைப்பீராக” எனத் திருவாய் மலர்ந்து, திருமாளிகைத் தேவரைத் தரிசித்து விடைபெற்று உடனே அங்கு நின்றும் புறப்பட்டு மடத்து வடக்கு வாசலிற்குவந்து அவ்வாசலிற்குமேல்பால் தாம் பூசித்து வரும் விநாயகரைத் தரிசித்து விடைபெற்றுத் திருக்கோயிலை அடைந்து மாசிலாமணியீசுவரரையும் ஒப்பிலாமுலையம்மையையும் திருமூலதேவரையுந் தரிசித்து விடைபெற்றுக் கொண்டு, அங்குநின்றும் அரிதினீங்கித் தம்மைப் பின்றொடருஞ் சீடர்களுக்குத் திருக்கரமமைத்து நிறுத்திவிட்டுத் தாம் வேதாரணியத்திற்கெழுந்தருளி, அங்கு ஓர் தபோவனத்தில் ஞானதேசிகர் அருட்பெருஞ் சித்தராய் அமர்ந்தருளினர்.  இது இவ்வாறாக.

வைகறைப் போதில் வழக்கப்படி காவேரிநதிக்குச் சென்றிருந்த நமச்சிவாயதேசிகர், அங்கு விதிப்படி தீர்த்தமாடிச் சந்தி முதலானவை முடித்துக் கொண்டு மீண்டு திருமடத்தையடைதலும், அங்குச்சீடர்களிற் சிலர் விரைந்துவந்து திருமுன்பு நமஸ்கரித்துநின்று, முற்பொழுதிலே ஞானதேசிகர் வேதாரணியத்திற்கு எழுந்தருளியதையும் அத்தருணத்தில் அத்தேசிகோத்தமர் அளித்த திருவருளாணையையும், அவர்க்கு விண்ணப்பித்தனர்.  அவற்றைக் கேட்டமாத்திரத்திலே நமச்சிவாயதேசிகர் திருவுளத்திற் பதைபதைப்புற்றுத் மீஎன்னிலும் இனியனாகிய சற்குருநாதனைத் தணந்து தனியேயிருத்தற்கு எவ்வாற்றானும் ஆற்றாது பின்றொடர்ந்து செல்வதற்குப் பேராசைகொண்டும், ஞானதேசிகர் கட்டளையிட்டருளிய ஆணையைக் கடத்தற்கஞ்சி நின்று, அழலிடைப்பட்ட வெண்ணெய்போல மெய்யன்பினால் உள்ளம் நெகிழ்ந்துருக ;  ஞானதேசிகர் நடந்தருளிய திக்கைநோக்கி நிலமிசை வீழ்ந்து; பலமுறை பணிந்தெழுந்து, பரவிக்கொண்டு அடியவர்களோடு திருமடத்துள் எழுந்தருளினர்.

Menu Title