திருவாவடுதுறை ஆதீனம்

பதினொன்று முதல் பதினைந்தாவது குருக்கள் சரித்திரம்

பதினொன்றாவது பின்வேலப்பதேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

நந்தியயனும் நம்  முதலாரியனை முனம்  வழிபட்டு நயந்து பின்னர்

அந்திமதி பனை  சடிலத்திறையை வழிபடுதன்  முறை  யதுமாறாது

வந்திவண்யா முறைவாமென் றுறைதல்  போற் பெருந்துறையை மருவி மாசு

சிந்தி யமர் துறைசைப்பின் வேலப்ப தேசிகன்றாள் சென்னி சேர்ப்பாம்.

 

சுசீந்திரத்தில் வீற்றிருந்து சீடர்களுக்குச் சித்தாந்தஞானோபதேசஞ் செய்தருளும் துவிதீய ஆசிரியராகிய வேலப்ப தேசிகர், தமது ஞானாசிரிய சுவாமிகள் சிவபரிபூரணமடைந்தமை சீடர்கள் வந்து தெரிவிக்க உணர்ந்து விரைவாகச் சுசீந்திரத் தினின்றும் புறப்பட்டுச் சங்கரநாராயணர் கோயிலையடைந்து, ஞானாசாரிய சுவாமிகள் குருமூர்த்தந் தரிசித்துக் குருபூசை, மாகேசுரபூசை சிறப்புற வியற்றிச் சிலநாள் அங்கு வீற்றிருந்தருளினர்.

பின்பு ஞானதேசிகர், அங்கு நின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பற்பல ஸ்தலங் களைத் தரிசித்துக்கொண்டு திருவாவடு துறையைச் சேர்ந்து, அவ்விடத்தே சித்தாந்த ஞானச்செழுஞ்சுடராய் அமர்ந்தருளி யிருக்கும் ஞானமூர்த்தியாகிய நமச்சிவாய  தேசிகோத்தமரைத் தரிசித்து பூசனையாற்றி வழிபட்டுக்கொண்டு ஒடுக்கத்திலெழுந் தருளி ஞானதேசிகத் திருக்காட்சியுந் திருவருட் பிரசாதமும் நல்கி யாவரையும் மகிழ்வித்தருளினர்.

பின்பு சின்னாட்களுள் ஞான தேசிகர், தம் அடியவர் பல்லோருள்ளுஞ் சிறந்த திருச்சிற்றம்பலத் தம்பிரான் சுவாமி களுக்கு ஆசிரியாபிடேகமியற்றி தமக்குத் துவிதீயஆசிரியராகநியமனஞ்செய்தருளினர்.

அன்றியும் ஞானதேசிகர், தமது துவிதீய தேசிக சுவாமிகளுக்கு மெய்கண்ட சாத்திரமும், பண்டார சாத்திரமும், உபதேசித்து, வடமொழியில் சிவாகமங் களும் பயிற்சி செய்வித்தருளினர்.

அத்தேசிக சுவாமிகள் ஞானதேசிகர் அருகிருந்து சித்தாந்த ஞான சாத்திரங்களை யும் சிவாகமங்களில் இரண்டு லக்ஷஞ் சுலோகமும் தெளிவுறப்பயின்று தென் மொழி, வட மொழி என்னும் தேவ பாஷை யிரண்டினும் மிக வல்லுநராயினர்.

அக்காலத்தில் குருலிங்க சங்கம சேவை செய்து கொண்டு திருவாவடுதுறையில் அருங்கலை வல்லுநராய் எழுந்தருளி யிருக்கும் மாதவச் சிவஞான சுவாமிகள் ஆதீனபிரதமாசாரியராகிய பஞ்சாக்கர மூர்த்தியின் மீது தோத்திரமாக ஓர் பதிகம் இயற்றியருளினர்.

அவை வருமாறு :‡

பஞ்சாக்கரதேசிகர் மாலை

திருச்சிற்றம்பலம்

 

கட்டளைக்கலித்துறை

 

அறிவே யருட்செல்வ மேநிறை வேயர சேயடியா

ருறவேயயன் னாருயி ரேமணி யேயுரு காதநெஞ்சிற்

பிறிவே துரியங் கடந்த சிவானந்தப் பேரமுதச்

செறிவே கருணைப் பிழம்பேபஞ் சாக்கர தேசிகனே (1)

 

பொய்யுங் கவடுங் கொடுமையும் வஞ்சமும் பூண்டபொல்லாக்

கையன் கலதி முழுமூட னேனுநின் கண்ணருளா

லுய்யும் படியயன்று கூடுமெந் தாயுண்மை யாளரன்பு

செய்யுந் துறைசையுட் டேவேபஞ் சாக்கர தேசிகனே      (2)

 

பரிசறி யேனருட் பண்பறி யேனெனைப் பற்றும் வினைக்

கரிசறி யேனது மாற்றறி யேன்கல ரோடிணங்கித்

துரிசுக ளேசெயும் பொல்லா வுலகத் தொழும்பனுக்குன்

றெரிசனங் கிட்டுவ தென்றோபஞ் சாக்கர தேசிகனே.       (3)

 

மருவே னுனதடி யார்திருக் கூட்ட மருவிவஞ்ச

மொருவேன் மகளிர் விழிக்கடை நோக்குக் குளம்பதைத்து

வெருவே னடிமையு மெந்நா ளுனதருண் மேவுவனோ

திருவா வடுதுறைத் தேவேபஞ் சாக்கர தேசிகனே.         (4)

 

ஆனந்த வாழ்வி  லடியாரெல் லாரு மகங்களிப்ப

நானிந்த மாயத் தொடக்கினில் வீழ்ந்து நலிதனன்றோ

வானந்த நீண்ட மதிலா வடு துறை வாழ்முதலே

தேனுந்து பங்கயத் தாளாய்பஞ் சாக்கர தேசிகனே         (5)

 

வற்றாக் கருணைத் திருநோக்கு நின்முக மண்டலமுஞ்

சற்றே முகிழ்த்த குறுமூர லுந்தட மார்பழகும்

பொற்றாளுஞ் சின்முத் திரையுநெஞ் சூடு பொறித் துவைப்பாய்

செற்றார் புரஞ்செற்ற தேவே பஞ்சாக்கர தேசிகனே. (6)

 

தேறாத நெஞ்சுந் தெளியாத சிந்தையுந் தேங்கியின்ப

மூறாத கண்ணு மொழியாக் கவலையு முன்புகழே

கூறாத நாவு மெனக்கே தகுமென்று கூட்டினையே

சீறாத ருள்செயுந் தேவேபஞ் சாக்கர தேசிகனே.                  (7)

நின்னரு  ணோக்கினுக் கெவ்வள வேனு நெகிழ்ந்துருகா

தென்னுடை வன்மன மின்னார் விழிக்கடைக் கென்னிலந்தோ

வன்னியி னேர்மெழு காயுரு காநிற்கு மாயமென்னே

செந்நெறி யாய்நின்ற தேவேபஞ் சாக்கர தேசிகனே. (8)

 

பிறவித் துயரினி யாற்றே னடைக்கலம் பேயுலகின்

மறுகித் திரிந்தலைந் தெய்தே னடைக்கல மங்கைநல்லா

ருறவைத் தவிர்த்துய்யக் கொள்வா யடைக்கல முண்மையன்பர்

செறிவுக்குள் வாழுமெய்த் தேவேபஞ் சாக்கர தேசிகனே.   (9)

 

இருவினை தாமிவை மும்மல மீங்கிவை யீதுசிவங்

கருவுறு மாருயி ருண்மை யிதுவென்று காட்டவல்ல

குருபர னீயன்றி வேறறி யேனிக் குவலயத்திற்

றிருவெண்ணெய் மெய்கண்ட தேவேபஞ் சாக்கர தேசிகனே.       (10)

 

(திருவாவடுதுறை ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் இரவு பூஜை நிறைவில் நாள்தோறும் பஞ்சாக்கர தேசிகர் மாலை பத்துப் பாடல்களையும் ஆதீன ஓதுவார் மூர்த்திகள் பாட, ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் ஒவ்வொரு பாடலுக்கும் ஒருமுறை என பத்து அஷ்டாங்க நமஸ்காரத்தை ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளுக்குச் சமர்ப்பிப்பார்கள். இன்றும் இம்மரபு வழக்கத்திலுள்ளது.)

பின்பு  ஞானதேசிகர், பாண்டிய தேசத்தின் கண்ணும் சேர தேசத்தின் கண்ணும் உள்ள தமது சீடர்களுக்குத் தீக்கை யாதிகள் செய்யத் திருவுளங் கொண்டு, துவிதீய ஆசிரியராகிய திருச்சிற்றம்பல தேசிக சுவாமிகளும், வடமொழி, தென்மொழிக் கடலை நிலைகண்டுணர்ந்த மாதவச் சிவஞான சுவாமிகள் முதலிய தம்பிரான் சுவாமிகளும், ஏனைய அடியவர்களும், பரிசனங்களும் உடன் வர அங்கு நின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பலஸ்தலங்களை யுந்தரிசித்துக் கொண்டும், ஆங்காங்கு தமது சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து கொண்டும், சுசீந்திரத்தை அடைந்து திருக் கோயிலுக்கெழுந்தருளி சுவாமி தரிசனஞ் செய்து தமது திருமடத்திற்கு வந்து ஆதீன பிரதமாசாரியராகிய நமசிவாயமூர்த்திகள் பிரதிட்டாலயத்திற்சென்று தரிசித்து இரு குமாரசுவாமி தேசிகர் குருமூர்த்தங்கள் பணிந்து வழிபாடியற்றி அங்கமர்ந்தருளினர்.

பின்பு சிலநாட்கள் கழிந்தவுடன் ஞானதேசிகர் தமது பிற்றோன்றலாகிய திருச் சிற்றலம்பல தேசிகரை அவ்விடத்தில் அமர்ந்து அருளுபதேசஞ்செய்து வருமாறு பணித்துவிட்டு, தாம் அங்கு நின்றும் புறப்பட்டு ஆங்காங்குள்ள திவ்விய ஸ்தலங் களைத் தரிசித்துக் கொண்டு திருக் குற்றாலத்திற்கு எழுந்தருளி சித்திரா நதி தீர்த்தமாடி சுவாமி தரிசனஞ்செய்து தமது திருமடத்திற்குச் சென்று துவிதீய முத்தம்பலவாண தேசிக சுவாமிகள் குருமூர்த்தந் தரிசித்து அங்கு சிலநாள்  வதித்திருந்து, அங்கு நின்றும் அரிதினீங்கிச் சங்கரநாராயணர் கோயிலைச்சார்ந்து திருக் கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ் செய்து தமது திருமடத்திற் சென்று தமது ஞானாசாரியசுவாமிகள் குருமூர்த்தந்தரிசித்து பூசனைபுரிந்து வழி பாடியற்றி அங்கு சிலநாள் வசித்திருந்து அரிதினீங்கி வழியிடையிற் பலஸ்தலங்கள் தரிசித்து மதுரை, திருப்பூவணம் என்னும் இரண்டு திவ்யஸ்தலங்களையுந்தரிசனஞ் செய்து அங்கு ஞானநிட்டை கூடியருளிய உருத்திரகோடி தேசிகர், வேலப்பதேசிகர் குருமூர்த்தங்கள் தரிசனஞ் செய்து வழிபாடியற்றி அங்குநின்றும் அரிதினீங்கி வழி யிடையிற் பலஸ்தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறையை யடைந்து திருக் கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ்  செய்து தமது திருமடத்திற்கு வந்து சிவப்பிரகாச விநாயகரையும், திருமாளிகைத் தேவரையும், சித்தாந்த ஞான தினகரராகிய ஸ்ரீ நமச்சிவாய தேசிகோத்தமரையும் தெரிசனஞ்செய்து அருச்சித்துவழிபட்டுக் கொண்டு, அங்கு அடியவருக்கருளுபதேசஞ் செய்தமர்ந் தருளுவாராயினர்.

அக்காலத்தில் ஞானதேசிகர் திருக் கூட்டத்து அடியவர்களிற் சிறந்த மாதவச் சிவஞான தம்பிரான் சுவாமிகள், குருலிங்க சங்கம சேவை செய்து அங்கு வசிக்கும் நாட்களில் அச்சுவாமிகள் சிலரது வேண்டு கோளுக்கியைந்து சிற்றிலக்கணங்கள் பலவற்றினுள்ளுஞ் சிறந்த நன்னூலுக்குச் சங்கரநமச்சிவாயப் புலவர் செய்த புத்துரையாகிய விருத்தியுரையைத் திருத்தஞ் செய்தும், திருவாரூர் மீ வைத்திய நாவலர் இயற்றிய இலக்கண விளக்கத்தில் எழுத்ததி காரம் சொல்லதிகார முதலியவற்றி லுள்ள வழுக்கள் பலவும் வெளிப்படுமாறு இலக்கண விளக்கச்சூறாவளி என ஒன்று செய்தும், மரபட்டவணையயன வழங்கும் சித்தாந்த மரபு என்பதோர் சிறுநூலைத் திருவாவடுதுறை ஆதீன சம்பிரதாயக் கட்டளை எனக்கொண்டு தருமபுர ஆதீனத்தருள் ஒருவர் மறுத்தெழுதிய சித்தாந்த மரபுகண்டனத்திற்குமறுப்பாகச் சித்தாந்த மரபு கண்டன கண்டனம் என ஒன்றியற்றியருளியும், சிவஞான போதத் திற்குச் சிற்றுரையும், சிவஞான சித்தி சுபக்கத் திற்குப் பொழிப்புரையும் அருளிச்செய்தனர்.

பின்பு ஞானதேசிகரிடத்து விடை பெற்றுக்கொண்டு தம்மிடத்துக் கல்வி பயிலும் மாணாக்கர் சிலரோடு மாதவச் சிவஞான சுவாமிகள், சிவஸ்தலயாத்திரையின் பொருட்டுத் திருவாவடுதுறை யினின்றும் அரிதினீங்கித் திருத்துருத்தி, மாயூரம் முதலியஸ்தலங்களைத் தரிசித்துச் சிதம்பரஞ்சென்று சிற்சபேசனைத்தரிசித்து கொற்றவன்குடியினும் திருக்களாஞ்சேரி என்று பெயர் வழங்குஞ் சிவ நகரின் கண்ணுள்ள சிருங்கார வனத்தினுஞ்சென்று பிரமபுரியீசுவரரையும், சந்தானகுரவர்க ளெண்மருள் ஒருவராகிய மறை ஞான சம்பந்த சிவாசாரியரையும், உமாபதி சிவாசாரியரையும், அருணமச்சிவாய தேசிகரையுந் தரிசித்து, அங்கு நின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பலஸ்தலங் களையுந் தரிசித்து வழிபட்டு திருநாவுக்கரசு நாயனார் கடலினின்றுங் கரையேறிய திருப் பாதிரிப்புலியூருக்குச் சென்று சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு அங்கு சில நாள் வீற்றிருந்தருளினர்.

அக்காலத்தில் அச்சிவாலயத்தின் கண்ணே சிலவித்துவான்களும் பிரபுக்களுங் கூடிய சபையில் ஒரு பிரபு நூறுபொன்னைக் கிழியாகக்கட்டி வைத்து “”கரையேறவிட்ட முதல்வா வுனையன்றியுமோர் கதியுண்டா மோ” என்று ஈற்றடி யயடுத்துக் கொடுத்துச் செய்யுளைப் பூர்த்தி செய்பவர் இப்பொற் கிழியை எடுத்துக் கொள்ளலாம்” என்று சொன்னார். அக்காலத்து அந்நிகிழ்ச்சியைச் சுவாமி தரிசனத்தின் பொருட்டு அத்தலத்தில் வீற்றிருக்கும் நமது சுவாமிகள் அறிந்து ஒரு ஏழைப்பிராமணனை நோக்கி அப்பொற் கிழியை எடுத்துக் கொள்ளும்படிக் கட்டளை யிட்டு

“”வரையேறவிட்டமுதஞ்சேந்தனிடவருந்தினை  வல்லினமென்றாலு

முரையேறவிட்டமுதலாகுமோவெனைச்சித்தென்  றுரைக்கிலென்னா

நரையேறவிட்ட முதனாளவனாக் கொண்டு நறும்புலிசைமேவுங்

கரையேறவிட்ட முதல்வாவுன்னையன்றியு  மோர்கதியுண்டாமோ”

என்று செய்யுளைப் பூர்த்தி செய்தருளினர்.

பின்பு அச்சுவாமிகள், திருப்பாதிரிப் புலியூரையகன்று போய் காஞ்சிபுரத்திற் கெழுந்தருளி திருக்கோயிலிற்சென்று, ஏகாம்பர நாதசுவாமி தரிசனஞ் செய்து திருக்காமகோட்டத்திற்கு வந்து காமாக்ஷியம் மையைத் தரிசித்து அப்பதியில் சிலகாலம் அமர்ந்தருளினர்.

அக்காலத்தில் தினந் தோறும் தம்மை வந்து தரிசித்து வரும் அன்பினர் பலருள்ளே அந்நகர வைணவர்கள் சிலர் கம்பராமாயண காவியம் ஒன்றுமே தமிழிற் சிறந்திருப்ப தெனச் செருக்கோடு கூற, அதனைச் செவி யுறுத்தருளிய சுவாமிகள் அவர்கள் தருக் கொழியத் திருவுளங்கொண்டு அக்கம்ப ராமாயணத்து நாந்திச் செய்யுளாகிய “”நாடியபொருள்கைகூடும்” என்னுஞ் செய்யுள் முற்றுங்குற்றமே எனச் சங்கை செய்தருளினார். அத்தருணத்தில் அவ்வைணவர்கள் அச்சங்கைக்கு உத்தரஞ் சொல்ல இயலாமல் வருந்தித் தெரியாது பிதற்றினோம் எனச் சொல்லிவணங்கித் துதிக்க, மாதவச் சிவஞானசுவாமிகள் தண்ணளி கூர்ந்து அவ்வைணவர்கள் உவப்புற, மீஅச்சங்கைக்குத்தாமே உத்தரம் வித்தமுறக் கூறியருளினர்.

அன்றியும் அப்பதியில் யாத்திரையாக வந்தருளிய திருவண்ணாமலை ஆதீனமென்று வழங்கப்பெறுந் தெய்வசிகா மணி தேசிகர் ஆதீனத்துப் பண்டார சந்நிதிகளில் ஒருவர், சிவஞான சித்தியில், “”என்னை யிப்பவத்திற் சேராவகையயடுத்து” என்னுஞ் செய்யுளில் “”எடுத்து” என்னுஞ் சொல்லுக்கு பொருள் என்ன? என்று தமது ஆதீனத்து ஞானப்பிரகாச முனிவர் இயற்றிய சிவசமவாதவுரையின் உயர்வு தொனிக்கும் வண்ணம், மாதவச் சிவஞான சுவாமி களிடத்தே வினாவுவித்தனர். அக்காலத்தில் அச்சுவாமிகள் எடுத்து என்னுஞ் சொல்லுக்குச் சிவசமவாதவுரை மறுப்பு என ஒன்றும், அதன் மேற் பிரதிகண்டனம் உண்டாயவழி மேன்மறுத்த மறுப்பு குதர்க்க வுரையாளராற் போழ்படாதவாறு எடுத்து என்னுஞ் சொல்லுக்கிட்ட வயிரக்குப் பாயம் என ஒன்றும், சிவஞான சித்திக்கு ஞானப் பிரகாச முனிவர் இயற்றிய வுரை முற்றும் போலியுரையயன விளக்கச்  மீமீசிவசமவாத வுரை மறுப்பு என ஒன்றுஞ்செய்தருளினர்.

அன்றியும், சித்தாந்த சைவபரமா சாரியராகிய, சர்வாத்ம சம்புசிவாசாரிய சுவாமிகள் அருளிச் செய்த கத்தியரூபமாகிய வடமொழிச் சித்தாந்தப் பிரகாசிகையை மொழிபெயர்த்து அவ்வாறே, தென்மொழியில் வசனமாக ஒரு நூலியற்றியும், சிவாக்கிய சோழமகாராசா காலத்தில் கஞ்சனூரில் அவதரித்தருளிய ஆசாரியசரணராகிய ஸ்ரீ அரதத்தசிவாசாரிய சுவாமிகள் வைணவ மதகண்டனஞ்செய்து சைவ மதஸ்தாபனஞ் செய்யும் பொருட்டு நெருப்பிலே பழுக்கக் காய்ச்சிய இருப்பு முக்காலியிலே எழுந்தருளி யிருந்து சிவபெருமானே பரம்பொருளென இருபத்திரண்டு ஏதுக்களாலே நாட்டி யருளிய சுலோகபஞ்சகத்தின் மொழி பெயர்ப்பும், ஸ்ரீ அப்பய்யதீக்ஷிதர் அருளிச் செய்த சிவதத்துவ மூலமொழி பெயர்ப்பும், ஜமதக்கினி முனிவருடைய புத்திரரும் இடைச்சங்கப் புலவர் ஐம்பத்தொன்மருள் ஒருவருமாகிய திரணதூமாக்கினி என்னும்  தொல்காப்பிய முனிவர் அருளிச் செய்த இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு உரையாசிரியராகிய இளம்பூணர், சேனா வரையர், நச்சினார்க்கினியர் என்னும் மூவரி யற்றிய உரைகளிலுள்ள ஆசங்கைகளை நீக்கித் தெளிவிக்கும் பொருட்டு அத் தொல்காப்பியத்தின், பாயிரத்திற்கும், முதற் சூத்திரத்திற்கும், சூத்திரவிருத்தி எனப் பெயர் தந்து பா´யமொன்றும் இயற்றியருளினர்.

பின்பு மாதவச் சிவஞான சுவாமிகள், தம்மாணாக்கர் பல்லோருடனும் காஞ்சிபுரத் தினின்றும் புறப்பட்டு வழியிடையிற் பல ஸ்தலங்களைத் தரிசித்து திருவொற்றியூரை யடைந்து திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ் செய்து மணலி சின்னையா முதலியார் வேண்டுக்கோளுக்கியைந்து அங்கு சில காலம் வீற்றிருந்தருளுவா ராயினர். அக்காலத்தில் சித்தாந்த சூத்திர மாகிய சிவஞானபோதப் பன்னிரு சூத்திரங்களுக்கும் விருத்தியுரை எனப்படும் மாபாடியம் இயற்றுதற்பொருட்டு வேத நூல் ஆராயத் திருவுளங்கொண்டு, சுவாமிகள், தம்மை ஆதரித்து வரும் மணலி சின்னையா முதலியாரிடத்து அவ்விருப்பத்தினைத் தெரிவிக்க, அவர் அங்ஙனமே அந்தணர்களை ஒருங்குசேர ஓரிடத்தில் அழைத்து அவர்களுக்குச் சுவாமிகளுடைய பெருமை களையயல்லாம் எடுத்துச் சொல்லிக் கொண்டு இறுதியில்   சுவாமிகள் திருமுன்பு இருந்து வேதங்களை ஒழுங்காக ஓதிவர வேண்டுமென்று கேட்டனர். அப்பொழுது அவ்வந்தணர்கள் சுவாமிகள் வேதம் ஓதுதற்குரிய சாதியார் அல்லராயினும் முற்றத்துறந்த முனிவராக வீற்றிருந்தலினால் மறுத்தற்கு முடியாமல், தியாகராசப் பெருமானுக்குத் திருவுளச்சம்மதமானால் அவ்வாறே தடையில்லாமல் ஓதுவோம் என்றனர். அதைக்கேட்ட முதலியார் சுவாமிகள்பால் விண்ணப்பஞ்செய்ய, சுவாமிகளும் அதற்கு முழுதும் இசைந்தருளினர்.

பின்பு சின்னையா முதலியார், ஓர் சுபதினத்தில், சுவாமிகளையும் அந்தணர்களையும் அழைத்துக் கொண்டு திருக் கோயிலிற் சென்று தியாகராசப் பெரு மானுக்கு விசேட பூசைசெய்வித்து வழிபட்டுக் கொண்டு, அப்பெருமான் சந்நிதியில் சந்தனக்குடம் வைப்பித்து ஓதுக என்றெழுதப்பட்ட சீட்டை, எழுதப்படாத மற்றத் தொண்ணூற்றொன்பதனோடுஞ் செறித்து அக்குடத்தினுட்பெய்வித்து அவற்றுள்  ஒன்றை ஓர்பிராமணக் குழந்தையைக் கொண்டெடுப்பித்து நோக்கிய விடத்து, அது ஓதுகவென்றெழுதப்பட்டதே யாயிருப்பக்கண்டு, அந்தணர்கள் யாவரும் பேரற்புதமெய்தி சுவாமிகளுடைய பெருமையை முற்றத்தேர்ந்து மகிழ்வுற்றனர்.

பின்பு தியாகராசப்பெருமான் சந்நிதியிலே சுவாமிகள் தனிமைக்கண் அமர்ந்து கேட்ப அந்தணர்கள் வேதங்களை முறையானே ஓதிவருவாராயினர். மாதவச் சிவஞானசுவாமிகள் தாம் அகத்தியமுனிவர் வரத்தானே அவதரித்தருளிய அருந்தவச் செல்வராதலின் ஓதக்கேட்ட மாத்திரத்தே அம்மறைப்பொருள்களை முன்னோடு பின் மலைவின்றி முற்றத்தெளிந்து கொண்டனர்.

பின்பு மாதவச் சிவஞான சுவாமிகள், திருக்கோயிலிற்தினந்தோறுஞ்சென்று சிவபிரானையும் உமாதேவியையும் தரிசித்துக் கொண்டு சிலநாள் அங்கு இருந்து பின் மணலிசின்னையாமுதலியார் முதலான அன்பர்கள் தம்மைப்பின் தொடர்ந்து வழிபட்டுப் பிரியாவிடைபெற்றுநிற்ப, தாம்மாணாக்கர்களோடு அத்தலத்தினின்றும் அரிதினீங்கி வழியிடையிலுள்ள சிவஸ்தலங் களைத் தரிசித்துக் கொண்டு திருக்காஞ்சி நகரையடைந்து அங்கு ஏகம்பத்தினும் ஏனையத்திருக்கோயில்களினுஞ் சென்று சிவபிரானை வணங்கிக் கொண்டெழுந் தருளியிருந்து தமிழ்ச் சிவஞானபோத மாபாடியஞ்செய்தருளுவாராயினர். இது நிற்க.

சுசீந்திரத்தில் வீற்றிருந்து சீடர் களுக்குத்  தீக்கையாதிகள் செய்துவரும் துவிதீய ஆசிரியராகிய திருச்சிற்றம்பல தேசிக சுவாமிகள், தமது ஞானதேசிகரைத் தரிசித்து நெடுங்காலமானதால் அத்தேசிக சுவாமி களைத் தரிசிக்க விரும்பி, அவ்விடத்தை விட்டுப்புறப்பட்டு ஆங்காங்கு பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவாவடு துறையை அடைந்து திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ்செய்து தமது திருமடத்துக்கு வந்து சிவப்பிரகாச விநாயகரையும், திருமாளிகைத் தேவரையும், ஞான நடராசப் பெருமானையும் தரிசித்து வணங்கிக் கொண்டு, ஆதீன பிரதமாசாரியராகிய நமச்சிவாய தேசிகோத்தமர் தரிசனஞ் செய்து ஒடுக்கத்திற்சென்று தமது ஞானாசாரிய சுவாமிகளைத் தரிசித்து, வடக்கு மடாலயத்திற் சென்று வீற்றிருந்து தினந் தோறும் திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ் செய்துகொண்டும் ஆதீன முதற் குரவரையுந் தமது ஞானாசாரிய சுவாமி களையுந் தரிசனஞ் செய்து கொண்டும் அங்கு எழுந்தருளி இருந்தனர். இஃதிவ்வாறாக.

முன்பு காஞ்சிபுரத்தில் எழுந்தருளி யிருந்து சித்தாந்த சூத்திர மாபாடியஞ் செய்தருளுஞ் சிவஞான சுவாமிகள், அம்மாபாடியந்தான் குருவருள் நின்று காத்தருள இனிது முற்றுப் பெற்றது. அச்சுவாமிகள் பின் அத்திருப்பதியை யகன்று வழியிடையிற் பல ஸ்தலங்களையுந் தரிசித்துக் கொண்டு திருவெண்ணெய் நல்லூரை யடைந்து திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ் செய்து பொல்லாப் பிள்ளையார் சன்னிதியைச் சார்ந்து சிவஞானபோத திராவிட மாபாடிய முறையைவிநாயகர் திருமுன்பு வைத்து ஆதிசைவர் ஒருவரைக் கொண்டு அருச்சனை நைவேத்தியம் தீபாராதனை செய்வித்துத் திருவருள் பெற்று, திருவருட்டுறை என்னுந் திருமடாலயத்தை அடைந்து மெய்ஞ்ஞான பாநுவாகி விளங்கி வீற்றிருக்கும் மெய்கண்ட சிவாசாரிய சுவாமிகள் குருமூர்த்தந் தரிசனஞ்செய்து அத்தேசிகோத்தமருக்கு விசேடபூசைச் சிறப்புச் செய்து அவ்வாசிரிய சுவாமிகள் திருமுன்பு சிவஞானபோத திராவிட மாபாடியத்திருமுறையை வைத்து அருச்சனை நிவேதனம் தீபாராதனை அன்புடனியற்றித் திருவருள் பெற்று, அங்கு நின்றும் அரிதினீங்கித் திருத்துறையூருக்கு எழுந்தருளி அருணந்தி சிவாசாரிய சுவாமிகள் குருமூர்த்தந் தரிசித்து விசேடபூசை சிறப்புறச் செய்து, அத்தேசிகோத்தமரது திருமுன்பு அப்பாடியத் திருமுறையை வைத்துப் பூசனை புரிந்து திருவருள்பெற்று அங்குநின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பல ஸ்தலங் களைத் தரிசித்துச் சிருங்காரவனமெனப் பெயர் வழங்குந் திருக்களாஞ்சேரிக்கு எழுந்தருளி, பிரமபுரீசுவரர் திருக்கோயிற் சென்று சுவாமி தரிசனஞ்செய்து, மறைஞான சம்பந்த சிவாசாரிய சுவாமிகள் குருமூர்த்தந் தரிசித்து விசேட பூசைசெய்து அத்தேசிக சுவாமிகள் திருமுன்பு அப்பாடியத் திருமுறையை வைத்து அருச்சனாதிகள் இயற்றித் திருவருள் பெற்று, அங்கு நின்றும், அரிதினீங்கிச் சிதம்பரத்தை அடைந்து திருக்கோயிலிற் சென்று சிற்சபேசர் தரிசனஞ் செய்து விசேட பூசையியற்றுவித்துச் சிதம்பரே சுவரர் திருமுன்பு அப்பாடியத்தை வைத்துப் பூசனைபுரிவித்துத் திருவருள் பெற்று, கொற்றவன் குடிக்குச்சென்று உமாபதி சிவாசாரிய சுவாமிகள் குருமூர்த்தந் தரிசித்து விசேட பூசையியற்றி அப்பாடி யத்தை அத்தேசிகோத்தமர் திருமுன்பு வைத்து அருச்சனாதிகள் புரிந்து திருவருள் பெற்று, அருணமச்சிவாயர் குருமூர்த்தந் தரிசித்து வழிபாடியற்றி அக்குருபரர் திருமுன்பு அப்பாடியத்தை வைத்துப் பூசைசெய்து திருவருள் பெற்று, அங்கு நின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பல ஸ்தலங்களையுந் தரிசித்துத் திருவாவடு துறையை அடைந்து திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ் செய்து தமது ஆதீனத் திருமடத்துக்கு வந்து சிவப்பிரகாச விநாயகரையுந், திருமாளிகைத் தேவரையும், நமசிவாய தேசிகோத் தமரையுந், தரிசித்து அம்மாபாடியத் திருமுறையை அவ்வச் சந்நிதிகளில் முன்பு வைத்து அருச்சனாதிகள் இயற்றித்திருவருள் பெற்று, ஒடுக்கத்திற் சென்று தமது ஞானாசாரிய சுவாமிகள் திருநாமம் பெற்ற ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகர் ஆதீன கர்த்தராகிய ஞானாசாரிய சுவாமி களைத் தரிசித்து மாபாடியத் திருமுறையைத் திருமுன்னர் வைத்து வழிபட்டு அர்ப்பணஞ் செய்து நிற்ப! ஞானதேசிகர் திருவுளமகிழ்ந்து அவர் தமக்குத் திருவருட் பிரசாதமளித்துப் பின் தம் அருகிருக்கப் பணித்து நல்வரவு வினாவி திருவுளத்துக் களிப்புமீதூர வீற்றிருந் தருளினர். பின்பு சிவஞான சுவாமிகள், அங்கு நின்றும் அரிதினீங்கி வடக்கு மடத்திற் சென்று துவிதீய ஆசிரியராகியதிருச்சிற்றம்பல தேசிகரைத் தரிசித்து அடியார்களோடு கலந்து அன்பு கொண்டாடி வீற்றிருந்தனர்.

பின்பு ஓர் சுபதினத்தில் ஞானதேசிகர் முன்பு திருச்சிற்றம்பல தேசிகரும் அடியார் களும் சைவ நூல் வல்லாரும் வேத சிவாகம பண்டிதர்களும் குழுமிய திருச்சபையில் சிவஞான சுவாமிகள் தாமியற்றிய சிவஞான போத திராவிட மாபாடியத்தை வாசித்துப் பொருள் விரிக்கத் தொடங்கிச் சிலநாட் களுக்குள் அதனை முற்றுவித்தலும், ஞான தேசிகர் திருவுளம் மகிழ்ந்து இம்மா பாடியந்தான், நம் திருச்சிற்றம்பலவர்க்கே முற்றிலும் உரிமையாகற்பாலது என்று வினய மொழியாகத் திருவாய் மலர்ந்தருள, அதனைக் கேட்ட யாவரும் பெருமகிழ்ச்சி எய்தினர்.

பின்பு சிவஞான சுவாமிகள் ஞான தேசிகரிடத்து விடை பெற்றுக்கொண்டு அரிதினீங்கிக் காஞ்சீபுரத்திற்கு எழுந்தருளி அங்கு நன்மாணாக்கர் பலருக்கு ஞான நூல்களும் பிறவும் கற்பித்து வருவாராயினர். இது நிற்க.

துவிதீயஆசிரியராகிய திருச்சிற்றம்பல தேசிகருக்கும் தம்பிரான் சுவாமிகளுக்கும் ஏனைய அடியவர்களுக்கும் சித்தாந்தப் பொருள் தெளிவுறவிளக்கி வீற்றிருக்கும் ஞானதேசிகர், திருப்பறியலூர்ப் புராணம் மொழிபெயர்த்தருளினர். பின்பு ஞான தேசிகர் பாண்டிய நாட்டின் கண்ணும் சேரநாட்டின் கண்ணுமுள்ள தமது சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்யத் திருவுளங்கொண்டு திருக்கோயிற்பூசை சிறப்புறச் செய்வித்து வழிபாடியற்றிப் பின்பு திருமடத்தில் சிவப்பிரகாச விநாயகருக்குத் தாம் விசே­ பூசை செய்து திருமாளிகைத் தேவருக்கும் அவ்வாறு செய்வித்துக் கொண்டு அங்கு சித்தாந்த ஞானவீர சிங்காதனத்திடை வீற்றிருந்தருளும் நமச்சிவாய தேசிகோத்த மருக்குத் தம் உள்ளத்து நிறைந்த காதலோடு சிறப்புறப் பூசனைபுரிந்து வணங்கி விடை பெற்று அங்கு நின்றும் அரிதினீங்கி, தமது பிற்றோன்றலாகிய  திருச்சிற்றம்பல தேசிகரும், தம்பிரான் சுவாமிகளும், ஏனைய அடியவர்களும், உடன்வர வழியிடையில் பல ஸ்தலங்களையுந் தரிசித்துக்கொண்டு திருப்பெருந்துறையைச் சேர்ந்து அங்கு காலந் தோறும் திருக்கோயிலிற் சென்று ஆத்ம நாதரையும் யோகாம்பிகையையும் மாணிக்க வாசக சுவாமிகளையும் நிறைந்தகாதலினால் இறைஞ்சி ஏத்திக்கொண்டு தமது திருமடத்தில் வீற்றிருந்து அருளுவாராயினர்.

அக்காலத்தில் ஞான தேசிகர் தாம் அங்கு மலப்பிணியால் வருந்தித் தம்மை யடைந்த பரிபக்குவர் பலர்களுக்குத் திருவருளுபதேசஞ் செய்து பேரானந்தப் பெருவாழ்வு அளித்ததுமன்றி உடற்பிணியால் மிக வருந்தித் தம்மைச் சரணடைந்த பலர்க்கும் அது நீக்கி உயிர் வாழவைத்தலுஞ் செய்தருளினர்.

பின்பு குறுநில மன்னராகி இராமநாத புரத்தில் அரசு புரிந்துவரும் சேதுபதிகளில் ஒருவர் ஞானதேசிகர் மகிமையினைக் கேள்வியுற்று அங்குவந்து ஞானாசாரிய சுவாமிகளைத் தரிசித்து, விண்ணப்பஞ்செய்து தமக்குநேர்ந்த உடற்பிணியை நிவிர்த்திக்கப் பெற்று மகிழ்வுற்று, அவ்வரசர் ஞானாசிரியர் பூசை மாகேசுர பூசையின் பொருட்டுப் பூதானமீந்து தாம்பிர சாசனஞ் செய்து கொடுத்தனர். இங்ஙனம் சிலகாலம் ஞான தேசிகர் அங்கு வீற்றிருந்து பின் அத்திருப்பதியிலே ஓர் வைகாசி மாதத்துப் பூரட்டாதி நட்சத்திரத்திலே பொன்னம் பலவர் பூங்கழலெய்தினர்.

இவ்வேலப்பதேசிகர் திருநந்திதேவர் அருளுபதேசமரபில் இருபதாவது பிற்றோன்றலாக எழுந்தருளியிருந்த வேலப்ப தேசிகர்பால் அருளுபதேசம் பெற்றனர் என்பது இவர் தாம் இயற்றிய திருப் பறியலூர்ப் புராணப் பாயிரத்துட் கூறிய குருதோத்திரப்பாக்களால் இனிது புலப்படும்.

அவை வருமாறு:‡

சிவன் மலைக் காவல் பூண்ட திருநந்தி சனற் குமாரன்

பவ மகல் சத்ய ஞானி பரஞ்சோதி மெய்கண்டான் மேற்

றவ வருணந்தி தேவன் றரு மறைஞான சம்பந்தன்

நவை யறு கலை கடேரு முமாபதி நமச்சி வாயன்.              (1)

 

துகளறு சிவப்பிரகாசன் றுறைசைவாழ் நமச்சிவாயன்

திகழ்மறை ஞானதேவன் சிறந்த வம்பல வாணன்மேற்

பகரு ருத்திரகோடிப்பேர் பண்பின்னருள் வேலப்பன்

இகலறு குமாரசுவாமிப் பெயரி னரிருவர் மேலோர்.       (2)

 

தேவரும் பரசுமாசிலாமணி யிராமலிங்கர்

யாவருங் காண விந்நா ளென்னையு மடியனாக்கி

மேவருஞ் சிறப்பு மீந்த வேலப்ப தேவனிந்தத்

தாவில் சீர்க்குரவர் செய்ய தாண் முறை பணிந்து வாழ்வாம்.

 

பின் வேலப்ப தேசிகர் சரித்திரம் முற்றிற்று

திருச்சிற்றம்பலம்

 

பன்னிரண்டாவது திருச்சிற்றம்பலதேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

புராதனமாய்ப் பூரணமாய்ப்  புண்ணியமாய்ப் பொலிவா யயான்றாய்

நிராமயமாய் நிட்களமாய் நித்தியமாய்  நிரஞ்சனமாய் நிமல மாகிப்

பராபரமாய் நிறைந்தருளும்   பெருங்கருணைப் பிழம்புமொரு படிவ மாகித்

தராதலத்தி லவதரித்த திருச்சிற்றம்  பலகுருவின் றாள்கள் போற்றி.

 

திருமுகவைக் கிறைவேண்ட அவ்வணமே  யுலகின்வெம்மை சிதையத்துன்னி

வருதுழனி முகில்சுரந்து நீர்பொழிந்து  வளம் பெருக வாய் மலர்ந்த

பெரும்விரையாக் கலியுடையான் சிவாக   மத்தினீரிலக்கம் பெரிது மோர்ந்தோன்

குருதிருச்சிற்றம்பல வன்றுறைசை  யமர் கோமான் றன்குலத்தாள் போற்றி.

 

சிவாகமத்தில் இரண்டு லக்ஷ சுலோகமும் மெய்கண்ட சாத்திரமெனப் பெயர்பெறுஞ் சித்தாந்த சாத்திரமாகிய, சிவஞான போதம், சிவஞான சித்தி, சிவப்பிரகாசம் முதலிய பதினான்கு ஞான சாத்திரங்களையும், பண்டார சாத்திரமெனப் பெயர்பெறும் சித்தாந்தசிகாமணி, சித்தாந்தப் பஃறொடை, உபதேசப் பஃறொடை முதலிய பதினான்கு ஞான நூல்களையும் நன்குணர்ந்த சித்தாந்த ஞான பாநுவாகிய திருச்சிற்றம்பல தேசிகர் தாம் திருப்பெருந்துறை என்னுந் திவ்யஸ்தலத்தில் தமது ஞானாசிரியசுவாமிகள் பரிபூரண முற்றருளிய ஞானசமாதியில் திவ்விய ஆலயமெடுத்து சிவலிங்கப் பிரதிட்டை செய்து நித்தியநைமித்திய பூசைகள் சிறப்புற வியற்றிக் கொண்டு சிலநாள் அங்கு வசித்திருந்து அங்கு நின்றும் அரிதினீங்கித் திருவாவடுதுறையை வந்தடைந்து ஞான நாயகராகிய நமசிவாய தேசிகோத்தமர் திருவருண்மகிமை சிறந்து விளங்க அங்கு வீற்றிருந்து சீடர்களுக்குத் தீக்கையாதிகளுஞ் சித்தாந்த உபதேசமும் செய்து வருவாராயினர்.

அக்காலத்தில், ஞானதேசிகர் பாண்டி வள நாட்டின் கண்ணுள்ள கடைய நல்லூரென்னுந் திருநகரிலே அவதரித்த வரும் தம் அடியார் பல்லோருள்ளுஞ் சிறந்தவரும் ஆகிய அம்பலவாணத் தம்பிரானுக்கு ஆசாரியாபிடேகஞ் செய் தருளத் திருவுளங் கொண்டு, ஆங்காங்கு தமது சீடர்களுக்கும் பிறருக்கும் ஆசாரியாபி டேகச்சுபதினம் குறிப்பித்த திருமுகம் அனுப்பியருளினர்.

அங்ஙனம் ஞானதேசிகர் அனுப்பி யருளிய திருமுகங்களுள் ஒன்று காஞ்சீபுரத்தி லெழுந்தருளி யிருக்கும் சித்தாந்த சூத்திர திராவிட மாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞான சுவாமிகளிடத்துச் செல்ல அச்சுவாமிகள் அதனைக் கண்ணுற்ற மாத்திரத்தே அகமிக மகிழ்ந்து அங்கு நின்றும் புறப்பட்டுத் தம் மாணாக்கர் பலரோடும் திருவாவடுதுறையை வந்தடைந்து நமசிவாய மூர்த்தி களையும், ஞானதேசிகரையுந் தரிசித்து அங்கு எழுந்தருளியிருந்தனர்.

பின்பு ஞானதேசிகர், குறித்த சுபதினத்தில் அம்பலவாணத் தம்பிரானுக்கு ஆசாரியாபிடேகம் இயற்றித் தமக்குத் துவிதீய ஆசிரியராக வைத்தருளினர்.  அக்காலத்தில் மாதவச் சிவஞான சுவாமிகள் தம்பாற் கல்விபயிலும் மாணவர் களுள் இலக்கண நூற் பயிற்சியில் வல்லுந ராய் தீவிரதரபக்குவராய் இருக்கும் சிதம்பர நாதர் என்பவரை ஞானதேசிகர்பால் சைவ சந்நியாசமும் மூவகைத்தீக்கையையும் பெறுவித்துப்பின்பு தாம் ஞானதேசிகர் பால் விடைபெற்றுக்கொண்டுபுறப்பட்டுப் போய் காஞ்சீபதியைச் சேர்ந்து அங்கு சிதம்பரநாத தம்பிரான்சுவாமிகள் முதலிய மாணவர் களோடு வசித்திருந்தனர். இது நிற்க.               திருத்தணிகைப் பதியிலே சைவா சாரிய குலத்திலவதரித்துக் கச்சியப்பர் எனப் பெயர் கொண்ட ஒருவரும், சிதம்பரத்தைச் சார்ந்த காட்டுமன்னார்கோயில் என்னும் ஊரிலே கார்கார்த்தவேளாளர் குலத்திலே பூநொடையார் கோத்திரத்திலே அவதரித்து சுப்பிரமணியர் என்ற இயற்பெயர்கொண்ட ஒருவரும் பரிபக்குவ வயத்தானே திருவாவடு துறையைவந்தடைந்து ஞான தேசிகரைத் தரிசித்தனர். அக்காலத்தில் ஞானதேசிகர், தாம் அவர்கள் பாற்றிருவுளமிரங்கி அவ் விருவர்களுக்கும் தம்பிரான் சுவாமிகளால் யாத்திரை காஷாயம் கொடுப்பித்தனர். பின்பு தமது துவிதீய ஆசிரியராகிய அம்பலவாண தேசிகருக்கு ஆஞ்ஞை செய்தருள, அத்தேசிகசுவாமிகள் அவ் விருவர்களுக்கும் சமய தீக்ஷையும், விசேட தீக்ஷையுஞ்செய்து மந்திர காஷாயமுங் கொடுத்தருளினர்.

பின்பு சிலகாலஞ்சென்று ஞான தேசிகர், பாண்டி நாட்டின் கண்ணும் சேர நாட்டின் கண்ணுமுள்ள தமது சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்யத் திருவுளங்கொண்டு, ஓர் சுபதினத்தில் அங்கு நின்றும் அரிதி னீங்கித், துவிதீய ஆசிரியராகிய அம்பல வாண தேசிகசுவாமிகளும், தம்பிரான் சுவாமிகளும், ஏனைய அடியார் குழாங்களும் பின்றொடர்ந்துவரத், திருப்பெருந்துறையை யடைந்து அங்கு திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு தமது திருமடத்திற்கு எழுந்தருளி தமது ஞானா சிரியசுவாமிகள் குருமூர்த்தந்தரிசித்து அருச்சனை புரிந்து வழிபட்டுக்கொண்டு சிலநாள் அங்கு வீற்றிருந்தருளினர்.

பின்பு ஞானதேசிகர், அங்கு நின்றும் புறப்பட்டு திருவிராமேச்சுரத்திற் சென்று, அங்கு தீர்த்தஸ்நானஞ்செய்து திருக் கோயிலிற் சென்று சிவபிரானைத்தரிசித்து அங்கு சிலநாள் வசித்திருந்து, பின் அங்கு நின்றும் அரிதினீங்கித் திருவாலவாயினை நோக்கிச் செல்லுவார், வழியிடையிலுள்ள இராமநாதபுரத்தை யடைதலும், அந்நகரத் திலுள்ள அமைச்சர் முதலான தம் சிஷ்யவர்க் கத்தினரும் ஏனையோரும் எதிர் கொண்டு வழிபட, தாம் அவருக்கெல்லாந் தண்ணருள் பாலித்துச் சென்று ஆங்கு ஓர் திருமடத்தில் எழுந்தருளியிருந்தனர். அங்ஙனம் ஞான தேசிகர் எழுந்தருளியதை அமைச்சர் முதலாயினோர் சேதுபதி என்னும் தம் மன்னவருக்குத் தெரிவிக்க, அம்மன்னவர் அப்போது தமது நாட்டில் மழையில்லாமை யால் குடிகள் மிகவும் வருந்துவதைக் குறித்துத் தம்முள்ளமானது கவலைக்கடலுள் மூழ்கிக் கிடந்தமையால், அமைச்சர் முதலானோரை நோக்கி நமது குருமூர்த்திகள் இப்போது மழைபெய்யும்படி செய்வார் களென்று தெரிவித்து, அவ்வரசரை அழைத்துக் கொண்டுபோய் ஞான தேசிகர் திருவடிகளில் வணங்கச்செய்து, தாங்களும் சற்குருபரன்சரணிணைபணிந்து அரசர் கருத்தையும் விண்ணப்பஞ்செய்தனர். அதற்கு அவ்வண்ணமே திருநடராசர் திருவருள்செய்வாரென்று ஞானதேசிகர் நவின்றருளினர்.

பின்பு ஞானதேசிகர் சிற்சபேசர்பூசை சிறப்புறச்செய்து திராவிடவேதத்தில் மேகராகக்குறிஞ்சி யயன்னும் பண்ணமைந்த பதிகங்களை அப்பண்முறையோடு தமது சீடர்கள் பாடத், தாம் திருவடித் தியானத் தோடு ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைச் செபித்துக் கொண்டிருந்தனர். உடனே மேகங்கள் மழை பொழிந்து நாடுகளை வளப்படுத்தின. அதனையுணர்ந்தசேதுபதிபெரிதும் அற்புத மெய்தி அன்பின் வயத்தராய்ச் சென்று, ஞான தேசிகரைத்தரிசித்து அத் தேசிகசுவாமி களுக்கு பூசைமாகேசுரபூசை சிறப்புறயியற்றி வைத்துத் தம் அரசமாநகரில் பவனிவர வழைத்து குருதரிசனக் காக்ஷியை யாவரும் பெற்றுய்யுமாறுசெய்வித்து, அவ்வரசர் தாம் எடுத்தபிறவியினாலெய்திடும் பேற்றினைப் பெற்றுப் பேரின்பமெய்தி ஞானதேசிகருக்கு சபாபதிபூசையின் பொருட்டும் குருபூசை மாகேசுவரபூசையின் பொருட்டும் சர்வமானிய கிராமங்கள் தானஞ் செய்து தாமிரசாசனமும் வரைந்துகொடுத்தனர்.

பின்பு ஞானதேசிகர், அந்நகரத்தில் சில நாள் வீற்றிருந்து அரசர் முதலானோர் பின்றொடர்ந்து பிரியாவிடைபெற்று நிற்ப, தாம் துவிதீய ஆசிரியராகிய அம்பலவாண தேசிகசுவாமிகளும், தம்பிரான் சுவாமி களும், ஏனைய அடியவர்களும், பரிசனங் களும் உடன்வர அங்குநின்றும் புறப்பட்டு திருப்பூவணத்தைச் சார்ந்து திருக்கோயிலிற் சென்று ஆதீனப் பிரதமாசாரியராகிய  நமசிவாய தேசிகோத்தமருக்கு ஐந்தாவது பிற்றோன்றலாகிய வேலப்ப தேசிகர் குருமூர்த்தந் தரிசனஞ்செய்து, அங்கு தமது திருமடத்தில் சிலநாள் வசித்திருந்து அங்கு நின்றும் அரிதினீங்கி மதுரை மாநகரை யடைந்து திருக்கோயிலிற்சென்று சொக்கலிங்க மூர்த்தியையும் மீனாட்சி சுந்தரேசுவரியையும் தரிசித்து வழிபாடியற்றி, தமது ஆதீன முதற்குரவருக்கு நான்காவது பிற்றோன்றலாகிய உருத்திரகோடி தேசிகர் குருமூர்த்தந் தரிசித்து அங்கு தமது திருமடத்தில் சிலநாள் வசித்திருந்து அரிதினீங்கி வழியிடையிற் பலஸ்தலங்களை தரிசனஞ்செய்துகொண்டு சுசீந்திரத்தை யடைந்து திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ்செய்து தமது திருமடத்திற் கெழுந்தருளி ஆதீன முதற்குரவர் பிரதிட்டாலயத்தையடைந்து ஞான தேசிகராகிய நமசிவாய தேசிகோத்தமரை யிறைஞ்சி வழிபாடியற்றி, இருகுமார சுவாமிகள் குருமூர்த்தங்கள் இரண்டையுந் தரிசித்துச் சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து கொண்டு சிலகாலம் அங்கெழுந் தருளியிருந்தனர்.

பின்பு ஞானதேசிகர், திருவாவடு துறைக்கெழுந்தருளத் திருவுளங் கொண்டு துவிதீய ஆசிரியராகிய அம்பலவாண தேசிகசுவாமிகளை அங்கு சீடர்களுக்குத் தீக்கையாதிகளுஞ் சித்தாந்தசாத்திரோபதேச முஞ்செய்துவருமாறு கட்டளையிட்டுத், தாம் அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையில் ஆங்காங்கு வழிபட்டேத்தும் அடியவர்களுக்குத் தண்ணருள் வழங்கிச் சென்று, திருவாவடுதுறையைச் சேர்ந்து ஞானானந்தசொரூபியாகிய நமச்சிவாய தேசிகோத்தமரைத்தரிசித்து அங்கு எழுந்தருளியிருந்து நித்திய நைமித்திய பூசைகள் சிறப்புறவியற்றிக் கொண்டு திருவருளுபதேசஞ் செய்து வருவாராயினர்.

அக்காலத்தில், திருநந்திதேவர், அருளுபதேசமரபில் பத்தாவது பிற்றோன்ற லாகிய சித்தர் சிவப்பிரகாச தேசிகர் திருவருளாணைமேற்கொண்டு அவ்வாசிரிய சுவாமிகள் திருவுளப்பாங்கின்படி அவர் வகுத்த திருவறையில் வீற்றிருந்து சீடர் களுக்கு ஞானோபதேசஞ்செய்து கொண்டு திருவாவடுதுறை ஆதீன பிரதமாசாரியராக எழுந்தருளியிருந்து தவ அரசாட்சிபுரிந்து வரும் நமச்சிவாயதேசிகோத்தமருக்கு பத்தாவது பிற்றோன்றலாகிய வேலப்ப தேசிகசுவாமிகளிடத்தே சைவ சந்நியாசமும், மூவகைத் தீக்கையும் சித்தாந்த சாத்திரோப தேசமும் பெற்றுத் தென்மொழி, வடமொழி என்னும் தேவபாஷைகள் இரண்டினும் தேர்ச்சியுற்றுத் திருவாவடுதுறையில் எழுந்தருளியிருந்த  சாமிநாதத்தம்பிரான் சுவாமிகள், வடமொழியினின்றும் மொழி பெயர்த்துத் திருவாவடுதுறைத் தலபுராணம் பாடி அதனைத் திருச்சிற்றம்பல தேசிகரென்னும் இந்த ஞானதேசிகர் திருமுன்பு அரங்கேற்றினர். இது நிற்க.

முன்பு காஞ்சீபுரத்திற்கெழுந்தருளி வடமொழி, தென்மொழி வல்லுநர்வணங்க வீற்றிருந்தருளும் சித்தாந்த சூத்திர திராவிட மாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞான சுவாமிகள், மார்கழி மாதத் திருவாதிரை, உற்சவத்திலே தேவாரம் முதலிய அருட்பாக்கள் ஐந்தும் திருக்காப்பிட்டுத்  தமிழ்வேதமாகிய, பன்னிருதிருமுறைகளில் ஒன்றாகிய திருவாசகம் என்னும் எட்டாந் திருமுறையின் கண்ணுள்ள திருவெம்பாவை யயன்னும் திருப்பதிகம் ஒன்றுமே ஆன் மார்த்த பரார்த்த சிவபூஜா காலங்களிலே ஓதப்பெற்று வரும் சம்பிரதாயத்தால் நித்திய நியமமந்திரமாகத் திருத்தொண்டர் திருநாமத்தை ஓதி உய்யவேண்டுவோர் கருத்துத் தடையுறாவண்ணம்; திருத் தொண்டர் திருநாமக் கோவை எனப் பெயர் தந்து திருப்பாசுரம் ஒன்று இயற்றியருளினர்

பின்பு அச்சுவாமிகள் அந்நாட்டின் கண்ணுள்ள சிவஸ்தலங்கள் யாவும் தரிசிக்க அவாவுற்று அங்கு நின்றும் அரிதினீங்கி இலக்கணம் சிதம்பரநாத தம்பிரான் சுவாமிகள் முதலிய தமது மாணவர்களுடன் அங்கு பலஸ்தலங்களையுந் தரிசித்து வருவாராயினர். அக்காலத்தில் மீவடதிரு முல்லை மாசிலாமணியீசுவரர் மீது திருவந்தாதியும், குளத்தூர் சோமேசர் மீது பதிற்றுப்பத்தந்தாதியும் உண்மை நாயன்மார் சரிதமுதலியவற்றைப் பெரும் பாலுந்தழுவிப் பூர்வார்த்தமும் அதற்கு எடுத்துக்காட்டாக திருவள்ளுவ நாயனார் திருக்குறள் உத்தார்த்தமுமாக முதுமொழி வெண்பாவும் குளத்தூர் அமுதாம்பிகை மீது பிள்ளைத் தமிழும் இளங்காட்டு அகத்தீசுவரர் மீது இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி யயனப் பெயர் பெறும் ஓர் பிரபந்தமும் இயற்றி யருளினர். பின்னர் திருப்போரூர் முதலிய ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு காஞ்சீபுரத்துக் கெழுந்தருளி காமாக்ஷி யம்மையையும் ஏகாம்பரநாதரையுந்தரி சித்து மாணவர்களுக்குக் கல்விபயில்வித்துக் கொண்டு அங்கு வீற்றிருந்தருளினர். அக்காலத்தில் ஏகாம்பரநாதர் மீது யமக வந்தாதியும் ஆனந்தக்களிப்புஞ் செய் தருளினர். அன்றியும் கச்சி ஆனந்தருத்தி ரேசர் மீது ஓர் பதிகமும் இயற்றியருளினர்.

அக்காலத்தில், சுசீந்திரத்தில் ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகராதீனத் திருமடத்தில் துவிதீய ஆசிரியராக எழுந்தருளி யிருக்கும் அம்பலவாண தேசிக சுவாமிகள் பால் இலக்கண இலக்கியங்கள் யாவும் கசடறக் கற்று அவ்வாசிரியர்பால் நிருவாண தீக்ஷையும் சித்தாந்த சாத்திரோபதேசமுஞ் செய்யப்பெற்று திருவணுக்கத் தொண்டர் களாக விளக்கமுற்றிருக்கும் கச்சியப்பத் தம்பிரான் சுவாமிகள், சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகள் ஆகிய இருவர்களும், மாதவச் சிவஞான சுவாமிகள் பெருமையைப் பலராலுங் கேள்வியுற்று, அச்சுவாமிகளைத் தரிசிக்க விரும்பி, தமது ஞானாசிரிய சுவாமிகள் பாற்றெரிவித்து உத்தரவு பெற்று, அங்கு நின்றும் அரிதினீங்கித திருவாவடுதுறைக்கு வந்து, ஞான மூர்த்தியாகிய நமசிவாய தேசிகோத் தமரையும், ஞானதேசிகராகிய திருச் சிற்றம்பல தேசிகரையுந் தரிசித்து அங்கு சில நாள் வசித்திருந்தனர். பின்பு அத்தம்பிரான் சுவாமிகள் இருவர்களுந் தங்கள் கருத்தை ஞானதேசிகர் பாற்றெரிவித்து விடைபெற்று, விரைவிற் காஞ்சீநகரையடைந்து சித்தாந்த சூத்திரதிராவிடமாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞான சுவாமிகளைத் தரிசித்தனர். அப்போது, அச்சுவாமிகள், அவ்விருவர்களும் மேன்மேலுங் கல்வி பயிலுதற் கண் ஊக்கமுடையராய், இருத்தலை நோக்கித் திருவுளமகிழ்ந்து அவர்களுக்குத் தமிழிற் பேரிலக்கணமாகிய தொல்காப்பியத்திலும், சிவஞான போத முதலிய சித்தாந்த சாத்திரங்களிலுமுள்ள நுண்பொருள்கள் யாவும் ஐயந்திரிபற விளக்கிச் சிவஞானபோத திராவிடமா பாடியம் பாடஞ்சொல்லியருளினர்.

பின்பு அன்பர்கள் வேண்டு கோளுக்கு அச்சுவாமிகள் இயைந்து திருத் தொட்டி கலைமாநகருக்கு எழுந்தருளி யிருந்தனர். அக்காலத்து அந்நகரிற் சைவப் பிரபுக்களிற் சிறப்புற்றோங்கிய வீரப்ப முதலியார் குமாரர் கேசவ முதலியார் பிரார்த்தனைக்கிரங்கி அத்தலநாயகராகிய சிதம்பரேசுவரர்மீது பதிற்றுப் பத்தந்தாதியும், மீசெங்கழுநீர் விநாயகர் மீது பிள்ளைத் தமிழுஞ் செய்தருளினர்.

இங்ஙனம் உலகோபகாரமாகப்பல நூல்களையும் பலவுரைகளையும் பல கண்டனங்களையுஞ் செய்து, பல நன்மாணாக்கர்களுக்கு இயற்றமிழ் நூலும், வீட்டுநெறி நூலும் போதித்து வடமொழி யினும் தென்மொழி சிறந்ததென்னும்படி அபிவிருத்தி செய்து தவமே திருவுருக் கொண்டாற் போலும் விளங்கிச் சிவப் பேற்றிற்கு காரணமாகிய நிஷ்டை வீற்றிருந் தருளும், திராவிட மாபாடிய கர்த்தராகிய மாதவச்  சிவஞான சுவாமிகள், தாம்பரிபூரண தசையடையுங் காலம் அணித்தாதலைத் திருவுளத்திற் கொண்டு, தமது மாணவர் களுடன் கலைசை யினின்றும் புறப்பட்டுத் திருவாவடுதுறைக்கு எழுந்தருளி, திருக் கோயிலிற் சென்று சுவாமிதரிசனஞ் செய்து தமது மடத்திற்கு எழுந்தருளி சிவப்பிரகாச விநாயகரையுந்,  திருமாளிகைத் தேவரையும், ஆதீன பிரதமாசாரியராகிய நமசிவாய தேசிகோத்தமரையும் தரிசித்து, ஒடுக்கத்திற் சென்று, ஞான தேசிகராகிய திருச்சிற்றம்பல தேசிகரைத் தரிசனஞ் செய்து வடக்கு மடத்திற்கு வந்து திருக்கூட்டத்து அடியவர் களோடும் தமது மாணவர்களோடும் அங்கு வசித்திருந்தனர். அங்ஙனஞ் சிலகாலம் அச்சுவாமிகள் குருலிங்கசங்கம சேவை செய்து கொண்டிருந்து, அத்திருப்பதியிலே சாலிவாகனசகாப்தம் 1708‡ல் நிகழாநின்ற

இலகுசக +னீரெட்டு நூற்றுநாற் பத்தேழி னிற் கரங் கும்ப மிருபத்

தேழிரே வதிவெள்ளி பூர்வபக் கத்துதிகை யேற்க வுலவஞ் சுப்பிரம்

கலவியுறு சுபதினங் கன்னிலக் கினமதிற் கலைசைப் பதிக்குள் வாழ்செங்

கழுநீர் விநாயகர்த மீது பிள் ளைத்தமிழ்க் கவிபாடி வானோ ருண

அலைமலைக டற்கடைந் தமிழ்தூட்டு மாலென்ன வவனியிற் புலவர் செவியால்

ஆர்ந்திடத் துறைசைவாழ் சிவஞான தேசிக னரங்கேற்றி னானா தலால்

நலசுகுண மணிகுவளை யணிபுயன் வீரப்பன் நல்குமக ராச யோகன்

நங்கள்கே சவபூப னநுசர்சேய் சுற்றமு நன்மைதரு

வாழ்வுறுகவே

+ ஈரெட்டு  நூற்று நாற்பத்தேழ் ‡ என அன்வயஞ் செய்குக. நூல் செய்தகாலம் சாலிவாகன சகாப்தம் என்க.

விசுவாவசு வரு­ம் சித்திரை மாதத்து 18‡ம் திகதி ஞாயிற்றுக்கிழமையில் ஆயிலிய நக்ஷத்திரங்கூடிய சுபதினத்தில் சிவபரிபூரண முற்றனர்.

 

சிவபரிபூரண சுபதினச் செய்யுட்கள்

வெண்பா

மன்னும் விசுவாவசு வருட மேடமதி

யுன்னிரவி நாட்பகலோ தாயிலியம் ‡ பன்னுந்

திருவாள னெங்கோன் சிவஞானதேவன்

திருமேனி நீங்கு தினம்.

 

ஆசிரியவிருத்தம்

ஏர்தருசாலி வாகனசகாப்த மாயிரத் தெழுசதத்தெட்டிற்

சார்தருவிசுவா வசுவருடத்திற்றயங்கு சித்திரை மதியயட்டி

லார்தருமிரவி வாரமாயிலியத் தடைந்தன …..ரன்றிரு வடியிற்

சீர்தருதுறைசை வாழ்சிவஞான யோகி ….. முனிவரனே.

 

அக்காலத்தில் மாதவச் சிவஞான  யோகிகள் மாணவர்களில் ஒருவராகிய தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் தமது ஆசிரிய சுவாமிகள் மீது பாடிய, கீர்த்தனை

 

பல்லவி

நினைத்தாற் சகிக்கப் போமோ ‡ என்சுவாமியை

நினைத்தாற் சகிக்கப் போமோ.

 

அநுபல்லவி

எனைத்தனி விட்டகன்ற

எந்தை சிவஞானவாழ்வை.   (நினைத்தால்)

 

சரணங்கள்

கருணை முகத்தைக் காட்டிக்

கனிந்த மொழியைக் காட்டித்

தருண வடிவைக் காட்டித்

தனித்து விட்டகன் றாரை,   (நினைத்தால்)

காவி யுடை யழகுங்

கவினார் வெண்ணீற் றொளியும்

பாவியேன் கண்ணிற் காட்டிப்

பரவீடு சேர்ந்தாரை,         (நினைந்தால்)

சிவவேடச் சேவை தந்துந்

திருவடி நீழல் தந்தும்

அவமே கைவிட்டிங் கென்னை

அகன்றாரை நாடி யந்தோ,          (நினைத்தால்)

கலைஞானஞ் சிவ ஞானங்

கலைந்தளித் தென்னை யாளும்

நிலையாரை யயன்னு யிராய்

நிறைந்து நின்றகன் றாரை, (நினைத்தால்)

கருவி லென்னோ டிருந்து

கருணையாய்க் கொண்டு வந்து

பெருவாழ்வில் வைத் தகன்ற

பேரருளா ளரை நான்,   (நினைத்தால்)

கண்ணி னுளக லாரைக்

கருத்தி னுள் விலகாரை

எண்ணி யயண்ணித் தவிக்க

இங்ககன் றாரை யையோ, (நினைத்தால்)

என்னுயிர் கவர்ந் தாரை

எனதெழில் கவர்ந் தாரை

மன்னு துயர்தந் தாரை

மறக்கவுங் கூட வில்லை, -(நினைத்தால்)

கண்டார் நெய்பால் கனிதேன்

கடல முதுங் கலந்து

கொண்டார்போல் நான்மகிழக்

கூடிப் பிரிந்த வரை,       (நினைத்தால்)

துணை பிரியா வனமே

சுகமே மயில் குயிலே

இணை பிரியா வன்றிலே

எனைப் பிரிந்தாரை நாடி,  (நினைத்தால்)

பாம்பின் வாய்த் தேரைபோலப்

பல பல துயருற்றுத்

தேம்பினேன் றன்னை யாளச்

சீக்கிரம் வரு வாரை,           (நினைத்தால்)

ஆரேனும் பத்தி யணு

வளவு செய்தாலு மவர்

சீரேறு செல்வ முறச்

செய்தாரைப் பிரிந் தத்தை, (நினைத்தால்)

ஆயிலிய நாளாரை

ஆவடுதுறையாரை

நாயேனைப் பிரிசிவ

ஞானபூரணரைநான், –     (நினைத்தால்)

 

 

கீர்த்தனை முடிந்தது.

 

சித்தாந்த சூத்திர திராவிடமாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞான சுவாமிகள் பாற் கல்விபயின்றமாணவர்கள்; இலக் கணஞ் சிதம்பரநாதத்தம்பிரான் சுவாமிகள், கச்சியப்பத் தம்பிரான் சுவாமிகள், மீதொட்டிக்கலை சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகள், காஞ்சீபுரஞ் சரவணப்பத்தர், இராமநாதபுரஞ் சோமசுந்தரம் பிள்ளை முதலாகிய பலருளர். அவருள்ளே கச்சியப்பத் தம்பிரான் சுவாமிகள், ஞானாசிரியர்பால் விடைபெற்றுத், திருவாவடுதுறையினின்றும் அரிதினீங்கிக் காஞ்சீபுரத்திற்கெழுந்தருளி அங்குபல மாணவர்களுக்குக் கல்விபோதித்து வருவாராயினர். இது நிற்க.

மாதவச்சிவஞான சுவாமிகள் மாணவர்களிலொருவராகிய இலக்கணஞ் சிதம்பரநாதத் தம்பிரான் சுவாமிகள், தமது போதகாசிரியசுவாமிகள் சிவபரிபூரண முற்றபின் சிலகாலந் திருவாவடுதுறையில் குருலிங்கசங்கமசேவைசெய்து கொண்டு அமர்ந்திருந்தனர். பின்பு அச்சுவாமிகள் சிவஸ்தலயாத்திரை  செய்யவேண்டு மென்னுந் தமது கருத்தை ஞானதேசிகராகிய திருச்சிற்றம்பல தேசிகர்பால் தெரிவித்து விடைபெற்று; பலதலங்களையுந்தரிசித்துக் கொண்டு வருங்காலையில் திருப்பாதிரிப் புலியூருக்கெழுந்தருளி  திருக்கோயிலிற் சென்று சுவாமிதரிசனஞ்செய்து, அன்பர்கள் வேண்டுகோளுக்கியைந்து நெடுநாள் அங்கு வசித்திருந்தனர். அக்காலத்தில் அத்தல புராணத்தை வட மொழியினின்றும் மொழி பெயர்த்தருளினர். இது நிற்க.

மாதவச்சிவஞானசுவாமிகள் மாணவர்களிலொருவராகிய தொட்டிக் கலை சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகள், தினந்தோறுங்குருலிங்கசங்கம சேவை செய்து கொண்டும், தமது போதகாசிரிய ராகிய சிவஞான போதத்திராவிடமாபாடிய கர்த்தர வர்கள் ஞானசமாதியில் அச்சுவாமி கள் திருவடியடையாளம் பொறித்த குருமூர்த்தந் தரிசித்துக் கொண்டும், அங்குவசிக்கு நாட்களில் ஞானதேசிகராகிய திருச் சிற்றம்பலதேசிகர் மீது சிந்தும் சந்த விருத்தமும் பாடியருளினர்.

பின்பு அச்சுவாமிகள் தம்மை அருளுபதேசத்தினால்  அடிமை கொண்டருளிய துவிதீய ஆசிரியராகிய அம்பலவாண தேசிக சுவாமிகளைத் தரிசிக்க வேணவாவுற்று ஞானதேசிகர் பால் விடை பெற்றுத் திருவாவடுதுறையையகன்று வழி யிடையில் பலஸ்தலங்களையுந் தரிசித்துக் கொண்டு, பழனித்திருநகரைச் சார்ந்து, அங்கு தண்டபாணியீசுவரர் தாளிணைபணிந்து அக்கடவுள் மீது பஞ்சரத்தினமாலை பாடியருளினர். பின்பு அங்கு நின்றும் அரிதினீங்கி, மதுரை, திருப்பரங்குன்றம் முதலிய ஸ்தலங்களைத் தரிசித்து திருச்செந்தூ ரென்று பெயர் வழங்கும் சீரலைவாயினைச் சேர்ந்து கருணைக் கடலாகிய ஜெயந்திகழ் வைவேற் செம்மலாகிய செந்திலெம் பெருமான் செஞ்சரணாம்புயம் தெரிசனஞ் செய்து அக்கடவுள் மீதுசந்தவிருத்தம்பாடி அங்கு சிலநாள் வசித்திருந்து, அங்கு நின்றும்   அரிதினீங்கி சுசீந்திரஞ்சென்று தமதுஞானா சாரியராகிய அம்பலவாண தேசிக சுவாமிகளைத் தரிசித்து அங்குசிலகாலம் வசித்திருந்தனர். அக்காலத்தில் அச்சுவாமிகள் விரைவிற் பாடுதலைக்கேட்ட தேசிக சுவாமிகள், ஒரு சமயத்தில் தமது ஞானாசிரியர் மீது குருதிருச்சிற்றம்பல வெங்கோ என்பதை ஈற்றடியாகவைத்து நிரையசை வெண்பா ஒன்றியற்றுகவென்று கட்டளையிட்டருளினர். தமது ஆசிரிய சுவாமிகள் ஆணைசிரமேற்கொண்டு,

 

வெண்பா

முனிக்கு முனியானை முனிந்தே பொதியின்

முனிக்குமுனி யாதளித்தே முத்தி‡முனிக்கு

பொருகளிறு நீரூட்டும் பொன்னித் துறைசைக்

குருதிருச்சிற் றம்பலவெங் கோ

என அச்சுவாமிகள், நெட்டுருப்பண்ணிய பழைய பாடம் ஒப்பிப்பது போல விரைவிற் படியருளினர். அன்றியும் தமது ஞானாசிரிய சுவாமிகளாகிய துவிதீய சற்குருவாம் அவ்வம்பலவாண தேசிக சுவாமிகள் மீது பஞ்சரத்ன மாலையும் வண்ணமும் இயற்றினர்.

பின்பு துவிதீய ஆசிரியராகிய அம்பலவாண தேசிக சுவாமிகள், தாம் ஞான தேசிகரைத் தரிசித்து நெடுங்காலமானதால் திருவாவடுதுறைக்குச் செல்ல விரும்பி அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையிற் பல தலங்களையுந் தரிசித்துக் கொண்டு திருக்குற்றாலத்தை யடைந்து, சித்திராநதித் தீர்த்தமாடி திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ்செய்து சித்திரசபாநாதரைத் தரிசிக்குங்காலையில், அத்தேசிகசுவாமிகள், தமது அடியவராகிய சுப்பிரமணிய சுவாமிகளை நோக்கி,அமிழ்தினுமினிய தமிழ் மொழியால் ஓர்பதிகம் சபாநாதர் மீது பாடுமாறு கட்டளையிட்டருள அச்சுவாமிகள், சிறிதுங்கால தாமதமின்றி புத்தமுதருந் திடும் புத்தேளுலகினில் என்றெடுத்து பத்துத் திருவிருத்தங்கள் பாடிமுடித்தனர். பின்பு தேசிக சுவாமிகள் அங்குநின்றும் புறப்பட்டு விரைவில் திருவாவடுதுறை வந்தடைந்து ஆதீன முதற்குரவராகிய நமசிவாய தேசி கோத்தமரையுந் தமது ஞானதேசிகரையுந் தரிசித்துக்கொண்டு அங்கமர்ந்தனர். இஃதிங்ஙனமாக.

பின்பு சில காலஞ்சென்று மாதவச் சிவஞான சுவாமிகள் மாணவர்களிலொரு வராகிய சுப்பிரமணிய சுவாமிகள், தாம் நெடுங்காலம் முன் வசித்திருந்த தொண்டை நாட்டிற்குச் செல்ல விரும்பி, அதனை ஞான தேசிகர்பாலும் தமது சற்குருவாகும் துவிதீய அம்பலவாண தேசிக சுவாமிகளிடத்தும் தமது கருத்தை விண்ணப்பித்து விடை பெற்றுத் திருவாவடுதுறையினின்றும் அரிதினீங்கி காஞ்சீபுரம் முதலான இடங்களில் சிலகாலந் தங்கியிருந்து பின்பு தொட்டிக் கலைமாநகர்க்குச் சென்று அங்கு அன்பர்கள் பலரும் வேண்ட அதற்கியைந்து அவ்விடத்தில்எழுந்தருளியிருந்துமாணாக்கர் களுக்கு கல்விகற்பித்து வருவாராயினர். இஃதிங்ஙனமாக.

முன்பு காஞ்சீபுரத்தில் எழுந்தருளி யிருந்து மாணாக்கர்களுக்குக் கல்வி கற்பித்து வரும் கச்சியப்ப சுவாமிகள், தமது செனன பூமியாகிய திருத்தணிகை நகரவாசிகள் வேண்டுகோளுக்கியைந்து அந்நகரத்திற்கு எழுந்தருளி அங்குசிலகாலம் வசித்திருந்தனர். அக்காலத்து புறமதத்தினராற் புனைந் தியற்றப்பட்ட சீவகசிந்தாமணி என்னும் நூலினைத் தமிழ் இலக்கியம் ஆராயும் சைவர் தாமும் விரும்பிப் படித்துவருவதை உற்று நோக்கித், தாம் அந்நூலினுஞ் சிறந்த தென்னும்படி தணிகாசலமான்மியத்தை மொழி பெயர்த்து அத்தலபுராணம் பாடி யருளினர். அன்றியும் தம் மாணாக்கருட் சிறந்தவராகிய கந்தப்பையர் என்பவர்க்குற்ற குன்ம நோயை மாற்றுதற் பொருட்டு முருகப் பெருமான் மீது தணிகையாற்றுப்படை யயன ஒரு நூலினை இயற்றி அவருக்கு அந்நோயை நிவிர்த்தி செய்தருளினர். அன்றியும் தணிகாசலப் பெருமான் மீது பதிற்றுப் பத்தந்தாதி ஒன்றும்பாடியருளினர்.

பின்பு அச்சுவாமிகள், தமது பெருமையைக் கேள்வியுற்றுத் தம்மைத் தரிசிக்கவந்த சென்னைச் சைவபிரபுக்கள் வேண்டுகோளுக்கியைந்து, சென்னை மாநகரத்திற் கெழுந்தருளி அங்குமாணவர் களுக்குக் கல்விபோதித்துக் கொண்டு சிலகாலம் வசித்திருந்தனர். அக்காலத்தில் அத்தலத்தன்பர்கள் விரும்பியவாறு அந்நகர் பிரசன்ன விநாயகர் மீது பிள்ளைத் தமிழும், யமகவந்தாதியும்பாடியருளினர். அன்றியும் உபபுராணங்கள் பதினெட்டுள் ஒன்றாகிய பார்க்கவபுராணமெனப் பெயர்வழங்கும் விநாயக புராணத்தை அச்சைவ பிரபுக்கள் விருப்பத்தினுக்கிரங்கி மொழி பெயர்த்து அப்புராணத்தை பிரசன்ன விநாயகர் சந்நிதியில் அரங்கேற்றியருளினர். அப் பொழுது அச்சபையிலுள்ள பிரபுக்கள் ஒன்று கூடி இரண்டாயிரவராகன் சுவாமிகள் திரு முன்பு பாதகாணிக்கையாக வைத்து வழி பட்டனர், பின்னுஞ் சிலகாலம் அச்சுவாமி கள் மாணவர்களுக்குக் கல்வி போதித்துக் கொண்டு அங்கு வசித்திருந்தனர்.

பின்பு அச்சுவாமிகள், அங்கு நின்றும் புறப்பட்டுத் திருத்தணிகைக்கு வந்து முருகக் கடவுளைத் தினந்தோறும் தரிசித்துக் கொண்டு தம்மைவழிபடும் நன்மாணாக்கர் களுக்கு இயற்றமிழ் நூலும் வீட்டுநெறி நூலும் கற்பித்து வருவாராயினர். இங்ஙனம் சிலபகல் சென்றபின்னர் அச்சுவாமிகள், தமது ஞானாசிரிய சுவாமிகளைத்தரிசித்து நெடுங் காலமானமையால் தரிசிக்க மிக்க அவாவுற்று அத்தலத்தினின்றும் அரிதினீங்கி விரைவிற் றிருவாவடுதுறை வந்தடைந்து ஆதீன பிரதமாசாரியராகிய நமசிவாய தேசிகோத்த மரையும், ஞானதேசிகராகிய திருச்சிற்றம்பல தேசிகரையுந் துவிதீய ஆசிரியராகிய அம்பலவாண தேசிக சுவாமிகளை யுந்தரிசித்து அங்கு வசித்திருந்தனர். அக்காலத்தில் தாம் கொண்டு வந்த இரண்டாயிர வராகனையுங் கொண்டு நமசிவாயமூர்த்தியின் ஞானசமாதியில் கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம்,  அணியயாட்டிக் கால்மண்டபம் ஆகிய இவைகளை அணிபெறச் செய் வித்தனர், அன்றியும், நமசிவாய மூர்த்தியின் மீது அந்தாதி என்னும் ஓர்பிரபந்தஞ் செய்தருளினர்.

பின்பு ஞானதேசிகர், தமது பிற்றோன்றலாகிய அம்பலவாணதேசிக சுவாமிகளும், கவிச்சக்கரவர்த்தியாகிய கச்சியப்ப சுவாமிகளும்; ஏனைய அடியவர்களும், உடன்வரத் திருவாவடுதுறை யினின்றும் புறப்பட்டு வழியிடையில் பலஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டும், ஆங்காங்கு தம்மை வழிபடும் சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து கொண்டும், சுசீந்திரத்தையடைந்து அங்கு சிலகாலம் வசித்திருந்தனர்.

பின்பு ஞானதேசிகர், துவிதீய ஆசிரியராகிய அம்பலவாண தேசிக சுவாமிகளை அங்குள்ள தமது சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து வருமாறு பணித்துத்தாம் அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையிற் பல தலங்களையுந்தரிசித்துக் கொண்டு ஆளுடையார்கோயில் என பெயர் வழங்கும் திருப்பெருந்துறையை வந்தடைந்து திருக்கோயிற் சென்று சுவாமி தரிசனஞ்செய்து தமது திருமடத்திற் கெழுந்தருளி தமது ஞானாசிரிய சுவாமிகளாகிய பின் வேலப்ப தேசிகர் குரு மூர்த்தந்தரிசித்து அங்கு சிலநாள் வசித்திருந்தனர். பின்பு ஞானதேசிகர், அங்கு நின்றும் அரிதினீங்கி, திருவாவடுதுறையை வந்தடைந்து திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ் செய்து தமது திருமடத்திற் கெழுந்தருளி சிவப்பிரகாச விநாயகரையுந், திருமாளிகைத் தேவரையும், ஆதீன பிரதமாசிரியராகிய நமசிவாய தேசிகோத்தமரையுந் தரிசித்து ஒடுக்கத்திற்குச் சென்று குருதரிசனக்காக்ஷி யளித்தருளினர். பின்பு ஞானதேசிகர், சீடர்களுக்குத் தீக்கையாதிகளுஞ் சித்தாந்த சாத்திரோப தேசமுஞ் செய்து கொண்டு, தமது குருசந்தானம் வளர்பிறை மதிபோல் வளர்ந்தோங்குமாறு அங்கு வீற்றிருந்தருளினர்.

அக்காலத்தில், ஞானநிஷ்டைபுரிந்து வரும் தமது அடியவர்களில் ஒருவர், ஓர் நாள் அருணோதயமான பின்னும் அந்நிலை நீங்காதமர்ந்திருப்ப, அதனைக் கண்ட நித்தியகன்ம முடிக்காதுவாளா இருக்கின்றனர் என, நினைந்து ஞான தேசிகர் பாற்சென்று விண்ணப்பிக்க, ஞானதேசிகர், அதனைத் தேர்ந்தும் அவ்வடியவர் மனத்தைத் தெருட்டுமாறு கருதித்தாமும் அவ்வுண்மையுணராதார் போலக் கோபக் குறிப்புக்காட்டி, அவரைத் தம்மிடத்து வருவித்து வினாவியருளினர். அதற்கு அவ்வடியவர் ஞானதேசிகர் திருவடியை வணங்கி

மாதவா மாயை மடிந்தாள் மடிந்திடத்தே

பேத மிலாப் போதன் பிறந்தனனே ‡ ஆதலினால்

ஆசெளச மாமிரண்டு மாயினேன் பூசைசெயயத்

தேசிக சிற் றம்பலவா செப்பு.

என்று விடை கூறி மகிழ்வித்தனர்.

பின்புயாவரும் அவ்வடியவரது உண்மை நிலையைத் தேர்ந்து அவரிடத்துப் பெரிதும் அன்பு பாராட்டிக் கொண்டிருந்தனர்.

முன்பு சுசீந்திரத்தின்கண் சீடர் களுக்குத் தீக்கையாதிகள் செய்து சித்தாந் தோபதேசஞ் செய்துவரும் துவிதீய ஆசிரியராகிய அம்பலவாண தேசிக சுவாமிகள், பாண்டிய நாட்டின் கண்ணுள்ள தமது சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்யத் திருவுளங் கொண்டு அங்கு நின்றும் புறப்பட்டு திருச்செந்தூர் முதலிய ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டும், ஆங்காங்கு தமது சீடர்களுக்குத் தீக்கை யாதிகள் செய்து கொண்டும்,  பாவநாசம் என்னுந் திருப்பதியை வந்தடைந்து, பொருநைநதி தீர்த்தமாடித் திருக்கோயிலிற் சென்று முக்களாலிங்கமூர்த்தியையும், உலகம்மையையுந், தெரிசித்து அங்கு தமது ஈசானமடத்தில் சில நாள் வசித்திருந்தனர். அங்ஙனம் தேசிக சுவாமிகள் வசித்திருக்கும் நாளில் கல்லிடைக்குறிச்சியிலுள்ள சைவப் பிரபுக்கள், தேசிக சுவாமிகள் பாவநாச மென்னும் பதியில் எழுந்தருளியிருப்பதைக் கேள்வியுற்று, அங்கு வந்து தேசிக சுவாமிகளைத் தரிசித்து, கண்ணுவ முனிவர் சிவபிரானைப் பூசித்த திருத்தளிச் சேரிக்கு எழுந்தருளி, அத்தலத்தில் வீற்றிருந்தருள வேண்டுமெனப் பிரார்த்திக்க, தேசிக சுவாமிகள்; அதற்குத் திருவுளம் பற்றி அத்தலத்தினின்றும் அரிதினீங்கி, கல்லிடைக் குறிச்சியின் பாங்கருள்ள திருத் தளிச்சேரிக்கு எழுந்தருளி திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ் செய்து அப்பிரபுக்களால் சற்குருசுவாமிகள் எழுந்தருளியிருத்தற் பொருட்டு முன்னரே செய்து அமைக்கப் பெற்ற திருமடத்திற்கு எழுந்தருளி அங்கு யாவருக்கும் குருதரிசனக்காக்ஷி அளித்தருளினர்.

பின்பு, அப்பிரபுக்கள் தமது ஞானாசிரியசுவாமிகளுக்குப் பூஜை மகேசுவர பூஜை சிறப்புறச் செய்வித்தும் அன்றிரவு அவ்வாசிரியசுவாமிகள் பவனி கொண்டருளச் செய்வித்தும் குருதரிசனக் காக்ஷிபெற்று பேசற்கரிய பேரானந்த முற்று, சுவாமிகள் சுசீந்திரத்திலெழுந்தருளியிருந்து கொண்டு சீடர்களுக்குத் தீக்கை யாதிகளுஞ் சித்தாந்தோபதேசமுஞ் செய்து வருவது போல, இத்தலத்திலும் எப்பொழுதும் எழுந்தருளியிருந்து இங்குள்ளார்களுக்கு ஞானோபதேசஞ் செய்தருள வேண்டு மென்று பிரார்த்தித்தனர். தேசிக சுவாமிகள் திருவுளமகிழ்ந்து அவ்வாறே நும்மனோர்க்கு நாமேயன்றி, நம்மரபிற்பின்வருமவர்களும் வழிவழித் தீக்கையாதிகளுஞ் சித்தாந்தோப தேசமுஞ் செய்து கொண்டு, இங்கு அமருமாறு செய்வோம்; எனத் திருவாக் களித்தனர். பின்பு, அப்பிரபுக்கள் தங்களாலியன்றளவு ஞானாசிரியசுவாமி களுக்கு விளைநிலம் முதலியன விடுத்தனர்.

பின்பு மீஞானாசாரிய சுவாமிகள் அப்பிரபுக்கள் விரும்பியவாறு அத்தலத்தில மர்ந்து சீடர்களுக்குத் தீக்கையாதிகளுஞ் சித்தாந்தோபதேசமுஞ் செய்து வருவாராயினர். அங்ஙனம் ஞானோபதேசஞ் செய்து வரும் நாட்களில், தேசிக சுவாமிகள், கண்ணுவமுனிவர் பூசித்த அத்திருக் கோயிலுக்குத் திருப்பணி செய்து கும்பாபி டேகமுஞ் செய்தருளினர்.

பின்பு துவிதீய ஆசிரியராகிய அவ்வம்பலவாண தேசிகசுவாமிகள், தமது ஞானாசிரிய சுவாமிகளைத் தரிசிக்க அவாவுற்று அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையிலுள்ள பலஸ்தலங்களையுந் தரிசித்துக்கொண்டு  திருவாவடுதுறையை யடைந்து திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ்செய்து தமது திருமடத்திற் கெழுந்தருளி சிவப்பிரகாச விநாயகரையுந் திருமாளிகைத் தேவரையும் ஞான மூர்த்தியாகிய நமசிவாய தேசிகோத் தமரையுந் தமது ஞானாசாரிய சுவாமி களையுந் தரிசித்து அங்கு வசித்திருந்தனர்.

அக்காலத்தில் ஞானதேசிகர், தமது திருவருண்மகிமையைக் கேள்வியுற்றுத் தம்பாலடைந்த சிறுகம்பையூர் ஆதி நெட்டிலைச் சர்க்கரைப்புலவர் குமாரர் சீனிப்புலவரது பரிபக்குவ நன்காராய்ந்து அவருக்கு மூவகைத் தீக்கையுஞ், சித்தாந்த சாத்திரோபதேசமுஞ் செய்தருளினர். அப்புலவர் ஞானசாத்திரங்களைச் சிந்தித்துத்  தெளிந்து அங்கமருநாட்களில் ஞானதேசிகர் மீது கலம்பகம் என்னும் ஓர் பிரபந்தம் இயற்றினர். இது நிற்க.

இங்ஙனமாகத் திருவாவடுதுறை என்னுந் திவ்விய சிவநகரிலே நெடுங்காலம் எழுந்தருளியிருந்து தம்பாற் சரண்புகும் பக்குவமாணவர்களுக்குத் தீக்கையாதிகளும் சித்தாந்த சாத்திரோபதேசமுஞ் செய்து திருநந்திபரம்பரை விளக்கிவரும் ஞான தேசிகராகிய திருச்சிற்றம்பலதேசிகர் தாம் திருவாவடுதுறை யயன்னும் அத்திருப் பதியிலே ஓர் ஆனி மாதத்து பரணி நக்ஷத்திரத்திலே சிற்சபேசர் திருவடி நீழல் எய்தினர்.

இந்த ஞானதேசிகர், திருநந்திதேவர் அருளுபதேசமரபில் பதினோராவது பிற்றோன்றலாகிய நமசிவாய தேசிகோத்த மருக்குப் பன்னிரண்டாவது பிற்றோன்றல் என்பதூஉம், சாஸ்திரஞ் சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகள் திருவாவடுதுறைத் தலபுராணம் தமிழிலியற்றியது இந்த ஞாநதேசிகர் காலம் என்பதூஉம், அப்புராண நூலாசிரியர் ஆதீன பிரதமாசாரியராகிய நமசிவாய மூர்த்திக்குப் பத்தாவது பிற்றோன்றலாகிய வேலப்ப தேசிகர் பால் ஞானோபதேசம் பெற்றனர் என்பதூஉம், திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் தமிழிலியற்றிய இலக்கணம் சிதம்பரநாதசுவாமிகள் இந்த ஞானாசிரிய

சுவாமிகள் பால் அருளுபதேசம் பெற்றனர் என்பதூஉம், தமிழ்ச்சிவஞானபோத மாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞான சுவாமிகள் இந்த ஞானாசிரிய சுவாமிகள் காலத்திலும் இருந்தனர் என்பதூஉம், சிறுகம்பையூர் சர்க்கரைப் புலவர் குமாரர் சீனிப்புலவர் இந்த ஞானதேசிகர் பால் மூவகைத் தீக்கையுஞ் சித்தாந்த சாத்திரோபதேசமும் பெற்றனர் என்பதூஉம் அப்புலவர் ஞானதேசிகர் மீது கலம்பகம் என்னும் ஓர் பிரபந்தம் இயற்றினர் என்பதூஉம் பின்வருஞ்செய்யுட்களால் இனிது புலப்படும்.

அவை வருமாறு :

திருவாவடுதுறை தலபுராணப் பாயிரம், குருதோத்திரம்

சந்தான குரவர்களிற் சிவஞானபோதம் வடமொழியாற் சாற்றும்

நந்தீசர் சனற்குமர பகவான் சத்தியஞான நலத்தோ னின்பப்

புந்திபெறுபரஞ்சோதிமாமுனிகள் திருவடியைப் புகழ்ந்து போற்றி

சிந்தைமகிழ்ந் தார்வமுற தினந்தினமு நினைந்துருகிச்சிந்தைசெய்வாம்   ( 1 )

 

தமிழ் நூலா லந்நூன்முன் னூலாக்கு மெய்கண்டான் சரணம் போற்றித்,

திமிரமகற் றிடுகதிர்போல் வழி நூல்செய் யருணந்தி திருத்தாளேத்திச்,

சுமையுடனோ யகற்றுதிரு  மறைஞான சம்பந்தர் துணைத்தாள் வாழ்த்தி

யமுதெனச்சார்  பருணூல்சொ லுமாபதிதே வன்றுணைத்தாளடைந் துய்வாமே             ( 2 )

 

மத்தராய் மலத்தால் வாடு மன்னுயி ரருள்பெற் றீசன்

பத்தராய் வாழநோக்கும் பரமகல்யாண தேசன்

முத்தரா நமச்சிவாயன் முண்டக மலர்த்தாள் போற்றி

சித்தராஞ் சிவப்பிர காசன் றிருவடியுளத்துள் வைப்பாம்.

 

மெய்கண்ட மரபினுண்மை மிகுசம்பிர தாயமோங்கப்

பொய்கண்டு நீங்கி ஞானப் போதிசேர் துறைசை மேவி

யுய்கின்ற வழியீதென்றிங் குயிர்க்கெலா முபதே சங்கள்

செய்கின்ற நமச்சிவாய தேசிகன் றிருத்தாள் சேர்வாம்.

 

துறைசைவாழ் நமச்சிவாயர் தொடர்பின்மோ னத்தி னின்ற

விறைமறை ஞானதேச னிணையடி வழுத்தியுண்மை

யறிவெலாந் தமிழிற் கோத்த வம்பல வாணர் பாதங்

குறைவறப் பணிந்து ருத்திரகோடி தாள் சேர்வாமன்றே.

 

நயமிகு மருள்வேலப்பர் நற்றிருக்குமாரசாமிப்

பெயர்பெறு மிருவர்மாசி லாமணி பெருமை வாய்ந்த

பயனுறு ராம லிங்கர் பதம்பணிந் மீதெனையு மாளாத்

தயவொடாண்டருள் வேலப்பதாதை தாடலை மேற்கொள்வாம்.

 

முன்னின் றாண்டெவர்க்கு மின்ப முதவுகோ முத்தியீசர்க்

கென்னென்று புகல்வே மென்றிங்கி யாவரும் வியப்பக் கோயில்

பொன்னென்றும் பிரியா வாறு புதிதாகப் பிரித்துண் டாக்கும்

பன்னொன்றாங் குருவே லப்பர் பதமலர் பணிந்து வாழ்வாம்

 

பிள்ளைசொன் மழலை கேட்கும் பிதாவெனத் துறைசை வாழும்

வள்ளறன் புராணநாயேன் வகுத்தசொல் விரும்பிக் கேட்குந்

தெள்ளுதே சிகனா மெங்கள் திருச்சிற்றம்பலவர் பாதங்

கள்ளுலா மலர்தூய் வாழ்த்திக் கருத்திலுட் கொண்டு வாழ்வாம்

புராணச் சிறப்புப் பாயிரம்

தலமுழுதும்புகழவளராவடு தண்டுறைசையரண்சிதைபோது

மிலகுவடமொழியதனைத் தமிழ்விருத்தப்பாவதனாலிசைத்தல் செய்தான்

பலனுதவு துறைசை வேலப்பகுருவருள் பதிந்த பண்பன்ஞானக்

கலைதெரிந்தசுவாமிநாதம் முனிவனென்னையுமாள் கருணையோனே

 

திருப்பாதிரிப்புலியூர்ப் புராணப்பாயிரக் குருதோத்திரம்

சித்தாந்த சூத்திரபா டியம்புரிந்த  சிவஞானச் செல்வ ராதிப்

பத்தர்கடாம்பணி திருச்சிற்றம்பலதேசிகர் துறைசைப்பழமைமேய

முத்தரா மம்பலவா ணக்குரவர் பணியுநமச் சிவாய மூர்த்தி

கொத்தார்ந்த மெய்கண்ட பரம்பரைவாழ் தேசிகர் தாள் குறித்து   வாழ்வாம்.

 

ஞானதேசிகர் கலம்பகம் ‡ கட்டளைக் கலித்துறை

எவன்மறை யந்தத்தில் வாக்கிய ஞானத்தி லெய்துபொரு

ளவனா கியதிருச் சிற்றம் பலவ னருட் டுறைசைத்

தவனிடத் தஞ்செழுத் துண்மைபெற் றோமினித் தாரணிமேற்

றிவநிலை மாறிமற் றெங்கெழுந் தாலென்ன செங்கதிரே.

 

அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்

யானென்று மெனதென்று மகப்பற்றும் புறப்பற்று மெய்தா வண்ணந்

தானென்று வலிந்தாண்டு காயமொடு பொருளாவி தன்னைக் கொண்டான்

தேனென்ற மொழித்துறைசைத் திருச்சிற்றம் பலகுரவன் றிசைசூழ் பாரில்

வானென்றும் பெய்வது போ லருள்புரிந்த வதற்கொருகைம் மாறில்லேனே.

 

சிங்காச னாதிபதி திருத்துறைசை யூராளி செகத்தோ ரெல்லா

மங்காம லுபதேசம் புரிதிருச்சிற் றம்பலவன் வண்மை பாரீர்

சங்காழி மாயவனு மறியாத திருவடியைத் தந்தான் மற்றை

வெங்கானிற் றுரும்பனைய வெனைக்கொண்டா னிதுவுமொரு விளையாட்டாமே.

 

ஞானதேசிகர் கலம்பகச் சிறப்புப்பாயிரம் ‡ கட்டளைக் கலித்துறை

சிவதீக்கை போதன் றுறைசைச்சிற் றம்பலதேசிகன்மேற்

றவமாட்சி சேதுசபை மெச்சத்தார்புனை சர்க்கரைசேய்

சிவகாட்சிசாது வவை தேர்ச்சி தீரசீ னிப் புலவன்

கவிசூட்ச மோதக் கலம்பகப் பூநெறி கட்டினனே.

 

பதின்மூன்றாவது அம்பலவாணதேசிகர் சரித்திரம்

 

ஐந்தொழிலிற் படைப்பாதி நான்கூன நடத்தினா லாரு யிர்க்கு

நந்துபரி பாகமுறச் செய்தருள லெனுஞான நடத்தினாலே

பந்தமறு முத்திநிலை கைக்கூட்டுவான் றுறைசைப் பதியன்வைகுஞ்

சுந்தரவம் பலவாண குரவனிருதிருத்தாள்க டொழுதுவாழ்வாம்.

 

சித்தாந்த  ஞானதேசிகராகிய திருச்சிற்றம்பல தேசிக சுவாமிகள்பால் சைவ சந்நியாசமும், மூவகைத்தீக்கையும், ஆசாரியாபிடேகமும் முறையாகப் பெற்று அத்தேசிகசுவாமிகளுக்குத் துவிதீய ஆசிரியராக விளங்கி வீற்றிருக்கும் அம்பலவாண தேசிகர், தமது ஆசிரிய சுவாமிகள் ஞான சமாதியில் திவ்விய ஆலயமெடுத்து அவ்வாசிரியசுவாமிகள் திருவடி அடையாளம் ஆண்டு பிரதிட்டை செய்து, வழிபட்டுக்கொண்டு எழுந்தருளி யிருந்து பரிபக்குவர்கட்குச் சித்தாந்தோபதேசஞ் செய்துவருவாராயினர்.

அக்காலத்தில், ஞானதேசிகர், வைத்தீசுவரன்கோயில் எனப் பெயர் வழங்கும் புள்ளிருக்குவேளூரிலே சைவ வேளாளர் குலத்தில் அவதரித்து இளமைப் பருவத்தே திருவாவடுதுறைக்கு வந்து தமது ஞானதேசிக சுவாமிகள்பால் சைவ சந்நியாசமும், மூவகைத் தீக்கையும் பெற்று தீவிரபக்குவரா யிருந்த சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமி களுக்கு ஓர் சுபதினத்தில் ஆசாரியாபிடேகஞ் செய்து தமக்குத் துவிதீய ஆசிரியராக வைத்தருளினர். பின்பு ஞானதேசிகர், செந்தமிழ் நாட்டின் கண்ணுஞ் சேர நாட்டின் கண்ணுமுள்ளத் தமது சீடவர்க்கத்தினர்க்குத் தீக்கை யாதிகள் செய்யத் திருவுளங்கொண்டு, துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிகரும், தம்பிரான் சுவாமிகளும், ஏனைய அடியவரும், பரிசனங்களும் உடன் வரத் திருவாவடுதுறையினின்றும் அரிதினீங்கி, வழியிடையிற் பலஸ்தலங்களையுந் தரிசித்துக்கொண்டும் ஆங்காங்கு தம்மைத் தரிசிக்க வரும் அன்பர்களுக்குத் தீக்கை யாதிகள் செய்துகொண்டும் சுசீந்திரத்தை யடைந்து, திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ்செய்து தமது திருமடத்தைச் சார்ந்து ஆதீன பரமமுதற்குரவராகிய பஞ்சாக்கர மூர்த்தியின் பிரதிட்டாலயத்திற் சென்று ஞான மூர்த்தியாகிய நமச்சிவாய தேசி கோத்தமரைத் தரிசித்து வழிபாடியற்றி,  இருகுமாரசுவாமி தேசிகர் குருமூர்த்தங்கள் தரிசனஞ்செய்து அங்குசிலநாள் வசித்திருந்து, அங்கு நின்றும் அரிதினீங்கிப், பழம்பதியாகிய பாண்டிய நாட்டின் கண்ணதாய்ப் பலவளங் களும் நிறைந்துள்ள கல்லிடைக்குறிச்சியின் வடபாங்கரிலுள்ள திருத்தளிச்சேரியை யடைந்து திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ்செய்து தமது திருமடத்திற்கு எழுந்தருளி, அங்கு சிலகாலம் வசித்திருந்து துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகளை அவ்விடத்திலமர்ந்து சீடர் களுக்குத் தீக்கையாதிகள் செய்துவருமாறு கட்டளையிட்டுத், தாம் அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையிற் பல ஸ்தலங் களையுந் தரிசித்துக்கொண்டு திருவாவடு துறையை யடைந்து திருக்கோயிலிற்சென்று, துணை வந்த விநாயகரையும், அழகிய விநாயகரையும், மாசிலாமணியீசரையும் திரவியத் தியாகரையும், ஒப்பிலாமுலை யம்மையையும், திருமூலதேவரையும், படர் அரசினையும் பணிந்து தமது திருமடத்தினை யடைந்து, மடத்து வடக்குவாசலின் மேற் பாலில் கோயில்கொண்டெழுந்தருளியிருக்குஞ் சிவப்பிரகாச விநாயகரைத் தரிசித்துக் கொண்டு உள்ளே வந்து, திருமாளிகைத் தேவரையும், ஆதீன பரம முதற்குரவராகிய பஞ்சாக்கரமூர்த்திçயும் பணிந்து வழிபாடி யற்றித் தமது ஒடுக்கத்திற் கெழுந்தருளி யாவருக்குங் குருதரிசனக் காட்சியளித்து, அங்கு சீடர்களுக்குத் தீக்கையாதிகளுஞ் சித்தாந்த சாத்திரோப தேசமுஞ்செய்து வீற்றிருந்தருளினர்.

அக்காலத்தில் சற்குருநாதனது தம்பிரான் சுவாமிகள் திருக்கூட்டத்தினருடன் அளவளாவி யருங்கலை வினோ தராயமர்ந்து கச்சியப்ப தம்பிரான் சுவாமிகள், ஞானதேசிகர்பால் விடைபெற்று ஆவினறுங் கன்றுறையும் ஆவடுதண்டுறை யினின்றும் அரிதினீங்கிச் சென்னி நன்னாட்டினிற் பற்பல திருத்தலங்களைத் தரிசித்துத் திருவானைக் காவினை யடைந்து, திருக்கோயிலைச்சார்ந்து சிவபிரானாற்றலை நன்குணர்ந்த அந்நகரத் திலுள்ள சைவப்பிரபுக்கள் விரும்பிய வண்ணம் அத்தலத்தில் சிலகாலம் வசித் திருந்தனர். அக்காலத்தில் அப்பிரபுக்கள் வேண்டுகோளுக்கியைந்து அத்தலபுராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தருளினர். அன்றியும், பூவாளூர்த் தலபுராணத்தை அந்நகரவாசிகள் வேண்டுகோளுக் கியைந்து தமிழில் மொழிபெயர்த்தருளினர்.

பின்பு அச்சுவாமிகள், அங்குநின்றும் அரிதினீங்கி, கொங்கு நாட்டினிற்சென்று அங்கு வழியிடையிற் பலதலங்களையுந் தரிசித்துக் கொண்டு, திருப்பேரூர் என்று பெயர் வழங்கும் மேலைச் சிதம்பரத்தை யடைந்து, கோயிலிற் சென்று அரசம்பல வாணரையும், பட்டீசுரரையும் பணிந்தேத்தித் தமது ஆதீன மடாலயத்திற் சென்று தமது வித்தியாகுருவாகிய மாதவச் சிவஞான சுவாமிகளுக்கு சைவசந்நியாசமும்; மூவகைத் தீக்கையாதிகளும், சித்தாந்தசாத்திரோப தேசமுஞ் செய்தருளிய ஞானாசாரியசுவாமி களாகிய துவிதீய வேலப்ப தேசிகோத்தமர் குருமூர்த்தந்தரிசித்து, அங்குள்ள அன்பர்கள் வேண்டுகோளுக்கியைந்து அத்தலத்தில் சிலகாலம் வசித்திருந்தனர். அக்காலத்திற் பலபதிகங்கள் பாடிப் பலருக்குக் குட்டநோய் முதலியவற்றையும் போக்கியருளினர். அன்றியும், மழை வரு´க்காமல் அங்குள்ளார் யாவரும் வருந்துதலையறிந்து அரசம்பல வாணர் மீது ஓர்பிரபந்தம்பாடி, மழை பொழியச் செய்தருளினர். பின்பு அந்நகர அன்பர்கள் விரும்பியவாறு அத்தல புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தருளினர்.

பின்னர் அச்சுவாமிகள், அங்கு நின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பலதலங்களையும் தரிசித்துக், காஞ்சீபுரத்திற் சென்று, அங்குபல நன்மாணாக்கர்களுக்கு இயற்றமிழ் நூலும் வீட்டுநெறி நூலுங்கற்பித்து வருவாராயினர். அக்காலத்து கச்சியானந்த ருத்திரேசர்மீது பதிற்றுப்பத்தாந்தாதியும், வண்டுவிடுதூதும் செய்தருளினர்.

இங்ஙனம் நெடுங்காலம் அச்சுவாமிகள் மாணவர்களுக்குக் கல்வி போதித்து வருவாராயினர். அங்ஙனம் அத்தலத்தில் வசித்து வருநாட்களில் அத்திருப்பதியிலே சாலிவாகன சகாப்தம் 1712‡ல் செல்லாநின்ற சாதாரணவருடம் சித்திரைமாதம் பதினோராந்திகதி செவ்வாய்கிழமை பூர்வ பக்கஞ் சப்தமி புனர்பூசத் திருநாளில் சிவபரிபூரணமுற்றனர். இஃது இங்ஙனமாக,

முன்னரே தொட்டிக்கலைமாநகரில் எழுந்தருளியிருந்து மாணாக்கர்களுக்குக் கல்வி போதித்து வருவாராகிய சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகள், அவ்விடத்தில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் சிதம்பரேசர் மீது கோவை, சிலேடை வெண்பா சந்நிதி முறை, வண்ணம், பஞ்சரத்தினம், பரணி, கட்டியம் எனப்பலவும், சிவகாமியம்மை மீது பஞ்சரத்தினமும், பாடியருளினர். அன்றியும் அப்பதியிற்றானே எழுந்தருளியிருக்குங் காலத்தினும் இடையிடையே பலவிடங் களினும் யாத்திரையாகச் சென்று, ஆங்காங்கு எழுந்தருளியிருக்குங் காலங்களினும் தம்பாலன்புடைய இருவர்களுக்கு முறையே குட்டரோகத்தினையும், அந்தகத்தன்மையை யும் நீக்கியருளும்படி முருகக் கடவுளைப் பிரார்த்தித்து, சுப்பிரமணியர் திருவிருத்தம், திருத்தணிகைத் திருவிருத்தம் எனப் பெயர் வழங்கும் அற்புதப்பதிகமிரண்டும், வட திரு முல்லைவாயில் கொடியிடையம்மை பிள்ளைத் தமிழ் மீஆயலூர் முருகர்பிள்ளைத் தமிழ், மீமீஆவினன்குடி கைலாயநாதர் மீது பதிற்றுப்பத்தந்தாதி முதலாகப் பலவும் பாடியருளினர். மேலும் தமது வித்தியா குருவாகிய மாதவச்சிவஞான சுவாமி களிடத்துத் தமக்குளவாகிய மெய்யன்பின் வசத்தால், அத்திருத் தொட்டிக்கலைமா நகரின்கண் சிதம்பரேசர் திருக்கோயிற் சந்நிதி மண்டபத்தில் அப்பெருந்தகையாரது திருவுருவம் அமைப்பித்துப் பூசித்துத் திருவிருத்தங்கள் பாடித் தினந்தோறும் வழிபட்டு வந்தனர்.

 

திருவிருத்தம்

 

கருணைபொழி திருமுகத்திற் றிருநீற்று நுதலுங்

கண்டாரை வசப்படுத்தும் கனிந்தவா யழகும்

பெருமைதரு துறவோடு பொறையுளத்திற் பொறுத்தே

பிஞ்ஞகனார் மலர்த்தாள்கள் பிரியாத மனமும்

மருவினர்க ளகலாத ஞானமே வடிவாம்

வளர்துறைசைச் சிவஞான மாமுனிவன் மலர்த்தாள்

ஒருபொழுது நீங்காம லெமதுளத்திற் சிரத்தில்

ஓதிடு நாவினிலென்று முன்னிவைத்தே யுரைப்பாம்.

 

திண்ணவின்பச் சேவடியுந் திருவிழியுந்

திருமார்புஞ் செல்வக் கையும்

நண்ணுமன்பர்க் கருள்கருணைத் திருமுகமும்

பசுங்குழவி நடையே யாகிப்

புண்ணியத்தின் பொலிவாகி யற்புதக்கோ

லக்கொழுந் தாய்ப்புலை நாயேற்குக்

கண்ணைவிட்டு நீங்காத சிவஞான

சற்குருவே கருணை வாழ்வே.                           (2)

 

ஓதரிய வாய்மைச்சி வாகமங்கட்கெல்லா

முற்ற பேராகர  மதாய்

ஓங்கு திருவா வடுதுறைப் பதியிலற்புதத்

தொரு வடிவுகொண் டருளியே

பேதமுறு சமயவாதிக ளுளமயக்கைப்

பெயர்க்கும் ரச குளிகையாகிப்

பிரியமுடனே வந்தடுத்தவர்க் கின்பப்

பெருங் கருணை மேருவாகி

ஆதரித்தடி யேங்களுண்ணத் தெவிட்டாத

வமிர்தசா கரமாகியே

அழகுபொலி கலைசைச்சிதம்ப ரேசுரரடிக்

கதிமதுர கவிதைமாரி

மாதவர்வழுத்தப் பொழிந்தருளி யயன்றுமவர்

மன்னிவளர் சந்நிதியிலோர்

மணிவிளக் கென்னவளர் சிவஞானமாதவன்

மலர்ப்பதம் வணங்குவாமே.                (3)

 

பின்பு அச்சுவாமிகள், தாம் ஆவடுதுறையை யகன்று போய் நெடுங்காலமானமை யோர்ந்து அங்கெழுந்தருளத் திருவுளங்கொண்டு, அவ்வாறே விரைவில் திருத்தொட்டிக் கலை மாநகரினின்றும் புறப்பட்டு வழியிடையிற் பற்பல ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ்செய்து தமது திருமடத்திற்கு வந்து சிவப்பிரகாச விநாயகரையும், திருமாளிகைத் தேவரையும், ஆதீன பரம முதற்குரவராகிய திருநமச்சிவாய தேசிகரையும், தமது ஞானாசிரிய  சுவாமிகளையுந் தரிசித்து, வடக்கு மடத்திற்கு வந்து தம்பிரான் சுவாமிகள் திருக்கூட்டத்தைச் சார்ந்து பணிந்து அங்கு வசித்திருந்தனர். அங்ஙனம் வசித்திருக்குங்காலையில் அறிவினும், வயதினும் முதியோராகிய தம்பிரான் சுவாமிகளிலொருவர், சுவாமிகளை நோக்கித்”” தேவரீர் இந்த இடத்தை மறந்தீர்போலும்?” என்று சொல்ல அத்தருணத்தில் சுவாமிகள் அத்தபோதனரைப் பணிந்து

விருத்தம்

 

தெய்வப்பொன்னித்திருநதிசூழ்சிறப்புமிருநான் கொரு கோடி

சித்தர்வாழுந் திருவரசு மதன்கீழொரு மாசிலாமணியு

மைவைத்தனையவிருட்டறையிற்குருட்டாமானுமான் மாக்கண்

மலநோயகற்றிக் கதியளிப்பான் வந்தங்கவர்புன் றலைமீது

கைவைத்தருளி முறையேபொற் கழலுஞ்சூட்டுங் கோமுத்திக்

கருணைக்கடல் பஞ்சாக்கரதேசிகன் சீரடியார் கலந்திருக்குஞ்

சைவத்திருவோலக் கமுமங்குண்டேற் கைலைதனையயாருகாற்

சார்ந்துமீள்வேன் மற்றங்குத் தரியேனங்குத் தரியேனே.

 

எத்தலமு மெந்நதியு மெத்தளியுந்  திருமூர்த்த மெனைத்தும் போதி

மெய்த்தரு வோங்கிய துறைசைத் திருநகருங் காவிரியும் விடையுறாச்சோ

வத்திருக் கோயிலு மாசிலா மணியு மதனருகா னந்தவைப்பி

லுத்தம பஞ்சாக்கர சற்குரு மணியுமாகி யயனையுருக்கு மன்றே.

 

என்று பாடி யாவரையும் மகிழ்வித்தனர். அன்றியும் இந்த ஞானதேசிக சுவாமிகளுக்கு ஐந்தாவது முற்றோன்றலாகியும், ஆதீன பிரமாசாரியராகிய பஞ்சாக்கர தேசிகோத்தமருக்கு ஒன்பதாவது பிற்றோன்றலாகியும் எழுந்தருளியிருந்த, இராமலிங்கதேசிகர் திருவவதாரஞ் செய்தருளிய குலமரபினராகிய வயித்திலிங்க ஓதுவாமூர்த்திகளின் புத்திரரும், இவ்வாசிரிய சுவாமிகள் பால், மூவகைத் தீக்கையுஞ் சித்தாந்த சாத்திரோப தேசமும் பெற்றவரும், குருசாமியயன்னும் பெயரினரும் ஆகிய ஒருவர் வழக்கப்படி ஓர் நாள் ஞானாசிரியரது பூஜா காலத்து அப்பூஜா மண்டலத்தின் பாங்கரிலிருந்து மற்றவர்களோடு சேர்ந்து தேவாரங்களைப் பண்ணுடன் பாடுதல் கேட்டு மற்றையோர் சாரீரங்களினும் இவ்வோதுவாமூர்த்தியின் சாரீரம் நனி சிறந்து விளங்குதலை நன்காராய்ந்து அகமிக மகிழ்ந்து,

 

கட்டளைக் கலித்துறை

 

ஒருசாமி வாழ்ந்திருக் கோமுத்தி யூர்தனி லுற்பவித்து

வருசாமி எங்கள் வயித்திய லிங்கம் வரம்புரிந்து

தருசாமி முத்தமிழ்ச் சங்கீத சாமிநற் சாந்தகுணக்

குருசாமி தீங்குர லெந்தாளுங் கோகிலங் கோகிலமே.

 

என்னுஞ் செய்யுளை இயற்றித் தமது ஞானதேசிகர் பூஜாமண்டபத்தினின்றும் வெளியே எழுந்தருளுங் காலத்து அவ்வாசிரியர்பால் விண்ணப்பஞ்செய்து உவப்பித்தனர்.

பின்பு அச்சுவாமிகள், குருலிங்க சங்கமசேவை செய்து கொண்டு அங்கு சிலகாலம் வசித்திருந்தனர். அக்காலத்து மாசிலாமணி யீசுரர்மீது கோவையயன்னும் பிரபந்தம்பாடி, ஞானதேசிகர் திருமுன்பு அதனை அரங்கேற்றி வருவாராயினர். அப்பொழுது நாடோறும் அரங்கேற்று சபையில் வந்து கேட்டுக் கொண்டு இன்புற்றிருக்கும் அன்பர்களில் ஒருவர் பிறர்க்கு எளிதிற் பொருள் புலப்படாதபடி அகப்பொருட்டுறையை அமைத்து அம்பலவாண தேசிகர்மீது செய்யுள் செய்து தருக என்று வேண்ட,

இத்தை யனையவுரு வில்லான் விடுமலரே

வைத்தகரை யோதடுக்க மாட்டாதே ‡ நித்தநித்த

மங்கமுகங் காத்துறைசை யம்பலவா ணன்புயத்திற்

செங்கழுநீர்த் தாரனையே தேடு.            ( 1 )

(இத்தையல் நைய = இப்பெண் மெலியும்படி, மலரேவை = மலர்ப் பாணத்தை,  தகர் ஆடு. அனையே செள்கழுநீர்த் தாரைத் தேடு.)

 

இந்தவச மந்தவசந் தன்மலைதற் கேதுசெயு

நொந்தவச முற்றாட்கே நோக்குங்காற் ‡ பைந்தொடியா

யாண்டகுருத் தென்றுறைசை யம்பலவா ணன்புயத்திற்

பூண்டநிறச் செங்கழுநீர்ப் பூ.               ( 2 )

 

(இந்த அசம் = இந்த ஆடு. வசந்தன் = மன்மதன். பைந்தொடி ‡ விளி, செங்கழுநீர்ப் பூவை ஆய்வாயாக; ஆய்தல் = ஈண்டுத் தேடிக் கொணர்தல்.)

 

என்று இரண்டு வெண்பாக்கள் பாடி, எவர்க்கும் பெரு மகிழ்ச்சியைவிளைவித்தனர். பின்பு சில தினங்களுள் கோவையை அரங்கேற்றிமுடித்தனர். அன்றியும் திருமாளிகைத் தேவர் மீது தனித்தோத்திரச் செய்யுட்களும், தோத்திர பஞ்சகமும் ஞான தேசிகர்மீது ஆனந்தக் களிப்புஞ் செய்தருளினர்.

 

தனித்தோத்திரச் செய்யுட்கள்

 

குடங்கர்விசும் பிடைநிறுவிக் குணபநடந்

திடவியக்கிக் கொடிஞ்சிப் பொற்றேர்

வடங்கழற்றி யோட்டிமதி னந்திகளை

வரவழைத்து வரைநற் காட்டி

னுடம்பினெழு புகைமாற்றிக் கொங்கணர்பாத்

திரஞ்சுவற்றி யுணவ தாய்வெந்

திடும்பயறு முளைசெய்தெமக் கருடிருமா

ளிகைத்தேவ ரிணைத்தாள் போற்றி.                      ( 1 )

 

பொருவிலதாம் போகநாத சித்தர்பதம்

பூசிக்கும் புனிதர் நாளு

மருவுபதி யதிசயங்கள் வாக்காலு

மனத்தாலு மதிக்கொ ணாதா

இருளகன்ற பானுவென வெண்டிசையும்

பணிந்துய்ய வின்பா யோங்கி

யருளுருவாய்த் துறைசைவரு திருமாளிகைத்

தேவை யகத்துள் வைப்பாம்.               ( 2 )

 

புறமைத்த கர்த்தான மதிப்பருமற்

புதமாந் தன்மை பலவிளக்கி

நிறைவுற் றிருக்குஞ் சிவானந்த

நிலைபெற் றிருக்கு மெம்பெருமான்

குறைவற் றிருக்கு மெய்யடியார்

கூட்டங் கலந்து வளர்ந்தோங்குந்

துறைசைத் திருமாளி கைத்தேவன்

றுணைத்தாட் கமலந் துதிப்பாமால்.         ( 3 )

தோத்திர பஞ்சகம்

 

கருணைபொழி திருமுகமுஞ் சற்குருபொற்

பதமலரே காணுங் கண்ணுந்

திருமருவு தடமார்பு மத்துவித

முணர்த்துசின் முத்திரைச் செங்கையு

மருமலர்ச்சே வடியிணையு மனத்தெழுதி

வைத்திறைஞ்சி வாழுந் தொண்டர்க்

கருள்புரிய வருதிருமா ளிகைத்தேவ

சிகாமணியே யன்பர் வாழ்வே.             ( 1 )

 

மருள்பெருக்கு மனக்கயவர் வஞ்சனையைத்

துமித்துனையே வைப்பாய்ப் போற்றுந்

தெருள்பெருக்கு மனத்தடியார் குறைதீர்க்குங்

குணக்குன்றே சிறந்த வோர்நாற்

பொருள்பெருக்குந் தெய்விகப்பூம் பொன்னிபுறஞ்

சூழ்துறைசைப் பொலிந்து மேவி

யருள்பெருக்கு மொருதிருமா ளிகைத்தேவ

சிகாமணியே யன்பர் வாழ்வே.             ( 2 )

 

ஈன்றுவளர்த் திடுதாயு மிதம்புரிதந்

தையுமல்லா திளஞ்சி றார்க்குத்

தோன்றுதுணை யாயயாருவ ருண்டோவங்

கதுபோலுன் றொழும்பா யுள்ளேம்

மான்றுமணந் தளர்ந்திடினீ யன்றி

யளித்தருள வல்லார் மற்றுமுண்டோ

வான்றபுகழ் பெறுதிருமா ளிகைத்தேவ

சிகாமணியே யன்பர் வாழ்வே.             ( 3 )

 

பெண்டிருமக் களுமுரிமை பெருக்குகிளை

யரும் பொருளும் பிறவுநீத்துன்

றண்டளிர்ப்பொற் றிருவடியே சரணாகச்

சார்ந்திருக்குந் தமியேங் கட்கு

முண்டொர்குறை யயனிலெவர்மாட்  டுரைத்தாற்றிக்

கொள்வதுரைத் தருள்வாய் வானத்

தண்டர்கணம் பணிதிருமா ளிகைத்தேவ

சிகாமணியே யன்பர் வாழ்வே.                    ( 4 )

பூவலர்கொண் டெந்தை பெம்மான்

பொன்னடிப்பூ சனையியற்றும் புதல்வற்காக

மாவலித்தோண் மறலிபட்ட பாட்டையுன்னிப்

பாராதுன் வழித்தொண் டானே

மேவுமொரு புகலிலர்போல் வருந்துவதுன்

னழகேவெண் டிரைநீர்ப் பொன்னி

யாவடுதண் டுறைதிருமா ளிகைத்தேவ

சிகாமணியே யன்பர் வாழ்வே.             ( 5 )

 

ஞானதேசிகர் ஆனந்தக்களிப்பு

 

ஆனந்தந் தந்தமை பாரீ            ரெங்க

ளம்பல வாண வருட்குரு ராசன்

 

ஆனந்தந் தந்தமை பாரீர்

பருவ மளவற்ற கால       மென்னைப்

பார்த்திருந் தான்றன்னைப் பார்த்திடுங் காலங்

குருவடி வாயயாரு கோல                                     மிங்குக்

கொண்டுவந் தென்னை யாட்கொண்டருள் மூலம்  (ஆனந்தந்)

 

மும்மலக் கோட்டை யிடித்துப்      பொய்யின்

மூழ்கிக் கிடந்த வெனைக்கைப் பிடித்துச்

செம்மணி மன்றுணடித்து           நிற்குந்

திருவடித் தாமரைத் தேனென்னுள் வடித்து (ஆனந்தந்)

 

எனது மனதினைத் தேற்றிப்         பைய

வேறாக்குழிநின்று மெனையயடுத்தேற்றிச்

செனன விடாயினை மாற்றி        மெல்லச்

செப்பாத சொல்லொன்றென் செவியுறச்சாற்றி             (ஆனந்)

 

என்னிரு வல்வினை யோட்டிக்      கன

விந்திர சாலமுலகென்று காட்டித்

தன்னிரு தாளிணை சூட்டி                 யயான்றித்

தம்மை யறிந்தவர் தம்முடன் கூட்டி (ஆனந்தந்)

 

அன்றுதொட் டென்னை யடுத்து            நா

னாடுந்துறையயல்லா மோடவிடுத்து

வின்று தனக்குட் படுத்து           வெனக்

கெங்கெங்கும் பார்க்கிலுங் காட்சிகொடுத்து (ஆனந்தந்)

 

பரசமை யத்துக்கோர் சிங்கஞ்              சுற்றும்

பவக்கடல் வீழ்ந்தோரைக் கரையேற்றும் வங்கங்

கருதின தருமொரு சங்கந்                 தூக்கிக்

கனலி லுருக்கி யுரையாத தங்கம்          (ஆனந்தந்)

 

தேவர்கள் போற்று முல்லாச        னன்பர்

சித்தத்து ளூறித்தித் திக்கும் விலாச

னாவடு தண்டுறை வாச            னிந்த

அம்புவிக் கெல்லாம் அருட்குரு ராசன்             ( ஆனந்தந் )

 

திக்கெட்டும் போற்றுஞ் சரணன்                   தன்னை

சென்றடைந் தோர்களைத் தாங்குமோரரணன்

அக்குமணியா பரண                னன்பர்க்

கமிர்தப் பிரவாகத்தை யளிக்கும் விதரணன்        (ஆனந்தந் )

 

பாசத் தளையை முறித்துக்                கோடி

பரிதிப்ர காசமா யுள்ளே யயறித்து

வாசுற்ற வேரைப் பறித்து           மெய்மை

யன்பரோ டென்னையு மாளாக்குறித்து             ( ஆனந்தந் )

 

நானென்ற தானென்ற தற்றுச்              சிவ

ஞானப்ர காசவெளியிடை யுற்று

வானந்த நித்திரை பெற்று          நிற்கு

மடியாரோ டென்னையும் வாவென் றழைத்து             (ஆனந்தந் )

 

பஞ்சம லக்கொத் தறுத்துக்         கொடும்

பாவியேன் செய்பிழை யயல்லாம் பொறுத்து

நெஞ்சி னினைவை நிறுத்து         வினை

நேர்வந்த காலந்தன் னருளுள் ளுறுத்து.

 

ஆனந்தந்தந்தமை பாரீ             ரெங்க

ளம்பல வாண வருட்குரு ராசன்

ஆனந்தந் தந்தமை பாரீர்.

 

பின்பு அச்சுவாமிகள், தாம் முன்பிருந்த தொண்டை நாட்டின்கணுள்ள தொட்டிக்கலைமாநகர்க்குத் தாம் செல்லத் திருவுளங்கொண்டு, ஞானதேசிகரிடத்து அநுஞ்ஞை பெற்று அங்கு நின்றுமரிதினீங்கி, சான்றோருடைத்தென்று சாற்றுந் தகைமை வாய்ந்த அத்தண்டக நாட்டினைச் சார்ந்து அங்கு பலதலங்களையுந் தரிசித்துக் கொண்டு திருத்தொட்டிக் கலைசைமா நகரையடைந்து, முன்போலப் பல மாணவர்களுக்கு இயற்றமிழ் நூலும், வீட்டு நூலுங் கற்பித்துக்கொண்டு அத்தலத்தில் வசித்திருந்தனர்.

பின்பு, ஞானதேசிகர் தம்பாற் சரண்புகும் பக்குவசீடர்களுக்கு சித்தாந்தசாத்திரோபதேசஞ் செய்து கொண்டு திருவாவடுதுறையயன்னும் அத்திவ்விய திருப்பதியிலே வசிக்கு நாட்களில் ஓர் மார்கழி மாசத்து கேட்டை நக்ஷத்திரத்தில் சிற்றம்பலவர் திருவடி நீழலையடைந்தனர்.

இந்த ஞானதேசிகர், திருநந்திதேவர் திருவருளுபதேச மரபினராகிய பஞ்சாக்கரதேசிகோத்தமருக்கு, பதின்மூன்றாவது பின்றோன்றல் என்பதூஉம் கவிச்சக்கரவர்த்தியாகிய கச்சியப்ப சுவாமிகள், இந்த ஞான தேசிகர் பால் திருவருளுபதேசம்பெற்றவரென்பதூஉம், அச்சுவாமிகள் சிவஞானபோத திராவிடமாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞான சுவாமிகள் மாணவர்களில் முதன்மை பெற்றவரென்பதூஉம், அச்சுவாமிகளியற்றிய பேரூர் ஸ்தலபுராணக் கடவுள் வாழ்த்தும், கூறிய குரு தோத்திரப் பாவானும் அச்சுவாமிகள் பரிபூரண காலநிர்ணயந் தெளிவுற விளங்கும்படி சீரியர்கூறிய ஆசிரிய திருவிருத்தச் செய்யுளானும் இனிது புலப்படும்.

அவைவருமாறு :

பேரூர்த் தலபுராணக் கடவுள் வாழ்த்து

குருவணக்கம்

 

எண்சீர்க்கழி நெடில் ஆசிரியவிருத்தம்

 

அங்கணர்தங் கயிலைவரை நந்திநவின் றருளு

மருணூலை மொழிபெயர்த்த வாசிரியன் மரபிற்

றங்குதுறை சையினமச்சி வாயர்மறை ஞானர்

தயங்கியவம் பலவாண ருருத்திரகோ டியர்மா

மங்கலவே லப்பரிரு குமாரசா மிகண்மா சிலாமணியா

ரிராமலிங்கர் வயங்கிரு வேலப்ப

ரிங்கணுயர் திருச்சிற்றம் பலவரிரு டுமித்திட்

டெனையாளம் பலவாண ரிவர்களை யேத்தெடுப்பாம்.

 

கச்சியப்பசுவாமிகள் பரிபூரணகால நிர்ணயச்செய்யுள்

 

பதினான்கு சீர் கழி நெடில் ஆசிரிய விருத்தம்

 

ஏர்தரு சாலிவாகன சகாப்தமாயிரத் தெழுதசத்

தொருபத் திரண்டின்மேற் சாதா ரணவருடத்தி

னியைதரு சித்திரைத் திங்கள்

சார்தரு தெய்தி பத்தினோடொன்று தகுசெவ்வாய்

வாரம்பூ ருவத்திற் சத்தமி புனர்பூசத்திரு

நாளிற் றவலருங் கும்பலக் கினத்திற்

சீர்தரு துறைசை வாழ்சிவ ஞான தேவன்மா ணாக்கரின்

முதன்மை திகழ்ந்துள கச்சி யப்பமா முனிவன்

திருப்பெருங் காஞ்சியி லெய்தி

சேர்தரு மடியார் தமதகவிருளைத் தினகரன் முன்னிரு

ளென்ன திருந்துதன் னருளாலகற்றி

வீடுறுத்தி சிறந்த பூரணதசை யடைந்தான்.

 

பதினான்காவது சுப்பிரமணியதேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

சுத்த சித்த முற்றுருகித்

தொழும்பா யயாழுகுங் குழாங்கட்குப்

பெத்த முத்தி யிரண்டினிலும்

பிறழா மும்மைப் பொருளியலென்

றுத்தி யோடுந் தெளித்தருள்பாக்

கொளிசா றுறைசைக் கண்வாழும்

அத்தன் குருசுப் பிரமணிய

வமலன் கமலவடி போற்றி.

 

கந்தமலர்ச் சதுர்முகனுந் திருமாலுந்

தேடியின்னுங் காணற் கெட்டா

வந்தமுமா தியுங்கடந்த வொருபொருடென்

றுறைசைநகர்க் கரசாய்த் தொண்டர்

பந்தமலக் கட்டறுத்துப் பரபோகங்

காட்டவருட் படிவங் கொண்டு

வந்தருள்சுப் பிரமணிய குருசாமி

திருவடித்தா மரைகள் போற்றி.

 

ஞான தேசிகராகிய அம்பலவாணதேசிகர் சிவபரிபூரண முற்ற திருவருட் செயலினை அடியார்களிற் சிலர் திருத்தளிச் சேரிக்குச்சென்று துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் பால் விண்ணப்பஞ்செய்ய, அத்தேசிகசுவாமிகள் அதனைக்கேட்ட மாத்திரையில் பிரிவாற்றாது திருவுளம் வருந்திப் பின்பு அங்கு நின்றும் புறப்பட்டு திருவாவடுதுறைக்கு விரைவாக வந்தடைந்து, ஞானதேசிகர் பரிபூரணமுற்றருளிய ஞானசமாதியைத் தரிசித்து அருச்சனையாதிகள் அடைவே அன்போடியற்றி வழிபட்டுக் கொண்டு அங்குநின்றும் அரிதின் நீங்கித், திருக்கோயிலிற் சென்று சுவாமிதரிசனஞ்செய்து வெளியே வந்து திருமடத்திற் சென்று சிவப்பிரகாச விநாயகரையும் திருமாளிகைத் தேவரையும் ஞான நடராசப் பெருமானையும், ஆதீன பிரதமாசாரியராகிய பஞ்சாக்கர தேசிகரையும் தரிசித்து வழிபாடியற்றி ஒடுக்கத்திற்சென்று, தமது ஞானாசிரியசுவாமிகள் திருவடிக்கு அருச்சனையாதிகள் புரிந்து பணிந்து கொலுவீற்றிருந்து யாவருக்குங்குருதரிசனக் காட்சியளித்து விபூதிப் பிரசாதம் நல்கியருளினர்.

பின்பு ஞானதேசிகர், அங்கு தம்பால்வந்து சரண்புகும் பரிபக்குவர்களுக்குத் தீக்கையாதிகளுஞ் சித்தாந்த சாத்திரோபதேசமுஞ் செய்து வருவாராயினர்.

அக்காலத்திலே முன்புதொண்டை நாட்டிலே திருமாகறல் என்னுந் திருப்பதியில் அவதரித்து இளமைப்பருவத்தே துறவு பூணவிரும்பி திருவாவடுதுறையடைந்து தம்பால், சைவ சந்நியாசமும் மூவகை தீக்கையும் சித்தாந்த சாத்திரரோபதேசமும் பெற்றுத் தகைமைசான்று விளங்கிய கனகசபாபதித் தம்பிரானுக்கு ஓர் சுபதினத்தில் ஞானதேசிகர், ஆசாரியபிடேகமியற்றியருளினர்.

பின்பு, ஞானதேசிகர், துவிதீய ஆசிரியராகிய கனக சபாபதி தேசிகருக்குச் சீடர்களுக்குத் தீக்ஷை செய்யும் விதிகள் முதலியவற்றைத் தெளிவுற விளக்கிவருவாராயினர். இங்ஙனஞ் சிலபகல் சென்றபின்னர் ஞானதேசிகர், வடநாட்டிலுள்ள திவ்யஸ்தலங்களிற் சென்று சிவபெருமானைத் தரிசனஞ்செய்து வருதற்குத் திருவுளங் கொண்டு, திருவாவடுதுறையினின்றும் அரிதினீங்கி வழியிடையிற்பல தலங்களையுந்தரிசித்து சிதம்பரஞ் சென்று சிற்சபேசனைத் தரிசனஞ் செய்து செப்புதற்கரிய சிவானந்தத்திற் பெரிதுந்திளைத்தின் புற்றுத், தமது திருமடத்திற்குச் சென்று மெய்கண்ட சிவாசாரிய சுவாமிகள் பிரதிட்டாலயத்தினையடைந்து வழிபாடியற்றி, அங்கு சிலநாள் வசித்திருந்தனர். அப்பொழுது திருக்களாஞ்சேரிக்குங் கொற்றவங்குடிக்குஞ் சென்று மறைஞானசம்பந்த சிவாசாரியர், உமாபதி சிவாசாரியர், அருணமச்சிவாயதேசிகர், குருமூர்த்தங்கள் தரிசித்துப்பின்பு அங்குநின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பலதலங்களையுந் தரிசனஞ்செய்து திருவண்ணா மலையையடைந்து திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ்செய்து தமது திருமடஞ்சார்ந்து திரிதீய ஆசிரியராகிய சுவாமிநாதன் என்னும் பிள்ளைத் திருநாமமுடைய ஈசானதேசிக சுவாமிகள் குருமூர்த்தந் தரிசித்து அங்கு சிலநாள் வசித்திருந்து அங்கு நின்றுமரிதினீங்கித், திருக்கோவலூர் முதலிய ஸ்தலங்களை வணங்கித் திருவெண்ணெய்நல்லூர் அடைந்து திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ்செய்து அத்திருக்கோயிலில் மேல் பால் எழுந்தருளியிருக்கும் பொல்லாப் பிள்ளையாரென்று பெயர் வழங்கும் விநாயகப்பெருமானை வணங்கி வழிபாடியற்றி தமது திருமடத்திற்கெழுந்தருளி, மெய்யன் தம்பிரான் என்று மேதினிபோற்றும் மெய்ஞ்ஞான பானுவாகித் திருக்கோயில் கொண்டருளிய மெய்கண்ட சிவாசாரிய சுவாமிகள் விரைமலர்த் தாளினை பணிந்து, விளம்பரும் உழுவலன்புடன் வழிபாடியற்றி அங்கு சிலகாலம் வசித்திருந்தனர். அக்காலத்தில் தேசிகோத்தமராகிய மெய்கண்ட சிவாசாரிய சுவாமிமீது “”பூவேபொற் பூவின்மணமே” எனத் தொடங்கி பத்து விருத்தத்தால் ஓர் பாமாலை சாத்தியருளினர்.

பின்பு ஞானதேசிகர் துவிதீய ஆசிரியராகிய கனகசபாபதி தேசிக சுவாமிகளும், தம்பிரான் சுவாமிகளும், ஏனைய அடியவர்களும் உடன்வர அங்கு நின்றும் அரிதினீங்கித் திருத்துறையூருக்குச் சென்று திருக்கோயிலணைந்து, சுந்தரமூர்த்தி நாயனார்க்குத் தவநெறி தந்தருளிய தாணுவையும், பூங்கோதை நாயகியையுந் தரிசித்து, அத்தாணுவின் நேரே பூருவமுகமாக ஞானநிஷ்டை கூடியிருக்கும் அருணந்தி சிவாசாரிய சுவாமிகள் குருமூர்த்தத் திருக்கோயிலிற்சென்று வணங்கி வழிபாடியற்றி அங்கு தமது திருமடத்தில் சிலநாள் வசித்திருந்து அங்குநின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பற்பல தலங்களைத் தரிசித்துச் சிதம்பரத்தைச் சேர்ந்து சிற்சபேசர் தரிசனஞ் செய்து அங்கு நின்றும் அரிதினீங்கிச் சீகாழி முதலாகிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருமூவலூரை அடைந்து திருக்கோயிலிற் சென்று வழித்துணை நாயகர் மலரடி வணங்கி வழிபாடியற்றி, ஆதீன பிரதமாசாரிய சுவாமிகளாகிய நமசிவாய மூர்த்திகள் திருவவதாரஞ் செய்தருளிய கிருகமாகிய தமது திருமடத்தைச் சார்ந்து அம்மடாலயத்தின் வாசலில் வணங்கி உள்ளே சென்று கொலுவீற்றிருந்து சீடர்களுக்கு விபூதிப் பிரசாதம் நல்கி, அங்குநின்றும் புறப்பட்டு “”ஆவினறுங் கன்றுறையும் ஆவடுதுறையினை யணைந்து” கோமுத்தீசுவரரையும் அதுல்யகுஜாம்பிகையையும், திரவியத் தியாகரையும் தரிசனஞ்செய்து திருமூலதேவர் திருத்தாளிறைஞ்சிப் படரரசினைப் பணிந்து தமது திருமடத்தினுட் புகுவார்; அம்மடாலயத்தின் வடக்குவாசலின் மேல்பால் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவப்பிரகாச விநாயகப் பெருமானை வணங்கி உள்ளே சென்று திருமாளிகைத் தேவரையும், திருநமசிவாய தேசிகோத்தமரையும் தரிசனஞ்செய்து வழிபாடியற்றி, தமது ஒடுக்கத்திற்கு எழுந்தருளி கொலுவீற்றிருந்து யாவருக்கும் குருதரிசனக் காட்சி கொடுத்து விபூதிப் பிரசாதம் நல்கி வீற்றிருந்தருளினர்.

பின்பு சிலபகல் கழிந்து ஞானதேசிகர், துவிதீய ஆசிரியராகிய கனகசபாபதி தேசிக சுவாமிகளும், தம்பிரான் சுவாமிகளும், ஏனைய அடியவர்களும், பரிசனங்களும் உடன்வரத் திருவாவடுதுறையினின்றும் புறப்பட்டு  வழியிடையிற் பற்பல ஸ்தலங்களையுந் தரிசித்துச் சுசீந்திரத்தை அடைந்து, திருக்கோயிலிற் சென்று தாணுமாலயேசுரர் தரிசனஞ்செய்து தமது திருமடத்திற்சென்று ஆதீன பிரதமாசாரியராகிய நமசிவாய மூர்த்திகள் பிரதிட்டாலயத்தினை அடைந்து தரிசித்து, இரு குமாரசாமி தேசிகர் குருமூர்த்தங்கள் தரிசனைசெய்து அங்கு சிலநாள் வசித்திருந்து, அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்துக் கல்லிடைக்குறிச்சியின் பாங்கருள்ள திருத்தளிச்சேரியைச் சேர்ந்து திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ்செய்து, தமது திருமடத்தில் எழுந்தருளியிருந்து பரிபக்குவந் தேர்ந்து சீடர்களுக்குத் தீக்கையாதிகளுஞ் சித்தாந்த சாஸ்திரோபதேசமுஞ் செய்து வருவாராயினர்.

பின்பு சிலநாட்கழித்து, ஞானதேசிகர் துவிதீயாசிரியராகிய கனகசபாபதி தேசிக சுவாமிகளை அங்கமர்ந்து சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து வருமாறு செய்வித்துத் தாம் அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையிலுள்ள பல தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறை அடைந்து திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ்செய்து தமது திருமடத்திற்கு வந்து சிவப்பிரகாச விநாயகரையும், திருமாளிகைத் தேவரையும், திருநமசிவாய தேசிகோத்தமரையுந் தரிசித்து ஒடுக்கத்திற்சென்று யாவருக்கும் குருதரிசனக் காட்சி கொடுத்து அங்கு முன் போலத் தீக்கையாதிகள் செய்து வீற்றிருந்தருள்வாராயினர். இஃது இவ்வாறாக.

முன்பு ஞானதேசிகரது திருவருளாணையின் வண்ணம் திருத்தளிச்சேரியில் எழுந்தருளியிருக்குங் கனகசபாபதி தேசிகர் அங்கு பற்பல சீடர்களுக்குத் தீக்கையாதிகளுஞ் சித்தாந்த சாத்திரோபதேசமுஞ் செய்து வீற்றிருக்கும் நாட்களில் ஓர் தைமாதத்துக் கார்த்திகை நக்ஷத்திரத்திலே சிவபரிபூரண தசையை அடைந்தனர்.

அங்ஙனம் தேசிகசுவாமிகள் சிவபரிபூரணமுற்றருளுதலும் அடியார் சிலர் விரைவிலே திருவாவடுதுறையை வந்தடைந்து  ஞானதேசிகர் திருவடிகளை வணங்கி அதனை விண்ணப்பஞ் செய்ய அப்பொழுது ஞானதேசிகர் தாம் பெரிதும் திருவுளமிரங்கி அருளினர்.

பின்பு ஞானதேசிகர், பாண்டியவள நாட்டின் கண்ணுள்ள இராசவல்லிய புரத்திலே கார்காத்த வேளாளர் வருணத்திலே அவதரித்தவரும் தம்மடியார் பல்லோருள்ளுஞ் சிறந்தவருமாகிய சுப்பிரமணியத் தம்பிரானுக்கு ஓர் சுபதினத்தில் ஆசாரியாபிடேகஞ் செய்தருளினர்.

பின்பு சிலபகல் சென்று, ஞானதேசிகர் துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகளோடு சுசீந்திரத்திற்கு எழுந்தருளி அங்கு சிலநாள் வீற்றிருந்து தம் சீடர்களுக்கும் ஏனையோர்க்கும் திருவருள் பாலித்து பின் அங்கு நின்றும் புறப்பட்டு திருத்தளிச்சேரியை அடைந்து அவ்விடத்துஞ் சில நாள் எழுந்தருளியிருந்து, பின்பு துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிகரை அவ்விடத்தில் அமர்ந்தருளுமாறு பணித்துத் தாம் அங்குநின்றும் புறப்பட்டு வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவா வடுதுறையை அடைந்து, அங்கு தமது மடாலயத்தில் எழுந்தருளியிருந்து ஞானோபதேசஞ்செய்து வருவாராயினர்.

அக்காலத்தில் ஞானதேசிகர் பால் குருக்ஷேத்திர பரிபாலனத்திருத்தொண்டு புரிந்துவரும் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் சோழவளநாட்டின் கண்ணுள்ள மண்ணச்ச நல்லூரில் மன்னவரொப்ப வாழ்ந்திருந்த சந்திரசேகரம் பிள்ளையயன்பவருக்கு இருகண்மணியனைய இருந்தவப் புதல்வர்களான ஆளுடைய பிள்ளை, சொக்கலிங்கம்பிள்ளை என இருவரும் ஏனையோரும் உதவிய பெரும்பொருளைக் கொண்டு, ஞானதேசிகர் எழுந்தருளியிருக்குந் திவ்விய சினகரமாகிய ஒடுக்கத்தினை விசித்திரமான கற்பணியியற்றி, அதன் மேல்பாலில் அவ்விருவர் தம்முருவங்களையுஞ் சிலையிலமைத்து நிறுத்தியும், அவ்வொடுக்கத்திற் கணித்தாக ஈசான திக்கின் கண் ஞானதேசிகர் ஞானமா நடராஜப்பெருமான் பூசை புரிதற்கு நவமாகப் பூஜாமண்டபம் ஒன்றியற்றியும், பாகசாலையும், போசனசாலையும் அவ்வாறு குயிற்றியும், வேறு கற்றிருப்பணிகள் சிலவற்றை ஆங்காங்கமைத்தும், மடாலயத்தை மிக அணிபெறச் செய்து, ஞானதேசிகர் திருவருளைப் பூரணமாகப் பெற்று, நெடுங்காலம் குருவருட் பணிகுயிற்றி வீற்றிருந்து, அத்திருப்பதியிலே பரிதாபி வருடம் சித்திரை மாதத்து கார்த்திகை நக்ஷத்திரத்திலே குருசுப்பிரமணியர் குரைகழற் சரணிணைக்கு சேசயகுசும நீழலிற் குலவிவீற்றிருந்தனர். இஃதிங்ஙனமாக.

முன்பு, ஞானதேசிகர் திருவருளாணை மேற்கொண்டு சீடர்களுக்குத் தீக்கையாதிகளுஞ், சித்தாந்த சாத்திரோபதேசமுஞ் செய்துத் திருத்தளிச்சேரியில் எழுந்தருளியிருக்கும் துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகள், தமது ஞானாசிரிய சுவாமிகளைத் தரிசித்து நெடுங்காலமானமையால் தரிசிக்க அவாவுற்று அங்குநின்றும் புறப்பட்டு விரைவில் திருவாவடுதுறைக்கு வந்து, ஞானதேசிகரைத் தரிசித்துப் பேசுதற்கரிய பெருமகிழ்ச்சியயய்தி தினந்தோறுந் திருக்கோயிலிற் சென்று சுவாமிதரிசனஞ் செய்து கொண்டும், சிவப்பிரகாசவிநாயகர், திருமாளிகைத் தேவர், ஞான மூர்த்தியாகிய நமசிவாய தேசிகோத்தமர்,  தமது ஞானாசிரிய சுவாமிகள் தரிசனஞ் செய்து கொண்டும், சிலகாலம் அங்கு வீற்றிருந்து அத்திருப்பதியிலே ஓர் மாசிமாதத்து அவிட்ட நக்ஷத்திரத்திலே சிவபரிபூரணமுற்றனர்.

பின்பு, ஞானதேசிகர் ஓர்சுபதினத்தில் தமது திருக்கூட்டத்து அடியவர்களுள் சிறந்தவரும் தம்மால் மூவகைத் தீக்கையுஞ் சித்தாந்த சாத்திரோபதேசமும் பெற்றவரும் ஆகிய அம்பலவாணத் தம்பிரானுக்கு ஆசாரியாபிடேகஞ் செய்து அவரைத் தமக்கு துவிதீயாசிரியராகக் கொண்டு அத்தேசிக சுவாமிகளுடன் தாம் சிலகாலம் சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து வீற்றிருந்து பின் அத்திருப்பதியிலே, குரோதிவருடம், கார்த்திகை மாதத்து பதிமூன்றாந்திகதி கார்த்திகை நக்ஷத்திரத்திரத்திலே சிவபரிபூரணமுற்றருளினர்.

முன்பு திருவிடைமருதூரிலே சைவாசாரிய குலத்திலவதரித்து, வாய்மை, ஒழுக்கம், தவம், சீலம், வணக்கம், பொறுமை, அறிவடக்கம், தூய்மையாதிகளிற் சிறந்த துறவினராய் ஞான தேசிகர் பாலடைந்து திருவருளுபதேசம் பெற்றுக் கொண்டு யாத்திரையாகச் சென்னையிற் சென்று, அங்கு நெடுங்காலம் அநேகர்களுக்குக் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த போதகாசிரியராகிய ஆதீன வித்துவான் தாண்டவராயத் தம்பிரான் சுவாமிகள் ஞானதேசிகர் மீதியற்றிய ஆசிரியவிருத்தம்.

அவை வருமாறு :

இந்துசேர் சடையு மெழின்மழுப் படையு

மிலங்குமம் புலியத ளுடையுங்

சுந்தரக் குறியுங் கவின்றரு மறியுங் கரந்தொரு

மானிட வடிவாய்

வந்தருண் முதல்வ வடியனே னினதுமலரடி

கனவிலு மறவேன்

சுந்தர நிறைந்த வாவடு துறைவாழ்

சுப்பிர மணியசற் குருவே.   ( 1 )

 

ஆதியி னால்வர்க் காலநி ழற்க ணரும்பொரு

ளுணர்த்திட வமர்ந்தாய்

நீதிசேர் வாத வூரருக் குண்மை நிகழ்த்திடக்

குருந்தின் கீழிருந்தாய்

ஓதியை யயளியேற் குணர்த்து வானிங்க

ணுற்றனை யயன்றுள மகிழ்ந்தேன்

சோதிசேர் மாட வாவடு துறைவாழ்

சுப்பிர மணியசற் குருவே.   ( 2 )

 

பண்டுபாழ் மூல மலங்கரு மத்திற் பராவியேற்

கிச்சையைக் கொடுக்கக்

கண்டுநீ கருணை யாற்றனு வளித்தக் கருமமும்

பொசித்திடச் செய்து

விண்டுவும் வியக்கு முத்திதந் தருள விளங்குமிவ்

வுருக்கொடு வந்தாய்

தொண்டுமீ யோங்கு மாவடு துறைவாழ்

சுப்பிர மணியசற் குருவே.   ( 3 )

இருவினைப் பகுதி யனாதியி னிற்றற் கேதுவு

மிருண்மல மனாதி

மருவிய செயலு மற்றவை நீங்கும் வகைமையு

மிஃதென வடியேற்

கருளொடு தேற்றி யாண்டு பேரின்பத் தாழ்த்துநா

ளெந்தநாண் ஞான

சொருபனே நிலவு மாவடு துறைவாழ்

சுப்பிர மணியசற் குருவே.          ( 4 )

 

எத்தனை தேகமெடுத்தனன் மேனா ளிருவினைப்

பாலினுக் கீடாய்

அத்தனே நீயு மறிந்திலை கொல்லோ வாதலா

லினிபிறப் பாற்றேன்

வித்தக நினது திருவடிக் கன்பு மேவுறச்

செய்துவீ டளிப்பாய்

சுத்தர்கள் போற்று மாவடு துறைவாழ்

சுப்பிர மணியசற் குருவே.          ( 5 )

 

பவப்பிணி யாளனாகிய வெனக்குப் பரிவுகூர்ந்

துவமனொன் றில்லாத்

தவப்பெரு வடிவந் தரித்திவ ணுற்ற தயாளனாந்

தருமபண் டிதனீ

யுவப்பொடு பஞ்சாக் கரமெனு மருந்தைப் யூட்டியப்

பிணியயாழித் தருள்வாய்

சுவைப்பழப் பொழில்சூ ழாவடு துறைவாழ்

சுப்பிர மணியசற் குருவே.          ( 6 )

 

பேரிலா வடிவ மூரிலா தெங்கும் பிரிவற

வுறைபரம் பொருணீ

சீரிலாச் சிறியே னூர்பெய ருருவைச் சிதைத்திட

வவையயலாஞ் செறிந்தே

ஆரியனாய்வந் தருளிய பெருமைக் காற்றுகைம்

மாறுமொன் றுளதோ

தூரிய முழங்கு மாவடு துறைவாழ்

சுப்பிர மணியசற் குருவே.          ( 7 )

 

சமயமோ ராறுட் சைவமே முதன்மை சாற்றிய

கடவுளர் தம்முள்

உமையயாரு பாகத் தொருவனே முதன்மை யுற்றிடுங்

குரவர்க டம்முள்

அமைதரு ஞானா சாரிய னான வண்ணனீ

முதன்மையயன் றறிந்தேன்

சுமதியர் மருவு மாவடு துறைவாழ்

சுப்பிர மணியசற் குருவே.          ( 9 )

 

ஒன்றெனு மதமு மிரண்டெனு மதமு மொன்றிரண்

டென்றிடு மதமும்

அன்றென விலக்கி யனலுவெம் மையும்போ லமையுமத்

துவிதமே மிகவும்

நன்றென வுணர்ந்து நின்னடி நீழ னண்ணுமெய்

யடியரோ டியானுந்

துன்றுற வருள்வா யாவடு துறைவாழ்

சுப்பிர மணியசற் குருவே.          ( 10 )

 

நலமலி சுருதி நான்குநின் பெருமை நவிலுதற்

கரிதரி தென்றே

பலபல விதமா முறையிடு மென்னிற் பருமணி

கொழிக்குவா ரிதிசூழ்

உலகினின் னடியார் யாரினுங் கடையா வுழல்வுறு

மறிவிலேன் றனக்குச்

சொலவெளி தாமோ வாவடு துறைவாழ்

சுப்பிர மணியசற் குருவே.          ( 11 )

 

திருக்கயி லாய வருட்பரம் பரையிற் றிகழ்தரு

மெய்கண்ட தேவன்

வருக்க நற்சந்த திக்கொரு ஞான மணிவிளக்

கெனவொளிர் முதலே

உருக்க மினெஞ்ச வுணர்விலேன் றனக்கு முன்னருள்

கூடுநா ளுளதோ

சுருக்கமில் செல்வ வாவடு துறைவாழ்

சுப்பிர மணியசற் குருவே.          ( 12 )

 

பதினைந்தாவது அம்பலவாண தேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

ஆசிரிய விருத்தம்

 

சரியை முதலாந் தவங்கடமைச் சாதிப்

பவர்கட் குணவாதி

உரிமை யாக வுதவலின்மே லுயர்ந்த

வறமின் றென்றுணர

அரிய வன்ன தானமடி யவர்க்குப்

பரிந்து புரிதுறைசைப்

பெரிய குருவம் பலவாண பெருமா

னடியை முடிவைப்பாம்.

 

கட்டளைக் கலித்துறை

 

யானென தென்னுஞ் செருக்கொழி யானின் னெதிர்ப்படினவ்

வானென தென்னுமொண் கோமுத்தி யம்பல வாணபொதி

யூனென தென்னும் படியா னெழாதொழித் துன்னடிப்பூந்

தேனென தென்னும்படிபே ரருளென்று செய்குவையே.

 

புள்ளிருக்குவேளூர் என்னும் புண்ணியமாநகரில் அவதரித்துத் திருவாவடுதுறை ஆதீன பரம முதற்குரவராகிய நமசிவாய தேசிகோத்தமர் திருமரபில் பதினான்காவது பிற்றோன்றலாக எழுந்தருளியிருந்த சுப்பிரமணிய தேசிகரால் அருளுபதேசமும் ஆசாரியாபிடேகமும் பெற்றுத் துவிதீய ஆசிரியராக எழுந்தருளியிருக்கும் அம்பலவாண தேசிகர் தமது ஞானாசிரிய சுவாமிகள் திருவருளாணை மேற்கொண்டு திருவாவடுதுறையில் சீடர்களுக்குச் சித்தாந்த ஞானோபதேசஞ் செய்து வருவாராயினர்.

அங்ஙனஞ் சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து வரும் ஞானதேசிகர் பாண்டிய நாட்டின் கண்ணும், சேர நாட்டின் கண்ணுமுள்ள தமது சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்யத் திருவுளங் கொண்டு, அங்கு நின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டும், ஆங்காங்கு தம்மை நாடிவரும் அன்பர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து கொண்டும், சுசீந்திரம் அடைந்து திருக்கோயிலிற் சென்று தாணுமாலயேசுவரரை தரிசனஞ் செய்து, தமது ஈசான மடாலயத்திற் சென்று ஆதீன பிரதமாசாரியராகிய பஞ்சாக்கர தேசிகர் குரு மூர்த்தங்களை வணங்கி வழிபாடியற்றி அங்கு சிலபகல் சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து வீற்றிருந்து, அங்கு நின்றும் அரிதினீங்கிப் பொருநைநதியின் தென்கரையின் பாங்கருள்ள திருத்தளிச்சேரியையடைந்து திருக்கோயிலிற் சென்று மானேந்தியப்பரையும் வடிவாம்பிகையையும் தரிசித்துத் தமது திருமடத்திற்கெழுந்தருளி துவிதீய ஆசிரியராகிய கனகசபாபதி தேசிகர் குருமூர்த்தந் தரிசனஞ் செய்து, சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து கொண்டு சிலகாலம் அங்கு வீற்றிருந்தருளினர்.

அக்காலத்தில் ஞானதேசிகர் தமது திருமடத்திற் கல்வி பயிலும் மாணவர்களில் சிறந்தவரும், திருக்குற்றாலத் தலபுராணம் தமிழிலியற்றிய திரிகூட ராசப்ப கவிராயர் மரபினராகிய சுப்பிரமணியக் கவிராயரென்பவர் புத்திரரும், குற்றாலலிங்கமென்னும் பிள்ளைத் திருநாமமுடையவரும் தீவிரதர பக்குவமுடையவருமாகி விளங்கும் ஒரு புண்ணிய சீலரது கல்வி அறிவினாற்றலையும், குணாதிசயங்களையும், தூயமனத்தினையும், இளமைச் செவ்வியையும், ஆசிரிய இலக்கண உறுப்பமைதியையும், பிறவற்றையும் நன்காராய்ந்து அவரைத் தமக்குத் துவிதீய ஆசிரியராக நியமனஞ் செய்யத் திருவுளங்கொண்டு, அவருக்குச் சைவசந்நியாசங் கொடுத்து மூவகைத் தீக்கையுஞ் செய்து, ஓர் சுபதினத்தில் ஆசாரியாபிடேகமியற்றித் தமது ஞானாசிரிய சுவாமிகள் திருநாமத்தையே அவருக்குச் சிறப்பபிதானமாகச் சூட்டித் தமக்கு துவிதீய ஆசிரியராக வைத்தருளினர்.

பின்பு சிலபகல் சென்று, ஞானதேசிகர் திருவாவடுதுறைக் கெழுந்தருளத் திருவுளங்கொண்டு, துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகளோடு அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு, ஆளுடையார் கோயிலென வழங்கும் திருப்பெருந்துறையைச் சேர்ந்து, கோயிலிற்சென்று ஆன்மநாதரையும், யோகாம்பிகையையும், குருந்தமூல நாதரையும் அன்புருவாகிய மணிவாசகப் பெருமானையுந் தரிசித்து வணங்கி வந்து, தமது மடாலயத்தினை அடைந்து, பின் வேலப்பதேசிகர் குருமூர்த்தஞ் தரிசனஞ் செய்து அத்தலத்திற் சிலநாள் வசித்திருந்து, பின் அங்கு நின்றும் அரிதினீங்கி வழியிடையிலுள்ள பலதலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறையை அடைந்துதிருக்கோயிலிற் சென்று மாசிலாமணி ஈசுவரரையும், ஒப்பிலாமுலையம்மையையும், செம்பொற்றியாகரையும், திருமூல தேவரையும் தரிசித்துக் கொண்டு தமது திருமடத்திற்கெழுந்தருளி, மடத்தின் வடக்கு வாசலின் மேல்பால் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவப்பிரகாச விநாயகரைத் தரிசனஞ் செய்து, மடத்தினுட் சென்று,  திருமாளிகைத் தேவரையும் ஆதீனப் பிரதமாசாரியராகிய பஞ்சாக்கர மூர்த்தியையும் பணிந்து வழிபாடியற்றி, ஓடுக்கத்திற்கெழுந்தருளி யாவருக்குங் குருதரிசனக்காட்சியளித்து, மன்பதை யாவும் இன்புற ஞானோபதேசஞ்செய்து அங்கு வீற்றிருந்தருளினர்.

அங்ஙனம் ஞானதேசிகர் வீற்றிருந்தருளுநாளில் சென்னை மாநகரில் கல்விபயில்வித்துப் போதகாசிரியராக விளங்கும் பெருந்தகைமைவாய்ந்த திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தாண்டவராய தம்பிரான் சுவாமிகள், சென்னையினின்றும் புறப்பட்டுத் திருவாவடுதுறைக்கு வந்து ஞானதேசிகரைத் தரிசித்துத் திருவருட்பிரசாதம் பெற்றுவந்து துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகளைக் கண்டு வணங்கி மகிழ்வுற்று.

குற்றால லிங்கமெனக் கூறுமியற் பேர்கொண்

டுற்றா வடுதுறையு ளோங்கினையே ‡ கற்றார்தஞ்

செல்வமென வாழ்சுப் பிரமணிய தேசிகவென்

வல்வினைதீர்த் தாள்வாய் மகிழ்ந்து.

என, ஒருவெண்பாவினைப் பாடித் துதித்தனர்.

பின்பு ஞானதேசிகர், துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகளுக்குத் தமது ஆதீன வித்துவான் தாண்டவராய தம்பிரான் சுவாமிகளையும், சமஸ்கிருத வித்துவான்களில் தலைமை சார்ந்த அந்தணர் ஒருவரையுங்கொண்டு தென்மொழி வடமொழி பயில்விக்குமாறு செய்து, தாம் மெய்கண்ட சாத்திரமும், பண்டார சாத்திரமும் அடைவே உபதேசித்தருள்வாராயினர்.

இங்ஙனம் சிலவருடங்கழிதலும் ஞானதேசிகர், துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகளைப் பாண்டிய நாட்டிலும், சேரநாட்டிலுமுள்ள தமது சீடர்களுக்கு ஞானோபதேசஞ் செய்துவருமாறு பணித்தருள, அவ்வாறே துவிதீய ஆசிரிய சுவாமிகள் தமது ஞானாசிரிய சுவாமிகள் திருவருளாணை மேற்கொண்டு விடைபெற்று, பாண்டிய நாட்டையடைந்து கல்லிடைக் குறிச்சியின் ஓர் பாங்கருள்ள திருத்தளிச்சேரிக்குச் சென்று திருக்கோயிலையடைந்து சுவாமி தரிசனஞ்செய்து தமது திருமடத்தினைச் சார்ந்து துவிதீய கனகசபாபதி தேசிகர் குருமூர்த்தந் தரிசனஞ் செய்து அங்கமர்ந்து அந்நாட்டினர்க்குத் தீக்கையாதிகள் புரிந்து சித்தாந்த சாத்திரோபதேசமுஞ் செய்து வருவாராயினர்.

அக்காலத்தில், கச்சியப்ப சுவாமிகள் மாணாக்கர்களில் ஒருவராகிய கந்தப்பையர் குமாரர் விசாகப் பெருமாளையர், காஞ்சிபுரம் சபாபதி முதலியார், அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் திருவண்ணாமலை வீரபத்திரஐயர், ஆயுள்வேதபாஸ்கரராகிய சிதம்பரம் தளவரிசை சுப்பிரமணிய பண்டிதர், திருநீர்மலை கோபாலகிருஷ்ண கவிராஜசேகரர், யாழ்ப்பாணம் அளவையம்பதி கனகசபாபதிபிள்ளை, ஆதீன சீடவர்க்கத்தினரிலொருவராகிய சந்திரசேகர கவிராஜ பண்டிதர் முதலான சென்னை மாநகரத்துளுறையுஞ் செந்தமிழ்ப் புலவர்கள் தாம் ஆதீன மஹா வித்துவானாகிய தாண்டவராய தம்பிரான் சுவாமிகளுடன் திருத்தளிச்சேரியையடைந்து அங்கு நமசிவாய மூர்த்திகள் மகரத் தலைநாள் குருபூஜை மகோத்சவ சுபதினத்தில் தேசிக சுவாமிகளைத் தரிசித்து கழிபேருவகை யயய்தி தனித்தனியே கவிபாடித் துதித்தனர். பின்பு சிலநாள் தேசிகசுவாமிகள் அருகிருந்து சித்தாந்த நுண்பொருள் நன்காராய்ந்து மகிழ்வுற்றுத் தேசிகசுவாமிகள்பால் விடை பெற்றுக்கொண்டு அரிதினீங்கிச் சென்னைமாநகர்க்குச் சென்றனர்.

இங்ஙனமாகச் சிலவாண்டுகள் சென்றபின்னர் துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய சுவாமிகள் ஞானதேசிகரைத் தரிசிக்க மிகவும் விரும்பித் திருத்தளிச்சேரியையகன்று திருவாவடுதுறைக்கு வருங்காலையில் பொருநைநதியில் ஸ்நானஞ் செய்து நித்திய கன்மானுட்டான முதலியவை முடித்து திருவுருவமாமலையிற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைத் தரிசனஞ்செய்து வழிபாடியற்றி, அங்கு நின்றும் அரிதினீங்கித் திருநெல்வேலியையடைந்து அங்குத் திருக்கோயிலிற் சென்று வேணுவனலிங்கப் பெருமானையும், காந்திமதியம்மையையுந் தரிசித்துத் தாம்பிரசபையில் திருநடனம் புரியுஞ் சம்புவைத்தரிசித்து தமது ஈசான மடாலயத்திற் சென்று அங்கு சிலநாள் அமர்ந்திருந்தனர்.

அக்காலத்தில் அத்திருநகரின்கண் அரசசேவையில் அமர்ந்திருந்த சிரஸ்தார் வீரபத்திர பிள்ளையயன்பவர் தேசிக சுவாமிகளைத் தமது இல்லத்திற்கு எழுந்தருளுமாறு இயம்பரும் பேரன்போடு  வேண்டுதலும், தேசிக சுவாமிகள், அதற்குத் திருவுளம்பற்றி அங்கெழுந்தருளிக் குருதரிசனக் காட்சி கொடுத்தருளினர். அத்தருணத்தில் அவ்வன்பர் வெள்ளியினால் இயற்றிய பாதுகைகளிரண்டில் தாம் அரச சேவையிலணிந்து கொள்ளும் விசித்திரகோலம் இடது பாதுகையிலும் மற்றைய காலங்களில் தாம் அணிந்து கொள்ளும் சிவனடியார் திருக்கோலம் வலது பாதுகையிலும் பொறித்து அப்பாதுகைகளை திருவடிசாத்தி அருளும்படி தேசிக சுவாமிகளுக்கு அர்ப்பணஞ் செய்து வழிபட்டனர்.

பின்பு தேசிக சுவாமிகள் திருநெல்வேலியினின்றும் புறப்பட்டு வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ்செய்து தமது திருமடத்திற்கு எழுந்தருளி மடத்து வடக்கு வாசலிற் சிவப்பிரகாச விநாயகரைத் தரிசித்து உள்ளே சென்று திருமாளிகைத் தேவரையும், திருநமச்சிவாய தேசிகோத்தமரையும், ஞான நடராஜப் பெருமானையும் தரிசித்து ஒடுக்கத்திற் சென்று, ஞானதேசிகரைத் தரிசித்து விதிமுறையாகப் பூசனைபுரிந்து வழிபாடியற்றி அங்கமர்ந்தருளுவாராயினர்.

அங்ஙனம் துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகள், தமது ஞானதேசிகருடன் அங்கு அமருநாட்களில், திரிசிரபுரத்தில் அருந்தமிழ்ப் புலவராக விளங்கிய மீனாட்சி சுந்தரம்பிள்ளை என்பவர், திருவாவடுதுறையை அடைந்து, ஞானதேசிகரைத் தரிசித்து, அக்குருபரர்மீது தாமியற்றிய கலம்பகம் என்னும் பிரபந்தத்தை அரங்கேற்றினர். ஞான தேசிகர் திருவுளமகிழ்ந்து அவருக்குப் பரிசில் அளித்தருளினர். பின்பு அவர் ஞான தேசிகர்பால் விடைபெற்றுக் கொண்டு தமது நகர்க்குச் சென்றனர். அங்ஙனஞ் சென்ற கவிவாணராகிய அவர் சிலகாலங்கழித்து ஞானதேசிகர் பால் அருளுபதேசம் பெற்றுக்கொள்ள நினைந்து திருவாவடுதுறையை அடைந்து, ஞானதேசிகரைத் தரிசித்தனர். ஞானதேசிகர், அவருக்கு மூவகைத் தீக்கையுஞ் சித்தாந்த சாத்திரோபதேசமுஞ் செய்து தமது திருமடத்தில் வாசிக்கும் மாணவர்களுக்கு கருவி நூலென வழங்கும் தமிழ் இலக்கண முதலிய நூல்களைக் கற்பித்து வருமாறு ஆணை அளித்தருள அவர் அங்ஙனங் கல்வி பயில்வித்து அங்கு அமருவாராயினர்,

அங்ஙனங் கல்வி பயில்வித்து வருபவராகிய அவர் தமது ஞானதேசிகர்மீது பிள்ளைத் தமிழ் என்னும் பிரபந்தம் ஒன்றியற்றி ஞானதேசிகர் திருமுன்பு துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகளும், தம்பிரான் சுவாமிகளும் ஏனைய அடியவர்களுங் குழுமிய சபையில் அரங்கேற்றினர். அன்றியும் தமது ஞானதேசிகருக்கு முன்னிருந்த ஞானாசிரியர்கள் ஞான சமாதியுற்ற தலம், மதி, நாள் யாவருக்கும் என்றும் விளங்குமாறு குருபரம்பரை அகவல் ஒன்றியற்றினர்.

அவை வருமாறு :

 

திருவளர் கைலைச் சிலம்பில்வீற் றிருக்கு

மருவளர் கடுக்கை மாலிகைப் பெருமா

னருள்பெறு நந்தி யடிகடம் பான்மெய்ப்

பொருள் பெறு கருணைப் புகழ்ச்சனற் குமாரர்

மற்றவ ரருளுறீஇ வையகத் தியங்கிய            ( 5 )

 

நற்றவர் சத்திய ஞானதரி சனிக

ளவந்தெறு மன்னவ ரருளொருங் குற்றுப்

பவந்தெறு வாய்மைப் பரஞ்சோதி யடிக

ளத்தகு குரவ ரருளடைந் துயர்ந்த

வித்தகர் வெண்ணெய் மெய்கண்ட தேவ           (10)

 

ரிவர்முதற் குரவ ரியைந்ததிரு நாமந்

தவர் புகழ் சமாதித் தலமடை மதிநா

ளிவைமுறை யுரைப்பா மிசைத்தமெய் கண்டர்

சுவையமை வெண்ணெய் துலாமதி சோதி

தவலருங் கருணை தழையரு ணந்தியார்.         ( 15 )

கவலருந் துறையூர் கன்னிமதி பூரம்

படர்மறை ஞானசம் பந்தர்வண் டில்லை

வடகளாச் சேரி மடங்கன்மதி யுத்தரந்

திக்கொத் திறைஞ்சத் திகழுமா பதியார்

மெய்க்கொற் றவன்குடி மேடமதி யத்தம்   ( 20 )

 

வாய்ந்தவரு ணமச்சி வாயதே சிகர்மேல்

வேய்ந்தகொற் றவன்குடி வின்மதி யாதிரை

திண்ணிய சித்தர் சிவப்பிர காசர்

நண்ணிய தலமதி நாளவர்க் கில்லை

யளவா வருளுற் றவிர்நமச் சிவாயர் ( 25 )

 

வளவா வடுதுறை மகரமதி முதனா

ணலமலி தருமறை ஞானர்மே லுரைத்த

வலமலி துறைசை மகரமதி சோதி

வளம்பயி லம்பல வாணர் மேலெடுத்து

விளம்பிய துறைசை மேடமதி யவிட்ட            ( 30 )

 

மொருவா வருண்மலி யுருத்திர கோடிக

டிருவால வாய்விருச் சிகமதி யனுட

மணவிய வருள்வே லப்பர் திருப்பூ

வணநகர் விருச்சிக மதியுத்த ராடந்

தசமலி குமார சாமிகள் சுசீந்திரம்.          ( 35 )

 

வரமலி விருச்சிக மதியுத்த ராடந்

தரை சொல்பிற் குமார சாமிகள் சுசீந்திர

முரைமடங் கன்மதி யுத்தரட் டாதி

மருவுமெய்ஞ் ஞான மாசிலா மணியார்

வெருவில்வெண் காடு மேடமதி யுரோகனி        ( 40 )

 

யிராம லிங்கர்மு னிசைத்தகோ முத்தி

பராவு விருச்சிகம் படர்மதி யனுடந்

தாவில்வே லப்பர் சங்கர நயினார்

கோவில்வான் கன்னி குலாமதி மூலம்

பின்வே லப்பர் பெருந்துறை கோட்டிற்      ( 45 )

 

பொன்வேய் சேமதி பூரட்டாதி

யாய்புகழ்த் திருச்சிற் றலம்பல தேசிகர்

வேய்புகழ்த் துறைசை மிதுனமதி பரணி

யம்பல வாண ராவடு துறையே

நம்பலர் கொடுஞ்சிலை நகுமதி கேட்டை.          ( 50 )

 

வளமலி சுப்பிர மணிய தேசிக

ரளவரும் புகழ்திரு வாவடு துறையே

தெளிதர வொளிர்விருச் சிகமதி கார்த்திகை

வெளிதர வுரைத்தேன் வேணவா வானே.

 

அக்காலத்தில், சென்னைமாநகருக்குச் செல்லும்பொருட்டு யாழ்ப்பாணத்தினின்றும் வந்த ஆறுமுகம் பிள்ளையயன்பவர் திருவாவடுதுறையை யடைந்து ஞானதேசிகரைத் தரிசித்தனர். அப்பொழுது ஞான தேசிகர், அவரது கல்வியறிவாற்றலையும், பிறநற் குணநற்செய்கைகளையுங்கண்டு பெரிதும் மகிழ்ந்து கட்டளையிட்டருளிய வண்ணம் அவர் அங்கு சிலநாளமர்ந்திருந்தனர். அந்நாளில் அவர் ஞானதேசிகரிடத்துப் பத்தாந்திருமுறையாகிய திருமந்திரத்துள் ஆங்காங்குப் பல திருப்பாசுரங்களில் தமக்குளவாகிய ஐயப்பாட்டினைத் தெரிவித்து அதனுண்பொருள் ஐயமறத்தெளித்து கொண்டனர். அன்றியும், சைவ சித்தாந்த சாத்திரங்களின் நுண்பொருள்களை நாடோறும் ஞானதேசிகர் அருகிருந்து கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து வருவாராயினர்.

அக்காலத்து ஞானதேசிகர் திருவருளாணைமேற்கொண்டு  அவ்வாறுமுகம்பிள்ளை யயன்பவர், ஞானதேசிகர் திருமுன்பு துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகளும், தம்பிரான் சுவாமிகளும் ஏனைய அடியவர்களும், தென்மொழி வடமொழிகளிற்றேர்ந்த புலமைவாய்ந்த பண்டிதர்களும், பிறருங்குழுமிய சபையில் அமர்ந்து பிரசங்கஞ்செய்வாராயினர். அப்பொழுது அவர் செய்த பிரசங்கம் வேதசிவாகமங்களிலே பிரதிபாதிக்கப்படும் பதிபசுபாசமென்னுந் திரிபதார்த்தங்களை ஆராய்தலில் அணுத்துணையேனும் அவாநிகழப்பெறாத உலகர் தாமும் அவற்றினை ஆராய்தற்கண் பேரவாவுற்று முயலுமாறு அத்திரிபதார்த்தங்களின் உண்மையும், அவற்றின் இலக்கணமும், பிறவும் இலகுவில் விளங்க உணர்த்துவதாயும் சுருங்கச்சொல்லல் முதலாகிய பத்தழகென்னுந் திவ்விய இலக்கணஞ் செறிந்த செந்தமிழ்வசனமாயும், இலக்கணவமைதிக்கு ஒரு சிறிதும்மாறுபாடில்லாததாயும் தருக்கசம்பிரதாய நிறைந்ததாயும், பிறரொருவரானுஞ் செய்தற்கரியதாயும், கடவுட்பத்தியுடையாரை மாத்திரமன்றி அஃதில்லாரையும் மனமுருகச் செய்து கண்களினின்றும் அருவிபோல ஆநந்தநீர்சொரியப் பண்ணுவதாயும், தேருந்தோறுமினிதாம் தமிழென்றபடி கேட்குந்தோறுந் தெவிட்டாததாயுமிருந்தமையால் ஞானதேசிகர், அவரது வாக்குவல்லபத்தை நோக்கி ஆச்சரியமும் பெரு மகிழ்ச்சியுங்கொண்டு, அவர்க்குரிய இயற்பெயருக்குப் பின் நாவலரென்னும் சிறப்புப்பெயரைச் சூட்டியருளினர். அங்ஙனம் ஞானதேசிகர், திருவாய் மலர்ந்தருளியவாறே அவையகத்துள்ளார் யாவரும் மகிழ்வுமீதுர அக்காரணச் சிறப்புப் பெயரை விதந்தோதினர். பின்பு ஆறுமுகநாவலர், தாம் கால நிகழ்ச்சிக்கேற்ப எவர்க்கும் பயன்படும் வண்ணம் பல அரிய வி­யங்களை எடுத்து யாவரும் களிப்பெய்துமாறு பிரசங்கஞ் செய்து கொண்டு சிலநாள் அங்கு வசித்திருந்து பின் ஞானதேசிகர் பால் விடைபெற்றுச் சென்றனர்.

பின்பு ஞானதேசிகர், சிதம்பரம் முதலாகிய சிவ க்ஷேத்திரங்களைத் தரிசிக்கத் திருவுளங் கொண்டு துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகளோடு திருவாவடுதுறையினின்றும் அரிதினீங்கி வழியிடையிற் சில திவ்விய ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருமூவலூரிற் சென்று திருக்கோயிலைச் சார்ந்து தரிசித்துத் தமது ஆதீன முதற்குரவராகிய நமச்சிவாய மூர்த்திகள் திருவவதாரஞ் செய்தருளிய திவ்விய கிருகமாகிய திருமடத்தை யடைந்து, திருவாயிலின் முன்பு, நமஸ்கரித்து எழுந்து உள்ளே சென்று ஆசனத்தமர்ந்து யாவருக்குங் குருதரிசனக் காட்சி அளித்தருளினர். பின்பு அங்கு நின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்துச் செல்லும்பொழுது, வைத்தீசுவரன் கோயிலென வழங்கும் புள்ளிருக்குவேளூரிற் கோயிற் கட்டளைப்பணி புரிந்துவரும் தருமபுர ஆதீனத்துச் சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகளும் அந்நகர வாசிகளுமாகிய சிவநேயர்களும் எதிர்கொண்டு அழைக்கத் தாம் அப்பதியிற் சென்று திருக்கோயிலுக்கு எழுந்தருளி, வைத்தியநாதரையும், தையனாயகியாரையும், முத்துக் குமாரசுவாமியையும் தரிசித்துத் தமது மடாலயத்தை அடைந்தனர். அக்கோயிற்கட்டளை சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள், மாகேசுர பூசை முதலானவை சிறப்புறச் செய்து அங்கு வழிபட, தாம் திருப்பவனிகொண்டு யாவருக்குங் குருதரிசனக் காட்சி அளித்தருளினர். பின் அங்குநின்றும் புறப்பட்டு வழியிடையிற் பல தலங்களையுந் தரிசனஞ் செய்துகொண்டு சிதம்பரத்திற்கு எழுந்தருளினர்.

அங்கு ஞானதேசிகர், சிற்பரவியோமமாகுந் திருக்கோயிலுக்கு எழுந்தருளி ஞான நடராசப் பெருமானைத் தரிசித்து அங்கு நின்றும் அரிதினீங்கிச் சந்தானகுரவர்களெண்மரில் ஒருவராகிய உமாபதி சிவாசாரியசுவாமிகள் திருவவதாரஞ் செய்தருளிய கிருகமாகிய தமது மடாலயத்தினைச் சார்ந்து அங்கு மெய்கண்ட சிவாசாரிய சுவாமிகள் பிரதிட்டாலயத்தை அணைந்து பணிந்து வழிபட்டுக் கொண்டு தினந்தோறும் திருக்கோயிலிற் சென்று சிற்சபேசனைத் தரிசனஞ்செய்தும், திருக்களாஞ்சேரியிலும், கொற்றவன்குடியிலுஞ் சென்று மறைஞானசம்பந்த சிவாசாரியர், உமாபதி சிவாசாரியர், அருணமச்சிவாயர், குரு மூர்த்தங்கள் தரிசித்தும் அங்கு சிலநாள் வசித்திருந்தனர். அக்காலத்து நிகழும் பிரபவ வருடம் ஆனி மாதம் ஆருத்திரா தரிசன புண்ணிய சுபதினத்தில் ஞானநடராசப் பெருமானுக்கு மகரகண்டிகை சாத்துவித்து களி கூர்ந்தின்புற்றனர்.

அன்றியும், அப்பதியின் கண்ணுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை ஸ்தாபகராகிய ஆறுமுக நாவலரும், ஏனைய சைவ நேயர்களும் மாகேசுர பூசையியற்றி வழிபடத் தாம் பவனி கொண்டு யாவருக்குங் குருதரிசனக் காட்சியளித்தனர்.

பின்பு ஞானதேசிகர், அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையிற் பலதலங்களைத் தரிசித்துக் கொண்டு திருத்துறையூருக்கெழுந்தருளித் திருக்கோயிலெய்திச் சிவபிரானைத் தரிசித்துவந்து, அருணந்தி சிவாசாரியர் குருமூர்த்தந்தரிசித்து, அங்கு சிலநாள் வசித்திருந்து, அரிதினீங்கித் திருவெண்ணெய் நல்லூருக்கெழுந்தருளி அருட்டுறையயன்னுஞ் சிவாலயத்தை யடைந்து தடுத்தாட்கொண்ட நாதரையும், வேற்கண்ணி யம்மையையும், பொல்லாப்பிள்ளையாரையும் வணங்கி வழிபாடியற்றித் தமது திருமடத்தை யடைந்து, சந்தானகுரவர்களெண்மரிலொருவராகிய மெய்கண்ட சிவாசாரிய சுவாமிகள் குருமூர்த்தந்தரிசித்து வழிபட்டு அங்கு சிலநாள் வசித்திருந்து அங்கு நின்றுமரிதினீங்கித் திருவண்ணாமலைக்கு எழுந்தருளும் போது வழியிடையில் வேட்டவலம் என்னும் நகரில் குறுநில மன்னராக வீற்றிருக்குஞ் சர்க்கரைப் பண்டாரி யயன்பவர் ஞானதேசிகர் வருகையைக் கேள்வியுற்று எதிர்கொண்டு தமது நகருக்கெழுந்தருளுமாறு வேண்டினர். ஞானதேசிகர், அவர் வேண்டுகோளுக்கியைந்து அங்கு எழுந்தருளி மாகேசுரபூசை முதலானவை அப்பண்டாரியார் மிகச்சிறப்போடியற்றத்தாம் அங்குபவனிகொண்டு குருதரிசனக் காட்சி யளித்தருளினர்.

பின்பு ஞானதேசிகர், அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையிற் சில திவ்விய தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவண்ணாமலையை யடைந்து, திருக்கோயிலிற்சென்று அருணாசலேஸ்வரரையும், உண்ணாமுலையம்மையையும் உழுவலன்போடிறைஞ்சித் தமது திருமடத்தை யடைந்து திரிதீய ஆசிரியராகிய சுவாமி நாததேசிகரென்று பெயர் வழங்கும் ஈசானதேசிகர் குருமூர்த்தந்தரிசித்து அங்கு சிலநாள் வசித்திருந்தனர்.

பின்பு ஞானதேசிகர், திருவண்ணாமலையினின்றும் அரிதினீங்கித், திருவெண்ணெய் நல்லூரையணைந்து திருக்கோயிலிற் சென்று சுவாமிதரிசனஞ்செய்து தமது திருமடத்தைச்சார்ந்து மெய்கண்ட சிவாசாரிய சுவாமிகள் திருக்கோயில் புதுப்பித்துக் கும்பாபிடேகமியற்றி வேண்டுவன பிறவுமமைத்து சிலபகல் அங்கு தங்கியிருந்து, பின் அங்குநின்றும் பிரியாவிடைபெற்று அரிதினீங்கி வழியிடையிற் பலதலங்களைத் தரிசித்துக்கொண்டு கங்கை கொண்ட சோழேச்சுரத்தை யடைந்து திருக்கோயிலை யணைந்து, சுவாமி தரிசனஞ்செய்து அப்பதியிலெழுந்தருளியிருந்தனர்.

அதனைக்கேள்வியுற்ற, தருமபுரவாதீனத்துக் காசிமடாலயபதியாகிய இராமலிங்க சுவாமிகள் அங்கு வந்து ஞானதேசிகரைக் கண்டு வணங்கித் தமது வாசஸ்தானமாகிய திருப்பனந்தாள் என்னுந் திவ்விய ஸ்தலத்திற்கு எழுந்தருளுமாறு வேண்டி விண்ணப்பஞ்செய்ய, ஞானதேசிகர், திருவருள் கூர்ந்து அதற்கியைந்தருள அச்சுவாமிகள், பலவகையான அதிசயக் காட்சியுடன் ஞானதேசிகரை அழைத்துவர அத்தேசிகசுவாமிகள் அத்திருநகரை அடைந்து திருக்கோயிலிற்சென்று சடையப்பரையும், பெரிய நாயகி அம்மையையுந் தரிசித்துக் காசி மடத்திற்கு எழுந்தருளி அவ்விராமலிங்க சுவாமிகள் மாகேசுரபூசை முதலானவை சிறப்புறச்செய்ய, ஞானதேசிகர் திருவருள் கூர்ந்து அவருக்கு விபூதிப் பிரசாதம் நல்கி அங்கு நின்றும் புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்து, திருக்கோயிலிற் சென்று சிவபிரானைத் தரிசித்துத் தமது திருமடத்திற்கு எழுந்தருளி சிவப்பிரகாச விநாயகரையும், திருமாளிகைத்தேவரையும், ஆதீன பிரதமாசாரியராகிய பஞ்சாக்கரமூர்த்தியையும் தரிசனம் செய்து, ஒடுக்கத்திற்சென்று யாவருக்குஞ் குருதரிசனக் காட்சி நல்கி அங்கமர்ந்தருளினர்.

பின்பு சிலகாலங்கழித்து ஞானதேசிகர் திருவிராமேச்சுரத்திற்கு எழுந்தருளத் திருவுளங்கொண்டு, ஓர் சுபதினத்தில் ஆவடுதுறையினின்றும் அரிதினீங்கித் துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகளும், தம்பிரான் சுவாமிகளும், ஏனைய அடியவர்களும் உடன்வரச்சென்று வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருவிராமேச்சுரத்தை யடைந்து, அங்கு தமது திருமடத்தில் எழுந்தருளி இருந்து கொண்டு தினந்தோறும் திருக்கோயிலிற்சென்று இராமநாதரையும், பருவதவர்த்தனி அம்மையையும், பணிந்தேத்தி, அத்திவ்விய தலத்தில் சிலநாள் வசித்திருந்து, அங்கு நின்றும் புறப்பட்டுத் திருவுத்தரகோசமங்கை, திருவாடானை முதலாகிய தலங்களைத் தரிசித்துச்சென்று திருவாவடுதுறையை யடைந்து அடியவர்களுக்கு அருளுபதேசஞ் செய்து கொண்டு அங்கமர்ந்தருளினர்.

அங்ஙனம் அடியவர்களுக்கு அருளுபதேசஞ் செய்து கொண்டு திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் ஞானதேசிகர், சிலகாலம் சென்று ஆளுடையார் கோயிலெனப் பெயர் வழங்கும் திருப்பெருந்துறைக்கு எழுந்தருளத் திருவுளங்கொண்டு, துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகளும், தம்பிரான் சுவாமிகளும், ஏனைய அடியவர்களும் உடன் வர அங்கு நின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு, திருப்பெருந்துறையைச் சேர்ந்து அங்கு தினந்தோறும் திருக்கோயிலிற் சென்று ஆத்மநாதரையும், யோகாம்பிகையையும், குருந்த மூல நாதரையும், மணிவாசகப் பெருமானையுந் தரிசித்துக்கொண்டு சிலநாள் தமது திருமடத்தில் வசித்திருந்தனர்.

அப்பொழுது துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகள், தாம் பாண்டிய நாட்டின் கண்ணுஞ், சேரநாட்டின் கண்ணுஞ் சென்று, சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து நெடுங்காலமானதை திருவுளத்தெண்ணி, ஞானதேசிகருக்குத் தமது கருத்தைத் தெரிவிக்க, ஞான தேசிகர், தமது வழித் தோன்றலாகிய தேசிக சுவாமிகள் அக்காலத்துத் தம்மை பிரிந்து  செல்வதற்கண் சிறிதும் திருவுளமிசையாதிருப்பவும், பின் ஒருவாறிசைந்து விடையளிப்ப, தேசிகசுவாமிகள், அத்திருப்பதினின்றும் அரிதினீங்கித் திருத்தளிச்சேரிக்குத் செல்வாராயினர்.

பின்பு சில பகல்சென்று ஞானதேசிகர், திருவாவடுதுறைக்கெழுந்தருளத் திருவுளங்கொண்டு, திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ்செய்து தமது திருமடத்தை அடைந்து, பின் வேலப்ப தேசிகர் குருமூர்த்தந் தரிசனஞ்செய்து அனுக்ஞை பெற்று அங்குநின்றும் அரிதினீங்கி, வழியிடையிற் பல தலங்களையுந் தரிசித்துக்கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, திருக்கோயிலிற் சென்று மாசிலாமணி ஈசுவரரையும், ஒப்பிலாமுலையம்மையையும், சொர்ணத் தியாகரையும், திருமூலதேவரையுந் தரிசித்து, படரரசினைப் பணிந்து, தமது திருமடத்தை அடைந்து, சிவப்பிரகாச விநாயகரையும் திருமாளிகைத் தேவரையும், ஆதீன பரம முதற்குரவராகிய பஞ்சாக்கர மூர்த்தியையுந் தரிசித்து வழிபாடியற்றி, அடியவர்களுக்கு அருளுபதேசஞ் செய்து கொண்டு சிலநாள் அங்கமர்ந்தருளினர். அந்நாட்களில் ஞானதேசிகர் தாம் பரிபூரணதசையை அடையுங்காலம் அணித்தாதலைத் திருவுளத்தில் தேர்ந்து அதனை துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகளுக்கு உணர்த்துமாறு நினைவுற்று, அப்பொழுதே திருமுகம் அனுப்பியருளினர். பின் சின்னாட்களுள் ஞானதேசிகர் திருவாவடுதுறை என்னும் அத்திருப்பதியிலே, சுக்கிலவருடம் ஆனிமாதம் பூர நக்ஷத்திரத்திலே சிவ பரிபூரணமுற்றருளினர்.

முன்பு ஞானதேசிகர் அனுக்ஞைபெற்று திருத்தளிச்சேரிக்கு எழுந்தருளும் துவிதீய ஆசிரியராகிய சுப்பிரமணிய தேசிக சுவாமிகள், வழியிடையில் ஆங்காங்கு பல அன்பர்கள் வழிபட்டேத்தஅவர்க்கெல்லாம் இன்னருள் வழங்கிச் சென்று, மதுரைமாநகரை அடைந்து திருக்கோயிலிற் சென்று ஆலவாயடிகளையும் அங்கயற்கண்ணம்மையையுந் தரிசித்து வழிபட்டேத்திவந்தனர். பின்பு தேசிகசுவாமிகள் மாகேசுரபூசை முதலானவை அன்பர்கள் மிகச் சிறப்புறவியற்றத் தாம் அன்றிரவு பவனிகொண்டு யாவருக்குங் குருதரிசனக் காட்சிகொடுத்து விபூதிப் பிரசாதம் நல்கியிருக்கும் அமையத்தில், ஞானதேசிகர் கட்டளையிட்டருளிய அத்திருமுகம் பெற்று உடனே அங்கு நின்றும் புறப்பட்டுத் திருவாவடுதுறைக்கெழுந்தருளி வருவாராயினர். அங்ஙனம் வரும் வழியிடையில் ஞானதேசிகர் சிவபரிபூரணமுற்றருளிய திருவருட் செய்தியை அடியார் சிலர் வந்து தேசிக சுவாமிகளிடத்து வணங்கி விண்ணப்பஞ் செய்தனர். அப்பொழுது தேசிக சுவாமிகள் பெரிதும் திருவுளம் வருந்தி விரைவிலே திருவாவடுதுறைக்கு எழுந்தருளி தமது சற்குருபரர் ஞான சமாதியைச் சார்ந்து அழலிடைப்பட்ட மெழுகென உழுவலன்பினால் உள்ளம் உருகக் கண்களினின்றும் நீரருவிபாய, படிமிசை வீழ்ந்து பணிந்து வலம் வந்து அங்கு பூசனையியற்றி வழிபட்டுக்கொண்டு, திருக்கோயிலை அடைந்து சுவாமி தரிசனஞ் செய்து தமது மடாலயத்தைச் சார்ந்து, மடத்தின் வடக்குவாயிலின் மேல் பால் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவப்பிரகாச விநாயகரைத் தரிசித்து உள்ளேசென்று, திருமாளிகைத் தேவரையும், திருநமச்சிவாய தேசிகோத்தமரையும், ஞானநடராசப் பெருமானையும் தரிசித்து, ஞானதேசிகர் தம் ஒடுக்கத்திலெய்தி அங்கு பீடத்தின்கண் எழுந்தருளச் செய்திருந்த ஞானதேசிகர் திருவடிகளைப் பூசனைபுரிந்து யாவர்க்கும் விபூதிப் பிரசாதம் நல்கி தமது ஒடுக்கத்திற்கு எழுந்தருளி அங்கமர்ந்தருளினர்.

பின்பு தேசிக சுவாமிகள், ஞானதேசிகர் பரிபூரணமுற்றருளிய நற்றினமுதல் பத்து தினம் வரை குருபூசை மாகேசுரபூசை சிறப்புறவியற்றி பதினோராந் தினத்தில் மாகேசுர பூசையியற்றி அற்றை நாளிரவில் பவனிகொண்டருளி பூர்வாசிரியர் பொற்பீடத்தமர்ந்து யாவருக்குங் குருதரிசனக்காட்சி அளித்தருளினர்.

இந்த ஞானதேசிகர், திருநந்திதேவர் அருளுபதேசமரபில் இருபத்தைந்தாவது பிற்றோன்றல் என்பதூஉம், இத்தேசிகோத்தமர்பால் அடைந்து திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவர் மூவகைத்தீக்ஷையும், சித்தாந்த சாத்திரோபதேசமும் பெற்றனர் என்பதூஉம், அப்பிள்ளையவர்கள் தமது ஞானாசாரிய சுவாமிகள் மீது இயற்றிய பிரபந்தங்களானும் அவர்களியற்றிய அநேக ஸ்தல புராணங்களுட் கூறிய பாயிரத்துள் விளங்கும் குரு தோத்திரங்களானும் இனிது புலப்படும். அவை வருமாறு:

Menu Title