திருவாவடுதுறை ஆதீனம்

இருபத்திரண்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர்

ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக மூர்த்திகள் (பிலவங்க ஆண்டு புரட்டாசி மாதம் 4ஆம் நாள் (20‡09‡1967) புதன் கிழமையில் அகன்ற அறிவும், பரந்த அனுபவமும், ஆதீன சம்பிரதாயங்களும் நன்றாக நிரம்பப்பெற்று வயதிலே அப்பர் சுவாமிகளை ஒத்த கனிந்த மனத்து அடியவராகிய ஒடுக்கம் பெரியபூஜை சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகள் அவர்களுக்கு தமக்குப்பின் துவிதீய ஆசிரியராக ஆசாரியாபிஷேகம்  செய்வித்து “”ஸ்ரீ அம்பலவாண தேசிகர்” என தீக்ஷாநாமமிட்டு ஞான பீடத்தில் எழுந்தருளச் செய்தருளினார்கள்.

 

திருவாவடுதுறையில் ஞானபீடத்தில் அமர்ந்தது

22ஆவது குருமகாசந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் அனைவருக்கும் குருதரிசனக் காட்சி நல்கியருள்கின்றார்கள். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக மூர்த்திகள் 23‡09‡1967 சனிக்கிழமையன்று பரணி நன்னாளில் சிவபரிபூரணமெய்திய பின் 10 நாள் குருபூஜையும் மாகேஸ்வர பூஜையும் சிறப்பாகச் செய்தருளினார்கள். பின்னர் ஒப்பிலாமுலையம்மை சமேத ஸ்ரீ மாசிலாமணி ஈஸ்வரர்க்குச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடாற்றி குருபூஜையன்று ஸ்ரீ நமசிவாய மூர்த்திக்குச் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் செய்து குருவருள் பெற்றுப் பின் ஒடுக்கத்திலிருந்து குரு தரிசனக் காட்சி அளித்து அனைவரும் மகிழவே விபூதிப் பிரசாதம் நல்கியருளினர்.

இவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர்ப் பெருமானிடத்தில் பக்திபூண்டு ஒழுகும் பரம்பரைச் சைவ வேளாளர் குலத்தில் முதன்மையார் மரபினில் தோன்றியவர்கள். இளம் பிராயத்திலேயே இவ்வாதீனத்தை அடைந்து துறவறம் பூண்டு பெரிய பூஜை சுப்பிரமணியத் தம்பிரான்  என்ற சிறப்பு அபிதானத்தோடு விளங்கி பன்னெடுங்காலம் நாடோறும் வழுவாது ஸ்ரீ நமசிவாய மூர்த்தியையும்

ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமானையும் பூசித்த நேசித்த சொல்லொணாதப் பெருமையுடையவர்கள். முன்பு செய்த தவத்தின் பெருமையினாலே கருணாமூர்த்தியாகிய இவர்கட்கு ஸ்ரீ நமசிவாய மூர்த்தியின் திருக்கடைக்கண்ணோக்கம் பாலித்து, இவ்வாதீனத்தில் குருமகாசந்நிதானமாகக் கொலுவீற்றிருந்து அடியவர்கட்கு அருள்பாலித் தருளினார்கள்.

 

திருவிடைமருதூர் ஆலயத்தில்

இவர்கள் திருவிடைமருதூரில் ஆண்டுதோறும் திருமுறை கருத்தரங்கு ஒன்றினை மூன்று நாட்கள் பலரும் போற்றும் வகையில் சிறப்புற நடத்தியருளினார்கள். திருவிடைமருதூரில் திருவாசகக் கருத்தரங்கினைப் பெரும் பொருட் செலவில் முன்னாள் பாரதப்பிரதமர் மொரார்ஜிதேசாய் அவர்கள் தலைமையில் 18‡01‡79ல் சீரும் சிறப்புமாகக் கொண்டாடினார்க்ள. இவ்வாலயத்தில் பல திருப்பணிகள் செய்து பல லட்சக்கணக்கான ரூபாய் செலவில் மதில், கோபுரங்கள்,  மண்டபங்கள் முதலியவற்றிற்கு (ஆயில் பெயிண்டு) கண்கவர் வண்ணமுள்ளதாகச் செய்து ஆகம விதிப்படி சிவாச்சாரியார்களைக் கொண்டு கற்றவர்களாலும், மற்றவர்களாலும் போற்றப்படும் வகையில் கும்பாபிஷேகத்தினைத் தாமே முன்னின்று 15‡7‡70ல் மிகச் சிறப்புற நடத்திவைத்தார்கள். இக் கும்பாபிஷேகத்தில் திருமுறைப் பாராயணத்திற்காக காசி முதல் கன்னியாகுமரி வரையுள்ள ஆலயங்களில் பணிபுரிகின்ற சிறப்பு மிக்க ஓதுவார்மூர்த்திகளை வரவழைத்து உபசரித்து திருமுறைப் பாராயணப் பணி கொண்டருளியது மிகவும் போற்றுதற்குரியதாகும். அங்கு ஆலய சிப்பந்திகளுக்கு அக்கும்பாபிஷேகத்தின் பணிகளைப் பாராட்டி இவர்கள் தக்க சன்மானம் கொடுத்தருளினார்கள்.

 

திருவாவடுதுறை ஆலயத்தில்

இவர்கள் திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை சமேத ஸ்ரீ மாசிலாமணி ஈஸ்வரரிடத்தில் பேரன்பு கொண்டவர்கள். ஆதலின் இவ் ஆலயத்தில் அனைத்து திருப் பணிகளையும் செய்வித்து ஓர் சுபதினத்தில் (27‡8‡72) ஆகம முறைப்படி மகா கும்பாபிஷேகம் செய்வித்தார்கள்.

பொதுமக்களுக்கான கல்வி, சமூகப் பணிகள்

இவர்கள் தஞ்சை, மாயூரம் கற்சாலையில் திருவாவடுதுறைக்குப் பிரியும் கற்சாலையின் முகப்பில் அழகான நுழைவாயில் வளைவு ஒன்று கட்டியுள்ளார்கள். கும்பகோணம் அரசினர் கல்லூரி, அண்ணாமலைச் சர்வகலாசாலை,  சென்னை ராமகிருஷ்ணா ஹோம், திருப்பராய்த்துறை ராமகிருஷ்ணா குடில், போலீஸ், என்.ஜி.ஓ. மாணவர்கள், பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளி, பொறி இயல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் இவற்றில் பயிலும் மாணவர்கள் பலருக்கு உபகாரச் சம்பளமும் மற்ற வசதிகளும் செய்தருளினார்கள்.

இவர்களின் அருள் ஆட்சி காலத்தில், திருவாவடுதுறை, திருவிடைமருதூர், மாயூரம், சிதம்பரம், சங்கரநயினார்கோயில் முதலிய ஊர்களிலுள்ள பிரதான ஆலயங்களுக்கு அணிசெய்துவர யானைகளை வாங்கி இலவசமாக அளித்துள்ளார்கள்.

ஆதீன சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் குறையாத புத்தகங்கள் பல மொழிகளிலும் உள்ளன. ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏடுகள் வாங்கிச் சேர்க்கப்பட்டன. இவர்கள் சிவாகம வித்துவான்களையும், இரு மொழி வல்லுநர்களையும் வைத்து ஆகமப் பரிசீலனையும், நூல் ஆராய்ச்சியும் செய்யுமாறு ஏற்பாடு செய்துள்ளார்கள். சிறந்த இசை வல்லுநர்களையும், நாதஸ்வர வித்துவான்களையும்  பரிசு, வருடவர்த்தனை வாயிலாகப் பாதுகாத்து வருகின்றார்கள்.  திரு புலவர் கீரன் அவர்களையும் இவ்வாதீன வித்துவானாக நியமனம் செய்துள்ளார்கள். இவர்கள் திருவாவடுதுறையில் அரசினர் உயர்நிலைப் பள்ளி அமைக்க உபகாரம் செய்துள்ளார்கள். அரசினர் மருத்துவமனை கட்டுவதற்கு தக்க இடம் ஒன்று உதவியுள்ளார்கள். மெய்கண்ட விலாசம் என்னும் மண்டபம் பெரும் பொருட் செலவில் ஆதீன மடாலயத்தில் கட்டியுள்ளார்கள். இவர்கள் சிங்கிப்பட்டி (தஞ்சை மாவட்டம்) காசநோய் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் பதினாயிரம் ரூபாய் அளித்தருளினார்கள். இவர்கள் புயல், வெள்ள காலங்களில் பொது மக்கட்கு உணவு, உடை முதலிய அவசர உதவி செய்து வருகின்றார்கள்.

 

அருளாட்சியின் மாட்சி

இவர்கள் அருள் ஆட்சியில் திருவிடைமருதூரில் உள்ள, இவ் ஆதீன மேல்நிலைப்பள்ளி, இவ் ஆதீனத் தொடக்கப் பள்ளிகள் நன்றாக இயங்கின. இவர்களது அருள் நிறைந்த ஆட்சியில் எண்பத்தெட்டு ஆதீன வெளியீடுகள் நன்முறையில் வெளிவந்துள்ளன. நாடோறும் ஆதீனச் சார்பில் இவ்வூர்ப் பள்ளியில் பயிலும் சிறார்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி, சுசீந்திரம், பாவநாசம், கல்லிடைக்குறிச்சி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, விக்கிரமசிங்கபுரம் முதலிய இடங்களில் ஆதீன சமயப் பிரசாரகர்களை நியமித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் மாத ஊதியம் பெற்று சொற்பணியாற்றினார்கள். இவர்களது பொன்போலும் உயரிய ஆட்சியில் காசிமுதல் கன்னியாகுமரி வரையுள்ள இவ்வாதீனக் கிளைமடங்கள், கட்டளைகள், கோவில் நிர்வாகங்கள் மிகச் சிறப்புடன் விளங்கின.

திருச்செந்தூரில் கந்தர்சஷ்டி மண்டபம் இவ்வாதீனத்திற்குரிய சுக்கிரவாரக் கட்டளைமடம், செவ்வாய்க்கிழமைடம், விசாகக் கட்டளை மடம், முதலிய மடங்களில் அன்னதானம் சிறப்புற நாடோறும் நிகழ்ந்தன. ஸ்ரீ செந்திலாதிபனுக்கு உரிய கட்டளைகள் வழுவாது, யாதொரு குறைவின்றி திருக்கோயில் உள்ளே வீற்றிருக்கும் ஸ்ரீ செந்திலாதிபனுக்கும், பஞ்ச லிங்கங்கட்கும் மிக மிகச் சிறப்புற நிகழ்ந்தன. சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் இவ்வாதீனக் கட்டளைகள் நிகழ்கின்றன. மதுரையிலுள்ள கட்டளைகள் நன்கு நிர்வாகம் செய்யப்பெற்று வந்தன. கன்னியாகுமரியில் நாடோறும் இவ்வாதீனக் கட்டளைகள் சிறப்புற மிளிர்ந்தன.

 

திருவாரூரில்

திருவாரூரில் கமலாலயம் வடகரையில் உள்ள ஆதீன மடாலயத்தில் திருக்குறள் வகுப்பு நாடோறும் நிகழ்ந்தது. தேவரப்பாடசாலையும் அங்கு நடத்தப்பெற்றது. சென்னையில் நிகழ்ந்த நான்காவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு ரூ.50000 வழங்கியுள்ளார்கள்.

 

யாத்திரை புரிதல்

இவர்கள் ஆண்டுதோறும் தென்னாட்டு யாத்திரை மேற்கொண்டு, இவ்வாதீனக் கிளை மடங்கள் அமைந்துள்ள ஊர்களில் பன்னாட்கள் அவண் அமர்ந்து, தம்மை நாடி வரும் பக்குவமான சீடர்களுக்குச் சித்தாந்த சாத்திரோபதேசமும், சிவஞான உபதேசமும் செய்தருளி குருதரிசனக் காட்சி நல்கியருளினார்கள்.

 

திருமுறை வளர்ச்சிக்காக

இவர்கள் பாவநாசம், சுசீந்திரம், செங்கோட்டை முதலிய இடங்களில் தேவாரப் பாடசாலை அமைத்து சிறந்த ஓதுவார்மூர்த்திகளைக்கொண்டு மாணவர்கட்கு திருமுறையினைப் பயிற்றுவிக்குமாறு செய்தனர். திருவாவடுதுறையில் ஸ்ரீ நமசிவாயமூர்த்திகள் திருமுன்னர் காலையிலும் மாலையிலும் திருமுறையினை அனைவரும் போற்றி மகிழும் வண்ணம் சிறந்த ஓதுவார் மூர்த்திகளைக்கொண்டு திருமுறைப் பாராயணம் செய்யப்பெற்று வந்தது.

இவர்களுக்குத் திருமுறையில் மிக மிக ஈடுபாடு உண்டு. திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி தேவஸ்தானத்திலும், மாயூரம் ஸ்ரீ மாயூரநாதர் தேவஸ்தானத்திலும், திருமுறைவாணர்களை நியமித்து நாடோறும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகட்கு திருமுறையினைப் பயிற்றுவிக்குமாறு செய்தருளினார்கள். ஆண்டுதோறும் அக்குழந்தைகளுக்குப் போட்டி வைத்து, தேர்வுபெறும் குழந்தைகளுக்கு நல்ல பரிசுகள் அளிக்கப் பெற்றன.

ஆவுடையார்கோவில் என வழங்கும் திருப்பெருந்துறை திருக்கோயிலிலும், சூரியனார்கோயில் ஆலயத்திலும் திருப்பணிகள் நடைபெற்றன. மிக விரைவில் இவ்விருத் திருக்கோயில்களிலும் மகாகும்பாபிஷேகம் செய்ய மகாசந்நிதானம் அவர்கள் திருவுள்ளம் பற்றியிருந்தார்கள்.

சங்கரன்கோவிலுக்கு ஆண்டுதோறும் சென்று வழிபாடாற்றி, அங்குள்ள நமது ஆதீன மடாலயத்தில் எழுந்தருளியிருந்து அனைவருக்கும் குரு தரிசனக்காட்சி நல்கியருள்வார்கள்.

பல்வேறு ஊர்களிலுள்ள தமிழ்ச்சங்கங்கள், அடியார்திருக்கூட்டங்கள் அனாதை இல்லங்கள், பல்வேறு மதஸ்தாபனங்கள் முதலானவை பலவும் இவ்வாதீனத்திலிருந்து ஆண்டு தோறும் உதவிபெற்றன.  திருக்கோயில்களில் மகா கும்பாபிஷேகம் செய்யும் பேரன்பர்கள் பலர் நேரில் வந்து  மகா சந்நிதானத்தைத் தரிசித்து பெரும்பொருட் செல்வமும், அஷ்டபந்தன மருந்தும் பெற்றுச் செல்வர்.

அண்மையில் நடந்த கோவை மாவட்டம் ஸ்ரீ அவினாசியப்பர் திருக்கோயிலின் கும்பாபிஷேகத்திற்கென குருமகாசந்நிதானம் அவர்கள் பதினாயிரம் ரூபாய் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. கோவை கெளமார மடாலயம் ஸ்ரீமத் சுந்தரம் அடிகளார் (மேற்படி ஆலய கும்பாபிஷேகக் கமிட்டித் தலைவர்) மேற்படி தொகையினை நேரில் பெற்று மனமுவந்து சென்றார்கள். இதுபோன்ற பல நற்பணிகளை நாடோறும் செய்து வந்தார்கள்.

 

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் திருவுள்ளம்

இவர்கள் கனிந்த உள்ளம் உடையவர்கள். சிப்பந்திகள்பால் குற்றம் நீக்கி குணம் கொண்டு அன்பு பாராட்டுவார்கள். ஆதீன மரபுகள், சம்பிரதாயங்கள் முதலியவற்றை ஒருசிறிதும் மாறாது பாதுகாத்து வருகின்றார்கள். நாடோறும் இவ்வாதீன பிரதம பரமாசாரியர் ஸ்ரீ நமசிவாய தேசிகோத்தமரையும், இவ்வாதீன உபாசனா மூர்த்தியாகிய ஸ்ரீ ஞானமா நடராசப் பெருமானையும் வழுவாது, முறையாகப் பூசனை புரியும் பக்தி உள்ளம் கொண்டவராவார்கள். தாம் திருவுள்ளத்தில் எண்ணியவற்றை, எண்ணியபடி திருவருட்டுணை கொண்டு, எச்செயலையும் முடிக்கும் மன உறுதி உள்ளவர்கள் இத்தேசிக மூர்த்திகள்.

 

இளவரசு நியமித்தருளிய

திருநெல்வேலிச் சீமையிலே மாதவச் சிவஞான சுவாமிகள் திருவவதாரம் செய்த விக்கிரமசிங்கபுரத்தில் பரம்பரைச் சைவ வேளாளர் குலத்தில், நல்லொழுக்கச் சீலராய் விளங்கிய திரு.கோமதிநாயகம் பிள்ளை அவர்களின் இரண்டாவது திருக்குமாரராய்த் தோன்றியவர்கள்  சிவ சுப்பிர மணியம்.  இவர்கள் காலையிலும், மாலையிலும் பாவநாசம் ஆலயம் சென்று வழிபடும் நியமம் உடையவர்கள், அங்கு வரும் துறவிகளிடத்தில் அன்பாக ஒழுகிவரும் பான்மை மிக்கவர்கள். திருமுறைகளைத் திறம்பட ஓதிவரும் நியமமுடையவர்கள். அவர்கள் 8‡09‡79 அன்று திருவாவடுதுறை அடைந்து, இவ்வாதீன மடாலயம் சார்ந்து, ஸ்ரீ நமசிவாயமூர்த்தியைத் தரிசனம் செய்தார்கள். ஸ்ரீ நமசிவாய தேசிகோத்தமரின் குருவருள் துணை நிற்க ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களைத் தரிசித்து, துறவு நெறி மேற்கொள்ளும் விருப்பத்தினைத் தெரிவித்தார்கள். ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் திருக்கடைக்கணோக்கம் இவர்கள்பால் விழுந்தது. குருமகாசந்நிதானம் இவர்களுடன் உசாவி விவரம் தெரிந்தபின், 24‡9‡79ல் யாத்திரை காஷாயம் பூசைத் தம்பிரானைக் கொண்டு அளித்தருளினார்கள். பின்னர் சில மாதங்கள் கழிந்த பின் 21‡02‡80ல் மந்திரகாஷாயம் அளித்து, சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகள் என்று தீட்சாநாமம் சூட்டியருளினார்கள்.

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக  பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் நேர்முகமாக பெரியபூஜை சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகட்கு ஆதீன மரபுகளையும், பூசை முறைகளையும் நன்கு பயிற்றுவித்து  அருளாசி புரிந்தார்கள். கருணைக்கடலான குருமகாசந்நிதானத்தின் பெருங்கருணைப் பிரவாகம் ஸ்ரீமத் சுப்பிரமணியத் தம்பிரானிடத்தில் பெருகி ஓடியது. 17‡05‡80ல் குருமகாசந்நிதானம் அவர்கள் ஸ்ரீமத் சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகட்கு நிர்வாண தீட்சை இவ்வாதீனமுறைப்படி சம்பிரதாயத்துக்கேற்ப செய்து வைத்தார்கள். ஸ்ரீ ஞானமா நடராசரைப் பூசிக்கும் சீலத்தையும் இவர்களுக்கு ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் வழங்கியருளினார்கள். இவர்கள் பின்னர் பெரியபூஜை சுப்பிரமணியத் தம்பிரான் என அடியார் திருக்கூட்டத்தில் சிறந்து விளங்கி வரலானார்கள்.

குருவருளும் திருவருளும் கூடிவரவும், முன்னம் தாம் செய்த நல்வினைப் பயனும் தேடிவரவும், இரெளத்திரி ஆண்டு ஆடித் திங்கள் 22ஆம் நாள் புதன்கிழமை (6‡8‡1980) ரோகிணி விண்மீன் கூடிய சுபயோக சுபத்தினத்தில், ஸ்ரீமத் பெரிய பூஜை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களுக்கு குருமகாசந்நிதானம் அவர்கள் தம் பொற்கரத்தால் தமது துவிதீய ஆசாரியராக ஆசாரியாபிடேகம் செய்வித்து, இவர்களுக்கு “”சிவப்பிரகாச தேசிகர்” எனத் தீட்சா நாமமிட்டனர். குருமகாசந்நிதானம்அவர்கள் திருவுள்ளப் பாங்கின்படி ஸ்ரீ சிவப்பிரகாசதேசிகர் அவர்கள் சின்னபூசை மடத்தில் ஆதீனத்திலமர்ந்து அனைவர்க்கும் குருதரிசனக் காட்சி நல்கி, விபூதிப் பிரசாதம் அனைவர்க்கும் வழங்கி அருளினர். 12.12.1982ல் ஆதீனத் திங்களிதழான “மெய்கண்டார்’ துவங்கப்பெற்றது.

இவ்வாறு சிறந்த முறையில் சைவ பரிபாலனம் செய்தருளிய இருபத்து இரண்டாவது குருமூர்த்திகள்  07.04.1983ல் (பங்குனி ‡ திருவோணம்) பரிபூரணம் எய்தியருளினார்கள்.

Menu Title