திருவாவடுதுறை ஆதீனம்

ஒன்பதாவது அருணமச்சிவாயதேசிகர் சரித்திரம்

சந்தான குரவர்களிற் சிவஞான போதம்வட  மொழியாற் சாற்று

நந்தீசர் சனற்குமர பகவான்சத் தியஞான நலத்தோ னின்பப்

புந்திபெறு  பரஞ்சோதிமா  முனிகடிரு  வடியைப்  புகழ்ந்து  போற்றிச்

சிந்தைமகிழ்ந் தார்வமுறத் தினந்தினமு நினைந்துருகிச் சிந்தை செய்வாம்.

 

தமிழ்நூலா லந்நூன்முன் னூலாக்கு மெய்கண்டான் சரணம் போற்றி

திமிரமகற் றிடுகதிர்போல் வழி நூல்செய் யருணந்தி திருத்தா ளேத்திச்

சுமையுடனோ யகற்றுதிரு மறைஞான சம்பந்தர் துணைத்தாள் வாழ்த்தி

யமுதெனச்சார் பருணூல்சொலுமாபதிதே வன்றிருத்தா ளடைந்துய் வாமே.

பெற்றான்சாம் பான்மனைவி யிறைமுதலோர் பேதுறவாற் பெற்ற வையம்

இற்றோடத் தம்பூசை யீசனுக்காட் டருநீர்பாய்ந் தெளிதாய்ப் பாகம்

உற்றோங்கு முள்ளிக்கு வீடீந்த வுமாபதியாருபதே சத்தின்

முற்றோன்ற லாகியம ரருணமச்சி வாயகுரு முதற்றாள் போற்றி.

 

திருவளர் கொற்றங் குடியிடை யமர்ந்த சீருமா பதிசிவா  சிரியன்

அருளுப தேசத் தோடுதன் பூசை யம்பல வாணர்பூ  சனையும்

புரிதரு மதிகா ரத்தையு மீந்து பொன்னடி சூட்டடிப் பெற்ற

குருவரு ணமச்சிவாயகோ மான்றன் குலமலர்த் தாளிணை போற்றி.

 

திருநந்திசந்தானகுரவரெண்மருள் ஒருவராகிய உமாபதி சிவாசாரி யரருளுபதேசம் பெற்ற அருணமச்சிவாயதேசிகர் தமது ஞானாசாரிய சுவாமிகள் திருவருளாணையின் வண்ணம் அக்கொற்றவன் குடியில் எழுந்தருளியிருந்து அழகிய திருச்சிற்றம்பலவுடையவரையும் அம்பல வாணரையும் தமது ஆன்மார்த்த சிவலிங்கப்பெருமானோடு  எழுந்தருளப் பண்ணிப் பூசித்துக்கொண்டு தம்மிடம் வந்தடைந்த பரிபக்குவர் களுக்கு ஞானதீக்கையும் சித்தாந்த ஞானோபதேசமுஞ்செய்து தமது குருசந்தான மோம்பி வருவாராயினர்.

சோழ மண்டலத்திலே வேதாரணியத்திலும் நவகோடிசித்தவாச புரமாகிய திருவாவடுதுறையிலும் நெடுங்காலமாக வசித்திருந்த சித்தமூர்த்திகளாகிய சிவப்பிரகாசர் என்னும் பெயரிய ஒருவர், பரிபாக வயத்தினால் ஞானாசாரியரையடைய விரும்பி, மூர்த்தி, தலந், தீர்த்தம் முறையாகச் சென்றாடித் தரிசனஞ் செய்து, வார்த்தைசொலச் சற்குருபரன் என்று நமக்கு வாய்க்குமென்று பரிவெய்தி வருவாராயினர்.  அங்ஙனம் பலதலங்களினுஞ் சென்று தரிசித்து வருபவராகிய அவர் சிதம்பரத்தை யடைந்து சிற்சபேசரைத் தரிசனஞ்செய்து அங்குவசிக்கு நாட்களில்,  ஞானா சாரியராகிய அருணமச்சிவாயதேசிகரது அருளுபதேச மாண்பினைக் கேள்வியுற்று, அத்தேசிகோத்தமர்பால் அடைந்து குறையிரந்தனர். அப்போது ஞானதேசிகர்  சித்தமூர்த்திகளது பக்குவச் செவ்வி யாராய்ந்து ஓர் நல்லோரையில் அவர்க்கு ஞானதீக்கையும் ஞானாபிடேக முஞ்செய்து சிவஞானபோத முதலாகிய சித்தாந்த நூல்களை உபதேசித்துத் தமக்குத் துவிதீயாசாரியராக வைத்தருளினர்.  பின்னர் சிலகாலஞ்சென்று ஞானதேசிகர் தமதாசிரியரது ஆன்மார்த்த பூசையாகிய அழகிய திருச் சிற்றம்பல வுடையவரையும், அம்பலவாணரையும் பூசைசெய்யும் அதிகார த்தையளித்து வீடுபேறுகருதி விரும்பி வந்தடைவர்க்கு உபதேசஞ்செய்யு முறைமையை விளக்கி அந்நெறி நிற்கவைத்துத் தாம் கொற்றவன்குடியிலே மார்கழிமாதத்துத் திருவாதிரை நட்சத்திரத்திலே சிற்சபாநடேசர் திருவடி  நீழலிற் கலந்தருளினர்.

Menu Title