திருவாவடுதுறை ஆதீனம்

ஆறாவது அருணந்திசிவாசாரியர் சரித்திரம்

முப்பொருளி னீரியல்பு மோரியல்பா நுவலாது முறைவெவ்வேறாய்ச், செப்புசிவா கமங்களின்றன் பொருளொருமை பெறவுணர்த்து திறமுன் னூலை, ஒப்பவிரி யாப்பதனாற் சித்தியயனும் வழிநூலா யயாளிர்பிற் காலத், திப்புவியோர் தெளிந்துய்ய மொழிந்தவரு ணந்திசிவ னிணைத்தாள் போற்றி.

திருமுனைப்பாடி நாட்டிலே, திருத்துறையூர் என்னுந் திருப்பதியிலே, ஆதிசைவமரபிலே, “”வேதமோடாகமம் மெய்யாமிறை வனூல், ஓதும் பொதுவுஞ் சிறப்புமென்றுன்னுக” என்பதனாலே தேற்றியருளப்பட்ட சிவாகமங்களெல்லாம், முன்னைநாளிற் போல இந்நாளினும் விளங்க ஒரு சற்புத்திரர் திருவவதாரஞ்செய்தார்.  மீஅவர் உரிய பிராயத்திலே வித்தியாரம்பஞ் செய்யப்பெற்று, வேதவேதாங்கமாதி கலைகளெல்லாம், ஓதியுணர்ந்து  பின்னர் விதிப்படி சிவதீக்கைபெற்று சிவாகமங்களைமிக்க அவாவினோடு விரைந்து பயில்வாராயினர்.

அக்காலத்திலே அவர் தந்தையாரும் மற்றையசான்றோரும் அவர் தாம் அவதரித்த மரபிற் கியைய, கல்வியறிவொழுக்கங்களால் நிரம்பிக்  கற்றோரும் மற்றோரும் ஒருங்கு வழிபடும் பெருந்தகைசான்று விளங்கு வதையோர்ந்து, ஓர்சுபதினத்திலே ஆசாரியாபிடேகஞ்செய்து ஆராமகிழ்ச்சி கொண்டிருந்தனர்.  அங்ஙனம் ;  தங்குலமுறைப்படி அபிடேகம் பெற்று, ஆங்காங்குள்ள தமது சீடவர்க்கத்தினர்க்குத் தீக்கையாதிகள் சிறப்புறச் செய்து வருபவராகிய அப்பெருந்தவத்தவர், முன்னைப்பிறவியிற்றொடர்ந்த  சிவபுண்ணிய விசேடத்தால் மேன்மேலுஞ் சிவாகமங்களை யயல்லாம் முற்ற வாராய்ந்து,  பிரசங்கித்து, தமிழ்நாட்டுவேந்தராற்  சகலாகமபண்டிதர் என்னுங் காரணச் சிறப்புத் திருநாமஞ் சாத்தப்பெற்றுத்,  தமக்கு ஒப்புயர்வின்றி விளங்குவாராயினர்.

இங்ஙனம் நிகழுநாளினில் சகலாகமபண்டிதர்,  தமது சீடவர்க்கத்தினருள் ஒருவராய்த் தமது கட்டளைப்படி மெய்யன்போடு சிவபுண்ணியங்களை இயற்றிவந்த அச்சுதகளப்பாளருக்கு அவர் செய்த புண்ணியப்பயனாக அவதரித்த சுவேதவனப் பெருமான் என்னும் பிள்ளைத் திருநாமமுடைய மெய்கண்ட தேவர் செப்பருந்தெய்வ அற்புதச் செயலுடையாரெனச் சிறிதுந்தேராதவராகித் தமது சீடரது தனயரென மதித்து, அவரது கல்வியறிவின் ஆற்றலால் அவர் பல மாணவர்களுக்குச்  சிறிய பிராயத்திலேயே சிவஞானசாத்திரோபதேசஞ் செய்துவருதலைக் கேட்ட அளவிலே அவரைத் தாம் பார்த்துவர அவாவுற்றுத், திருத்துறை யூரினின்றும் புறப்பட்டுத்  திருவெண்ணெய்நல்லூரையடைந்து,  மெய்கண்ட தேவரைக் கண்டு,  அளவளாவி, அவர்பால் அடிமை புகுந்து, சிவதீக்கையும் அருணந்தி என்னும் தீக்ஷாநாமமும், ஞானாபிடேகமும், சிவஞானபோத நூல் உபதேசமும் எய்தப்பெற்று,  அச்சிவஞான போதத்தைச் சிந்தித்துத் தெளிந்து தமது ஞானசற்குரவரைவிட்டு நீங்காமல்  இடையறா மெய்யன்பினால் திருவணுக்கத் திருத்தொண்டியற்றிச் சிவானந்த வாழ்வு பெற்றிருக்கும் நாட்களிலே ;   குரவர் பெருமானாகிய மெய்கண்ட தேவர் திருமேனி  சோதிர்மயமாகக் கரந்தருளத் தாம்,  தமது சற்குரவர்க்குத் தசதினத்தினும் பூசையுமாகேசுரபூசையுஞ் சிறப்புறவியற்றி, ஞானசற்குரவர் திருவுருக்கரந்தருளிய திவ்விய புண்ணியஸ்தலத்திலே திருக்கோயில் நிரூபணஞ்செய்து, குரவர் பெருமான் திருவுருப்பிரதிஷ்டை செய்து கும்பாபிடேகமியற்றி வசிப்பாராயினர்.  அங்ஙனம் வசிக்கும் நாட்களிலே  தமது ஞானசற்குரவர் வடமொழியினின்றும் மொழிபெயர்த்து உபதேசித்தருளிய தமிழ்ச்சிவஞானபோத நூல் நுண்ணுணர்வு சான்ற மேலவர்க்கேயன்றி ஏனையோர்க்கு எளிதிலுணரவொண்ணாத அரிய நூலாக இருத்தலைநோக்கி, அது தான் விளக்கமுற விரித்தல் யாப்பினால் சிவஞானசித்தி எனப்பெயர் தந்து பெருநூல் ஒன்றியற்றியதுமன்றி இருபாவிருபது எனச்சிறு நூல் ஒன்றுமியற்றிப், பற்பல மாணவர்களுக்கு ஞானோபதேசஞ்செய்து வருவாராயினர்.  இஃதிங்ஙனமாக.

திருமுனைப்பாடி நாட்டிலே மருதூர்ப்பதியிலே மறையவர் குலத்திலே பராசரகோத்திரத்திலே ஒரு சற்புத்திரர் அவதரித்து தந்தையாரால் பரமானந்தசிவம் என நாமகரணஞ் சூட்டப் பெற்று வளர்ந்து,  உபநயனஞ் செய்து வேதாதிகலைகளையயல்லாம் ஓதுவிக்க முன்னைத் தவத்தான் முற்றவுணர்ந்து,  மனந்தூயராகி,  வீடுபேற்றின் கண் வேட்கை மிகவுடையராய், எமக்கு வீடு பேற்றினை விரைவில் அருளவல்ல ஞானாசாரியரை எங்குச் சென்றடைவோம் என இடையீடின்றிக் கவலாநிற்கும் உள்ளத்தோடு சமீபத்திலுள்ள திருப்பெண்ணாகடத்திலே தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தூங்கானைமாடம் என்னும் திருக்கோயிலுக்குத் தினந்தோறுஞ் சென்று தெரிசித்து, மெய்யன்பினால் வழிபட்டு வருவாராயினர்.

அக்காலத்திலே ஞானதேசிகராகிய அருணந்திசிவாசாரிய சுவாமிகள், திருமுனைப்பாடி நாட்டின்கண்ணுள்ள பற்பல சிவஸ்தலங்களைத் தரிசிக்கத் திருவுளங்கொண்டு, திருவெண்ணெய்

நல்லூரினின்றும் புறப்பட்டுப் பல ஸ்தலங்களையுந்தரிசித்து,  திருப்பெண்ணாகடத்திற் சென்று திருத்தூங்கானைமாடச் சுடர்க் கொழுந்தைத் திருக்கோயிலிற்சென்று தரிசித்து, அத்திருக்கோயிலுக்குப் புறத்துள்ள ஓர்மடத்திலே எழுந்தருளி யிருந்தார்.  அத்தினத்திலே திருக்கோயிலில் தினந்தோறும் வந்து சுவாமி தரிசனஞ் செய்து வரும் நியமமுடைய பரமானந்தசிவம் என்னும் பற்றறுத்த பண்பாளராகிய, அப்புத்திரர் ஞானதேசிகர் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்து, அணைந்து சற்குருபரரைத் தரிசித்து, மகிழ்ச்சிப் பெருங் கடலுக்கோர் வரம்பு காணாராய், அன்று கல்லாலின்புடையமர்ந்த கருணை வடிவம் இதுவே என்று கருத்துட் கொண்டு,  உடல்முழுதும் உரோமாஞ்சிதங் கொள்ள நெஞ்ச நெக்குருகக் கண்களில் ஆனந்த அருவிபொழிய அடியற்ற மரம்போற் படிமிசை வீழ்ந்து நமஸ்கரித்தெழுந்து நின்று ஏத்துவாராயினர்.           இங்ஙனம், மெய்யன்பின் வயத்தராய் ஏத்துந்  தீவிரதரசத்திநிபாதம் உடைய அவர்பால் ஞானதேசிகர் திருவருள் சுரந்து, அவரைத் தமக்குத் தலைமை மாணாக்கராகக் கொள்ளுமாறு திருவுளங்கொண்டு, அத்தருணத்திற்றானே அவருக்குஞானாவதி முறைப்படி சிவதீக்கைபுரிந்து, மறைஞானசம்பந்தன் என்னும் தீக்ஷாநாமஞ்சாத்தி, ஞானாபிடேகஞ் செய்து, தமிழ்ச் சிவஞான போதமும் அதன்வழி நூலாகத் தாம் இயற்றிய சிவஞானசித்தியும் இருபாவிருபதும் ஆகிய ஞானநூல் மூன்றினையும் முறையாக உபதேசித்தருளினர்.

பின்பு ஞானதேசிகர் அங்குச் சிலகாலம் வசித்திருந்து, அத்தலத்தினின்றும் அரிதினீங்கி, வழியிடையிற் பலஸ்தலங்களையுந் தரிசித்துக் கொண்டு தமதுஸ்தானமாகிய  திருத்துறையூர்க்கெழுந்தருளித் திருக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனஞ்செய்துகொண்டு மீண்டனர்.  மேலும் ஞானதேசிகர் துவிதீய ஆசிரியராகிய மறைஞானசம்பந்த சிவாசாரியருக்கும் மற்றைய மாணவர்களுக்கும் சித்தாந்தத் தெள்ளமுதசாகரமாகிய சிவஞானபோதம் அதன் வழி நூலெனவழங்குஞ் சிவஞானசித்தியார் இருபாவிருபது என்னும் ஞான நூல்களில், இலை, மறை, காய்போல் இலங்கிய நுண்மைப்பொருள்களை இறும்பூதுற எளிதிலுணருமாறு செய்து, ஆங்குச் சிலகாலம் வசித்திருந்து, அத்திருப்பதியிலே, புரட்டாசி மாசத்துப் பூரநக்ஷத்திரத்திலே ; அவர் தந்திவ்விய திருமேனிஜோதிர் பிழம்பாக பெருங்கருணைக்கடலாகிய சிவபிரான் திருவடிக்கண் இரண்டறக்கலத்தலாகிய சிவசாயுச்சியம் அடைந்தருளினர்.

அருணந்திசிவாசாரியர் மெய்கண்டதேவர்பால் அருளுபதேசம் பெற்றனர் என்பதூஉம், மெய்கண்டதேவர் திருநந்திதேவர் அருளுபதேசமரபினர் என்பதூஉம், அருணந்திசிவாசாரியரியற்றிய சிவஞானசித்தியயன்னும் அரியநூல் தேசிகோத்தமராகிய மெய்கண்ட தேவர் மொழிபெயர்த்தருளிய தமிழ்ச் சிவஞானபோதத்திற்கு வழி நூல் என்பதூஉம், அச்சிவஞானசித்திக்கண் பரபக்கம், சுபக்கம் என்னும் இரண்டனுள்ளும் மங்கலவாழ்த்து முதலாகக் கூறும் திருவிருத்தங்களானும் இருபாவிருபது என்னும் ஓர் நூலானும் இனிது பெறப்படும்.

Menu Title