திருவாவடுதுறை ஆதீனம்

நான்காவது பரஞ்சோதிமுனிவர் சரித்திரம்

அருட்குழக ரெழிற்கயிலை முழுக்காவ னந்திபிரா னடிகள் போற்றி

தெருட்சிபெறு மனைக்கமல சனற்குமர முனிவனிரு திருத்தாள் போற்றி

இருட்டுமலத் தகல்சத்ய ஞானதரி சனிசரண விணைகள் போற்றி

மருட்சியறு பரஞ்சோதி யருஞ்சீல குருபரன்கான் மலர்கள் போற்றி.

 

வெள்ளியங்கிரியினோர்பால் மெய்ஞ்ஞானபானுவாய் வீற்றிருந்தருளுஞ் சத்தியஞான தரிசினிகளிடம் அருளுபதேசம் பெற்று ஞானானுபவ முற்றிய நல்லாசிரியராகிய பரஞ்சோதிமுனிவர்,  தமது ஞானதேசிகர் ஆணைப்படி அநேக சீடர்களுக்கு அருளுபதேசஞ்செய்து கொண்டு அங்கு வீற்றிருந்தருளுவராயினார்.

அங்ஙனம் வீற்றிருக்கு நாட்களில் ஓர்நாள் அம்முனிவரர்,  தமது சந்தான முதற்குரவராகிய திருநந்திதேவர் அருளுபதேசம்பெற்ற தவமுனிவர் எண்மருள் ஒருவராகிய அகத்திய மகா முனிவர்பாற் தமக்குளதாகிய மெய்யன்பின் மிகுதியினால், அம்முனிவரரைத் தரிசித்தற்பொருட்டுப் பொதிகாசலத்திற் கெழுந்தருளத் திருவுளத்திற் கொண்டு, கயிலையினின்றிழிந்து கேதார முதலாகிய பல ஸ்தலங்களையுந் தரிசித்து வருவாராயினர்.  இது நிற்க.

நடுநாடு என வழங்குந் திருமுனைப்பாடி நாட்டிலே,  திருத்தூங்கானைமாடம் என்னுஞ் சிவாலயத்தைத் தன்னகத்தே கொண்ட திருப்பெண்ணாகடம் என்னுஞ் சிவநகரிலே, வேளாளர்குல திலகரும்,  சைவத் திருநெறியாளரும், களப்பாளர் கோத்திரத்தினரும்,  சிவபத்தி,  அடியார்பக்திகளிற் சிறந்தவரும், அச்சுதனென்னும் பெயரையுடையவரும் ஆகிய ஒருவர் இருந்தார். அவர் களப்பாளர்கோத்திரத்திற் பிறந்தமைபற்றி அச்சுதகளப்பாளர் என்று பெயர் விளங்கப்பெறுவர்.  அவ்வச்சுதகளப்பாளர். கல்விச் செல்வம் பொருட்செல்வம் என்னும் இரண்டானுஞ் சிறப்புற்றோங்கியும் புத்திரப் பேறின்மையால் மனந்தளர்ந்து, திருத்துறையூரில் ஆதிசைவகுலத்தில் அவதரித்தவரும் சகலாகம பண்டிதருமாகிய தமது குலாசாரியர் பாற்சென்று வணங்கித் தமது குறையை விண்ணப்பஞ் செய்தனர்.

அதுகேட்ட  சற்குருபரர் தம்ஆன்மார்த்த பூசையை முடித்துக்கொண்டு,  தேவாரத்திருமுறையை விதிப்படி அருச்சித்து, வணங்கி,  அச்சுதகளப்பாளரை அத்திருமுறையிற் கயிறுசாத்தும்படி ஆஞ்ஞை செய்தார்.  அச்சுதகளப்பாளர் எட்டுறுப்பும் பூமியிலேதோயும்படி அத்திருமுறையைப் பன்முறை நமஸ்கரித்தெழுந்து,  சிவபிரானைத் துதித்துத்,  தியானித்து அத்திருமுறையிலே கயிறு சாத்தினர்.  சாத்துதலும், திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் அருளிச் செய்த “”கண்காட்டுநுதலானும்” என்னுந் திருவெண்காட்டுத் திருப்பதிகத்திலே ;

 

“பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை

வாயினவே வரம்பெறுவ ரையுறவேண்டா வொன்றும்

வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

 தோய்வினையாரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே.”

 

என்னும் இரண்டாவது திருப்பாடல் உதயமாயிற்று.  ஆதலும்; இவரது குலாசாரிய சுவாமிகள்  அதனையோர்ந்து மிகவும் மகிழ்வுற்று அத்திருப்பாடலின் பொருளையும்,  திருவெண்காட்டின் மான்மியத்தையும், அங்கேயுள்ள முக்குளத் தீர்த்தங்களின் பெருமைகளையும்,  அவைகளில் ஸ்நானஞ்செய்து சுவாமி தரிசனஞ் செய்யவேண்டிய விதிகளையும், அச்சுதகளப்பாளருக்கு உபதேசித்துத்,  திருவெண்காட்டிற்சென்று அங்குப் புத்திரப் பேறு கருதித் தவமியற்றும்வண்ணம் அவருக்கு ஆஞ்ஞை செய்தனர்.

அச்சுதகளப்பாளர் ஆசிரியரை வணங்கி விடைபெற்றுத் தமது மனைவியாரோடும் திருப்பெண்ணாகடத்தினின்றும் நீங்கி மார்க்கத்திலுள்ள சிவஸ்தலங்களைத் தரிசித்துக்கொண்டு,  திருவெண்காட்டை யடைந்து,  சோமசூரியாக்கினி என்னும் முச்சுடர்களின் திருநாமம்பெற்ற மூன்று தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து,  சுவேதவனப் பெருமானையும்,  பிரமவித்தியாநாயகியையும் காலந்தோறும் தரிசித்து வழிபட்டு அங்கேவசித்து வருவாராயினர்.  அங்ஙனம் தரிசித்து வழிபட்டு வருநாட்களில், ஒரு நாள்,  சுவேதவனப் பெருமான் அச்சுதகளப்பாளர் சொப்பனத்திலே தோன்றி,  “”அன்பனே!  உனக்கு இப்பிறவியிலே பிள்ளைப் பேறு அரிதாயினும் சர்வாபீஷ்டமுந் தரத்தக்கதாய்,  நமக்கு மிக்கு பிரீ தியுள்ளதாய்,  மெய்யன்போடு  தன்னை ஓதுவோர்க்குச் சகலபேறுகளையுந் தருவதாயுள்ள தேவாரத்திருப்பதிகத்தையே பரமப்பிரமாணமாகக் கொண்டு வழிபடுகின்றாய்;  ஆகலின் அத்தேவாரத்தைப் பாடிச் சைவ ஸ்தாபனஞ் செய்த ஞானசம்பந்தப் பிள்ளையயன்றே சொல்லும்படி நமது திருவருளினாலே இன்னுந் தமிழ்நாடு உய்யும்வண்ணம் அத்தேவாரத்தின் மெய்ப்பொருளை உள்ளடக்கிய சைவ சித்தாந்தச் சாத்திரத்தை வெளிப்படுத்திச் சைவ ஸ்தாபனஞ் செய்யத்தக்கவனாக உன்னிடத்தில் ஒரு சற்புத்திரன் அவதரிப்பான்” என்று திருவாய்மலர்ந்து மறைந்தருளினார்.  உடனே அச்சுதகளப்பாளர் விழித்தெழுந்து பெருமகிழ்ச்சி கொண்டு சுவேதவனப்பெருமான் திருவருளைத் துதித்துக் கனவில் நிகழ்ந்த செய்தியைத் தமது மனைவியாருக்குத் தெரிவித்து அவரோடு தாமுஞ் சிவாலயத்திற்சென்று சிவபெருமானையும்,  உமாதேவியாரையுந் தரிசித்து வழிபட்டனர்.  இங்ஙனம் நாடோறுஞ் சிவ தரிசனஞ் செய்து கொண்டு அங்குவசித்து வருநாளிலே, சுவேதவனப்பெருமான் திருவருளினாலே உலகமெல்லாம்  உய்யும்படி அச்சுதகளப்பாளர் மனைவியாரது அருமைத் திருவயிற்றிலே கருப்போற்பத்தியாகிய பெரும் பேறுளதாயிற்று.  அச்சுதகளப்பாளர் அதனையுணர்ந்து திருவருளைத் துதித்து,  உள்ளத்தில் மூளுகின்ற பெருமகிழ்ச்சியோடு சிவாகமவிதிப்படிச் செய்யவேண்டுஞ் சடங்குகளைப் பத்துமாசங்களினுஞ் சிறப்பாகச் செய்து பேரின்ப நுகருநாளிலே,  அருக்கன் முதலிய கோள்களெல்லாம் அழகிய உச்சங்களிலே பெருக வலியுடன் நிற்பப் பிறங்கும் மிக மேலாகிய சுபதினத்திலே பரசமயத் தருக்கு நீங்கவும், எல்லாரும் அத்துவிதத்துண்மை அறியவும்,  வடமொழிச் சிவஞானபோதம் தென்மொழியில் வழங்கவும்,  சிவனடியார் எஞ்ஞான்றும் பேரானந்தம் பெற்றோங்கவும் ;  பலவுலகங்களுள்ளும் பூலோகமும்,  அப்பூலோகத்திலுள்ள  எந்நாடுள்ளும் தென்னாடுமே மிகச்சிறக்கவும் ஒருபுத்திரர்  திருவவதாரஞ்செய்தார்.  தந்தையார் பேருவகையுற்றுச் சாதகன்மமுதலியவற்றை விதிப்படிசெய்து,  சுவேதவனப்பெருமான் எனத்திருநாமஞ்சாத்தினர்.

பின்பு அச்சுதகளப்பாளர்,  தம்மனைவியாரோடும்,  அரும் பெறற்புதல்வரோடுந் திருவெண்காட்டிறைவனை  இறைவியோடும் வணங்கிவிடைபெற்றுக் கொண்டு திருப்பெண்ணாகடத்தை அடைந்தனர்.  அச்செய்திகேள்வியுற்ற  அவ்வூருளாரனைவரும் அச்சுதகளப்பாளர் இல்லத்திற்கு வந்து தெய்வத்திருவருளால் அவதரித்த அக்குழந்தையைத் தரிசித்துப் பெருங்களிப்புற்றுச் செல்வாராயினார்.  அத்திருக்குமாரர் பாலசந்திரன்போல வளர்ந்து  வருங்காலத்தில் திருவெண்ணெய்நல்லூரில் வசித்த அவருடைய நன்மாமனார் வந்து தரிசித்து,  அவரைத் தம்மில்லத்திற் கொண்டு சென்று பெருங்காதலோடும் வளர்த்து வந்தனர்.

இங்ஙனம் வளருநாளில்,  அப்புதல்வருக்கு இரண்டாம் ஆண்டு நிறைவுறலும்;  அவர்,  பரம்பொருளை உள்ளவாறுணரும் மெய்யுணர்வு நிறைந்து ஞானபாநுவாய் விளங்கினார். அங்ஙனம் இருக்குநாளிலே, திருக்கயிலையினின்றும் புறப்பட்டுக்,  கேதார முதலாகிய பல ஸ்தலங்களையுந் தரிசித்து வருபவராகிய பரஞ்சோதிமுனிவர்,  திருவெண்ணெய்நல்லூரை யடைந்து, அங்கே பண்டை நற்றவத்தால் அவதரித்து மெய்யுணர்வின் முற்றுப்பேறுடையராய் விளங்கிய சுவேதவனப் பெருமான் என்னும் பிள்ளைத் திருநாமமுடைய அப்புத்திரரைச் சந்தித்து,  அவரது பரிபாக நிலைமையை யோர்ந்து மகிழ்வுற்றுச் சிவதீக்கை புரிந்து, ஞானாபிடேகஞ்செய்து, சிவஞானபோதம் என்னும் பெயரிய பன்னிரு சூத்திரங்களையும் தாம் சற்குருபரர் பாற் கேட்ட முறையாக உபதேசித்து,   “”வடமொழியில் விளங்கும் இப்பன்னிரு சூத்திரங்களாகிய இச்சிவஞானபோதத்தை ஈண்டுள்ளோர் உணர்ந்துய்தற் பொருட்டுத் தென்மொழியாக மொழிபெயர்த்துப் பொழிப்பும் உரைக்க” வென்றருளிப் பொழிப்புரைக்குமாறும் சத்திய ஞானதரிசனிகள்பால் தாங்கேட்டவாறே வகுத்தருளிச் செய்து,  பொய்ச்சமயங்களின் நெறி இது இது என்று கண்டு கழிப்பித்து மெய்ச்சமயமாகிய சைவத்தின் உண்மையை உணரும் வித்தகத்திறமைக்கும்,  தமது ஞானாசிரியர் சத்தியஞான தரிசனிகள் திருநாமத்திற்கும் இணங்க ;  அம்மெய்யுணர்வுடையார்க்கு மெய்கண்டான் எனச் சிறப்புத் திருநாமஞ்சாத்தி,  இவ்வுலகின்கண் சுத்தாத்துவித சைவசித்தாந்த சற்குரு சந்தானம் விளங்கப் பரிபக்குவர்களுக்கு  ஞானோபதேசஞ் செய்துவருவாயாக” எனத் திருவரு ளாணைதந்து,  தாம் அங்குநின்றும் அரிதினீங்கி அகத்திய முனிவரர்பால் தமக்குளதாகிய மெய்யன்பினால் அம்முனிவரரைத் தரிசித்தற்பொருட்டு அவர் எழுந்தருளியிருக்கும் பொதிகாசலத்திற்கு எழுந்தருளினர்.

Menu Title