திருவாவடுதுறை ஆதீனம்

மூன்றாவது, சத்தியஞானதரிசனிகள் சரித்திரம்

ஞானதீக்கை யபிடேகம் நந்திகுருவாற் செயப் பெற்றோர்

நலமார் சனகர் வியாக்கிரமர் நயக்குமூலர் பதஞ்சலியார்

வானம் பணியுஞ் சிவயோகர் வரமார் மலைய மாமுனிவர்

மன்னுந் தவமார் புலத்தியர்சீர் வயங்கு சனற்கு மாரரெனும்

ஞான முனிவ ரெண்மரென நவின்றார் பத்தாந் திருமுறையி

னம்மை யாளுந்திருமூலர் நவிலு மிவரு ளொருவரெனுஞ்

சான மிகுந்த சனற்குமரர் தம்பாற் றீக்கை யபிடேகந்

தவத்ததாற் பெறுஞ்சத்தியஞான தரிசனிகள் பொற் சரண்போற்றி.

                திருக்கயிலாயத்திற் சித்தாந்த ஞானபானுவாய் எழுந்தருளி யிருக்குஞ் சனற்குமார முனிவர்பால் அருளுபதேசம்பெற்றமாத்திரையானே முற்றறிவுடையராகி விளங்கிய சத்தியஞான தரிசனிகள், தம்பால்வந்த மாணவர்களுக்குத் தமது ஞானாசிரியர் தமக்கு அருளிய திருவருளாணையைச் சிரமேற்கொண்டு, தீக்கை புரிந்து சித்தாந்த ஞானோபதேசஞ்செய்து வெள்ளியங்கிரியில் வீற்றிருந்தருள்வாராயினர்.

ஞானதேசிகராகிய சத்தியஞானதரிசனிகள் அங்ஙனம் ஞானோபதேசஞ்செய்து வருநாட்களில், ஓர் நாள் பரஞ்சோதி முனிவர் என்னுந்திருநாமந்தாங்கிய பற்றறுத்த பண்பாளர் ஒருவர் நம்பழவினையறுத்துப் பரமுத்திக்கண்சேர்த்தருளும் பரமகருணாநிதியாகிய சிவபிரான் திருவருள் செலுத்தா நிற்ப, உள்ளத்தில் ஒப்புயர்வில்லாப் பேரின்ப வீடு பெற்றுய்தற்கண் பெருவிருப்புடையராகிச், சத்தியஞானதரிசனிகள் எழுந்தருளியிருக்கும் இடத்தைச் சார்ந்து, அவ்வுண்மை ஞானச்செல்வரை, உள்ள நெக்குருக உழுவலன்புடையராய்த் தரிசித்து, திருவடிகளில் வீழ்ந்து பணிந்து நின்றனர்.

ஞானதேசிகர், அத்தவச்செல்வர் மீது திருக்கண்சாத்தி, அவரது பரிபக்குவம் நன்காராய்ந்து, தமது சீடர்களுள் ஒருவராகப்பணிபுரிந்து வரும் வண்ணம் திருவருள் பாலித்தருளினர்.  ஞானதேசிகர் கட்டளையிட்டருளிய வண்ணமே, அம்மாதவர் அன்று முதல் அன்பு மீதூர அருட்பணி அடைவே புரிந்து வருவாராயினர்.  அம்முனிவர்க்குச் சிவதீக்கைபுரிந்து ஞானாபி டேகஞ்செய்து சிவஞானபோதமென்னும் பன்னிரு சூத்திரங்களையும், தாம் சற்குருபரரிடங் கேட்ட முறையாக உபதேசித்தருளினர்.

Menu Title