திருவாவடுதுறை ஆதீனம்

இரண்டாவது சனற்குமாரமுனிவர் சரித்திரம்

துன்னி முனிவர் சூழ்கயிலைத் தூயநந்தி யுபதேசம்

பன்னி மண்பொன் பாசமெனும் பற்றைநீக்கும் பரிசென்றும்

மன்னி விளங்குஞ் சனற்குமர வரமாமுனிவ நின்சரண

முன்னி வழுத்தியி னிப்பிறவியுறாதவண்ணமிறைஞ்சுவனே.

 

திருக்கயிலாயத்திலே சீகண்டபரமேசுரன் திருவருளாணை யளித்தவண்ணம் அபரசிவனாகிய திருநந்திதேவர்பாற் சென்று ஞானோபதேசம் பெற்ற அகத்தியர், புலத்தியர், சனகர், சனற்குமாரர், சிவயோகர், வியாக்கிரமர், பதஞ்சலியார், திருமூலர் ஆகிய எண்மருள் ஒருவராகிய சனற்குமாரமுனிவர், தமது ஞானாசிரியராகிய நந்திபெருமான் உபதேசித்தருளிய சிவஞானபோதமென்னும் பன்னிரு சூத்திரங்களையுஞ் சிந்தித்துத், தெளிந்து, நிஷ்டைகூடி வெள்ளியங்கிரியில் வீற்றிருந்து, தம்பால் வந்தடைந்த பக்குவச் சீடர்களுக்குச் சீவதீக்கை புரிந்து தமது ஆசிரியர் உபதேசித்தருளிய முறையாக ஞானோபதேசஞ் செய்துவருநாட்களில்; அருந்தவச்செல்வராய், வீடுபேற்றின் கண்வேட்கை மிக்குடையராய், நல்லாசிரியனை நாடிவரும் ஓர் முனிவரர்,  சிவபெருமான் திருவருள் கூட்டத் திருக்கயிலாயத்திற்சென்று, அங்குத்தமது அருந்தவப்பயனே ஒருவடிவங் கொண்டு நேர்வந்து நின்றாலொப்பஆங்கு எழுந்தருளியிருக்குஞ் சைவசித்தாந்தஞான பாஸ்கரராகிய சனற்குமார முனிவரைக் கண்களாரத் தரிசித்து, இவரே என்னையடிமை கொண்டு இறவாவின்பவீடளிக்க வெழுந்தருளிய ஞானதேசிகராவாரெனச் சிந்தை செய்து, அத்தேசிகோத்தமர் திருவடிகளில் வீழ்ந்துநமஸ்கரித்து, நாயினேன் உய்ந்தேன்!  உய்ந்தேன்!  என்று விண்ணப்பஞ்செய்து நின்றனர்.

ஞானதேசிகர் அங்ஙனம் மெய்யன்பினால் வழிபட்டுநிற்கும் அம்முனிவரைநோக்கி, அவரது பரிபாகநீர்மையை நன்காராய்ந்து, இம்மாணவகன் நமது ஞானோபதேச பரம்பரை அங்குரித்தற் கோர்களைகணாவனெனத் திருவுளத்தோர்ந்து, ஞானதீக்கை புரிந்து, உண்மை ஞானத்தினை முன்செய் தவப் பேற்றால் அகக்கண்ணால் இயல்பாகவே தேர்ந்திருந்தமை யாராய்ந்து தீக்ஷாநாமஞ் சத்தியஞானதரிசனியயனச் சாத்தி, ஞானாபிடேகஞ் செய்து, தமது ஞானதேசிகர்பால் தாம் கேட்டமுறையானே சிவஞானபோதம் என்னும் பன்னிரு சூத்திரங்களையும் உபதேசித்தருளினர்.

Menu Title