திருவாவடுதுறை ஆதீனம்

ஏழாவது மறைஞானசம்பந்தசிவாசாரியர் சரித்திரம்

திருவளருஞ்  சாமமறை  திகழ்பரா  சரன்மரபோன்

விரசுநர்பான்  மறையுணர்வு  விரிந்தொளிரப்  புணர்த்துவோன்

மருதமொடு  கடந்தையையாண்  மறைஞான  சம்பந்த

குருமணிதன்  மருமலர்த்தாள்  குறித்துருகிப்  பரசிடுவாம்.

 

முன்னைப்  பெருந்தவத்தால் முதல்வனூலாகிய வேதசிவாக மங்களெல்லாவற்றையும் முற்றவோதியுணர்ந்தமை காரணமாகச் சகலாகமபண்டிதர் எனச்சிறப்புத் திருநாமமும், திருநந்திமரபில் அருளுபதேசம் பெற்ற மெய்மைதேர  அருணந்தி எனத் தீக்ஷா நாமமுங் கொண்டெழுந்தருளியிருந்து, நந்தி சந்தானம் விளக்கி வந்த ஞானதேசிகர்க்குத் துவிதீய ஆசாரியராகிய மறைஞான சம்பந்த சிவாசாரியர் தமது ஞானாசிரியசுவாமிகள் திருத்துறையூரில் திருவுருக்கரந் தருளுதலும், ஞானாசாரியசுவாமிகளுக்குத் தாம் தசதினத்தினும் பூசை மாகேசுரபூசை சிறப்புறவியற்றி,  அத்தலத்திற் சிலகாலம்வசித்திருந்து, அங்குநின்றும் புறப்பட்டு, அடியவர் குழாத்தோடு திருவதிகைமுதலாகிய சிவஸ்தலங்களைத் தரிசித்துக்கொண்டு, திருவெண்ணெய்நல்லூருக்குச் சென்று, திருக்கோயிலைச் சார்ந்து சுவாமி தரிசனஞ்செய்து, பொல்லாப் பிள்ளையார் பூங்கழலிறைஞ்சித் தமது திருமடத்துக் கெழுந்தருளி மெய்கண்டசிவாசாரிய சுவாமிகள் குருமூர்த்தந் தரிசித்து, அங்குப் பற்பல மாணவர்களுக்கு ஞானோபதேசஞ் செய்து எழுந்தருளியிருந்தனர்.  இங்ஙனம் பலகாலம் அத்தலத்திற் றம்பாற் சரண்புகும் பக்குவச் சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து கொண்டிருந்து, பின் அங்குநின்றும் அரிதினீங்கி, நடுநாட்டின் கண்ணுள்ள பற்பல ஸ்தலங்களையும் தரிசித்துக் கொண்டு, சிதம்பரத்தின் எல்லைக்குப் புறத்தேயுள்ள திருக்களாஞ்சேரியை யடைந்து, திருக்கோயிலிற்சென்று, பிரமபுரீசுரரைத் தரிசனஞ் செய்து அங்குள்ள சிருங்காரவனத்தில் எழுந்தருளியிருந்தனர்.

பின்னர், அங்குநின்றும் புறப்பட்டுச் சிதம்பரம் சென்று, திருக்கோயிலுக்கெழுந்தருளி சிற்சபேசரைத் தரிசனஞ்செய்து, பேரானந்த மகிழ்வெய்தி, மீட்டுந் திருக்களாஞ்சேரியிற்சென்று சிருங்காரவனத்திலே எழுந்தருளியிருந்துகொண்டு, நாடோறும் சிற்சபேசரைத் தரிசனஞ்செய்து வருவாராயினர்.

இங்ஙனம் நாடோறுஞ்  சிதம்பரஞ்சென்று சிற்சபேசரைத் தரிசித்து வரும்நியமமுடைய ஞானதேசிகர், திருக்களாஞ்சேரியின் கண்ணுள்ள சிருங்காரவனத்திலே எழுந்தருளியிருந்து பக்குவ ஆன்மாக்களுக்கு ஞானோபதேசஞ்செய்து வருவதைக் கேள்வியுற்றும், அத்தேசிகோத்தமரது அற்புத ஞானச்செயல்களைக் கண்டு வியந்தும் தில்லைவாழந்தணருள் தலைமைவாய்ந்து சிறந்த உமாபதியார், சிருங்காரவனத்திற்சென்று ஞானதேசிகரைத் தரிசித்தனர்.  பின்பு ஞானதேசிகர் உமாபதியாரது அதிதீவிரதர பக்குவத்தை நோக்கி, அவருக்கு ஞானதீக்ஷையும், ஞானாபிடேகமுஞ்செய்து, சிவஞானபோதம், சிவஞானசித்தி, இருபாவிருபது என்னும் ஞானநூல்களைத் தமது சற்குருபரர்பாற் றாங்கேட்ட முறையாக உபதேசித்து, அவரைத் தமது ஞானோபதேசமரபு தழைத்தோங்குதற்குக் களைகணாகிய துவிதீயாசிரியராக வைத்தருளினர்.

பின்பு ஞானதேசிகர், துவிதீயாசிரியராகிய உமாபதி சிவாசாரியருக்கும், ஏனைய மாணவர்களுக்கும் திரிபதார்த்தத்தின் நுண்பொருளை எளிதிலுணரச்செய்து, ஞானநிஷ்டைகூடி அத்திருப் பதியிலே ஆவணிமாதத்து உத்திர நக்ஷத்திரத்திலே தமது திருவுரு ஜோதிவடிவாக சிற்சபேசன்றிருவடி நீழலடைந்தருளினர்.

Menu Title