திருவாவடுதுறை ஆதீனம்

ஐந்தாவது மெய்கண்டசிவாசாரியர் சரித்திரம்

 திங்களொடு கங்கைபுனை யங்கணணார் செப்புதிரு வருளி னோடு

 தங்குருவாம் பரஞ்சோதி முநிவனினி தறைகுறிப்புந் தகவாக் கொண்டு

துங்கமுறு சிவஞாந போதமும்வார்த் திகப் பொழிப்புஞ் சுழிப்பு நீர்சூழ்ந்

திங்கமருந் தமிழ்நாடு வீடு பெறப் புரிகுரவ ரிருதாள் போற்றி.

 

அல்லாத பரசமய வலகைத் தேர்விண்

டகலவகல் புனற்பெண்ணை யயல்சூழ் வெண்ணெய்ப்

பொல்லாத விபமுகத்துப் புத்தே டன்பாற்

புனித சிவா கமப்பொருண்மை பொருந்த வாய்ந்து

நில்லாத நிலையிதுமற் றென்று மொன்றாய்

நிற்குநிலை யிதுவெனமெய் நெறிதேர்ந் தியாரும்

வெல்லாத சிவஞான போதஞ் சொன்ன

மெய்கண்டான் சரணமுடி மீது கொள்வாம்.

 

பரமகாருண்ணியப் பிழம்பாகிய பரஞ்சோதிமுனிவர்பால் இரண்டு பிராயத்திற்றானே சிவதீக்கையையும், ஞானாபிடேகத்தையும் பெற்று,  சித்தாந்தசூத்திரம் எனப்படும் சிவஞானபோத நூற்கேள்வியும், மெய்கண்டான் என்னுந்தீக்ஷாநாமமும், சுவேதவனப்பெருமான் என்னும் பிள்ளைத் திருநாமமும் உடையராய்த், திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளியிருந்த ஞானதேசிகர் அத்திவ்யஸ்தலத்திற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் சுயம்புமூர்த்தியாகிய பொல்லாப் பிள்ளையார் சந்நிதியிலே அச்சிவஞானபோதத்தைச் சிந்தித்துத் தெளிந்து நிஷ்டைகூடிச், சிவாநந்தாநுபூதி கைவரப்பெற்றுச், சிவபிரான்றிரு வருளையும், தமதாசிரியர் பரஞ்சோதிமுனிவரர் ஆஞ்ஞையையுந் திருவுளங்கொண்டு, தமிழ்நாடு உய்யும்வண்ணம் அவ்வடமொழிச் சிவஞானபோதத்தைத் தமிழில் மொழிபெயர்த்துச், சூத்திரக்கருத்து, மேற்கோள், ஏது என்னும் மூன்றையும் உரைச்செய்யுளானும், உதாரணம், பாச்செய்யுளானும் உரைத்தலாகிய வார்த்திகம் என்னும் பொழிப்புரையும் இயற்றியருளினர்.

பின்னர்;  ஞானதேசிகர் தமது உண்மைச் சிவாநுபூதிப் பேற்றினை ஒருவாறுணர்ந்து  சரண்புகுந்த அநேக மாணவர்களுக்குச் சிவதீக்கைபுரிந்து,  சித்தாந்த ஞானோபதேசஞ் செய்து திருநந்திதேவர் அருளுபதேச மரபு தழைத்தோங்கச் சிவஞான பாஸ்கரராக வீற்றிருந்தருளினர்.

இங்ஙனம் ஞானதேசிகர் வீற்றிருந்தருளுதலைக் கேள்வியுற்ற ஆதிசைவரும் சகலாகமபண்டிதர் என்னுங்காரணப்பெயர் பெற்றவரும் ஞானதேசிகரது குலாசிரியருமாகிய ஒருவர் தமது செனனபூமியாகிய திருத்துறையூரினின்றும் புறப்பட்டுத் திருவெண்ணெய்நல்லூரை யடைந்து, அங்குப் பற்பலமாணவர்களுக்குச் சித்தாந்த உபதேசஞ் செய்துவரும் ஞானதேசிகராகிய மெய்கண்டதேவரைச் சந்தித்தனர்.  அத்தருணத்தில் ஞான தேசிகர்பால் அங்குப் பாடங்கேட்கும் மாணவர்கள் ஆணவம் என்னுஞ்சொல்லை யயடுத்தோதுதலும்;  அதனைக்கேட்ட அக்குலாசாரியர் ஞானதேசிகரைநோக்கி ஆணவத்தின் சொரூபம் யாதென வினாவினர்.  வினாவிய அவர்பால் ஞானதேசிகர் பரிவுற்று அவரை அடிமை கொண்டருளத் திருவுளங்கொண்டு,  தமது தற்சனி விரலால் அவரைச்சுட்டி, “”இங்ஙனம் நிற்கும் நுமது நிலையே அதுவாகும்”  எனத் தெளிவித் தருளினர்.  அங்ஙனம் தெளிவித்த அளவில் அவர், தருக்கொழியப்பெற்று மெய்யன்பின் வயத்தராய், அச்சத்தோடும் ஞானதேசிகர் திருமுன்பு வீழ்ந்து,  அத்தேசிகோத்தமரது அடியிணைமலர்களை அருத்தியோடு தமது இருகரங்களாற் பற்றிக்கொண்டு, தேவரீரிடத்து ஆணவ வலியாலிழைத்த அஞ்ஞானச்செயலினைத் திருவுளத்தடையாது அடிமைகொண்டு உய்வித்தருள வேண்டுமெனப் பிரார்த்திக்க; ஞானதேசிகர் அவர்பாற்றிருவருள் பாலித்து அன்பனே!  எழுந்திரு,  எனத் திருவாய் மலர்ந்தருளினர்.

பின்பு ஞானதேசிகர் அவர்க்குச் சிவதீக்கைபுரிந்து,  தமது சந்தான முதற்குரவரது திருநாமத்தையே தீக்ஷாநாமமாகச் சாத்தி ஞானாபிடேகஞ் செய்து,  தாம் அருளிச் செய்த தமிழ்ச் சிவஞானபோதத்தினைக் கொண்டு வேதாந்தத் தெளிவாம் ஆக மாந்தத்தரும் பொருள்களெல்லாம் ஐயந்திரிபற வுணர்த்தியருளினர்.

இங்ஙனம், சைவசித்தாந்த பிரதிட்டாசாரியராக எழுந்தருளியிருந்த ஞானதேசிகர் நெடுஞ்காலஞ் சிவானந்த நிஷ்டையில் வீற்றிருந்தருளி, அத்திருவெண்ணெய்நல்லூரின் கண்ணே ஐப்பசிமாசத்துச், சுவாதிநக்ஷத்திரத்திலே,  அகண்டாகாரநித்தியவியாபக சச்சிதானந்தப் பிழம்பாகிய சிவபெருமானோடு இரண்டறக் கலத்தலாகிய சுத்தாத்துவிதமுத்தியை யடைந்தனர்.

Menu Title