திருவாவடுதுறை ஆதீனம்

முதல் பத்து குருக்கள் சரித்திரம்

ஆதீனப் பிரதம பரமாசாரியார் ஸ்ரீ நமச்சிவாயதேசிகர் சரித்திரம்

( திருவாவடுதுறை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீ நமசிவாயமூர்த்திகள் வரலாறு )

 

கயிலாய பரம்பரையிற் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணெய்

பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பாநு வாகிக்

குயிலாரும் பொழிற்றிருவா  வடுதுறை  வாழ்  குருநமச்சி  வாய  தேவன்

சயிலாதி  மரபுடையோன்  றிரு  மரபு  நீடூழி  தழைக  மாதோ.

எனவரும் திருவின்னம்பர் திருக்குறுந்தொகை முதல்செய்யுளில்  “”என்னிலுமினியான்”  என்னுந்  திருவாக்குப் பற்றியும் அறிக.

இருதய நாப்ப  ணஞ்செழுத்  துருவி

னிறைவனை  யுயிர்க்  கொலை செயாமை,

அருள்பொறி  யடக்கல்  பொறைதவம்  வாய்மை

யன்பறி  வென்னுமெண்  மலர்கொண்,

டொருமையயா  டருச்சித்  திடுகவென்  றடியார்க்

கொள்ளிய  தீக்கைசெய்  துணர்த்தத்,

திருவமர்  துறைசை  யுறையருட்  குருவாந்

திருநமச்  சிவாயர்தாள்  போற்றி.

திருக்கயிலாயமலையில் எழுந்தருளியிருக்கும் சீகண்டபரம சிவன்பால் திருவருளுபதேசம் பெற்ற திருநந்திதேவர் அருளுபதேச மரபில் பத்தாவது பிற்றோன்றலாய் விளங்கி வீற்றிருக்கும் சித்தர் சிவப்பிரகாச தேசிகர் திருவருளுபதேசம்பெற்ற நமச்சிவாய தேசிகர், திருவாவடுதுறையில் எழுந்தருளியிருந்து கொண்டு, தமது ஆசிரிய சுவாமிகள் திருவருளாணை மேற்கொண்டு அழகிய திருச்சிற்றம்பலவுடையவரையும் அம்பலவாணரையும், தமது ஆன்மார்த்த வைத்தியநாதத்தம்பிரானையும், நாடோறுஞ் சிவாகமவிதி தவறாமல்  பூசனைபுரிந்துகொண்டு, தமது ஆசிரியசுவாமிகள் வகுத்த திருவறையில் அமர்ந்து, சிவாகமாந்தமான சித்தாந்த ஞானோப தேசஞ்செய்து வருவாராயினர்.

அக்காலத்தில் ஓர்நாள் ஸ்ரீகந்தமரபில் வாமமுனி சந்ததியில் எழுந்தருளிய ஆசிரியர் சிவாக்கிரயோகிகள், வேதாரணியத்தில் எழுந்தருளியிருக்கும் சித்தர்சிவப்பிரகாசதேசிகர் திருவருளுபதேசம் பெற்ற துறைசை நமச்சிவாயதேசிகரது மகிமையைக் கேள்வியுற்றுச் சூரியனார்கோயிலினின்றும் புறப்பட்டுத் திருவாவடுதுறைக் கெழுந்தருளி வந்தனர்.  அப்போது அங்குத்திருவீதியில் பிக்ஷை கொள்ளுதற்குச் சென்றிருந்த அடியவர்கள் அவ்வாசிரிய சுவாமிகளைக் கண்ணுற்ற மாத்திரத்தில், தாம் கொண்டுவந்திருந்த பிக்ஷாபாத்திரங்களைப் புறத்திண்ணை யயான்றினில் வைத்து விட்டு, வேகமாக அவ்வாசிரிய சுவாமிகள் திருமுன்சென்று பூமியில் வீழ்ந்து நமஸ்கரித்து நிற்ப, அக்குருபரர் புன்னகைகொண்டு அவர்கட்கு தண்ணருள் பாலித்துச் சென்று திருக்கோயிலுக் கெழுந்தருளி, மாசிலாமணியீசுவரரையும், ஒப்பிலா முலையம்மையையும், செம்பொற்றியாகரையும், திருமூலதேவரையும், தெரிசனஞ்செய்து சித்தர்திருமடத்தின் வடக்குவாசலிற்சென்று அவ்வாசலின் மேல்பால்கோயில் கொண்டெழுந் தருளியிருக்குஞ் சிவப்பிரகாச விநாயகரைத் தரிசித்து, மடத்தினுட்சென்று, திருமாளிகைத் தேவர் குருமூர்த்தம்தரிசித்து வருஞ்சமயத்தில் ஞான தேசிகராகிய நமச்சிவாய தேசிகர், ஆசிரியர் சிவாக்கிரயோகிகளை ஆவலோடெதிர் கொண்டழைத்து மீஒடுக்கத்திற்சென்று இருவரும் ஆசனத்தமர்ந்து அளவளாவியிருந்தனர்.

அப்பொழுது ஆசிரியர் சிவாக்கிரயோகிகள், ஞான தேசிகராகிய நமச்சிவாய மூர்த்தியை நோக்கி, இவ்விடத்துப் பணி செய்து வரும் அடியவர்கட்கு இன்னும் ஆசாராநுட்டானங்கள் முற்றக் கைவரப்பெற்றிலர்  போலும் எனக் கூறினர்.  அதனைக் கேட்ட ஞானதேசிகர் அது எதனாலென வினாவ ;  அதற்கு அவ்வாசிரிய சுவாமிகள் வீதியில் அடியவர்கள்பால் நிகழ்ந்த செயலைத் திருவாய் மலர்ந்தருளினர்.

அதுபோழ்தில் தம் அடியவர் மாட்டுத் திருவுளமிரங்கி, இவர்கள் அவ்விடத்தில் தங்கையி லுள்ளவை இன்னவை யயனக் கருத்திற்றோன்றப் பெறாதவராய்க் கடிதின் முன்வந்து சுவாமிகள் சரண்பணிந்திலரே!  அங்ஙனம் பணியாமையாற்றம்மை மறந்து பரவசமாகுமன்பின் மேலீடிலரா யினரே!  எனஞானதேசிகர் கூறிவருந்த; அதனை யுணர்ந்த ஆசிரியர் சிவாக்கிரயோகிகள் ஞானதேசிகர் பாற்றிகழ்ந் தோங்குஞ் சீவகாருண்ணியப் பொலிவையும், பக்தி ஞானங்களின் வலிமையையுங்கண்டு அதிசயத்துத் தாம் அத்தேசிகோத்தமரைப் பிரிந்து செல்லுதற்கேலாப் பேரன்புடையராய்ச் சிலபகல் அங்குத்தங்கி, அன்பென்னும் ஆராவமுதம் அயின்று களித்து வீற்றிருந்தருளினர்.

பின்னர் ஓர்போது அவ்வாசிரியசுவாமிகள் தம்மை ஞானதேசிகர் வழிவிட்டனுப்ப ஒருவாறு பிரிந்து அங்குநின்றும் புறப்பட்டுத் தமது மடாலயத்திற்கெழுந்தருளினர்.

பின் ஓர்காலத்தில் அடியவர்களில் ஒருவர், குருபூசை மாகேசுரபூசைகளில் குறைநேராது இலைபறித்துக் கொள்ளுதற் பொருட்டுத் திருமடத்தைச் சூழ்ந்த ஓர்மறைவிடத்தில் சில வாழைகள் வைத்து வளர்த்துவந்தனர். அதனைத் திருவுளத்துணர்ந்த ஞானதேசிகர் “இயல்பாகுநோன்பிற் கொன்றின்மையுடைமை, மயலாகுமற்றும் பெயர்த்து” “தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி, வலைப்பட்டார் மற்றை யவர்” என்பன ஆதியாய மெய்மொழிப்பயன் றெருட்டுவாராய், அவ்வடியவரை நோக்கி நீ இந்நாளில் ஒருவகைப் பந்தமுற்றனை, அதனை யாத்திரைசென்று ஒழித்து மீளுவாயாகஎன ஆணையளித்தருளினர்.

உடனே அவ்வடியவர் மனம்பதைபதைத்து வருந்தி அவ்வருளாணையைக் கடத்தற்கஞ்சி, ஞானதேசிகர் திருவடிகளில் நமஸ்கரித்து, விடை பெற்றுக் கொண்டு, யாத்திரை செய்வாராயினர்.

பின்சில காலங்கழித்து அவர் தாம், அகப்பற்றறத்துறந்து தூயசிந்தையராய் மீண்டு ஞானதேசிகர் திருவடிகளை யடைந்து, தொண்டரொடு மருவிச் சுகமுற்றிருந்தனர்.  இதுநிற்க.

குடந்தை நகரில் சைவ வேளாளர் குலத்தில் அவதரித்து, இளமைப்பருவத்தே எக்கலையும் பயின்று சிவபத்தி அடியார் பத்தியிற் சிறந்து விளங்கும் தீவிரதரபக்குவமுடைய ஒருவர் சற்குருவை நேடி ஞானோபதேசம்பெற அவாவுற்றுக் காவிரி நதியினிருமருங்குமுள்ள பற்பல சிவஸ்தலங்களைத் தரிசித்து வருங் காலத்துத் திருவாவடுதுறையை யடைந்து, திருக்கோயிலிற் சென்று, சுவாமிதரிசனஞ்செய்து, அதன்பாங்கருள்ள சித்தர் மடத்திற்குச் சென்று ஞானதேசிகரைத் தரிசித்தனர்.

ஞான தேசிகர் அவரது பரிபாகநிலையைத் திருவுளத் தோர்ந்து மகிழ்வுற்று அவருக்குத் தீக்கைபுரிந்து தமது ஞானாசிரியர் திருநாமத்தினையே தீக்ஷாநாமமாகச் சாத்திச் சிவஞானபோத முதலிய நூல்களை உபதேசித்தருளினர்.  அவர் ஞான நூல்களைச் சிந்தித்துக் கொண்டு, அவ்வாசிரியசுவாமிகள் திருவணுக்கத் தொண்டராயமர்ந்து பணிபுரிந்து வருவாராயினர்.

அக்காலத்தில் ஞானதேசிகர், அடியவர்களுட்டலைமை யயய்திய அவருக்கு ஞானாபிடேகஞ்செய்து தமக்குத்துவிதீய ஆசிரியராக வைத்தருளினர்.  அக்காலத்தில் வேலூரில் அரசுபுரிந் திருக்கும் விருபாக்ஷிராயர் ஆணையினால் நடுநாட்டை யாண்டு கொண்டிருக்கும் ஓர்வடுகன் ஓர்நாள் சிதம்பரத்தில் வந்து சபாநாயகருக்கு நடக்கும் நித்திய நைமித்திகச் சிறப்புகளைக் கண்டு பொறாமையுற்று, சபாநாயகர் சந்நிதியிலிருந்த துஜத்தம்பத்தைக் கோவிந்தப் பெருமாள் முன்புநிறுத்தி, சபாநாயகருக்குரிய வருமானங்கள் முழுவதையும் அப்பெருமாளுக்காக்கிச், சபாநாயகருக்கு நித்திய பூசையும் நிகழவொட்டாமற் கொடுமை புரிய, அதனையாற்றாத் தில்லைவாழந்தணர்கள் செய்வதொன்றுந் தோன்றப் பெறாராய்ச் சிந்தை கலங்கியிருந்து, இறுதியில் நடராசப் பெருமானுக்கு மெய்யன்பரான நம்உமாபதியார் திருமரபில்வந்து, இந்நாளிலே திருவாவடுதுறையில் வாழும் நமச்சிவாய தேசிக கோத்தமர்பால் இதனைத் தெரிவிப்போமெனச் சிந்தையிற் கொண்டு, அவ்வாறே அங்குநின்றும் புறப்பட்டுத் திருவாவடு துறையை யடைந்து ஞானதேசிகர்பாலுரைத்தனர்.  அதனைக் கேட்ட மாத்திரத்தே ஞானதேசிகர், திருவுளம் பதைபதைத்து, இங்ஙனம் அதிபாதகம்புரிந்த அவ்வதிகாரிமாட்டு ஒருவாற்றாற் கருணைபெருகத் திருவருளைச் சிந்தித்துப்பின் தமது துவிதீய குரவராகிய சிவப்பிரகாசரை அவ்வந்தணாளர் குழாத்துடன் சென்று, நடராசப் பெருமானுக்குப் பூசை முதலானவை முன்போல நடக்கும் வண்ணமியற்றிவருமாறு ஆணைசெய்தருளினர்.

அங்ஙனமே  சிவப்பிரகாசதேசிகர் ஞானதேசிகரிடத்து விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுத் தில்லைவாழந் தணரோடு அவ்வதிகாரியினிடத்துச் சென்று, அவருக்கு அரசநீதிகளும் சமயவிதி விலக்குகளும் பிறவும் வேண்டும் விதங்களால் வியப்புற எடுத்துரைத்தும், முடிவில் அவ்வதிபாதக் சித்தமுடையோனாகிய அவ்வடுகன் ஒருசிறிதும் சமாதானம்பெற்றிலனாக, இனியாம் யாதுபுரிவேம் எனத் திருவுளத்தாராய்ந்து, தேசிக சுவாமிகள் வேலூருக்குச் சென்று அரசர்க்குணர்த்துமாறு நினைந்துபுறப்பட, அப்பொழுது தில்லைவாழந்தணர்கள் திருநடராஜப் பெருமானது திருவருளாணையால் அத்தேசிக சுவாமிகட்குச் சிவிகைமுதலான சிறப்புகளீந்து வழிவிட்டனுப்ப அவ்வாறே வேலூரையடைதலும், அந்நகரிலுள்ளார் தெரிந்து ஒருங்குகூடி வந்து எதிர்கொண்டு வழிபட்டுபசாரங்கள் பலபுரிந்து தேசிக சுவாமிகள் எழுந்தருளிய காரணமுணர்ந்து திருமுன்பு நமஸ்கரித்துநின்று, சுவாமிகளே! நமது அரசர் மாத்துவராதலால் சைவசீலராகிய முதன்மந்திரியாரைத் துணைக் கொண்டு அரசரிடத்துச் சென்று சுவாமிகள் திருவுளத்திற் கொண்டதை முடிக்கவேண்டுமெனவும், மேலும் முதன்மந்திரியார் சிவலிங்கதாரணமில்லாதாரைச் சிறிதும் மதியாத உத்தம வீரசைவராவார் எனவும் விண்ணப்பஞ்செய்தனர்.  அவற்றைக் கேட்ட தேசிக சுவாமிகள் சிறிதுபோழ்து திருவருளைச் சிந்தித் திருந்து, பின்னர் இவ்விடத்துச் செய்யத்தகுவது இதுவே போலும் எனத் திருவுளத்திற்கொண்டு தமது ஆன்மார்த்த சிவலிங்கப் பெருமானை அகமொப்பப்புறத்தும் நெஞ்சகத்தி லெழுந்தருளச் செய்து புறப்பட்டு முதன்மந்திரியராகிய இலிங்கணபத்தர் அரண் மனையையடைந்தனர்.  அதனையுணர்ந்த அம்மந்திரியார் தேசிக சுவாமிகளை எதிர்கொண்டு உள்ளே அழைத்துச் சென்று ஆசனத்திலேழுந்தருளச் செய்து மெய்யன்போடு வழிபட்டு உபசாரங்கள் பலபுரிந்து களித்தனர்.

பின்பு தேசிகசுவாமிகள் தாம் அங்கெழுந்தருளிய காரண முரைத்தருளுதலும், மந்திரியார் மனம் பதைபதைத்துக் கொடியோ னாகிய அவ்வடுகனிடத்துக் கோபம் பெரிதும் உடையராய் உடனே தேசிகர் சுவாமிகளை அழைத்துக் கொண்டு அரசர்பால் அடைந்து அவ்வதிகாரியிழைத்த அதிபாதகச் செயல்களையும் அநீதிகளையும் முற்றவெடுத்துரைத்துக் குறையிரந்தனர்.  அவற்றையயல்லாம் உள்ளத்து ஆராய்ந்து தெளிந்துகொண்ட அரசர், அவ்வதிகாரிபால் வெகுண்டு, மந்திரியாராகிய இலிங்கணபத்தர்க்கு ஆணை யளித்தலும் அவர் தாம் அவ்வடுகனை அவ்வதிகாரத்தினின்றும் ஒழித்து மற்றோர் அதிகாரியால் சபாநாயகருக்கு முன் போல யாவும் அமைத்து நித்திய நைமித்திகங்களெல்லாம் சிறப்புற நடத்துமாறு ஆணைசெலுத்தி விட்டு அரசர்பால் விடைபெற்றுத் தேசிகசுவாமி களோடு தம்மரண்மனையை யடைந்தனர்.

பின்பு தேசிகசுவாமிகள், மந்திரியார் வேண்டுகோளுக் கியைந்து சிலநாள் அங்குத்தங்கியிருந்து அவருக்கு வீரசைவத்தின் உண்மையயல்லாம் மந்திரியார்க்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் இனிது புலப்படுமாறுணர்த்திப் பேரற்புதம் விளைவித்தனர்.  இங்ஙனமாகப் பேரற்புதமெய்திய மந்திரியார் தமக்குத் தேசிக சுவாமிகள்பாலுளதாகிய பேரன்பினால் பிரிவாற்றாமை கொண்டு, சமீபத்திலுள்ள மகாக்ஷேத்திரமாகிய திருவண்ணாமலையில் தாம் அமைத்துக் கொடுக்குந் திருமடத்தில் எழுந்தருளியிருக்குமாறு வேண்டினர்.  அத்தருணத்தில் தேசிகசுவாமிகள், அதனை மறுத்தற்கு முடியாமல் அவரைநோக்கி நமது அன்ப! எமக்கு ஞானதேசிகர் பணித்தருளிய திருத்தொண்டு நும்வாயிலாக முற்றுப் பெற்றமையை ஞானதேசிகர்பாற்சென்று விண்ணப்பஞ்செய்து விடைபெற்றுக் கொண்டு விரைவில் நும்மாட்டுமீளுவம் என்று இன்னோரன்ன உறுதிமொழி பல கூற ; அன்பராகிய மந்திரியார் ஒருவாறுடன்பட்டு வேண்டுஞ் சிறப்புமிகவியற்றி வழிபட்டு விடைபெற்றுக்கொள்ள, தேசிகசுவாமிகள், அங்குநின்றும் புறப்பட்டு வழியிடையினுள்ள பற்பல சிவக்ஷேத்திரங்களைத் தரிசித்துச் சிதம்பரத்தை யடைந்தனர். அங்குத் தில்லை வாழந்தணர்களும் பிறர்களும் எதிர்கொண்ட ழைக்கச் சென்று சபாநாயகரைத் தரிசித்து அப்பெருமானார்க்கு முன்போல யாவும் முட்டின்றி நடப்பதை யுணர்ந்து களிப்புற்று, உடனே அங்குநின்றும் புறப்பட்டுச் சீகாழி முதலிய பல ஸ்தலங்களையுந் தரிசித்துத் திருமூவலூரை யடைந்து திருக்கோயிலிற் சென்று மீவழித்துணைமருந்தை வணங்கி வழிபட்டு, வீதிப்பிரதக்ஷணஞ் செய்து வருங்காலையில், தமது ஞானாசிரிய சுவாமிகள் திருவவதாரஞ்செய்தருளிய திவ்விய கிருகமாகிய திருமடாலயத்தினைச் சார்ந்து அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரஞ் செய்து, அன்பர்கள் போற்ற அத்தலத்தில் சிலநாள் வசித்திருந்து, அங்குநின்றும் புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்தருளினர்.

பின்பு சிவப்பிரகாசதேசிகர் அங்குத் திருக்கோயிலுட் சென்று வழிபட்டு மெய்யன்பினால் விழுங்கப்பட்ட மேலான உள்ளத்தோடும் வெளிவந்து, சித்தர்மடம் எனப்பெயர் வழங்குந் தமது திருமடத்திற்கெழுந்தருளுவார், அம்மடத்தின் வடக்கு வாசலுக்குச் சென்று அதன்மேல்பால் கோயில்கொண் டெழுந் தருளியிருக்குஞ் சிவப்பிரகாசவிநாயகரை வணங்கி வழிபட்டுத் திருமடத்தினுட் சென்று திருமாளிகைத் தேவர் குருமூர்த்தஞ் தரிசித்து, ஒடுக்கத்துக் கெழுந்தருளி ஞானகுருவாகிய நமச்சிவாயமூர்த்தியைத் தரிசித்து, ஞானதேசிகர் பால் விடை பெற்றுச் சென்றது முதல் நிகழ்ந்த யாவும் விண்ணப்பஞ் செய்தனர்.  அப்பொழுது ஞானதேசிகர், அவையாவும் திருவுளத்திலோர்ந்து தமது ஞானோபதேசமரபிற்குக் களைகணாகிய சிவப்பிரகாச தேசிகர் வினைவயத்தாற் சித்தாந்த சைவநெறிகடந்து

ஞானதேசிகர், திருவாவடுதுறையிலே சைவவேளாளர் குலத்தில் அவதரித்து அருந்தவப்பயன் வந்தணுகுதலால் இளமைப் பருவத்திற்றானே நாலாஞ் சத்திநிபாதமெய்த, முன்னரே தம்பாலடைந்து  மூவகைத்தீக்கையும் முறையாகப்பெற்று ஞான நூற் பொருள்கள் முற்றக்கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை யிற்றலைப்பட்டு நின்ற மறைஞானசுவாமிகளுக்கு ஞானாபிடேகஞ் செய்தருளினர்.  அங்ஙனம் அபிடேகம்பெற்ற அருந்தவச் செல்வ ராகிய மறைஞானதேசிகர் சிலபகல்கழிதலும் ஓர் தனியிடஞ் சார்ந்து தைலதாரைபோல் இடையறாது நிட்டையில் வீற்றிருந்தருளினர்.

பின்பு ஞானதேசிகர், தம்பால் ஞானாபிடேகம் பெற்ற இருவரும் இருவகையாகும் இயல்பினராக ஈச சங்கற்பத்தால் நிகழ்ந்தமையைத் திருவுளத்திலாராய்ந்து, தமது ஞானாசிரிய சுவாமிகள் திருவுளப்பாங்கின்படி திருவாவடுதுறை என்னும் இத்தலத்தில் என்றுந் தமது குருசந்தானம் வளர்பிறைமதி போல் வளர்ந்தோங்கி வருமாறு, குருவருளைச் சிந்தித்து அக்குருபரன் தமது இருதயத்தினின் றுணர்த்தாநிற்ப பரிபக்குவ நன்காராய்ந்து தமது திருக்கூட்டத்து அடியவர்களுள் அம்பலவாணர், தக்ஷிணாமூர்த்தி என்னுந் தம்பிரான் சுவாமிகள் இருவருக்கும் ஆசாரியாபிடேகஞ் செய்தருளினர்.

அவ்விருவருள் ஒருவராகிய தக்ஷிணாமூர்த்தி தேசிகர், மெய் கண்ட சாத்திரத்தின் கருத்தை உள்ளடக்கிய தசகாரியம், உபதேசப் பஃறொடை என்னும் இரண்டு ஞான நூல்களைச் செய்தருளினர்.  பின்பு சிலகாலஞ் சென்று  அத்தேசிக சுவாமிகள் அத்திருப்பதியிலே ஓர் மாசிமாதத்துச் சித்திரை நக்ஷத்திரத்திலே சிவபரிபூரண முற்றருளினர்.

பின்பு ஞானதேசிகர், திருவருளைச் சிந்தித்துத் துவிதீய ஆசிரியராகிய அம்பலவாண தேசிகருடன் நெடுங்காலம் சீடர் களுக்குச் சித்தாந்த சாத்திரோபதேசஞ் செய்து வீற்றிருந்து முடிவில், தாம் நிஷ்டை கூடுந்தருணத்து, தமது ஆன்மார்த்த வைத்தியநாதத் தம்பிரானை அழகிய திருச்சிற்றம்பலவுடையவர் அம்பலவாணர் ஆகிய உபயமூர்த்திகளோடெழுந்தருளப் பண்ணிப் பூசித்துக் கொண்டு தமது அருளுபதேசமரபினைப் புரந்துவருமாறு துவிதீய ஆசாரியராகிய அம்பலவாண தேசிகருக்கு அருளாணை யளித்துவிட்டுத் தாம் அத்திருப்பதியிலே ஓர் தைமாதத்து அசுவதி நக்ஷத்திரத்திலே சிவபிரானோடு இரண்டறக்கலத்தலாகிய சுத்தாத்துவித பரிபூரண நிலையை யடைந்தருளினர்.

அக்காலத்தில் அம்பலவாணதேசிகர், தாம் அடியவர் குழாத் தோடு மறைஞானதேசிகர் எழுந்தருளியிருக்கும் அத்தபோவனத் தினைச் சார்ந்து, அத்தேசிக சுவாமிகள்பால் ஞானதேசிகர் சிவபரிபூரணமுற்ற திருவருட் செய்தியைக் காலம்பார்த்து விண்ணப்பஞ் செய்தனர்.  அதனையுணர்ந்து அத்தேசிகசுவாமிகள் அவர் பாற்றிருவருள் பெருகநோக்கி “”என்றும் பரிபூரணந்தான்” எனத்திருவாய் மலர்ந்து முன்போல நிட்டையில் வீற்றிருந்தருளினர்.

இந்த ஞானதேசிகர்பால் ஆசாரியாபிடேகம் பெற்ற நால்வருள் ஒருவர் திருத்துறையூர் வீரசைவாதீனம் என்று பெயர் வழங்குந் திருவண்ணாமலை வீரசைவாதீனம் பரமமுதற்குரவராகிய சிவப்பிரகாச தேசிகர் என்பதூ உம், மற்றொருவர் துவிதீய ஆசிரிய ராகிய தக்ஷிணாமூர்த்திதேசிகர் என்பதூஉம், இந்த ஞானாசிரியர் இருவரும் அருளிச் செய்த ஞானசாத்திரங்களிற்கூறிய குரு தோத்திரங்களால் இனிது புலப்படும்.

சிவப்பிரகாசதேசிக சுவாமிகள் அருளிச்செய்த அத்துவித வெண்பாவிற்கு அவ்வாசிரிய சுவாமிகளுக்கு ஆறாவது பட்டத்தில் எழுந்தருளியிருந்த நன்னூற் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய உரைப்பாயிரக் குருதோத்திரங்கள்.

 

திங்களணி சிவனருள்செய்  வாதுளா  கமமதனிற்  றிகழ்சாரத்தை

எங்கள்பவப்  பிணிதீர்க்கத்  திரட்டியத்து  விதவெண்பா  வெனநன்  கீந்தான்

துங்கமுறு  மெய்கண்டான்  சந்ததிக்கோர்  தீபமெனத்  துதிபெற்         றோங்கித்

தங்கருணைத்  திருத்துறையூர்ச்  சிவப்பிரகா  சப்பெரும்பேர் தரித்துள்  ளானே.

 

செய்யதிரு  வாவடுதண்  டுறைநமச்சி  வாயகுரு  தேசி  கோத்மன்

துய்யகர  சாதனனா  யபிடேகந்  திருநாமஞ்  சூடப்  பெற்றோன்

ஐயதில்லை  யம்பலவன்  பொருட்டாயத்  துவிதசைவ  வங்க லிங்கந்

தையல்  பங்கன்  சொற்படியே  தரித்தசிவப்  பிரகாசத்  தவத்தான் மாதோ.

 

தக்ஷிணாமூர்த்திதேசிகர் அருளிச் செய்த தசகாரியம்

குருதோத்திரம்.

 

திருந்துவட கயிலைதனிற் பரமசிவ  னளித்த சிவஞான

போதமுணர்  நந்திமுதற் சிறந்தே

வருங்குரவர்  வெண்ணெய் நல்லூர்  மெய்கண்ட  தேவர்

வழங்கருட்சந்  ததிநமச்  சிவாயதே  சிகனா

மிருங்குரவ  னளித்தசிவப் பிரகாச தேச னிலங்குமறை

வனத்தருகோர்  வனக்குகையு ளுறைநாட்

பொருந்தியவன் றிருவடிக்கீ  ழவனருளேவ  லினாற்

போந்தருளா  வடுதுறைவாழ்  நமச்சிவா  யனைப்புகழ்வாம்

 

இரண்டாவது மறைஞானதேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

மறைகளெலா முறையுணர்ந்து மறைஞான  முறப்பின்னும்

இறைஞானம் பெறும்விருப்போர்க்  கெய்தருமந் நிட்டைநிலைத்

துறைகாட்டித் தன்பெயரி னியல்காட்டுந்  துறைசையினின்

மறைஞான தேசிகன்றன் மலர்க்கழல்க  டலைக்கணிவாம்.

ஞானக்கோமுத்திமாநகரில் ஞானபா நுவாகிமிளிரும் நமச்சிவாய தேசிகோத்த மருக்கு மாணாக்கராவார் பலருள்ளும் சிறந்த மாதவப் பெருந்தகையாராகிய மறைஞான தேசிகர், முன்போல நிட்டையில மர்ந்தருளுதலும் ;  அம்பலவாணதேசிகர் அங்குநின்றும் விடைபெற்று, அரிதினீங்கித் தமது திருமடத்திற் கெழுந்தருளித் தேசிகோத்தமராகிய நமசிவாயமூர்த்திகள் அளித்தருளிய அழகிய திருச்சிற்றம்பலவுடையவரையும் அம்பலவாணரையும் ஞானாசிரிய சுவாமிகள் ஆன்மார்த்த வைத்தியநாதத் தம்பிரானையும் தமது ஆன்மார்த்த சிவலிங்கப்பெருமானோடு எழுந்தருளப்பண்ணிப் பூசித்துக் கொண்டும், நமசிவாயதேசிகோத்தமர் ஞானசமாதி கொண்டருளிய திருவாவடுதுறையினகத்துச் சினகரம் அமைத்துத் திருவுருசமைத்துப் பிரதிஷ்டை செய்து பூசித்துக்கொண்டும், திருக்கோயி லுக்கும் காவிரிநதிக்கும் மத்தியிலுள்ள தபோவனத்தில் நிஷ்டையில் வீற்றிருந் தருளும் ஞானதேசிகரை நாடோறுஞ் சென்று தரிசித்துக் கொண்டும், மெய்யன்பர் களாகிய அடியவர் குழாத்தினுக்கு அருளுபதேசஞ் செய்துகொண்டும் வருவாரா யினர்.  இங்ஙனம் நிகழுநாளில் நிரதிசயானந்த நிஷ்டையில் வீற்றிருந்தருளுந் திருவருட் செல்வராகிய மறை ஞானதேசிகர் அத்திருப் பதியிலே ஓர்தைமாதத்துச் சுவாதி நட்சத்திரத்திலே சிவபரிபூரணம் உற்றருளினர்.

 

மூன்றாவது அம்பலவாணதேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

கண்ணுதலுஞ்  செஞ்சடையுங் கறைமிடறுந்   தனைக்  கரந்து கயிலை நீங்கி

யயண்ணரிய குருநமச்சி  வாயனெனுந்  திருநாமமெங்கு  மோங்க

மண்ணுலகி  லடியார்க  ளீடேற   மகிழ்சைவம்  வளர்க்க  வந்த

அண்ணலா  வடுதுறைவா  ழம்பலவா  ணன்றிருத்தா  ளகத்துள் வைப்பாம்.

சித்தாந்தஞானபாநுவாகிய நமச்சிவாய தேசிகோத்தமரைத் தமக்கு ஞானாசிரியராகவும், அவ்வாசிரியசுவாமிகள் அருளுபதேசம் பெற்ற மறைஞான தேசிகரைத் தம்முன்னோராகவுங் கொண்டு, தமது ஞானாசிரியர் ஆஞ்ஞையின்படி திவ்விய ஸ்தலமாகிய திருவாவடுதுறை என்று பெயர் வழங்கும் அநாதிமுத்தி க்ஷேத்திரத்திற் றமது குருசந்தான ஞானோபதேசமரபு தழைத்தோங்கச் சித்தாந்த ஞானோபதேசஞ் செய்தமர்ந்தருளும் அம்பலவாண தேசிகர், தம்முன்னோராகிய மறைஞானதேசிகர் ஞானசமாதியில் திருக்கோயிலமைத்துச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து கும்பாபிடேகமியற்றிப் பூசைபுரிந்து கொண்டு, தமிழ்ச் சிவஞானபோதம் ஆகிய முதனூலும் அதன்வழி நூல் சார்பு நூலென வழங்கும் சிவஞானசித்தி, இருபாவிருபது, சிவப்பிரகாசம் முதலிய சித்தாந்த சாத்திரங்களும், சிவாகமங்களும் தமிழ்வேதமும் ஆரியவேதமும் உபநிடதமும் நன்காராய்ந்து, ஆங்காங்கு இலைமறைகாய்போல் மறைந்துகிடந்த அரும்பொருள்களும் அவற்றின் சாரங்களும் விளங்கத் தோற்றுவாராய்த் தசகாரியம், சன்மார்க்கசித்தி, உபாய நிட்டை வெண்பா, உபதேசவெண்பா, நிட்டைவிளக்கம், அதிசயமாலை, நமச்சிவாயமாலை எனப்பத்து ஞான நூல்கள் இயற்றியருளினர்.

பின்பு ஞானதேசிகர் தமது உண்மை யன்பர் திருக்கூட்டத்துட் சிறந்த ஒருபெருந் தவத்தராகிய உருத்திரகோடியார்க்கு, ஓர் சுபதினத்தில் ஆசாரியாபிடேகஞ் செய்து தமக்குத் துவிதீய ஆசிரியராக வைத்தருளினர். பின்பு ஞானதேசிகர் தம்பால் வந்தடைந்த வைணவப் பிராமணரும், கல்வி யறிவொழுக்கங்களிற் சிறந்த பரிபக்குவரு மாகிய உலகுடைய நாயனாருக்குச் சைவ சந்நியாசங் கொடுத்து நைட்டிக நிருவாண தீக்ஷை செய்து, மெய்கண்ட சாஸ்திரத்தினையும் தாமியற்றி யனவும் தமது ஞானாசிரியராகிய நமச்சிவாய தேசி கோத்தமருக்குத் துவிதீய ஆசிரியராக வீற்றிருந்த தக்ஷிணாமூர்த்தி தேசிகர் இயற்றி யனவுமாகிய ஞானசாத்திரங்களையும் உப தேசித்தருளினர்.  அங்ஙனம் ஞானதேசிகர் பால் அருளுபதேசம்பெற்றுக் கொண்ட உலகுடைய நாயனார், ஞான நூல்களைச் சிந்தித்துத் தெளிந்து நிட்டைகூடிச் சிவாநுபூதி சிறக்கப் பெற்று வீற்றிருக்கு நாட்களில் சித்தாந்த நுண் பொருள் செறிந்துவிளங்க, “”மலமெனுந் தடத்தில் கருமசேதகத்தின்” என்றெடுத்து ஞான தேசிகர் மீது தோத்திர ரூபமாகப் பத்துத்திருவிருத்தங்கள் பாடியருளினர்.

கழிநெடிலாசிரிய விருத்தம்

மலமெனுந் தடத்திற் கருமசே தகத்தின் மாயையாங் கிழங்கிலங்,

குரித்துமன்  னுமூ  வெட்டாந்  தத்துவ  நாள,

மலரிதழ்  வித்தையேழ்  வித்தை,

நலமிகு  மீசன்  சதாசிவ  மிரண்டு  நண்ணுகே  சரங்களாஞ்,

சத்திநற்  பொகுட்  டாகு  நாதமே  விந்து,

நயந்தகண்  ணாமென  விரவி,

இலகுமென்  னுடலப்  பதுமபீடிகை நீ  யிருந்தருளாசன,

மெனாமல்எனதுபுக்  கிலதா  யயண்ணினேன்,

றெளிய  வியலருட்  பார்வைதந்  தனையே,

அலகிலா  வுயிர்கண்  மலநடைக்  கிலையா  யருணடைக்,

குண்மையாய்  நின்ற ஆவடுதுறைசை  யம்பல,

வாணா  வடியவர்க்  கருளுமா  நிதியே.                  ( 1 )

புசிப்பினால்  வினையாற்  சகலனா  மென்பாற் புசிப்பொடு,

வினையுமாய்ப்  புகுந்து  வரவின்  வாய்மணி,

கொள்வார்  பேரன்மலத்  தெனைவெளிப்படுத்தி,

நசிப்பிலாக்க ருணை யுருவமாய் வந்து  ஞானபா  தத்தையீ,

ரைந்தா  நண்ணுகா  ரியத்தா  லெனக்குப  தேச,

நல்குநின்  பெருமைநா  னறியேன்,

வசிக்குமைந்  தொழிலின்  மலநடை  நான்காய்  மற்றொரு,

தொழிலரு  ணடையாய்  மன்னுயிர்க்  கிரங்கி,

நடத் தொழில்  புரியும்  வள்ளலே  மருவுசித்  திடத்தும்,

அசித்தினு  நீங்கா  தகண்டமாய்  நிறைந்த  வருட்பரி,

பூரணக்  கடலே  ஆவடு  துறைசை  யம்பல,

வாணா  வடியவர்க்  கருளுமா  நிதியே.                 ( 2 )

 

மீ சீவனோ  வியாபி  யவத்தையி  லிழிந்து  திரும்புதல்  குற்றமாங்,

கருவி  சேருதல்  பிரித  லில்லையா  முறையிற்,

செயற்படுங்  கருவியே  தெரியுந்,

தாவிலா  வறிவு  தங்கின  விடமே  தகுமுயிர்க்  கிருப்பிட,

மென்று  சாற்றியயன்  னுளத்தி  லையமுந்  திரிவுந்,

தவிர்த்தெனை  யாண்டுகொண்டனையே,

பாவனை  கடந்த  வுனைவச  மாக்கப்  பாசமும்  பசுவுமா,

ஞானம்  பற்றிநாட்  டத்தை  முகிழ்த்துவாய்,

நீரைப்  பசையறப்  பருகுவார்  தாங்கள்,

ஆவல்சேர்  நிட்டை  யபாயமாய்க்  கருதி  யதற்கியல்,

பினையளித்  தவனே  ஆவடு  துறைசை  யம்பல,

வாணா  வடியவர்க்  கருளுமா  நிதியே.        ( 3 )

 

நாலுகை  தனிலே  நாலுகை  யமைப்பு  நற்றுடி  முளரியை,

நயந்து  நளினபாதத்தி  னொன்றெடுத்  தொன்றை,

ஞானவான்  பொதுவிலே  நாட்டிக்,

கோலமார்  கூத்துவிடாதநீ  மீயுன்றன் குலமிரண்  டென்குல,

மிரண்டுங்குறுகிடா  வண்ண  மின்பமா  யயன்பாற்,

கூத்தையுங்  கொண்டதெப்  படிதான்,

ஏலுமா மலர்க்காய் நாசிகைவேழ  மெறிந்தநீ  சினகரந்  தகர்க்க,

எப்படி பொறுத்தா  யிதற்குமேல்  வினையு,

மில்லையயன்  றுரைத்தது  மிலையோ,

 

ஆலநீ  ழலிலே  யயன்றரு  புதல்வர்க்  காகம  முரைத்தபூ,

ரணனே  ஆவடு  துறைசை  யம்பல  வாணா,

வடியவர்க  கருளுமா  நிதியே.            (4)

முந்தநான்  செய்த  விதத்தினுக்  கிதமே  முடித்தவா  பிறப்பினை,

முடிப்பாய்  மூளுமிக்  காலத்திவ்வுடல்  வினையை,

முற்றுநின்  றொழிலெனக்  கொள்வாய்,

நந்திடா வென்னை  யுனக்குடலாக்கி  நண்ணிமென்  னுயிருமாய்,

நயப்பாய்  நாடிலுன்  கருணைக்  கேற்றகைம்  மாறு,

நான்செய  முடியுமோ  நவில்வாய்,

சிந்தைமெய்  வாக்கு  மூன்றினு  முயிர்கள்  செய்வினை  கொடுத்திட,

வதற்காத்  தேகமே  கொடுத்து  மலபரி  பாகஞ்,

செய்தறி  வினிற்பவ  முடித்த,

அந்தமார்  குரவர்  சிகாமணிநீயே  யண்ணலே  யயன்னுயிர்க்,

கமுதே  ஆவடுது  றைசை  யம்பல  வாணா,

வடியவர்க்  கருளுமா  நிதியே.                          (5 )

 

காந்தமுன்  கரும்பொன்  கதிரின்முன்  படிகங்  ககனநேத்

திரவொளி  தாரை  கலைமதி  பொருந்துந்  தன்மையா

யுனது  கருணையி  னுள்ளுறக்  கலந்து

மாந்திய  கனியு  மதுரமும்  பண்ணு  மருவுறு  மேசையு

முடலும்  மன்னிய  வுயிரும்  போலமூன்  றில்லா

வகையிரண்  டல்லது  மானேன்

ஏய்ந்தமூன்  றவத்தை  யுயிரினுக்கநாதி  யிருக்கினும்  வினை

முதிர்ச்சியினால்  இரண்டுமுன்  னடாத்தி  மலபரி  பாக

மியற்றிமற்  றொன்றையீ  ரைந்தாய்

ஆய்ந்தகா ரியமா  வவத்தையோ  ரைந்தி  னடக்கிநா  னறிந்திடச்

செய்த  ஆவடு  துறைசை  யம்பல  வாணா

வடியவர்க்  கருளுமா  நிதியே.                          6

என்னையு  முனையுந்  தன்னையுங்  காட்டா  திந்திய  விடயமே

காட்டி  இயல்வினை  மாயை  யிரண்டையு  மெனையு

மிணக்கிய  வாணவ  மலத்தின்

தன்னுற  வழிநின்  சத்தியை  நடாத்தித்  தகுமதன்  சத்திக

ளெல்லாந்  தயங்குநின்  னுருவமூன்றினான்  மாற்றித்

தாணிழ  றந்துகாத்  தனையே

மீமீகன்னலங்  கழனிக்  காழிமா  நகரிற்  கவுணிய  னிரண்டு

ஞானமுமே  கற்றிடா  துணர  வீர்க்கிடை  போகாக்

கதிர்முலைப்  பால்கறந்  தளித்த

அன்னைதன் பசுவாந தன்மையை  யகற்றி  யாதரித்

தருள்கொடுத்  தவனே  ஆவடு  துறைசை  யம்பல  வாணா

வடியவர்க்  கருளுமா  நிதியே.                  7

 

தணவிலா  மலத்தின்  குருடனேற்  குடலந்  தானொரு  கோலெனக்,

கொடுத்துச்  சத்தமேயாதி  விடயமோ  ரைந்தின்,

றன்வழி  புசித்திடத்  தந்து,

குணவழி  நடவார்  குணவழி  நடந்து  குணத்தினைத்  திருப்புவார்,

போலக்  கொடுவனை  யயாப்புச்  சத்திநி  பாதங்,

கூர்மல  பாகமுங்  குறித்தே,

இணையிலா  வின்பவடிவ  மாமுன்னோ  டென்னையு  மிரண்டா,

வைத்தாய்  ஏழையே  னுன்ற  னடியருக்,

கடியானென்னவும்  பற்றிலே  னரவின்,

அணைதுயி  லெழுந்தே  யருவிகண்  பொழியு  மரியரிக்,

குரைத்தகூத்  துடையாய்  ஆவடு  துறைசை  யம்பல,

வாணா  வடியவர்க்  கருளுமா  நிதியே.    8

இருங்கடன் மணலை யயண்ணினு மூவர்நீ ரிவ்வள வெனவளந்

திடினும் இருவினைக் கீடா வெடுத்த வென்னுடல

மெண்ணிறந் தனவிவை யயாழிய

வருஞ்சிவ தருமந் தன்னிலுன் றிருமுன் வந்தனை செய்துனக்

களிக்க வாய்த்தவிவ் வுடலே யயனக்குப கார

மாகவே வந்திடு முடல்காண்

பெருஞ்சிவ னடியார் வேடமுற் றிடாநான் பிறனெனத்

திருவுளத்துறாமற் பேதையேன் றன்பானோக்கொடு

பரிசம் பிறங்குபா வனைத்தொழில் பெருக்கி

அருந்திறன் மலந்தீர்த் தறிவினைத் திருப்பியாண் டருள்

கருணையங்கடலே ஆவடுதுறைசை யம்பல வாணா

வடியவர்க் கருளுமா நிதியே.                                   9

 

முந்துமா  கமத்தை  யருட்டுறை யண்ணன்மீ  மொழிபெயர்த்

துரைத்தநூன் முதலாமுதல்வழி சார்பா மூன்றுநூற்

கருத்துமுறை தெரியாமலே கருதி

நந்தவே யயழுதுமுரைதனைக் குருவாய்நாடிய குரவரை நம்பி

நற்கதியடையா வுயிர்களுக் கிரங்கி

நற்கதி கொடுத்திட வேண்டிச்

சிந்தனையாக்கிப் பதிபசுபாசந் தெரிந்திட லளிமா வுரைத்துன்

திருவடிநீழன் மருவிட வைத்த

தேசிக சிகாமணி நீ காண்

ஐந்தலை யரவினடித்தமா லீரைந்தாதிய பிறவிநோய் தவிர்த்த

ஆவடு துறைசை யம்பலவாணா

வடியவர்க் கருளுமா நிதியே.                     10

 

அக்காலத்திலேயே காவிரிநதியின் தென்கரை ஞாங்கருள்ள சிவபுரம் என்னுந் திவ்விய திருநகரின்கண் சைவவேளாளர் குலத்தில் அவதரித்துக் கல்வியறி வொழுக்கங்களானுங் குரு லிங்க சங்கம பத்தியானுஞ் சிறப்புற்று, செல்வம் அதிகார முதலிய நலங்களிற் குறைவின்றி விளக்கமுறும் பெரியபிள்ளை என்பவர், பரிபக்குவ வயத்தானே ஞானதேசிகரது மகிமையைக் கேள்வியுற்றுத் திருவாவடு துறைக்கு வந்து ஞானதேசிகரைத் தரிசித்தனர். ஞானதேசிகர் அவருக்கு மூவகைத்தீக்கையும், முறையாக வியற்றிச் சித்தாந்த சாந்திரோபதேசஞ் செய்தருளக், கேட்ட துணையானே சிந்தித்துத் தெளிந்து சுவாநுபவப்பேறுடையராய், விளங்கித் தமது ஞானாசாரிய சுவாமிகள் மீது “”அந்த மலத்தத்துவிதம்” என்னுஞ் செய்யுளா தியாய பத்துத் திருவெண்பாக்கள் இயற்றி, ஞானதேசிகரைத் துதித்திறைஞ்சினர்.

அவை வருமாறு : ‡

அந்தமலத் தத்துவித மானபணி யாலகற்றி

வந்த மலத் தத்துவிதம் வைத்தாயே ‡ எந்தாய்

திருவா வடுதுறைவாழ் தேசிகா பொய்யில்

மருவாத வம்பல வாணா.                  1

 

உன்போகந் தந்தா யுனக்குவினை யேனருந்தும்

என்போகந் தந்தேனென் னீசனே ‡ இன்புருவா

கைம்மாறுண் டாமோ கவினா வடுதுறையின்

அம்மானே யம்பல வாணா.                2

 

ஆதி வருணத்தா லரியா லுனையிழந்த

பாதகருக் கேநிரையம் பாலிப்பாய் ‡ நீதியுடன்

தானந்த மானவரைத் தற்பரமாய் விட்டகலா

ஆனந்த வம்பல வாணா.                   3

 

இருளிரவு தீப மிவைமூன் றடங்க

வருகதிர்போ லேமூன்று மாயத் ‡ தருஞான

பானுவாய் வந்தவனே பண்பா வடுதுறைவாழ்

வானவனே யம்பல  வாணா               4

 

முத்தியிலுன் செய்கையைப்போன் மூன்றுமல முந்தவிராப்

பெத்தமுமுன் செய்கையயனப் பேசுவார் ‡ சத்தியமே

காணாதமூடர் கண்டாய் காவா வடுதுறையில்

வாணாகம் மம்பல வாணா.         5

 

அஞ்சா மவத்தைதனி லாணவம்போ மென்றுரைப்பார்

எஞ்சாச் சரியாதி யயண்ணியான் ‡ வஞ்சமலம்

முன்னகற்று மாற்றியார் மூடர்கண்டாய் தென்றுறைசை

மன்னவனே யம்பல வாணா.               6

 

ஆதியே தென்றுறைசை யம்பலவா ணாவெனைநீ

பேதமறக் கூடிநின்ற பெற்றிதனை ‡ ஓதிலது

சாக்கிரா தீதந் தருமான்ம லாப வின்பம்

ஆக்குசிவ போகமென லாம்.               7

 

அத்தனே தென்றுறைசை யம்பலவா ணாவமைந்த

சித்தமுரு விரண்டுந் தீபமென்றாய் ‡ சுத்தத்தில்

ஒன்று பதார்த்தமா மொன்றுநின் னோடொன்றாம்

ஒன்றுமன வாதே யுரை.                   8

 

மருளிற் பிறந்து மயங்குமெனை யுன்றன்

அருளிற் பிறப்பித்தா யையா ‡ பொருளான

நானுக்கென் செய்வே னவிலா வடுதுறைவாழ்

வானவனே யம்பல வாணா.               9

 

அந்தந் தெரியா வசிந்திதநீ சிந்திதனா

வந்துன்னோ டென்னை வசமாக்கிப் ‡ பந்தமுறுஞ்

சித்தமுதற் காண மெல்லாந் திருவருளாய்

வைத்தனையே யம்பல வாணா.            10

பின்பு ஓர் காலத்தில், ஞானதேசிகர் தமக்கு நெடுங்காலம் பணிபுரிந்து வந்ததனாற் பரிபக்குவமடைந்திருந்த பூப்பிள்ளையயன்பவர் கல்வியறிவு சிறிதுமாத்திர முடையராயிருத்தலை நோக்கி, அவர்மாட்டுக் கருணைபுரிந்து, கத்தியரூபமாக ஞான நூல் ஒன்றியற்றி அதற்கு மீஉயிரட்டவணை எனப்பெயர் தந்து அவருக்கு உபதேசித்தருளினர்.

இங்ஙனம் ஞானாசாரியராகிய அம்பலவாணதேசிகர், தம் அருட்பெருங் குரவராகிய நமச்சிவாயமூர்த்திகள் திருவுளக்குறிப்பு இதுவாகுமெனத் திருவருள் உபதேசஞ்செய்தும், சித்தாந்த ஞானநூல்கள் பலசெய்தும், தமக்குப் பிற்றோன்றலாக உருத்திரகோடி தேசிகரை உதவியும் எழுந்தருளியிருந்து, பின்னர் அத்திருப்பதியிலே ஓர் சித்திரைமாதத்து அவிட்ட நக்ஷத்தி ரத்திலே சின்மயநமச்சிவாயர் திருவடி நீழல் மருவிப் பேரின்பவாழ்வெய்தினர்.

இந்த ஞானதேசிகர் மெய்கண்ட சந்ததிக்கோர் ஞானபாநுவாகித் திருவா வடுதுறை என்னும் திவ்விய ஸ்தலத்திற் றிகழ்ந்து வீற்றிருந்தருளும் நமச்சிவாய தேசிகர்பால் அருளுபதேசம் பெற்றனர் என்பதூஉம், அத்தேசிகோத்தமர்பால் ஞானாபிடேகம் பெற்ற மறைஞான தேசிகர்க்குத் தாம் ஆசிரியாபிடேக முறையால் துவிதீயாசாரியர் என்பதூஉம், தாமியற்றிய தசகாரிய முதலிய ஞான நூல்கள் முதனூல் வழிநூல்  சார்புநூல் என வழங்குந் தமிழ்ச்சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சிவப்பிரகாச முதலிய ஞானசாத்திரங்களின் சாரம் என்பதூஉம் அவர் தாமியற்றிய தசகாரிய முதலிய நூல்களால் இனிது புலப்படும். அவை வருமாறு :‡

 

தசகாரியம்

சதுரறி யாமை தீரத் தரித்தரு ளுருவு கொண்டு

துதிதரு வெண்ணெய் மெய்யன் றுலங்குசந் ததிக்கோர் ஞானக்

கதிரெனத் தோன்றித் தென்னா வடுதுறைக் கண்ணி ருந்து

மதிதரு நமச்சி வாயன் வளர்கம லங்கள் போற்றி.        1

அரனரு ளுருவா யாவிக் களித்திட வுளத்தை மாயா

வுரமது  பிளந்து குற்ற மொழித்துநின் மலமதாக்கி

வரமது தனைய ளித்து மருவுமா வடுது றைக்கோர்

பரன் மறை ஞான தேசன் பதாம்புயம் பற்றி வாழ்வாம்.                 2

முன்னவன் வடநூ னோக்கி மொழிந்தனன் போத மற்றோன்

பின்னவ னந்நூ னோக்கிப் பெயர்த்தனன் சித்தி யாக

அன்னவை யிரண்டு நோக்கி யறைந்தனன் புடைநூல் மற்றோன்

சொன்னவைமூன்றுநோக்கித்தொகுத்தனனவத்தைபத்தாய்.         3

சித்தாந்தப்பஃறொடை

செய்யாப் பணிபலவுஞ் செய்வேன் றிருவுளத்துச்

செய்யும் பணிசிறிதுஞ் செய்தறியேன் ‡ உய்யுநெறி

யயத்தால் வருமடியேற் கின்பா வடுதுறைக்குள்

அத்தா நமச்சிவா யா.

சித்தாந்தப்பஃறொடை

இருவினை யுற்றுக்கீழ்மே லிசையுமெவ் வுயிர்க்கு மூன்றா

யுருவினை யுற்றுக் கீழ்மே லூறும்வினை தன்பா லன்பாய்

வருவினை யாக்கித் தென்னா வடுதுறைக் கண் மகிழ்ந்த

திருவினை நமச்சி வாயன் றிருவடிக் கமலம் போற்றி.

கண்டக் கறையுமருட் கண்ணுதலு மாற்றி நெறித்

தொண்டர்குழா மென்னத் துலங்கியே ‡ யண்டர்தொழும்          42

வேதா ரணியத்தின் மீமெய்கண்ட  சந்ததிக்கோர்

ஞாதா வெனப்பேரு நண்ணியே ‡ யோதா                 43

துணர்ந்தார்க் குலவாக் கிழிவழங்கி யயாப்பில்

மணந்தாள் பசுக்குலத்தை மாற்றிப் ‡ புணர்ந்த      44

திருவா வடுதுறைவாழ் தேசிகனா மென்றே

யயாருவாத் தொழிற்பேரு முற்றே ‡ திருவார்      45

அமரர்க்கு மெட்டா வரியதிரு நாமப்

பிரம வுபதேசப் பெற்றி ‡ வரமாகும்        46

முப்பொருளின் றன்மை முடிவாக யாவர்க்கும்

எப்பொழுது முள்ள தெனவாக ‡ விப்பொழுது      47

தானே யுபதேசந் தங்குமென்ப தாய்மொழிவார்

ஊனே யறுக்கு முறுமுரணாய் ‡ வானேயும்       48

ஆவி யுளத்திருட்கோ ராதவனாய் மெய்த்தவர்கள்

மேவி யருந்தும் விழுப்பொருளாய்த் ‡ தாவிமிக    49

யுச்சரிக்குங் கேண்மை யுடைத்தா யுயர்சிவத்தை

வைச்சிருக்கு ஞான வழக்காய் ‡ நிச்சயித்து       50

செல்லா தவர்செவியுஞ் செல்லுவதாய்ச் சீரருளைச்

சொல்லாத வாயுஞ் சொலுமெனலால் ‡ எல்லாரு         51

நண்போ டுரைத்திடவே நன்னமச்சி வாயனெனப்

பண்போ டுயர் நாமம் பற்றியே ‡ கண்போது.              52

 

நான்காவது  உருத்திரகோடி தேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

பெருகா நின் றிடுபருவம் பெயராத காவிரிசூழ்

ஒருமாவாழ் துறைசை யுறைந்து துருத்திர கோடிகளாகப்

பரயோக மெய்ஞ்ஞானம் பரிவாகர்க் கருளுமுருத்

திரகோடி தேசிகன் தாள் சென்னியினின் மன்னுவிப்பாம்

உலகம்பரவும் உருத்திரகோடி தேசிகர் தமது ஆசிரியர் திருவருளாணை சிரமேற்கொண்டு தமது அடியவர்கள் வழக்கப்படி நாடோறுஞ் சென்று வாங்கிவரப்பெறும் கணப்பிக்ஷை மாதுகரி பிக்ஷையைக் கொண்டு சிவபூசை குருபூசை மாகேஸ்வர பூசையைச் சிறப்புற இயற்றி, தம்பால் வந்து சரண்புகும் மெய்யடியவர்களுக்கு ஞானோபதேசம் செய்து வருவாராயினர். இங்ஙனம் சித்தாந்த ஞானோபதேசம் சிறந்து விளங்கும் வண்ணம் திருவருளாட்சி புரிந்து வருவாராகிய ஞான தேசிகர் தம் அடியவர்களிற் சிறந்த வேலப்பத் தம்பிரானுக்கு ஆசாரியா பிடேகஞ் செய்து தமக்கு துவீதீய ஆசிரியராக  வைத்தருளினார்.          அக்காலத்தில்  தமது அடியவர்களால் தினந்தோறும் அயாசிதம், மாதுகரி, கணம், சாந்தானிகம்,  என்னும் நான்குவகை பிக்ஷையுள் கணப்பிக்ஷை மாதுகரிபிக்ஷை என்னும் இரண்டானும் வரப்பெறும் அரிசியையும் திருவமுதையும் கொண்டு சிவபூசை, குருபூசை, மாகேசுவர பூசையை நடத்திவரும் அருட் பணிவிடையை ஞானதேசிகர் அளித்தருளப்பெற்று அப்பணியை அன்போடு இயற்றிவரும் தமது அடியவர்களில் ஒருவராகிய ஈசானத் தம்பிரான் சுவாமிகள், வழக்கப்படி ஓர்நாள் நித்திய கன்மமியற்றுதற் பொருட்டுக் காவிரி நதித்துறையை அடைவார். அங்கு மருதமரநிழலில் ஒருவர் நடையினாலும் பசியினாலும் வருந்தி மிகவுந் தளர்வெய்தி இருப்பதைக் கண்ணுற்று, அவர்மீது பரிவுடையராகி அவரை நோக்கி நீர் இவ்விடத்திலே இருப்பீராக;  நாம் எமக்குரிய நித்திய கன்மமியற்றி விரைவில் மீண்டு வருகின்றேன் எனக் கூறிவிட்டு, அவ்வாறே சென்று காவிரி நீர்த்துறையில் நித்திய கன்மமியற்றிக் கொண்டு மீண்டு அவரிடத்து வந்து தாம் ஆன்மார்த்த சிவலிங்கப் பெருமானுக்கு நிவேதித்த மாங்கனியை உள்ளன்போடு அவரை உண்ணுவித்தனர். பின்பு அவர் தம்முடன் வருவதற்கு இயலாதவராய் இருத்தலை  உணர்ந்து அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கு நின்று விரைவிற்போந்து மடாலயத்தை அடைந்து, மாகேசுர பூசை முடிந்தவுடன் தாமே அன்னம் எடுத்துக்கொண்டு அவர்பாற் சென்று அதனைப் பரிவோடளிக்க, அத்தவச்செல்வர் மகிழ்வோடுண்டு சிறிது நேரத்துள் தளர்வுநீங்கப் பெறுதலும், மெய்யன் பினால் வணங்கிச் சுவாமிகளது கருணைப் பெருநலத்தைப் பலவா றெடுத்துரைத்துத் துதித்துக் கொண்டு, பின்னர் சுவாமிகளை நோக்கிக் கூறுவார்.

“”அடியேன் இந்நாளில் மதுரை மாநகரின்கண் அரசு புரிந்துவரும் முத்து வீரப்ப நாயக்கனது சிறிய தந்தையார்க்கு அருமைப் புதல்வனாவேன், எனக்குச் செவந்தியப்பன் எனப் பெயர்வழங்குவர். எனது தம்பியாகிய முத்துவீரப்ப நாயக்கன் தன் மனோவிச்சையின் வழிச் செல்லுதற் கண் யான் தடை செய்து வந்ததனால் அவன் என்னைக் கொலை செய்தற்கு எண்ணங் கொண்டனன்; அதனையுணர்ந்த அவன் மனைவி என்னிடத்து மிகப் பரிவெய்தி அக்கொடுமையை எனக்குத் தெரிவித்து வேறிடத்து வைகுமாறு வேண்டிக் கொண்டனள். அப்பொழுதே யான் அங்கு நின்றுந்  தனியே புறப்பட்டு விரைவாய் நடந்து பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு இன்று என் நல்வினைப் பயனால் இத்திவ்ய தலத்தை அடைந்து சுவாமிகள் பெருங் கருணைக்கு ஆளாயினேன்” என்று இங்ஙனமாகத் தன் வரலாறெல்லாம் எடுத்து உரைக்கச் சுவாமிகள் அவர்பாற் பெரிதும் அன்பு பாராட்டி அளவளாவிக் கொண்டிருந்து, பின்பு சுவாமிகள் ஆவலோடு செவந்தியப்ப நாயக்கரை உடனே அழைத்துப் போய் நதிக்கரையடைந்து அந்நதிக் கடன் களாற்றிக்கொண்டு  மீண்டுவந்து திருக் கோயில் சுவாமி தரிசனஞ் செய்வித்துப் பின் திருமடத்திற்போந்து ஞானதேசிகரைத் தரிசிப்பித்து அவர் வரலாறெல்லாம் எடுத்து விண்ணப்பிக்க, ஞானதேசிகர் திருவுள மகிழ்ந்து நாயக்கரிடத்து மிகவும்  அன்பு பாராட்டி இனிய வசனங்களால் அவர் மனக்கவலையை ஒருவாறுமாற்றித் தமது திருமடத்தில் வசிக்குமாறு திருவாய் மலர்ந்தருள; ஈசான சுவாமிகள் செவந்தியப்ப நாயக்கரைத் தம்முடன் அழைத்து வடக்கு வீதியில் தமது ஆசிரிய சுவாமிகளுக்கு துவிதீயாசாரியராகிய வேலப்பதேசிக சுவாமி களும் அடியார் குழாங்களும், வளர்பிறை மதிபோல் மல்கிவிளங்குந் திருமடஞ் சென்று, அடியார் குழாங்களையும் துவிதீயா சாரிய சுவாமிகளையுந் தெரிசனஞ் செய் வித்து, நாயக்கரைச் சிந்தை களித்தமருமாறு செய்தனர்; அங்ஙனம் குருலிங்க சங்கம சேவை செய்து அமர்வாராகிய செவந்தியப்ப நாயக்கர், தாம் சுகவாழ்வு பெற்றிருப்பதை உற்றவர் வாயிலாக இராசபத்தினிக்கு உணர்த்தி வைத்தனர்.

பின் ஓர்காலத்தில் அரசராகிய முத்து வீரப்ப நாயக்கர், தமக்குப் பகைவர் சிலரால் இடர்பாடுற்றவிடத்து எமக்கு எக்காலத்தும் உறுதுணையாகப் பொருந்தியிருந்த எமது  முற்றோன்றலை இழந்து விட்டமை யாலன்றோ இங்ஙனம் நேர்ந்ததெனக் கவலையுறுகின்றமையை இராசபத்தினி உணர்ந்து இதுவே தருண மெனச் சிந்தித்து அவர்க்கு இன்மொழிகளாற்  பல நீதிகளை எடுத்துரைத்துத் தம்வயமாக்கிக் கொண்டு பின்பு செவந்தியப்ப நாயக்கர் உயிர் பிழைத்திருக்குமாறு தாமியற்றிய உபாயத்தினையும் அவர் தங்கி வசிக்குந் தலத்தினையுமுரைத்தனர். இவற்றினைச் செவிமடுத்த அரசர் வியப்பும் மகிழ்வும் மிக வெய்தி உடனே தமது  தமயனாரை அழைத்துவருமாறு மந்திரி முதலானோரை ஏவ; அவர்கள் அங்ஙனமே புறப்பட்டு விரைவில் திருவாவடுதுறையை அடைந்து செவந்தியப்ப நாயக்கரைக் கண்டு வணக்கத்தோடு தாம் வந்த செய்தியைத் தெரிவிக்க, அவர் அவர்களை நோக்கி இத்திவ்விய தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஆசாரிய சுவாமிகளையும் தம்பிரான் சுவாமிகளையும், ஏனைய திருக் கூட்டத்தவர்களையும் விட்டுவருவதற்கு நமது மனம் ஒருசிறிதும் விரும்பவில்லை யயனவும், ஒருக்கால் நமது தம்பியார்க்கு உற்றவிடத்து உதவுதற் பொருட்டாக அங்குவருவதுண்டாயின் இதுவரையும் எம்மைப் பாதுகாத்துவந்த பெரியார்க்கு ஒரு திருமடமும், சாந்தானிக பிக்ஷையின் பொருட்டு வேண்டும் விளைநில முதலியனவுங் கொடுத்து உதவுதல் வேண்டும் எனவுங்கூறினார். அவைகளைக் கேட்ட மந்திரி முதலானோர் உடனே சிலரை அனுப்பி அவையாவும் அரசர்க்குணர்த்த, அரசர் மிகவும் மகிழ்வுற்று உடனே ஒரு மடத்திற்கு எட்டு மடங்கட்டிக் கொடுத்து அவைகளுக்கு வேண்டும் விளைநில முதலானவைகளும் விடுவோம்; இதன்பால் ஒருசிறிதும்  ஐயுறவேண்டுவதில்லையயன ஓர் நிரூபம் வரைந்து விடுத்தனர். அதனை மந்திரி முதலானோர் செவந்தியப்ப நாயக்கருக்குக் காட்ட அவர் மன மகிழ்வுற்று ஒருவாறு புறப்படத் துணிந்தனர்.

பின்பு செவந்தியப்ப நாயக்கர்; ஞானதேசிகரிடத்தும், துவிதீயதேசிக சுவாமிகளிடத்தும்; அடியவர்களிடத்தும் பிரியா விடைபெற்றுக்கொண்டு தமக்கு உற்றவிடத்துதவி புரிந்து உள்ளன்புமிக் குடையராயயாழுகும் ஈசானத்தம்பிரான் சுவாமிகளைப் பிரிந்துசெல்ல மன மில்லாமையால் உடனழைத்துக் கொண்டு மந்திரி முதலானோர் புடைசூழ்ந்துவரப் புறப்பட்டுச் சென்று மதுரை மாநகரை யடைந்தனர். அதனையுணர்ந்த தம்பியாகிய முத்துவீரப்ப நாயக்கர், எதிர்கொண்டு வழி பட்டுபசரித்து அழைத்துச்செல்ல செவந்தியப்ப நாயக்கர் அரண்மனைக்குச் சென்று தம்பியாரோடு அளவலாவிக் கொண்டிருக்கும் அமையத்தில் தம்முடன் எழுந்தருளிவந்த ஈசானத்தம்பிரான் சுவாமிகளது குண மகிமைகளையும் ஞானதேசிகரது திருவருள் மகிமைகளையும் பிறவும் எடுத்தியம்ப, அரசர் அதிசயமும் ஆனந்தமும் எய்தப்பெற்று சுவாமி களிடத்துத் தமக்குப் பெரிதும் அன்பு உண்டாகத் தமயனாரை நோக்கி, நமது சுவாமிகள் விரும்பிய இடங்களில் எட்டு மடாலயங்களமைத்து அவ்வற்றிற்கு வேண்டும் விளைநில முதலாயினவும் தக்கனவாகத் தெரிந்து விடுக என வேண்டிக்கொண்டனர்.

பின்பு செவந்தியப்பநாயக்கர், தமது தம்பியார்க்கு உறுதியாயிருந்து அவர்க்கு அக்காலத்தில் பகைவர்களால் நேர்ந்திருந்த இடர்ப்பாடு முழுது நீக்கி மகிழ்ச்சிபெருக வைத்துத் தாம் ஈசான சுவாமிகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டுத், தென் நாட்டுத் தலங்களைத் தரிசிக்குமாறு யாத்திரை செய்வாராயினர்.  அக்காலத்தில் நாயக்கர் தாம் சுவாமிகள் திருவுளப்படியே பாவநாசம், திருப் புடைமருதூர், செவ்வல், திருநெல்வேலி, முரப்பநாடு, வள்ளியூர், கன்னியாகுமரி, சுசீந்திரம் என்னும் எட்டுத்தலங்களினும் மடாலயம் அமைத்தற்குரிய இடங்களும், அம்மடாலயத்தின் பொருட்டு ஆங்காங்கு அமைவுறப் பல கிராமங்களும் ஆய்ந்துவைத்து மீண்டு மதுரைமாநகரை அடைந்தனர்.  பின்பு நாயக்கர் அவ்வத்தலங்களில் மடாலயப் பணி முற்றுவித்து அம்மடாலயங்களை ஈசானத் தம்பிரான் சுவாமிகள் திருநாமத்தால் வழங்கச் செய்து முன்னரே தாம் தெரிந்துவிட்ட பல கிராமங்களையும் அவற்றினுக்குச் சேர்த்து சாலிவாகன சகாப்தம் ஆயிரத்து ஐந்நூற்று முப்பத்தேழிலும், ஆயிரத்து ஐந்நூற்று முப்பத்தொன்பதிலும், ஆயிரத்து ஐந்நூற்று நாற்பத்து மூன்றிலும் தாமிர சாசனங்கள் முடித்துக் கொண்டனர்.

பின்னர் ஈசானத் தம்பிரான் சுவாமிகள் தமது ஞானதேசிகரையுந், துவிதீய தேசிக சுவாமிகளையும், அடியார் திருக்கூட்டத்தையும் பிரிந்து நெடுங்காலமாயினமையைத் திருவுளத் தோர்ந்து திருவாவடுதுறையை யடைந்து ஞானதேசிகரையுந் துவிதீய தேசிக சுவாமிகளையும் தரிசித்தற்கண்ணும் அடியவர் களோடு அளவளாவியிருத்தற் கண்ணும் பேரவாவுற்று, அதனைத் தமது அன்பராகிய செவந்தியப்ப நாயக்கருக்குணர்த்த அவர் சுவாமிகளைப் பிரிந்திருக்க ஒரு சிறிதும் மனமில்லாதவராயிருந்தும் சுவாமிகளது திருவுளத்தெழுந்த அவாவினைத்தடுத்தற்கஞ்சி ஒருவாறு இசைந்து வேண்டுஞ் சிறப்புக்களுடன் வழிவிட்டனுப்ப சுவாமிகள் மதுரையினின்றும் புறப்பட்டு வழியிடையே அநேக தலங்களைத் தரிசித்துக் கொண்டு, விரைவில் திருவாவடுதுறையை அடைந்து, திருக்கோயிலிற் சென்று கோமுத்தீசுரரையும், அதுல்யகுஜ நாயகியாரையும், திரவியத் தியாகரையும், படரரசினையும் பணிந்து தரிசித்து அதன் தென்பாங்கரிலுள்ள தாகிய சித்தர் மடமென்று திருப்பெயர் வழங்குந் தமது திருமடத்திற் சென்று அத்திரு மடத்தின் வாசலின் மேல்பால் பூர்வாபிமுகமாக வீற்றிருந்தருளும் சிவப்பிரகாச விநாயகரை வணங்கித் திருவருள் பெற்று, உள்ளே சென்று ஞானகுருவாகிய நமசிவாய மூர்த்தியின் திருக்கோயிலுக்கு ஈசான திசையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்குந் திருமாளிகைத் தேவரைத் தரிசனஞ்செய்து அத்திருக் கோயிலுக்கு அணித்தாகத் தென்மேல்பாங்கர் சினகரங்கொண்டு எழுந்தருளியிருக்கும், நமசிவாய தேசிகோத்தமரைத் தரிசித்து வழிபாடியற்றி ஒடுக்கத்திற்சென்று ஞான தேசிகரைத் தரிசித்துத் தமது வரலாறெல்லாம் எடுத்து விண்ணப்பஞ்செய்தனர்.  அவைகளைத் திருவுளத்திற் கொண்டருளிய ஞானதேசிகர் திருவருள் பாலித்தருள,  அச்சுவாமிகள் அங்கு நின்றும் அரிதினீங்கி வடக்கு மடத்திற்குச் சென்று, துவிதீய ஆசிரியராகிய வேலப்பதேசிக  சுவாமிகளையும், தம்பிரான் சுவாமிகள் திருக் கூட்டத்தையும் தரிசித்து அளவிலாத ஆசைப் பெருக்கத்தோடு அங்கு வசித்தனர்.

பின்பு சிலநாட்கழித்துஈசானத்தம்பிரான் சுவாமிகள் முன்னர் தமது அன்ப ராகிய செவந்தியப்ப நாயக்கர் தம்மிடத்து வேண்டிக் கொண்டதை செய்து முடித்தற்குப் பேராசை கொண்டு ஓர்நாளிற் ஞானதேசிகர்பாற் சென்று வழிபட்டு நின்று, “ஏழையேமை உய்யக் கொண்ட அருட்பேரரசே! தேவரீர் இத்தலத் தினை நீங்கிப் பாண்டிய நாட்டிற் சென்று அவ்விடத்தில் எமக்கு அரசரால் அமைக்கப் பட்ட திருமடங்களில் எழுந்தருளியிருந்து ஆங்காங்குள்ள பக்குவர் பலரையும் அடிமை கொண்டு அவர்களுக்கெல்லாம் குரு தரிசனக் காட்சி கொடுத்து மகிழ்வித்துப் பின் இங்கெழுந் தருளவேண்டும்’ எனப் பிரார்த்திக்க, ஞான தேசிகரும் அதற்குத் திருவுளமிசைந் தருளினர்.

பின் அவ்வாறே ; ஞானதேசிகர், ஓர் சுபதினத்தில் திருக்கோயிலிற் சென்று கோமுத் தீசுரரையும், அதுல்யகுஜ நாயகியாரையும், விநாயகர் முதலாகிய பரிவார தேவதை களையும், திருமாளிகைத் தேவரையும் விசேட பூசையியற்றி வழிபட்டு வந்து, நமசிவாய மூர்த்தியின் திருமுன்பெய்தி விடைபெற்றுக் கொண்டு அத்தேசிகோத்தம சின்மயானந்த மூர்த்தியின் சினகரத்திற்கு உத்தர பூர்வ திசையிலே திவ்விய தேஜோமயமாய் விளங்கும் தமது ஆன்மார்த்த ஞான நடராஜப் பெருமான் எழுந்தருளியிருக்கும் பூஜா மண்டபத்திற்குச் சென்று சிற்சபேசனை அருச்சனை ஆராதனை செய்து நமஸ்கரித்து இருவகை தீக்கையும், மந்திர காவியும், நிருவாண தீக்கையும் பெற்ற தம்பிரான் சுவாமிகள் சிரசாசனத்தில் எழுந் தருளப்பண்ணி, தாம் தமது ஞானாசாரிய சுவாமிகள் திருவடியை அருச்சித்து ஆராதனை செய்து தமது சிரமேற்கொண்டு, வடக்கு வாசலிற் சென்று சிவப்பிரகாச விநாயகரைத் தரிசித்து விடைபெற்றுத் தமது ஆசிரியச் சுவாமிகள் திருவடியைச் சிவிகையில் எழுந் தருளப் பண்ணித் தாம் சிவிகையின்மீது ஆரோ கணித்துத் தமது துவிதீய ஆசிரிய சுவாமிகளும் அடியார் குழாங்களும் உடன்வர வழியிடையே பல தலங்களையுந் தரிசித்துச் சென்று பாண்டி நாட்டை அடைந்து அங்குப் பற்பல காடு முதலியவை கடந்து மதுரைமா நகருக்குச் சமீபித்தருளினர்.  அதனை உணர்ந்த செவந் தியப்ப நாயக்கர் அரசராகிய முத்து வீரப்ப நாயக்கருடன் புறப்பட்டு வந்து ஞான தேசிகரை எதிர் கொண்டு வழிபட்டு அழைத்துவர, ஞான தேசிகர், அத்திருப்பதியுள் சென்று சிவிகை யினின்று இழிந்து திருக்கோபுரத்தை நமஸ்கரித்துக்கொண்டு ஆலயத்துட் சென்று அங்கயற்கண்ணி அம்மையையும், சோமசுந்தரப்  பெருமானையுந் தரிசித்துத் துதித்து வலம் வந்து திருக்கோயிலினின்றும், அரிதினீங்கி புறத்தே வந்து ஒரு திருமடத்தில் எழுந்தருளி இருந்தனர்.  அங்ஙனம் எழுந்தருளுதலும் செவந்தியப்ப நாயக்கரும், அரசரும், பிறரும் அங்கு ஞான தேசிகருக்கும் துவிதீய ஆசிரிய சுவாமிகளுக்கும் அடியவர்களுக்கும் குருபூசை மாகேசுர பூசைகளியற்றிப் பின்பு ஞான தேசிகரையுந் துவிதீய ஆசிரிய சுவாமிகளையும் பலவகைச் சிறப்புக்களோடு பவனிவருவித்து வழிபட, ஞான தேசிகர், அவர்களுக்கெல்லாங் குரு தரிசனக் காட்சி கொடுத்துத் திருவருட் பிரசாதமும் நல்கி மகிழ்வித்தருளினர்.

பின்பு செவந்தியப்ப நாயக்கரும், அரசரும், மெய்யன்போடு தம்மைவேண்டா நிற்ப, ஞானதேசிகர் அதற்கிசைந்து சிலநாள் அவ்விடத்திலெழுந்தருளியிருந்து அருளுப தேசஞ் செய்து பக்குவரானார் பற்பலரை அடிமைகொண்டருளினர். அங்ஙனம் எழுந் தருளியிருக்கும் நாட்களில், ஞானதேசிகர், அந்நாட்டின் கண்ணுள்ள ஏனைய சிவ ஸ்தலங்களையுந் தரிசிக்கத் திருவுளங்  கொண்டு அதனைச் செவந்தியப்ப நாயக் கருக்குத் திருவாய் மலர்ந்தருள; நாயக்கர், சற்குருபரன் திருவருள் ஆணையை, அந்நாட்டை அரசு புரிந்துவரும் தமது தம்பியாராகிய முத்துவீரப்ப நாயக்கருக்குத் தெரிவிக்க; அதனையுணர்ந்த அரசரும் ஏனைய அன்பர்களும் செவந்தியப்ப நாயக்கருடன் ஒருங்கு சேர்ந்துவந்து ஞான தேசிகர் திருமுன்பெய்திப் பலவாறு துதித்துக் கொண்டு,பின்பு ஞானதேசிகரையுந் துவிதீய ஆசாரியராகிய வேலப்ப தேசிகரையும், திருக் கூட்டத்துட் சிறந்த ஈசானத் தம்பிரான் சுவாமிகள் முதலாகிய பெரியாரையுந், தம்மாற் புதிதாகச் செய்து அமைக்கப்பட்ட சிவிகை முதலான சிறந்த வாகனங்களில் எழுந்தருளச் செய்து, காவலாளர் முதற் பலவகையரான பரிசனங்கள் பலவகைச் சிறப்புக்களுடனும் முன்னும் பின்னும் இருமருங்குஞ் சூழ்ந்து செல்லுமாறு ஆணை யளித்துத், தாமும் பின்றொடர்ந்து வழி விட்டு வணங்கி விடைபெற்றுத் திரும்பினர்.

பின்பு ஞானதேசிகர், வழியிடை யிலுள்ள, சிவஸ்தலங்கள் பலவுந்தரிசித்துப் பாவநாசத்தை அடைந்து அங்குத் தீர்த்தமாடி முக்களாலிங்க முழுமுதற் கடவுளையும், உலகம்மையையுந் தரிசித்துத் தமது ஈசானமடத்தில் எழுந்தருளினர்.  அங்ஙனம் எழுந்தருளுதலும் அங்குள்ள சைவசீலரும் பிறரும்வந்துவழிபட; ஞான தேசிகர் அவர் தம்முள் பக்குவமெய்திய மெய்யன்பர்களை அடிமைகொண்டு அங்கு நின்றும் புறப்பட்டுத் திருப்புடைமருதூர், செவ்வல், திருநெல்வேலி, முரப்பநாடு, வள்ளியூர் என்னும் தலங்களிற் சென்று ஆங்காங்குப் புண்ணிய தீர்த்தமாடி பொருப்பு விற்கைப் புனிதன் ஆலயங்கள் முதலானவை போத மெய்ஞ்ஞானத்தாற் பணிந்து தம் ஈசான மடங்களில் எழுந்தருளி யிருந்து, ஆங்காங்குத் தம்மை வந்தடைந்த அதிதீவிர பக்குவரானார்க்கெல்லாம் அருளுபதேசஞ் செய்து வீற்றிருந்து, கன்னி யாகுமரி என்னுந் திவ்விய ஸ்தலத்திற்குச் சென்று தீர்த்தமாடிப் பகவதி  அம்மையைத் தரிசித்துத் தமது ஈசான மடத்திற் சிலநாள் வசித்திருந்து, அங்கு நின்றும் புறப்பட்டுச் சுசீந்திரத்தை அடைந்து அத்திவ்விய தலத்துத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் தாணுமாலயனெனும் சம்புவைத் தரிசித்து வணங்கிக் கொண்டு, நாயக்கர் மடம் என்று பெயர் வழங்குந் தமது ஈசான மடத்திற்கு எழுந்தருளி அங்குப் பரிபக்குவ முடையார் பலருக்கும் தீக்கை முதலாயின செய்துகொண்டு சிலநாள் அங்கு வீற்றிருந் தருளினர்.

அக்காலத்தில் ஞானதேசிகர் தென் னாட்டின் கண்ணும் தமது சற்குருபரம்பரை தழைத்தோங்குமாறியற்றத் திருவுளங் கொண்டு,ஓர்சுபதினத்தில் ஆதீன பிரதமா சாரியராகியநமசிவாய மூர்த்திகள் திருவுருட் பிரதிட்டை இயற்றிக் கும்பாபிடேகஞ் செய்து நித்திய நைமித்திக பூசை என்றும் சிறப்புற நடத்துமாறு செய்து வைத்துத், துவிதீய ஆசாரியராகிய வேலப்பதேசிகரை அத்திரு மடத்தில் வசித்திருந்து பக்குவர் களுக்குச் சிவதீக்கையுஞ் சித்தாந்த ஞானோபதேசமுஞ் செய்து சிவஞானப் பேரொளி எங்கணுஞ் சிறந்து விளங்கத் திருவருளாணை செலுத்தி வருமாறு செய்து, சீடர்களுக்கு அனுப்புந் திருமுகங்களில் ஆதீன முதற்குரவராக அமர்பவர்;நமசிவாயம் எனவும் துவிதீய ஆசாரியராக அமர்பவர் அம்பலவாணர் எனவுங் கையயாப்பம் இட்டு வரும் சம்பிரதாயத்தையும் என்றும் நிலவுமாறு நிருமித்து, ஈசானத் தம்பிரான் சுவாமிகளுக்குத் தென்னாட்டின்கண்ணுள்ள குருக்ஷேத்திர பரிபாலனஞ் செய்து வருமாறு திருவருளாணை தந்து, தாம் சுசீந்திரத் தினின்றும் புறப்பட்டு வழியிடையில் பல தலங்களையுந் தரிசித்துக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்தருளினர்.  இஃதிங்ஙனமாக,

தென்னாடு சிறந்து விளங்கும் வண்ணம்   சுசீந்திரமெனப்படுந் திவ்விய க்ஷேத்திரத்தில் எழுந்தருளியிருக்கும் துவிதீய ஆசாரியராகிய வேலப்பதேசிகர் தமது ஞான தேசிகர் திருவுளப்பாங்கின்படி, சித்தாந்த ஞானோபதேசஞ் செய்து வருவாராயினர்.  அங்ஙனஞ் சிலகாலஞ் செல்ல தேசிக சுவாமிகள் தமது ஞானதேசிகரைத் தெரிசித் தற்கு வேணவாவுற்று அடியவர்களோடு சுசீந்திர நகரை நீங்கி வழியிடையில் பல அன்பர்கள் எதிர்கொண்டு வந்தனோப சாரஞ்செய்து அனுப்பச் சென்று விரைவில் திருவாவடுதுறையை அடைந்து ஞான தேசிகரைத் தம்கண்ணிணை களிப்பத் தரிசித்து வீற்றிருந்தருளினர்.

பின்னர் சிலநாள் கழித்து ஞான தேசிகர்,  தம் அடியவர்களோடு புறப்பட்டுச் சிவஸ்தல யாத்திரை செய்யவும் ஆங்காங்கு அடிமை புகுவார்க்கு அருளுபதேசஞ் செய்யவும் திருவுளங் கொண்டு, ஓர் சுபதினத்தில் ஆதீன பிரதமாசாரிய சுவாமி களாகிய நமச்சிவாய மூர்த்திகள்பால் விடைபெற்று அரிதினீங்கித் திருவாயிலை அடைந்து சிவப்பிரகாச விநாயகரைப் பலவாறு துதித்து வேண்டிக் கொண்டு புறப்பட்டுச் செல்லுவார். துவிதீய ஆசாரிய ராகிய வேலப்ப தேசிகரும் தொண்டர் குழாமும் உடன்வரத் திருவாவடுதுறையை யகன்று வழியிடையில் அநேக திவ்விய ஸ்தலங்களைத் தெரிசித்துப் போய்ப் பழம் பதியயன்று தமிழ்மறை போற்றும் பாண்டிய நாட்டை அடைந்து அங்குச் சில திவ்விய ஸ்தலங்களைத் தெரிசித்துகொண்டு, சீவன் முத்திபுரமாகிய திருவாலவாயின் எல்லையைச் சேர்ந்தருளினர்.  இங்ஙனம் ஞான தேசிகர் எழுந்தருளுதலை, கேள்வியுற்று அன்பராகிய செவந்தியப்ப நாயக்கரும் அரசரும் பலவகைச் சிறப்புக்களோடு வழிபட்டு அழைத்துச் செல்ல, ஞானதேசிகர் திருக்கோயிலிற் சென்று சுவாமி தெரிசனஞ் செய்து அரிதிற்புறம் போந்து சீரிதாகிய ஓர் திருமடத்தில் எழுந்தருளினர்.

பின்பு செவந்தியப்ப நாயக்கரும் அரசரும் பணிந்து வேண்ட ஞானதேசிகர் திருவுளமிசைந்து அங்கு வசிக்கு நாட்களில் ஓர் கார்த்திகை மாதத்து அனு­ நக்ஷத்திரத் திலே அம்பலவாணர் அருட்பத நீழலடைந் தனர்.  பின்பு செவந்தியப்ப நாயக்கரும், அரசராகிய முத்துவீரப்ப நாயக்கரும் அன்று முதலாகப் பத்து நாள்வரையும், ஞான தேசிகர் குரு பூசை சிறப்புறச் செய்வித்து, துவிதீய ஆசாரியராகிய வேலப்ப தேசிகரை அவ்வரசமா நகரின் கண் பவனி வருவித்துக் கொலு வீற்றிருந்தருளச் செய்வித்து குரு தரிசனக் காட்சி பெற்றுக் களிப்பெய்தினர்.

 

ஐந்தாவது வேலப்பதேசிகர் சரித்திரம்

திருச்சிற்றபலம்

 

நறுமலர்மஞ்  சனமமுது  முதலியன  மனமதனா  னாடிக்கொண்டு

மறுவில்சிந்தை  தனிற்புரியந்  தரியாக      மாபூசை  மன்னுயிர்க்குப்

பெறுபுனித  மாகுமென  வடியவர்க்கு விளக்கியருள்  பிறங்குந்  தூய்மை

யுறுதுறைசை  வேலப்ப  தேசிகன்றன்      விரைமலர்த்தா ளுன்னி  வாழ்வாம்.

திருவருட் செல்வராகிய வேலப்ப தேசிகர், திருவாலவாய் என்னுந் திவ்விய நகரில் ஞானாசாரியராகிய உருத்திரகோடி தேசிகர் குருமூர்த்தம் பூசித்துச் சிலநாள் வீற்றிருந்து, பின்செவந்தியப்பநாயக்கரும், அரசர் முதலானோரும் தம்மை வந்தித்து வழிவிட்டனுப்ப, அங்குநின்றும் புறப்பட்டு விரைவிற் சுசீந்திரத்தையடைந்து திருக் கோயிலிற்சென்று சிவபிரானைத் தரிசித்துத் தமது திருமடத்திற்சென்று, தமது ஆதீன முதற்குரவராகிய நமச்சிவாய தேசி கோத்தமர் எழுந்தருளியிருக்கும் பிரதிட் டாலயத்தினையடைந்து வழிபாடியற்றித் தரிசித்து அங்குவசித்திருந்தனர்.

அங்ஙனம் வசிக்கும் நாட்களில் ஞானதேசிகர் மூவகைத்தீக்கையும் பெற்றுத் தம்மடியவர்களுட் சிறந்து விளங்குங் குமார சுவாமித் தம்பிரானுக்கு ஓர் சுபதினத்தில் ஆசாரியாபிடேகஞ் செய்து தமக்குத் துவிதீய குரவராக நியமனஞ்செய்து அங்குச் சிலகாலம் வசித்திருந்தனர்.  அக்காலத்தில், ஞானதேசிகர் திருவருளாணை மேற் கொண்டு பலகாலங் குருக்ஷேத்திர பரிபாலனஞ் செய்து கொண்டிருந்த ஈசான தம்பிரான் சுவாமிகள் மீ தமக்காகச் செவந்தியப்பநாயக்கர் கட்டுவித்த மடால யங்கள்   எட்டனுள் ஒன்றாகிய திருநெல் வேலி ஈசானமடாலயத்தில் வசித்திருக்குந் தருணத்து அத்திருப்பதியிலே ஓர்பங்குனி மாதத்துத் திருவாதிரை நக்ஷத்திரத்திலே அம்பலக்கூத்தன் அடிமலரடைந்தனர்.  பின்பு ஞானதேசிகர், தாம்தமது பிற்றோன்ற லாகிய குமாரசுவாமி தேசிகரை அவ்விடத் தமர்ந்து சித்தாந்த உபதேசஞ்செய்து வருமாறு கட்டளையிட்டு அங்குநின்றும் புறப்பட்டுத் திருநெல்வேலிக்கெழுந்தருளி ஈசானமடத்தை யடைந்து அத்தலத்தில் சிலநாள் வசித்திருந்து குருக்ஷேத்திர பரிபாலனத்திற்கு ஒருதம்பிரானை     நியமனஞ்செய்துபின் அங்குநின்றும் புறப்பட்டுப்போந்து மதுரை நகரை யடைந்து அங்குத் தமது சற்குருநாதர் குருமூர்த்தந் தரிசித்து வழிபட்டுக் கொண்டு அங்கு அங்கயற்கண்ணி மணவாளனை அனுதினமுந் திருக்கோயிலிற் சென்று தரிசித்து சின்னாள் எழுந்தருளியிருந்துபின் அங்குநின்றும் புறப்பட்டு வழியிடையில் அனேக சிவத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவாவடுதுறையைச் சேர்ந் தருளினர்.

பின்பு ஞானதேசிகர், அங்குத் திருக்கோயிலிற் சென்று மாசிலாமணியீசுரரையும் ஒப்பிலாமுலையம்மையையும்,செம்பொற்றி யாகரையும், திருமூலதேவரையுந் தரிசித்து மீண்டு தமது திருமடத்தினுட்புகுவார்.  அங்கு வடக்கு முகப்புத் திருவாயிலிற் சிவப்பிரகாச விநாயகரை வழிபட்டுக் கொண்டு உள்ளே சென்று திருமாளிகைத் தேவரைத் தரிசித்துப் பின் தேசிகோத்தமராகிய நமசிவாயமூர்த்திகள் சந்நிதியை யடைந்து தம் உள்ளத்துப் பேராசை பெருகப் பூசித்து வழிபட்டுக் கொண்டு அங்கமர்ந்தருளினர்.  இஃதிங்ஙனமாக.

சுசீந்திரத்திலெழுந்தருளியிருக்கும் துவிதீய ஆசிரியராகிய குமாரசுவாமி தேசிகர் பாண்டி நாட்டின் கண்ணும் சேரநாட்டின் கண்ணும் ஆங்காங்குத் தம்மை வழிபடும் பக்குவர்பலர்க்கும் தீக்கையாதிகள் செய்து சித்தாந்த ஞானபரம்பரை சிறந்து விளங்கும் வண்ணம் ஞானதேசிகர் திருவருளாணை வழிநிற்குநாளில்; ஓர் காலத்துத் தாம் ஞான தேசிகரைத் தெரிசித்தற்கு வேணவாவுற்று, அங்கு நின்றும் புறப்பட்டு அடியவர்களோடு ஆங்காங்கு பலதலங்களையுந் தரிசித்துக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, தமது திருமடத்திற் சென்று ஞானமூர்த்தி யாகிய நமச்சிவாய தேசிகோத்தமரையுந் தமது ஞானாசிரிய சுவாமிகளையுந் தரிசித்து அங்கு வசித்திருந்தனர்.

பின்பு, ஞானதேசிகர் சிலகாலங் கழித்துச் சுசீந்திரத்திற் கெழுந்தருளத் திருவுளங்கொண்டு துவிதீய ஆசிரியராகிய குமரசுவாமி தேசிகரும், திருக்கூட்டமும், பரிசனங்களும் உடன் வரத் திருவாவடுதுறை யினின்றும் புறப்பட்டு வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்துச் சுசீந்திரத்தை யடைந்து அங்குச்சில காலம் வசித்திருந்து, பின் திருவாவடுதுறைக் கெழுந்தருளத் திருவுளங்கொண்டு துவிதீய ஆசாரிய சுவாமிகளை அங்குள்ளார்க்கு ஞானோப தேசஞ் செய்து வருமாறு பணித்துத் தாம் அங்குநின்றும் அரிதினீங்கிச் சேரநாடகன்று பாண்டிநாட்டிற்குச் செல்வார்;  அங்குப்பல விடங்களினும் தம்மை வழிபடும் மெய்யன் பர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து முப்பொருளுண்மை முனிவற மொழிந்து, திருவாலவாயினை யடைந்துதிருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ்செய்து தமது ஞானாசிரிய சுவாமிகள் குருமூர்த்தந் தெரிசித்து அங்குச் சிலகாலம் வசித்திருந்து அங்குநின்றும் அரிதினீங்கித் திருப்பூவண மென்னுந் திவ்விய தலத்தையடைந்து, பூவணநாதரைப்பரிவுடன் வணங்கி அங்கு அமருநாட்களில் ஓர் கார்த்திகை மாதத்திலே உத்தராட நட்சத்திரத்திலே உலகெலா முணர்ந்தோதற்கரிய ஒருவன்றிருத்தாளில் இரண்டறக் கலந்தனர்.

 

ஆறாவது குமாரசுவாமிதேசிகர் சரித்திரம்

திருச்சிற்றபலம்

 

புத்தியே  யபுத்தி  பூருவ  மிரண்டும்  பொருந்துறு  முபாயமுண்  மையினில்,

வைத்திடுஞ்  சரியை  கிரியைநல்  யோக  ஞானமா  வகுத்திடு  மெட்டும்,

ஒத்திடிற்  பத்தாம்  புண்ணிய  மென்ன  வுணர்த்துவான்  கோமுத்தி  வாழுஞ்,

சுத்தன்முற்  குமாரசாமிதே  சிகன்றன்         றுணையடி  தொழுதுவாழ்ந்  திடுவாம்.

 

மேதினிபுகழும் வேலப்பதேசிகர் தமக்குப் பிற்றோன்றலாயமர்ந்தருளுங் குமாரசுவாமிதேசிகர், திருப்பூவணம் என்னும் அப்பெரும்பதிக்கண் தமது ஞானாசிரியசுவாமிகள் சிவபரிபூரண முற்றருளியதைத் தமது சீடர்வந்து அறிவிக்க; விரைவில் சுசீந்திரத்தினின்றும் புறப்பட்டுத் திருப்பூவணமடைந்து ஞானாசிரிய சுவாமிகள் குருமூர்த்தந்தரிசித்து அங்குச் சிலநாள் வீற்றிருந்து அரிதினீங்கித் திருவா வடுதுறையையடைந்து, திருக்கோயிலிற் சென்று சுவாமிதரிசனஞ்செய்து, தமது திருமடத்திற்கு வந்து வடக்குவாசலின் மேல்பாற் கோயில்கொண்டெழுந்தருளி யிருக்குஞ் சிவப்பிரகாசவிநாயகரைத் தரிசித்து உள்ளேசென்று திருமாளிகைத் தேவரையும், ஞானமூர்த்தியாகிய நமசிவாய தேசிகோத்தமரையும், தரிசனஞ்செய்து பின் ஒடுக்கத்திற்சென்று தமது ஞானாசிரிய சுவாமிகள் திருவடிகளைப் பீடத்திலெழுந் தருளப் பண்ணிப் பூசனையாற்றித் தாம் ஆசனத்தமர்ந்து, அடியவர்கள் அருச்சித்து கற்பூர ஆலத்திசெய்து வழிபாடுசெய்ய ; அவர்க்கெல்லாம் விபூதிநல்கித் திருவருள் பாலித்து அங்கமர்வாராயினர்.

அக்காலத்தில் ஞானதேசிகர் தமது ஞானோபதேசபரம்பரை அங்குரித்தற் கோர்களைக்கணாகிய துவிதீய ஆசிரியர் நியமனஞ் செய்யத் திருவுளங்கொண்டு, மூவகைத்தீக்கையும் முறையாகப் பெற்று விளங்கும் முனிவர்களுட் சிறந்த குமாரசாமித் தம்பிரானுக்கு ஓர்  சுபதினத்தில் ஆசாரிய அபிடேகஞ் செய்தருளினர்.  பின்னர் சிலபகல் கழிந்து ஞானதேசிகர் அங்குநின்றும் புறப்பட்டு வழியிடையிற் பலதலங்களையுந் தரிசித்துச் சுசீந்திரத்திற் சென்று அங்குத் தமது துவிதீய ஆசாரியராகிய குமாரசுவாமித் தேசிகரும் அடியவர்களும் சூழ அங்குப்பலகாலம் பற்பல சீடர்களுக்குத் தீக்கையாதிகள் சிறப்புறச் செய்து வசித்திருந்தனர்.  அக்காலத்தில் ஞானதேசிகர் ஓர் கார்த்திகை மாதத்திலே உத்தராட நட்சத்திரத்திலே அத்திருப்பதியிலே சிற்சபேசன்றிருவடிக் கலப்பாகிய சிவானந்த வாழ்வுற்றனர்.

 

ஏழாவது பிற்குமாரசுவாமிதேசிகர் சரித்திரம்

திருச்சிற்றபலம்

 

சொற்குவைமாறாக்கழணி  புறஞ்சூழ்ந்த  துறைசைதனிற் றொல்லு யிர்க்கு,

நற்பருவ  வரசவிளங்  குமரரெனத்  தம்முயர்வு  நயப்பக்  கூறிக்,

குற்றமலப்  புலவேடக்  குறும்பகற்றிப் பதியாக்குங் குமார  சாமி,

சற்குரவன்  செங்கமல  மலர்போலுந்      தாளிணைகள்  சார்ந்து  வாழ்வாம்.

 

முற்குமாரசுவாமி தேசிகர் தம்பால் அபிடேகம் பெற்றுத் துவிதீய ஆசாரியராக வீற்றிருக்கும் குமாரசுவாமி தேசிகர் தமது ஞானாசிரியசுவாமிகள் குருபூசை சிறப்புற வியற்றி அங்குச் சீடர்களுக்கு ஞானோப தேசஞ் செய்து வருவாராயினர்.  அக்காலத்தில் தம் அடியவர்களுட் சிறந்து விளங்கும் முத்தம்பலவாணத் தம்பிரானுக்கு ஆசாரியாபிடேகஞ் செய்துவைத்துத் தாம் அங்கு நின்றும் புறப்பட்டுச் சென்று சின்னாட்களுள் திருவாவடுதுறையைச் சேர்ந்து குரவர் பெருமானாகிய நமசிவாய தேசிகோத்த மரைத் தரிசித்து அங்கு வீற்றிருந்து அருளுபதேசஞ் செய்து வருவாராயினர். இஃதிங்ஙனமாக.

சுசீந்திரத்தின்கண் ஞானாசிரிய சுவாமிகள் திருவருளாணை மேற்கொண்டு சீடர்களுக்கு ஞானோபதேசஞ் செய்துவரும் முத்தம்பலவாண தேசிகர், சிலகாலஞ் சென்று தமது ஞானதேசிகரைத் தெரிசிக்க வேணவாவுற்றுச் சுசீந்திரத்தினின்றும் நீங்கிப் போந்து விரைவிற்றானே திருவாவடு துறையையடைந்து, தமது மடாலயத்திற் சென்று ஆதீனப் பரமமுதற்குரவராகிய பஞ்சாக்கரமூர்த்திகளையுந் தமது ஞான தேசிகரையுந் தரிசித்துக் களிப்பெய்தி அங்குவசித்திருந்தனர்.

பின்னர், சிலகாலஞ் சென்று ஞான தேசிகர், சோழ நாட்டின் கண்ணும், பாண்டிய நாட்டின் கண்ணும், சேர நாட்டின் கண்ணும் உள்ள தமது சீடர் களுக்குத் தீக்கையாதிகள் செய்யத் திருவுளங் கொண்டு நமசிவாயமூர்த்திபால் விடைபெற்று அரிதினீங்கித் துவிதீய ஆசாரியராகிய முத்தம்பலவாண தேசிகரும் அடியார்களும் உடன்வர, வழியிடையில் அனேக ஸ்தலங்களைத் தரிசித்துப் புனல் நாடகன்று பாண்டியநாட்டிற் சென்று அங்குப் பலதலங்களைத் தரிசனஞ் செய்து கொண்டு திருக்குற்றாலத்திற் கெழுந்தருளிச் சுவாமிதரிசனஞ்செய்து அங்குவீற்றிருக்கு நாட்களில் துவிதீய ஆசிரியராகிய முத்தம்பலவாணதேசிகர்  அத்திருப்பதியிலே ஓர் மாசிமாதத்துச் சித்திரை நட்சத்திரத்திலே சிவபரிபூரண தசையடைந்தருளினர்.

அக்காலத்தில் ஞானதேசிகர், அவ்விடத்தே அத்தேசிக சுவாமிகளுக்கு குருபூசை சிறப்புற நடத்திக்கொண்டு, அங்கு நின்றும் புறப்பட்டுப்போய்ச் சுசீந்திரத்தை யடைந்து அங்குத் தமது அடியவர்களும் பிறரும் வழிபட்டுப் பரவத் தமது திருமடத்தில் வீற்றிருந்தருளுவாராயினர்.  அங்ஙனம் வீற்றிருக்கு நாட்களில், ஞான தேசிகர் தம் அடியவர்களுட் சிறந்த மாசிலாமணித்தம்பிரானுக்கு ஓர்சுபதினத்தில் ஆசாரியாபிடேகஞ்செய்து தமக்கு துவிதீய ஆசாரியராகவைத்தருளினர்.

பின்பு சில காலங்கழித்து ஞான தேசிகர், திருவாவடுதுறைக் கெழுந்தருளத் திருவுளங்கொண்டு துவிதீய ஆசாரியராகிய மாசிலாமணி தேசிகரை அங்கு அமர்ந்தருளுமாறு பணித்துவிட்டுத், தாம் அடியவர்கள் குழாமும் பரிசனங்களும் அடுத்துவரப் புறப்பட்டு வழியிடையே திருக்கோயில்கள் பலவற்றையுந் தரிசித்துக் கொண்டு, திருவாவடுதுறையைச் சேர்ந்து, அங்கு சிவா நுபூதிப் பெருவள்ளலாகிய நமசிவாய தேசிகோத்தமர் திருவடிகளை ஆராமை மீதூர அருச்சித்து வழிபட்டுக்கொண்டு தமது திருமடத்தில் வீற்றிருந்தருளுவாராயினர்.

சுசீந்திரத்தின்கண் துவிதீய ஆசாரியராக வெழுந்தருளியிருக்கும் மாசிலாமணி தேசிகர், தம் மாணாக்கர் பற்பலர்க்கு அருளுபதேசஞ்செய்து வருநாட்களில் ; பாண்டிவளநாட்டிலே பரம்பரைச் சைவ வேளாளர் குலத்தில் அவதரித்து இளமைப் பருவத்தே தம்மை வந்தடைந்த உத்தம பக்குவராகிய சுவாமிநாதர் என்பவர்க்குச் சமயவிசேடங்களாகிய இருவகைத் தீக்கையுஞ்செய்து சைவ சந்நியாசம் அளித் தருள; அவ்வன்பர் தாம் அடைந்து கொண்ட துறவறத்திற்கு விதித்த நூல்களை ஐயந்திரிபின்றி ஓதியுணர்ந்து அவ்வாறொழுகித் தவத்தான் மனந்தூயராகி ஞானாசிரியரது அருட்பணிவிடையை அன்போடு செய்துகொண்டு அணுக்கத் தொண்டராய் அமர்ந்திருந்தனர்.

அக்காலத்தில் மேற்கூறிய பாண்டி வளநாட்டிலே திருநெல்வேலி என்னுஞ் சிவநகரத்திலே தாண்டவமூர்த்திப்பிள்ளை செய்த தவப்பயனால் உதித்த மயிலேறும் பிள்ளையயன்பவர், கல்வியறிவொழுக் கங்களானும், குருலிங்க சங்கமபத்தியானும் மிகச் சிறப்புற்றுச், செல்வம் அதிகாரமுதலிய நலங்களிற் குறைவின்றி விளங்கியிருந்தனர்.  அவர் ஞாலத்து மிக்குயர்ந்த ஞான ஆதீன மென்று யாவரானும் புகழப்படுவதாகிய நம் துறைசையாதீன சி´யவர்க்கங்களிற் சிறந்தவராயும், ஆதீனத்திலே மிகுந்த அன்புடைய வராயுமிருந்தமையால் தமக்கு ஒருவாறு ஆசிரியராகிய மாசிலாமணி தேசிகரைத் தரிசித்துக்கொண்டு போவார் ; வழக்கப் படியே  ஒருநாள் வந்து தேசிகசுவாமிகளைத் தரிசித்துக் கலந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது சுவாமிநாதத் தம்பிரான் என்பவர் ஆண்டிளையராயினும் அறிவின் முதியவராய் ஒழுக்கம், அன்பு, அருள், வாய்மை அடக்க முதலிய நற்குணங்களின் மிகச் சிறந்தவராயிருத்தலைக் கண்டு இளமைப் பருவத்தே இக்குணங்களெல்லாம் ஒருங்கே அமைந்திருப்பது அருமை!  அருமை!  என்று வியப்புற்று, நாங்கற்றகல்விப் பொருளை இச்சிவனடியார்க்குக் கற்பிப்போமாயின், உலகிற்கு மிகவும் பயன்படுவதன்றியும் நமக்கு இம்மையிற் புகழும், மறுமையில் நற்கதியுங் கிடைக்குமென்று நினைந்து தங்கருத்தை தேசிகசுவாமிகள்பால் விண்ணப்பஞ்செய்து அத்தேசிகசுவாமிகள் ஆக்ஞைபெற்று சுவாமிநாதத் தம்பிரான் அழைத்துத் தமது திருநகர்க்குச் சென்று தமது வீட்டில் அத்தம்பிரான் சுவாமிகளை வசிக்கும்படி செய்து யாதொரு குறைவுமின்றி ஊணுடையாதிகள் உழுவலன்போடு உவப்ப நல்கித் தமிழ் இலக்கண இலக்கியம் அனைத்தும் முறையே கற்பித்து வந்தனர்.  அன்றியும் வடமொழியிலும் வல்லுநராகச் செய்யக் கருதி, திருநெல்வேலிக்குச் சமீபத்திலுள்ள செப்பறைப் பதியில் மகாபண்டிதரா யிருந்த கனகசபாபதி சிவாசாரியரைக் கொண்டு வடமொழி வியாகரண முதலிய வற்றைக் கற்பித்து வந்தனர்.  அத்தம்பிரான் சுவாமிகள் பன்னிரண்டு வருடம் வரையுந் தம்முடைய இயற்றமிழாசிரியரைவிட்டு நீங்காது உடனிருந்து இருவகை மொழிகளையும் உளங்கொளப் பயின்றனர்.

பின்பு மாசிலாமணி தேசிகர், தாம் கல்விச் செல்வராகிய சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகளுக்கு நிருவாணதீக்ஷைசெய்து வீடு பேற்றிற்குக் காரணமாகிய சிவஞான போதமுதலாகிய சித்தாந்த சாத்திரங்களையு பதேசித்தருளினர். அச்சுவாமிகள் அவற்றைச் சிந்தித்துத் தெளிந்து ஞானாசாரியரது அருட் பணிவிடையை அன்போடு செய்து கொண்டு, அணுக்கத்தொண்டராய் அமர்ந் திருந்தனர்.  அக்காலத்தில் அச்சுவாமி கள் தாங்கற்ற இலக்கண விலக்கியங்களில் இலை மறை காய்போல் மறைந்து கிடந்த அரிய விதிகளை எல்லாந் தமது நுண்ணறி வினால் விளங்க எடுத்துத்திரட்டி மீ இலக்கணக் கொத்து என ஒரு நூலியற்றி அதனை அங்குத் தேசிகசுவாமிகள் முன்னிலையில் அரங்கேற்றனர்.

பின்னர் தேசிக சுவாமிகள் தமது ஞானாசாரியசுவாமிகளைத் தரிசித்து நெடுங் காலமானதைத் திருவுளத்திற் சிந்தனை செய்து, அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையிற் பலதிவ்வியஸ்தலங்களிற் சிவபிரானைத் தரிசித்து விரைவிற் சென்று, திருவாவடுதுறையையடைந்து ஞான தேசிகரைத் தரிசித்துக்கொண்டு அங்குச் சில காலம் அமர்ந்திருந்தனர்.

அக்காலத்தில் ஞானதேசிகர், சிவ ஸ்தலயாத்திரை செய்யவும், சீடர்களுக்குத் தீக்கை செய்யவுந் திருவுளங்கொண்டு அங்கு நின்றும் அரிதினீங்கிச் சோழநாட்டின் கண்ணும் பாண்டியநாட்டின்கண்ணும் பற்பஸ்தலங்களைத் தரிசித்துச் சீடர் களுக்குத் தீக்கையாதிகளுஞ் சித்தாந்த சாத்திரோபதேசமுஞ்செய்து சேர நாட்டை யடைந்து அங்கு வழியிடையிற் பலதலங் களையுந் தரிசித்துச் சுசீந்திரத்திற் சென்று, துவிதீய ஆசாரியசுவாமிகளும் தம்பிரான் சுவாமிகளும் ஏனைய அடியவர்களும் உடன் வரத் திருக்கோயிலில் சுவாமி தரிசனஞ் செய்து தமது திருமடத்திற்கெழுந்தருளி, ஞானமூர்த்தியாகிய நமசிவாய தேசி கோத்தமர் பிரதிட்டாலயத்தில் அக்குரு பரனைத் தரிசித்து அங்குவசித்திருந்தனர். அங்ஙனம் வசிக்கும் நாட்களில் அத்திருப்பதியிலே ஓர் ஆவணி மாதத்து உத்தரட்டாதி நட்சத்திரத்திலே உலகுயிர் யாவும் உற்றொடுங்கும் ஒள்ளொளியாகிய ஒருபரன் கழற்கீழெய்தினர்.

 

எட்டாவது மாசிலாமணிதேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

திருவெண்கா டுறைமறையோ  ருச்சிட்டஞ்  சேர்கூவற்  செறிகீ  டங்கள்

பெருகுமுவர்  நீர்கண்டதஞ்சையிறை மகிழவன்பிற்  பிறங்குமாகே

சுரருண்டபரிகலத்தா  லுவர்க்கூப நறுநீராய்ச்  சுரக்க  மேலாம்

அருளுந்து  கோமுத்திக்  குருமாசி லாமணியா  ரடிகள்  போற்றி.

 

மாயிருஞாலத்து மன்பதையுய்ய அருட்பெருஞ்செல்வராய் அமர்ந்திருந்த பிற்குமாரசுவாமி தேசிகர் அருளுபதேசம் பெற்ற மாசிலாமணி தேசிகர் சுசீந்திரத்தின் கண் தமது ஞானாசிரியசுவாமிகள் குருபூசை சிறப்புறவியற்றி, அங்குச் சீடர்களுக்கு ஞானோபதேசஞ் செய்து வருவாராயினர். அங்ஙனம் அடியவர்களுக்கு அருளுபதேசஞ் செய்து அமர்ந்தருளும் ஞானதேசிகர், தாம் அங்கு நின்றும் புறப்பட்டு ஆங்காங்கு யாவருந் தம்மை வழிபட்டுபசரிக்க அவர்க் கெல்லாம் திருவருள் வழங்கி, வழியிடையிற் பற்பல திருக்கோயில்களிற் சிவபிரானை வணங்கி வழிபட்டுக்கொண்டு, திருவாவடு துறையை அடைந்து தேசிகபெருமானாகிய நமச்சிவாயமூர்த்திகள் திருவடிகளை யருச்சித்துக்கொண்டு அங்குச் சீடர்களுக்கு அருளுபதேசஞ் செய்து வருவாராயினர்.

அக்காலத்தில், தமது அடியவர் பல்லோருள்ளுஞ் சிறந்த சிவக்கொழுந்து தம்பிரானுக்கு ஆசாரியாபிடேகஞ் செய்து தமக்குத் துவிதீய ஆசாரியராக வைத்து, மெய்கண்ட சாத்திரம் பண்டார சாத்திரங் களின் நுண்மைப் பொருள்கள் விளங்க உபதேசித்தருளினர்.  அங்ஙனம் அருளு பதேசம் பெற்ற துவிதீய ஆசாரியராகிய சிவக்கொழுந்து தேசிக சுவாமிகள், ஞான தேசிகருடன் ஒருங்கிருந்து அத்தேசிகர் திருவருளாணை மேற்கொண்டு பற்பல மாணவர்களுக்கு வேதாந்த சித்தாந்த சமரச நுண்பொருள்களைத் தெளிவுற உபதேசித்து வருவாராயினர்.

அக்காலத்தில் பாண்டிய வள நாட்டில் தேவாரத் திருப்பதிகம் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாகிய திருப்புன வாயிலுக்கு மேற்கில் மூன்று கடிகை தூரத்திலுள்ள சிறுகம்பையூரினில் உதித்த வரும், குன்றக்குடி என்று பெயர் வழங்கும் மயூரகிரியிலெழுந்தருளியிருக்கும் முருகப் பெருமான்மீது கோவையயன்னும் பிரபந்த மியற்றிய சாந்துப்புலவர்க்கு மூன்றாவது பிதாமகரும் ஆகிய சர்க்கரைப் புலவர், சிறிய பிராயத்திலே திருவாவடுதுறையையடைந்து,  ஞானதேசிகரையுந் துவிதீய ஆசாரியராகிய சிவக்கொழுந்து தேசிகரையுந் தரிசித்து, அங்கு உபயதேசிகசுவாமிகள் திருவருள் பெற்றுத் துவிதீய ஆசாரிய சுவாமிகள்பால் கல்விபயின்று மகாவித்துவசிரோமணியாகி விளங்கியிருந்தனர்.  இவரது கல்வியறிவின் றிறமையைக் கேள்வியினால் நன்கறிந்த இராமநாதபுரம் இரகுநாதசேதுபதி என்பவர் ஞானதேசிகரிடத்துத் தெரிவித்து வர வழைத்து அவரைத் தமது சமஸ்தான வித்துவானாக வைத்துக்கொண்டனர்.

பின்பு ஞானதேசிகர் பாண்டி நாட்டின் கண்ணும் சேரநாட்டின்கண்ணு முள்ள தமது சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்யத் திருவுளங்கொண்டு துவிதீய ஆசாரியராகிய சிவக்கொழுந்து தேசிக சுவாமிகளும், ஏனயை அடியவர்களும், உடன் வர அங்குநின்றும் புறப்பட்டு, வழியிடையிற் பலதலங்களையுந் தரிசித்து, ஆங்காங்குத் தம்மைச்சரண்புகும் பக்குவச் சீடர்களுக்கு ஞானோபதேசஞ் செய்து, சுசீந்திரத்தை யடைந்து, திருக்கோயிலிற் சென்று சிவபிரானைத் தரிசித்துத், தமது மடாலயத்தை யடைந்து, ஆதீன முதற் குரவராகிய பஞ்சாக்கர மூர்த்தியின் பிரதிட்டாலயத்தைச் சார்ந்து வழிபாடியற்றி, இருகுமாரசுவாமி தேசிகர் குருமூர்த்தங் களைப் பணிந்து அங்குச் சிலநாள் வசித் திருந்து, துவிதீய ஆசாரியரை அவ்விடத் தமர்ந்து சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து வருமாறு ஆணையளித்துத் தாம் அங்குநின்றும் புறப்பட்டுத் திருவாவடு துறையையடைந்து, திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ் செய்து, தமது திருமடத்திற் கெழுந்தருளிச் சிவப்பிரகாச விநாயகரையுந், திருமாளிகைத் தேவரையும், ஆதீன பரம முதற்குரவராகிய நமசிவாய தேசிகோத்த மரையுந் தரிசித்து வழிபாடியற்றி, ஒடுக்கத்திற் சென்று யாவருக்குங் குரு தரிசனக்காட்சியளித்து அங்கு அமர்ந்தருளு வாராயினர்.  இஃதிங்ஙனமாக.

ஞானதேசிகர் திருவருளாணை சிர மேற்கொண்டு சீடர்களுக்குத் தீக்கை யாதிகள் செய்து சுசீந்திரத்தில் வீற்றிருக்குஞ் சிவக்கொழுந்துதேசிகர், சிலகாலஞ்சென்று ஞானாசாரியரைத் தரிசித்தற்குப் பெரிதும் ஆசைகொண்டு அங்குநின்றும் புறப்பட்டு, விரைவில் திருவாவடுதுறையைச் சேர்ந்து திருக்கோயிலையடைந்து சுவாமி தரிசனஞ் செய்து, தமது திருமடத்திற்சென்று சிவப்பிரகாச விநாயகரையுந்,  திருமாளிகைத் தேவரையும், ஞானநடராசப் பெருமானை யும், நமசிவாயமூர்த்தியையுந் தரிசித்து ஒடுக்கத்திற்சென்று, தமது ஞானதேசிக சுவாமிகளைக் கண்டு வணங்கி, மகிழ்வோடு அங்குவசித்திருந்தனர்.  அங்ஙனம் வசிக்கும் நாட்களில் அத்திருப்பதியிலே ஓர் மார்கழி மாதத்து மூலநட்சத்திரத்திலே அத்தேசிக சுவாமிகள் சிவபரிபூரணமுற்றனர்.

பின்பு ஓர் சுபதினத்தில் ஞானதேசிகர் திருமழபாடியிலே ஆளுடையபண்டாரம் என்பவருக்கு இரண்டாவது புத்திரராக அவதரித்து இளமைப்பருவத்தே தம்மை வந்தடைந்து அருளுபதேசம்பெற்று அடியவர் பல்லோருள்ளும் சிறந்து விளங்கும் இராமலிங்க தம்பிரானுக்கு ஆசாரிய பிடேகஞ் செய்துவைத்தனர்.

பின்பு ஞானதேசிகர், சிவத்தல யாத்திரை செய்யவும் சீடர்களுக்குத் தீக்கை யாதிகள் செய்யவுந் திருவுளங்கொண்டு, அங்கு நின்றும் அரிதினீங்கி, சோழ நாட்டின் கண்ணும்பாண்டிய நாட்டின் கண்ணும் பற்பல ஸ்தலங்களைத் தரிசித்துச் சீடர் களுக்குத் தீக்கையாதிகளும், சித்தாந்த சாத்திரோபதேசமுஞ்செய்து கொண்டு சேரநாட்டையடைந்து, அங்கு சில திவ்விய ஸ்தலங்களைத் தரிசித்துக்கொண்டு, சுசீந்திரத்தைச் சேர்ந்து, சிலநாள் அங்கு வீற்றிருந்து, தமக்குப் பிற்றோன்றலாகிய இராமலிங்க தேசிகசுவாமிகளை அவ்விடத்து சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து கொண்டு வசிக்குமாறு பணித்து, தாம் அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையே சிலதிவ்விய ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருநெல்வேலியையடைதலும்,  அங்கு மயிலேறும் பெருமாள் பிள்ளை முதலிய அன்பர்களும், ஏனையோரும் வணங்கி எதிர்கொண்டு அழைத்துவரத், தாம் திருக்கோயிலிற் சென்று சிவபெருமானைத் தரிசித்து தமது ஈசான மடாலயத்தை யடைந்து அங்கு யாவருக்கும் திருவருட் பிரசாதம் நல்கி எழுந்தருளியிருந்தனர்.

அங்ஙனம் ஞானதேசிகர் அங்கெழுந் தருளியிருக்கும் நாட்களில், மயிலேறும் பெருமாள்பிள்ளை முன் தம்மிடத்தே தமிழ் இலக்கண முதலிய கருவி நூல்களனைத்துங் கசடறக் கற்றுவந்தவராகிய சுவாமிநாத தம்பிரான்சுவாமிகள் ஞானதேசிகர் பால் சித்தாந்த ஞான நூல்களனைத்துமோதி முற்றத்தெளிந்த முனிவராய் அமர்ந்திருப் பதைத்தேர்ந்து பெரிதும் மகிழ்வுற்று, ஞான தேசிகரிடத்துத்தாம் அச்சுவாமிகளைக் குறித்துப் பலவாறு விதந்து கொண்டு, இந்த மகாத்துமாவை ஞானாசிரியமூர்த்தியாய் எழுந்தருளியிருக்கக்கண்டு தரிசிக்க வேண்டு மென்று மிகுந்த காதலோடு விண்ணப்பஞ் செய்தனர்.

பின்பு ஞானதேசிகர், மயிலேறும் பெருமாள்பிள்ளை விண்ணப்பஞ் செய்து கொண்டபடியே சுவாமிநாத தம்பிரான் சுவாமிகளுக்கு ஆசாரியாபிடேகஞ் செய்யத் திருவுளத்திற்கொண்டும், சின்னப்பட்டத் திற்கு ஆசாரியாபிடேகம் பெற்ற பண்டாரச் சன்னிதியிருந்தமையால்,அச்சுவாமி களுக்குச் சங்காபிடேகஞ் செய்து ஈசான தேசிகர் என்று அபிடேகச் சிறப்புப் பெயருங் கட்டளையிட்டு, அத்திருப்பதியிலே சீடர் களுக்குத் தீக்கையாதிகள் செய்து கருவி நூல்களும், வீட்டுநெறி நூல்களும் கற்பித்து வசித்திருக்குமாறு செய்து, தாம் அங்கு நின்றும் புறப்பட்டுப்போந்து, வழியிடைப் பட்ட பற்பல திருத்தளியின் கண்ணும் சிவபிரானை வழிபட்டுக் கொண்டு திருவா வடுதுறையைச் சேர்ந்தருளினர்.  அங்கு ஞானதேசிகர் நாடோறும் கோமுத்தீ சுரரையும், சிவப்பிரகாச விநாயகரையுந், திருமாளிகைத் தேவரையும் மெய்யன் பினால் வழிபட்டு சிவபூசை, குருபூசை, மாகேசுர பூசையுஞ் சிறப்புறச் செய்து கொண்டும், சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து சித்தாந்த சாத்திரோபதேசஞ்செய்து கொண்டும் வருவாராயினர்.  இதுநிற்க.

திருநெல்வேலியில் ஈசான மடால யத்தில் எழுந்தருளியிருக்கும் ஈசான தேசிகர் என்று சிறப்புத் திருநாமம் பெற்ற சுவாமி நாததேசிகர், பெருமையிற் சிறந்த மயிலேறும் பெருமாள்பிள்ளை முதலானோர்க்கு மனத்துவகை பெருகுமாறும், மன்பதையுய்யு மாறும், தீக்கையாதிகள் சிறப்புறச் செய்து சங்கரநமச்சிவாயர் முதலான நன்மாணாக்கர் பலர்க்கு இயற்றமிழ் நூல்களும், வீட்டு நெறி நூல்களும் கசடறக்கற்பித்து வருவாராயினர்.  அன்றியும் திருச்செந்திற்கலம்பகம் முதலிய பிரபந்தங்களியற்றியருளினர்.

பின்பு ஈசான தேசிகர், சிலகாலஞ் சென்று ஞானதேசிகரைத் தரிசிக்க வேணவா வுற்று அங்குநின்றும் புறப்பட்டு வழியிடை யில் பற்பல ஸ்தலங்களைத் தரிசித்துத் திருவா வடுதுறையை யடைந்து திருக்கோயிலிற் சென்று சிவபிரானைத் தரிசித்து, அதன் தென்பாங்கர் விளங்குஞ் சித்தர் திருமடம் என்று பெயர் வழங்குந் தமது திருமடத்திற்கு வந்து அம்மடத்தின் வடக்குவாசலின் மேல்பாற் கோயில் கொண்டெழுந் தருளியிருக்குஞ் சிவப்பிரகாச விநாயகரைத் தரிசித்து, உள்ளே சென்று திருமாளிகைத் தேவரையும், மீஞானநடராஜப் பெருமானை யும், ஞானமூர்த்தியாகிய நமச்சிவாய தேசிகோத்தமரையுந்தரிசித்து ஒடுக்கத்திற் சென்று ஞான தேசிகரைத் தரிசித்து அங்குச் சிலகாலம் வசித்திருந்து, பின் சிதம்பரம் முதலாகிய ஸ்தலங்களைத் தரிசிக்க

அவாவுற்று,ஞான தேசிகரிடத்துத் தெரிவித்து விடைபெற்றுத், திருவாவடுதுறையினின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பல ஸ்தலங் களைத் தரிசித்து, சிதம்பரஞ் சென்று ஞான நடராஜப்பெருமானைத் தரிசித்து அங்கு சில நாள் வசித்திருந்து, பின் திருக்களாஞ் சேரியிலும் கொற்றவன்குடியிலுஞ் சென்று மறைஞானசம்பந்த சிவாசாரிய  சுவாமிகள், உமாபதிசிவாசாரியசுவாமிகள், அருணமச் சிவாய தேசிக சுவாமிகள் குருமூர்த்தங்கள் தரிசித்து, அரிதினீங்கி வழியிடையிற் பல ஸ்தலங்களைத் தரிசித்து திருத்துறையூரை யடைந்து திருக்கோயிலிற் சென்று சிவ பிரானைத் தரிசித்து, அருணந்தி சிவாசாரிய சுவாமிகள் குருமூர்த்தந் தரிசித்து அங்குச் சிலநாள் வசித்திருந்து, பின் அத்தலத் தினின்றும் அரிதினீங்கி திருவதிகை முதலிய ஸ்தலங்களைத் தரிசித்துத் திருவெண்ணெய் நல்லூரையடைந்து, திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ்செய்து, திருநந்திதேவர்க்கு ஐந்தாவது பிற்றோன்றலாகியும் தமது ஞான தேசிகர்க்குப் பதினான்காவது முற்றோன்ற லாயுமுள்ள மெய்கண்ட சிவாசாரிய சுவாமிகள் திருக்கோயில் கொண்டெழுந் தருளியிருக்குந் தமது திருமடத்திற் கெழுந்தருளி, மெய்கண்ட சிவாசாரிய சுவாமிகள் குருமூர்த்தந்தரிசித்து வழிபாடி யற்றி அங்குச் சிலகாலம் வசித்திருந்து அரிதீனீங்கி, பின் திருக்கோவலூர் முதலிய ஸ்தலங்களைத் தரிசித்து, திருவண்ணாமலையையடைந்து திருக்கோயிலிற் சென்று,  அருணாசலேசுரரையும் உண்ணாமுலையம்மையையுந் தரிசனஞ் செய்து, அத்தலத்து அன்பர்கள் விரும்பியவாறு அவர்களால் அமைக்கப்பட்ட திருமடத்திற்கெழுந்தருளி அங்கமர்ந்து தினந்தோறுந் திருக்கோ யிலுக்குச்  சென்று சுவாமி தெரிசனஞ் செய்து கொண்டும், சீடர்களுக்கு தீக்கையாதிகள் செய்து கொண்டும் அங்கமர்வாராயினர்.  அங்ஙனம் எழுந்தருளியிருக்கும் தேசிக சுவாமிகள், தசகாரியம் எனப் பெயர்தந்து ஞான நூலொன்றியற்றியருளினர்.  பின்னர் சிலகாலஞ்சென்று அத்திருப்பதியிலே ஓர் கார்த்திகை மாதத்து உத்தரநக்ஷத்திரத்திலே அண்ணாமலையாரடியிணைமலர் அடைந்தனர்.

பின்பு அடியவர்கள் அத்திவ்விய ஸ்தலத்திலே அத்தேசிக சுவாமிகளுக்கு சமாதிக்கிரியை தசதினத்திலுஞ் சிறப்புறச் செய்து முற்றியபின் அவ்வடியவர்களி லொருவர் அத்தேசிகசுவாமிகள் குருமூர்த்தத் தின் பூசையின்பொருட்டு அங்கமர்ந்திருப்ப ஏனைய அடியவர்கள் அத்தேசிகசுவாமிகளது ஆன்மார்த்த பூசையை யயழுந்தருளப் பண்ணி திருவாவடுதுறைக்கு வந்து ஞானா சிரியராகிய மாசிலாமணி தேசிகரைத் தரிசித்து, ஈசான தேசிகசுவாமிகள் பரிபூரண முற்றமையை விண்ணப்பித்தனர்.  பின்பு ஞான தேசிகர் அத்தேசிகசுவாமிகளது ஆன்மார்த்தபூசையைத் மீ திருநெல்வேலியில்  ஈசான மடத்திலே எழுந்தருளப்பண்ணி மூவகைத் தீக்கையும் முறையாகப் பெற்ற முனிவர் சிரேஷ்டராய் விளங்கும் தம்பிரான் சுவாமிகளாகிய முதியோரொருவரை பூசை செய்துவருமாறு கட்டளையிட்டருளினர்.  இது நிற்க.

பின்பு ஞானதேசிகர், முன்போலச் சீடர்களுக்குச் சித்தாந்தோபதேசஞ் செய்து வருநாட்களில், ஓர்நாள் இரவிலே பேயுமுறங்கும் அத்தயாமத்திலே தஞ்சை நகரத்து மன்னவர் பஞ்சம வேடம்பூண்டு திருவாவடுதுறைக்குச் சென்று ஞானதேசிகர் மடாலயத்தின் புறத்தேநின்று, ஓ சுவாமி! அடியேனைப்  பசிவருத்துகின்றதேயயன்று பேரொலியிட்டழைத்தனர்.  அப்பொழுது ஒடுக்கத்திலே சிவத்தியானத்தோடு அறி துயிலமர்ந்த ஞானதேசிகர், ஓலமிட்டழைப் பவன்  நீசன்என்றும், பசியினால் வருந்தி யழைக்கின்றான் என்றும் உணர்ந்து, தாமே மடைப்பள்ளியிற் புகுந்து ஒரு பாத்திரத்தில்  அன்னமுங் கறிமுதலியவுமெடுத்து வைத்துத் தலைவாயிற் கதவைத்திறந்து புறத்தே வந்து தூரத்தே அப்பாத்திரத்தைவைத்துப் பசி நீங்கப் புசிக்கும்படியருமையாகச் சொல்லி விட்டுத் தாம் மடாலயத்தில் எழுந்தருளினர்.  பின்பு காலையில் ஞானதேசிகர் தமது திருவணுக்கத்தொண்டர்களில் ஒருவரை அழைத்து இரவு பஞ்சமனுக்கன்னமிட் டெஞ்சிய பதார்த்தங்கள் யாவையும் அப்புறப்படுத்தி, புண்ணியாகவாசனஞ் செய்து பாகஞ்செய்கவென ஆஞ்ஞா பித்தனர்.  இஃதிவ்வாறாக.

அரசர் அப்பாத்திரத்தைச் சேமித்து வைத்து, தருமபுரஞ்சேர்ந்து பேரொலியிட்டு பிக்ஷைகேட்டனர்.  அப்பொழுது பண்டாரக் கட்டிலிலே திருவடிச்சிந்தனையோடு சயனித் திருந்த பண்டாரச்சன்னிதிகள், பிக்ஷை கேட்பவன் பஞ்சமன்போலும் என்று திருவுளங்கொண்டு,மடாலயத்திலே நீசனுக்குப் பிக்ஷையிட மாட்டார்களென்று சொல்லிப் போக்கிவிட்டார்கள்.  இங்ஙனம் இரவில் நிகழ்ந்த செய்திகளை அரசர், தஞ்சை நகரம் சேர்ந்து மீமீஅத்தாணிமண்டபத்தில் வீற்றிருந்து சமஸ்தரும் அறியச்செய்தனர். இஃதிவ்வாறாக.

சுசீந்திரத்தின்கண் சின்னப்பட்டத் தில் எழுந்தருளியிருக்கும் துவிதீய ஆசிரிய ராகிய இராமலிங்க தேசிகர் சில காலஞ் சென்று தமது ஞான தேசிகரைத் தரிசிக்கப் பேரவாவுற்று அங்குநின்றும் புறப்பட்டு வழியிடையிற் பலஸ்தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறையை யடைந்து, திருக் கோயிலிற்சென்று சுவாமிதரிசனஞ் செய்து தமது திருமடத்திற்கு வந்து, சிவப்பிரகாச விநாயகரையுந் திருமாளிகைத் தேவரையும் ஞான நடராஜப்பெருமானையும் ஞான மூர்த்தியாகிய நமசிவாய தேசிகோத்த மரையுந் தரிசித்து, ஒடுக்கத்திற்சென்று தமது ஞானாசிரியசுவாமிகளைக் கண்டு வணங்கி வழிபட்டு அங்கு வசித்திருந்தனர்.

பின்பு சிலகாலஞ்சென்று ஞான தேசிகர், சந்தான முதற்குரவராகிய திருநந்தி தேவர்க்கு ஐந்தாவது பிற்றோறலாகிய மெய் கண்டசிவாசாரியசுவாமிகள் குருமூர்த்தஞ் தரிசனஞ் செய்யத் திருவுளங்கொண்டு, ஆதீன முதற்குரவராகிய நமச்சிவாயதேசி கோத்தமரை வணங்கி விடைபெற்று, துவிதீய ஆசாரியராகிய இராமலிங்க தேசிகரும், தம்பிரான் சுவாமிகளும், ஏனைய அடியவர்களும், உடன்வரத் திருத்துருத்தி முதலிய ஸ்தலங்களைத் தரித்துத் திரு மூவலூரையடைந்து. திருக்கோயிலிற்சென்று சிவபிரானையும், உமாதேவியாரையுந் தரிசனஞ்செய்து நமச்சிவாய சற்குரவர் திருவவதாரஞ் செய்தருளிய கிருகமாகிய தமது திருமடத்தின் பாங்கரணைந்து, மடத்தின் திருவாயிலிற் பணிந்துபரவி உள்ளேசென்று, அங்கு அன்பர்கள் போற்ற சிலநாள் வசித்திருந்து அரிதினீங்கி வழியிடையிற் பல தலங்களையும் பணிந்து பரவிச் சிதம்பரஞ்சென்று, சிற்சபேசனைத் தரிசனஞ்செய்து சந்தான குரவரெண்மரு ளொருவராகிய உமாபதி சிவாசாரிய சுவாமிகள் திருவவதாரஞ் செய்தருளிய கிருகமாகிய தமது திருமடத்தின் பாங்கரணைந்து திருவாயிலிற் பணிந்துபரவி உள்ளே சென்று, மீமெய்கண்டசிவாசாரிய சுவாமிகள் பிரதிட்டாலயத்தைச் சார்ந்து, வணங்கி வழிபாடியற்றி அங்குச்சிலநாள் வசித்திருந்து, அங்குநின்றும் அரிதினீங்கித் திருக்களாஞ்சேரியிலும் கொற்றவன் குடியிலும் நிஷ்டையில் வீற்றிந்தருளும் மறைஞானசம்பந்த   சிவாசாரியசுவாமிகள், உமாபதிசிவாசாரியசுவாமிகள், அருணமச் சிவாயதேசிகசுவாமிகள் குருமூர்த்தந் தரிசித்து, திருமுனைப்பாடி நாட்டை யடைந்து, திருப்பெண்ணாடகம் முதலிய ஸ்தலங்களைத் தரிசித்துத் திருவண்ணா மலையையடைந்து, உண்ணாமுலையம்மை யையுந் தரிசித்துக்கொண்டு தமது ஈசான மடத்தையடைந்து, திரிதீயஆச்சாரியராகிய சுவாமிநாததேசிகசுவாமிகள் குருமூர்த்தந் தரிசித்து அங்குச் சிலநாள் வசித்திருந்து, திருக்கோவலூர் முதலிய ஸ்தலங்களைத்  தரிசித்து, திருவெண்ணெய்நல்லூரைச் சார்ந்து திருக்கோயிலிற் சென்று, சிவ பிரானையும், உமாதேவியாரையும், பொல்லா விநாயகரையும் மீமீபுரிவுடன் வணங்கித் தமது திருமடத்திற்குச் சென்று மெய்கண்ட சிவாசாரியசுவாமிகள் குருமூர்த்தம் வணங்கி வழிபாடியற்றி அங்குசிலகாலம் சீடர் களுக்குத் தீக்கையாதி களும் சித்தாந்த சாத்திரோபதேசஞ்செய்து வீற்றிருந்தருளினர்.

பின்னர் ஞானதேசிகர், அங்கு நின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பல ஸ்தலங்களைத் தரிசித்துத் திருத்துறையூரை யடைந்து திருக்கோயிலிற் சென்று சிவபெரு மானையும், உமாதேவியாரையும் பணிந்து பரவி, சந்தான குரவரெண்மரிலொரு வராகிய அருணந்திசிவாசாரியசுவாமிகள் குருமூர்த்தந் தரிசித்துத் தமது திருமடத்திற் கெழுந்தருளி, அங்குச் சீடர்களுக்குத் தீக்கை யாதிகளும் சித்தாந்த சாத்திரோபதேசமுஞ் செய்துகொண்டு சிலநாள் வசித்திருந்து, அங்குநின்றும் அரிதினீங்கி, வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை யடைந்து, சிற்சபேசனைத் தரிசனஞ் செய்து சிலநாள் அங்கு வசித்திருந்து,  அங்கு நின்றும் புறப்பட்டு சீகாழி முதலிய பலதலங்களையுந் தரிசித்து, திருவெண்காடு என்னும் திவ்விய ஸ்தலத்தையடைந்து, திருக்கோயிலிற் சென்று சிவபிரானையும் உமாதேவியாரையும் பணிந்து பரவிச் சந்தான குரவரெண்மரி லொருவராகிய மெய்கண்ட சிவாசாரிய சுவாமிகள் திருவவதாரஞ் செய்தருளிய கிருகமாகிய தமது மீமீமீதிருமடத்தின் பாங்கரணைந்து, திருவாயிலைப் பணிந்து பரவி, உள்ளே சென்று, தமக்குரிய நித்தியபூசை முதலியவை செய்துகொண்டு அங்கு சிலகாலம் வசித்திருந்தனர்.

அப்பொழுது தஞ்சைநகர் வேந்தர், ஒரு புண்ணிய காலத்தை முன்னிட்டு, காவேரிசங்கம ஸ்நானஞ் செய்தற்கு அங்கு வந்தனர்.  ஞானதேசிகர் திருவருட் செயலினை முன்னரேயுணர்ந்த அவ்வரசர் அவ்வாசாரியசுவாமிகள் அங்கு எழுந்தருளி யிருத்தலைக் கேள்வியுற்று, அத்திரு மடத்திற்குச் சென்று ஞானதேசிகரைக் கண்டு அளவளாவிக்கொண்டு, பின் சகல விருதுவாத்தியங்களுடன் ஞான தேசிகரை யும், துவிதீய ஆச்சாரியராகிய இராமலிங்க தேசிகசுவாமிகளையும் தனித்தனிச் சிவிகை யில் ஆரோகணித்துவரச் செய்வித்துத் தாம் ரத கஜதுரகபதாதிகளுடன் இரதமூர்ந்து காவிரிபூம்பட்டினஞ்சென்று, ஞானதேசி கருடன் தீர்த்தமாடி, திருக்கோயிலிற்சென்று சிவபெருமானையும் உமாதேவியாரையுந் தரிசித்துத் திருவெண்காடு சேர்ந்தனர்.

பின்னர் ஞானதேசிகரும், அரசரும் தினந்தோறும் சோமசூரியாக்கினி என்னும் முக்குளதீர்த்தமாடி, திருக்கோயிலிற் சிவபிரானையும் உமாதேவியாரையும் தெரிசனஞ் செய்து கொண்டும், ஞான சாஸ்திர   ஆராய்ச்சிசெய்துகொண்டும் அங்கு வசித்திருந்தனர். அக்காலத்தில், ஓர்நாள் அரசர் ஞானதேசிகரை நோக்கி, உலகில் மிகுதியாக பிராமணசமாராதனையாகிய தர்மமேநிலவுகின்றது. மாகேசுரர்பூசை என்னுஞ் சிவனடியார் சமாராதனை அங்ஙனமின்றி உபாயமாக நிலவுகின்றது. இவற்றின் மகிமைகளை எவ்வாறுணரலா மென்று விண்ணப்பஞ்செய்ய, ஞானதேசிகர் புன்முறுவல்கொண்டு அரசரைநோக்கி அவற்றின் மகிமைகளை முதலில் காட்சிப் பிரமாணம் ஒன்றினின்வைத்து நமது மனங்கொள்ளத் தெருட்டுவோம். அரசரே! ஒரு மண்டலங்காறும் பிராமணர்க்கும், மாகேசுரர் எனப்படும் சிவனடியார்க்கும்,  அன்னமிடுதலாகிய சமாராதனையைச் செய்வித்து, அவ்விருவகையோரும் உண்ட உச்சிட்ட இலைகளை உவர்க்கூபம் இரண்டினிற்றனித்தனிபோடச் செய்து, உவர்நீங்கி நறுநீர் சுரந்திருப்பதைத் தேர்ந்து அவற்றின் விசிட்டத்தினை அறிந்துகொள்வீ ராகவெனத் திருவாய்மலர்ந்தருளினர். அரசர் அவ்வாறு செய்து, இறுதியிலே அவ்விரண்டு கூபங்களையும் தூர்வை யயடுத்து ஆராய்ந்தனர். அப்போது பிராமணர்கள் போஜனஞ் செய்த பரிகலமாகிய உச்சிட்ட இலைபோட்ட அக்கிணறு புழுக்கள் மலிந்து உவர்நீராகவே இருந்தது; மாகேசுரர் எனப்படுஞ் சிவனடியார்கள் போஜனஞ் செய்த பரிகலமாகிய உச்சிட்ட  இலைபோட்ட அக்கிணறு உவர் நீங்கிக் கங்காஜலம்போல நறுநீர் சுரந்து பெருகியது. அரசர் வியப்புற்று, அக்கிணற்றுக்குப் பரிகலக்கிணறு என்று நாமமிட்டு மகிழ்வு கூர்ந்தனர்.

பின்பு, அவ்வரசர் ஞானதேசிகர்பாற் சென்று தரிசித்து, அன்பு கூர்ந்து மாகேசுரர் பூசை விதியினையும் அதன் மகிமையையும் விதந்து விளம்பியருள வேண்டுமெனப் பிரார்த்தித்து விண்ணப்பஞ் செய்தனர். ஞானதேசிகர் திருவருள்கூர்ந்து அதன்விதி யினையும், அதன் மகிமையையும் திருவாய் மலர்ந்தருள்வாராயினர்.

புண்ணியங்களுள்ளே சிவபுண்ணியஞ் சிறந்தது. சிவபுண்ணியங்களுள்ளே சிவபூசை சிறந்தது.சிவபூசையினுஞ்சிறந்தது மாகேசுவர பூசை. மாகேசுரராகிய சிவனை வழிபடும் அடியார் மாகேசுரர் எனப் படுவார்கள். மாகேசுரபூசையாவது, மாகே சுரர்களை விதிப்படிபூசித்து அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாம். மாகேசுரபூசை செய்யும் முறைமை கூறுதும். அரசனே! கேட்பாயாக, சிவனடியார்களைத் தூரத்தே கண்டவுடனே அவர்களுடைய சாதியையும் குணத்தையும் ஆராயாமல் விபூதி ருத்திராக்ஷ முதலிய சிவவேடமே பொருளெனக் கொண்டு, அவர்களை மனிதர் எனக்கருதாது சிவன் எனவே புத்திபண்ணி, இருக்கைவிட்டு எழுந்து, அகமகிழ்ச்சியோடும், முகமலர்ச்சி யோடும் குவித்தகைகளையுடையவராய் விரைந்து எதிர்கொண்டு, அவர்களுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து கரகநீர்கொண்டு அவர்களது திருவடிகளை விளக்கி அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து உள்ளும்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினால் ஒற்றி, அவர்களை ஆசனத்திலே இருத்தி, பத்திரபுஷ்பங்களாலே பூசித்து, தூபதீபங்காட்டி, பூமியில் விழுந்து நமஸ்கரித்து கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என அறுவகைச் சுவையுடையனவாய் உண்ணப்படுவது தின்னப்படுவது நக்கப்படுவது பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் பிரீதிப்படி அமுதுசெய்வித்து, சரீரம் எடுத்ததினாலே பெறும்பயனை இன்றன் றோ பெற்றேனென்று சற்கார வசனஞ் சொல்லி, அவர்கள் போம்பொழுது அவர்களுக்குப்பின் பதினான்கு அடிபோய் வழிவிடுக. சிவனடியார்களைச் சாதிகுணம் குறியாது சிவனெனவே புத்திபண்ணல் வேண்டும் என்பதற்குப் பிரமாணம் சிவதருமோத்தரம்:

“”புலையரேயயனினுமீசன் பொலன்கழலடியிற்புந்தி

நிலையரேலவர்க்குப் பூசை நிகழ்த்துதல் நெறியேயயன்றும்

தலையரேயயனினு மீசன்றாமரைத்தாளினேச

மிலரெனின யற்றுமப் பூசைப்பலந்தருவாரேயாரே”

எனவும், பிரமோத்தரகாண்டம் :

“”எள்ளற் படுகீழ்மக்களெனுமிழிந்தகுலத் தோரானாலும்

வள்ளற்பரமன்திருநீ றுமணியுமணிந்தமாண்பினரை

யுள்ளத்துள்ளே யிருபோது முணர்ந்து தெருண்டு  சிவனெனவே

கொள்ளத் தகையவறிவினசேபிறவிக்கடலிற் குளியாதார்”

எனவும், சைவசமயநெறி: “”தேசிகர்தம்மைச் சிவநேசர் தம்மையு, மீசனெனவே  யுள்ளத்துளெண்” எனவும் வரும்.

இம்மாகேசுரபூசையிற் சிறந்த புண்ணியம் பிறிதொன்றுமில்லை. அது “”அதிகநல்லறநிற்பதென்றறந் தனையறுத்து, ளதிகமாஞ்சிவபுண்ணியஞ்சிவார்ச்சனையவற்று ளதிகமாஞ்சிவபூசையுளடியவர்பூசை, யதிகமென்ற றிந்தன்பரையருச்சனை செய்வாய்”  என்னுந் திருவிளையாடற் புராணத் தினானும்,

“படமாடக்கோயிற் பகவற்கொன்றீயின், நடமாடக்கோயினம் பர்க்கங்காகா, நடமாடற்கோயினம்பர்க் கொன்றீயின், படமாடக்கோயிற்பகவற் கதாமே’ எனவும், “”தண்டறுசிந்தைத்த போதனர்தாமகிழ்ந் துண்டது மூன்று புவனமுமுண்டது, கொண்டது மூன்று புவனமுங்கொண்ட தென், றெண்டிசை நந்தியயடுத் திசைத் தானே” எனவும், “”அகரமாயிரமந் தணர்க் கீயிலென், சிகர மாயிரஞ் செய்து முடிக்கி லென், பகருஞானி பகலூண் பலத்துக்கு, நிகரிலையயன்பது நிச்சயந்தானே” எனவும், “”ஆறிடுவேள்வியரு மறை நூலவர் கூறிடுமந்தணர்கோடி பேருண்பதின் நீறிடுந்தொண்டர்நினைவின் பயனிலே பேறெனிலோர்பிடிபேறது வாகுமே” எனவும், “”மாத்திரையயான்றினின் மன்னியமர்ந்துறை  யாத்தனுக்கீந்தவரும் பொருளானவை மூர்த்திகள் மூவர்க்கு மூவேழ்குரவர்க்கும் தீர்த்தமதாமதுதேர்ந்து கொள்ளீரே”  எனவும்  “”வித்தகமாகிய வேடத் தருண்டவூண் அத்தனயன்மாலருந்திய வண்ணமாஞ் சித்தந்தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாமென்று நம்மூலன் மொழிந்ததே” எனவும் கூறுந் திருமந்திரத்தினாலும், “”மட்டிட்டபுன்னையங்கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரமமர்ந்தா  னொட்டி ட்டபண்பினு ருத்திரபல்கணத்தார்க்  கட்டிட்டல் காணாதேபோதி யோபூம்பாவாய்” என்னும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்தாலும், சோணாசலத்தில் உயர்ந்த க்ஷேத்திரம் இல்லை. பஞ்சாக்ஷரத்தில் உயர்ந்த மந்திரமில்லை. மாகேசுரதருமத்தில் உயர்ந்த தருமம் இல்லை.  சிவாகமத்தில் உயர்ந்த சாஸ்திரம் இல்லை என்னும் அருணாசலமான்மியத்தினாலும் அறிக. இல்வாழ்கையின் பயன் இம்மாகேசுர பூசையேயாம். அது “”மறமலியுலக வாழ்க்கையே வேண்டும் வந்து நின்னன்பர் தம்பணியா, மறமதுகிடைக்கின்” என்னும் தாயுமானசுவாமி திருவாக்கால் அறிக. அரசனே! இம்மாகேசுரபூசையின் மகிமை முற்றும் விதந்தோதின் மிகவும் விரியும். ஆகலின் விரிவஞ்சி ஒருசிறிது சுருக்கிக் கூறினாம் எனத் திருவாய்மலர்ந்தருள, அரசன்கேட்டு மிகமகிழ்ந்து மாகேசுர பூசையின் பொருட்டு அம்மடாலயத்திற்கு  சர்வமானிய நிலமும் சாசனஞ்செய்து கொடுத்தனர். பின்பு அவ்வரசர், ஞான தேசிகருடன் அளவளாவி சிலகாலஞ் சித்தாந்த சாஸ்திர விசாரணை செய்து கொண்டிருந்து விடைபெற்றுத் தமது நகரஞ் சென்று வாழ்ந்திருந்தனர்.

பின்பு ஞானதேசிகர், தமிழுலகின் கண் சன்மார்க்க வொழுக்கந் தலையயடுத் தோங்கும் வண்ணம் தவமுதல்வராகிய மெய்கண்டாரைத் தந்தருளிய கருணாநிதி யாகிய சுவேதவனப்பெருமானையும் பிரம வித்தியா நாயகியையும் பிரிந்து செல்லுதற்குச் சிறிதுந் திருவுளமிசையாமையின்; அத்தலத்திலே எழுந்தருளியிருந்துகொண்டு காலந்தோறுந் துவிதீய ஆசிரியராகிய இராமலிங்க தேசிகசுவாமிகளும், தம்பிரான் சுவாமிகளும் ஏனைய அடியார்களும் உடன் வரத்திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ் செய்துகொண்டும், தம்பால்வரும் பரிபாகசீலர்களுக்கு ஞானோபதேசஞ் செய்து கொண்டும் வருவாராயினர். இவ்வாறு ஞானதேசிகர் திருவெண்காடு எனப்படுந் திவ்விய தலத்திலே எழுந்தருளி யிருக்கு நாட்களில்; ஓர் சித்திரைமாதத்து உரோகணி நட்சத்திரத்திலே தில்லை மன்றுளார் திருவடிநீழலெய்தினர்.

இந்த ஞானதேசிகர்க்கு துவிதீய ஆசாரியராகியிருந்தவர் சிவக்கொழுந்து தேசிகர் என்பதூஉம், இந்த ஞானா தீனத்திற் பிரதமாசாரியராய் வரும் ஞானதேசிகர் ஆதீன பரமமுதற்குரவராகிய நமசிவாய மூர்த்தியாகப் போற்றப்படுவார் என்ப தூஉம், இவ்வாசிரியசுவாமிகள்பால் சங்காபி டேகமும், ஈசான தேசிகர் என்னுஞ் சிறப்புத் திருநாமமும் பெற்றுத் திரிதீய ஆசாரியராக வீற்றிருந்தவர் இலக்கணக் கொத்து முதலிய நூல்களியற்றிய சுவாமிநாததேசிகர் என்ப தூஉம், இவ்வாதீனத்தில் துவிதீய ஆசிரியராக வரும் தேசிக சுவாமிகள் ஆதீனம் அங்குரித்தற்கு அருகமாய் நமசிவாய சற்குரு மூர்த்தியின் காலத்தில் அமர்ந்தருளிய அம்பல வாண தேசிகராகப் போற்றப்படுவர் என்பதூ உம், இச்சுவாமிநாத தேசிக சுவாமிகள்பால் கல்விபயின்ற மாணவர்களிலொருவர் நன்னூல் விருத்தியுரை செய்த சங்கர நமச்சிவாயப் புலவர் என்பதூஉம் பின்வரும் செய்யுட்களால் இனிது புலப்படும்.

அவைவருமாறு :‡

வேதாந்தசூளாமணி உரைச்சிறப்புப்பாயிரம்

“”உரைதருவே தாந்தசூ ளாமணியுட் பொருளை

யுலகிலுள்ளோ ருணரவுரை செய்கவெனக் கடல்சூழ்

தரையரசன் சேதுபதி யமாத்தியனாந் தாமோதரன்

கங்கா குல திலகன் றகுதிபெறச் சாற்ற

வரையறுத்துச் சித்தாந்தப் பொருட்டிறனுந் தோன்ற

வகுத் தனனற் றுறைசைநமச் சிவாயதே சிகன்றாள்

பரவு மீசிவக் பொழுந்துநிதி யருள்கல்விக் கடலைப்

பருகுமு கில் மீமீசர்க்கரைநற் பாவலர் கோனே.”

இலக்கணக்கொத்துச் சிறப்புப்பாயிரம்

 

மதிவெயில் விரிக்குங் கதிரெதிர் வழங்கா

துயர்வரை புடவியி னயர்வுற வடக்கித்

தென்புவி வடபுவி யின்சம மாக்கிக்

குடங்கையி னெடுங்கட லடங்கலும் வாங்கி

யாசமித் துயர்பொதி நேசமுற் றிருந்த

மகத்துவ முடைய வகத்திய மாமுனி

தன்பா லருந்தமி ழின்பா லுணர்ந்த

வாறிரு புலவரின் வீறுறு தலைமை

யயால்காப் பெருந்தவத் தொல்காப் பியமுனி

தன்பெய ராலுல கின்புறத் தருநூ

லுளங்கூ ருரையா மிளம்பூ ரணமு

மானா வியல்பிற் சேனா வரையமு

முச்சிமேற் புலவர்கொ ணச்சினார் கினியமு

மற்றமற் றிடப்பொருண் முற்று முணர்ந்து

நன்னூன் முதலிய சின்னூ றெரிந்துந்

தொல்காப் பியங்கள் பல்காற் விதிகளும்

வடமொழி யிலக்கணக் கடன்முடி புடையவுங்

கற்பவர்க் கெளிதி னிற்புலப் படவே

மதியினின் மதித்துமூன் றதிகார மாக்கிப்

புலக்கணத் தெனவுல கிலக்கண கொத்தென்

றொருபெய ரிட்டுத் திருவுளம் பற்றினன்

வளமையின் வளர்புக ழளவிய புனனாட்

டேவடு விழியுமை யாவடுதுறையி

லாசிலா வுயிர்க்கருண் மாசிலா மணிப்பெய

ரம்பல வாணனென் றும்பரும் பரவ

வருஞான தேசிகனிருதாள் புனையு

மமிழ்தினு மினிய தமிழ்வளர் நெல்லை

யுவாமுதிர் மதிக்கலைச் சுவாமி நாதன்

றேசார் ஞானச் செல்வ

னீசான தேவ னெனுந்தே சிகனே.

 

இலக்கணக்கொத்துப் பாயிரம்

குருவணக்கம்

 

ஊரும் பேரு முருவு மில்லா

னாயினுந் திருவா வடுதுறை யூரணைந்

தம்பல வாண னெனும் பெயராதரித்

தறிவே யுருவா யமர்ந்தகுரு ராயனைப்

பொறையுடல் போகப் புகழ்ந்தடி போற்றுவாம்.

நன்னூல் உரைச்சிறப்புப்பாயிரம்

 

மலர் தலை யுலகிற் பலநூ லாய்ந்து

செய்வதுந் தவிர்வதும் பெறுவது முறுவதும்

உய்வது மறியே னொருபொரு ளாக

நன்னெறி பிறழா நற்றவத்தோர் பெறுந்

தன்னடித் தாமரை தந்தெனை யாண்ட

திருவாவடுதுறைத் தேசிக னாகிய

கருணையங் கடலையயன் கண்ணைவிட் டகலாச்

சுவாமி நாத குரவனை யனுதினம்

மனமொழி மெய்களிற் றொழுதவ னருளாற்

பொன்மலை யயனவிப் புவிபுகழ் பெருமை

மன்னிய வூற்று மலைமரு தப்பன்

முத்தமிழ்ப் புலமையு முறையர சுரிமையும்

இத்தலத் தெய்திய விறைமக னாதலின்

நன்னூற் குரைநீ நவையறச் செய்து

பன்னூற் புலவர்முன் பகர்தியயன் றியம்பலின்

நன்னா வலர்முக நகைநா ணாமே

என்னா லியன் றவை யியற்றுமிந்நூலுள்.

 

ஒன்பதாவது  இராமலிங்கதேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

படைத்தல்காத்த றுடைத்தலெனப் பகரு    மும்மைத் தொழிலுடற்கே

கிடைக்கு மெனவு மறைப்பருளல் கெழும வுயிருக் காமெனவுந்

தொடர்ச்சி யகன்ற தூயவர்க்குத் துறைசை யுறைந்து சொலிநாளும்

நடத்துமிராம லிங்ககுரு நற்றாள் பற்றி யுய்ந்திடுவாம்

 

சித்தாந்தஞானபாநுவாகிய மாசிலாமணிதேசிகர் அருளுபதேசம்பெற்று துவிதீய ஆசிரியராக விளங்கி வீற்றிருக்கும் இராமலிங்கதேசிகர்,திருவெண்காடென்னும் அத்திவ்வியஸ்தலத்தில் தமது ஞான தேசிகருக்குத் தசதினத்தினும் குருபூசை சிறப்புறச் செய்து, சுவேதவனப்பெருமானை யும், பெரியநாயகியையும் தரிசித்து வழிபாடி யாற்றி விடைபெற்று, அங்குநின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பலதலங்களையுந் தரிசித்துத், திருவாவடுதுறையை யடைந்து திருக்கோயிலிற் சென்று, சுவாமி தரிசனஞ் செய்து, தமது திருமடத்திற்கெழுந்தருளி, சிவப்பிரகாச விநாயகரையுந் திருமாளிகைத் தேவரையும் ஆதீன பரமமுதற்குரவராகிய நமசிவாய மூர்த்திகளையுந் தரிசித்துச் சீடர்களுக்குத் தீக்கையாதிகளும் சித்தாந்த ஞானோபதேசமுஞ் செய்து கொண்டு அங்கமர்ந்தருளுவாராயினர்.

அக்காலத்தில், தமது மாணவர்கள் பல்லோருள்ளுஞ் சிறந்த வேலப்ப தம்பிரானுக்கு ஆசாரியாபிடேகஞ்செய்து சிலநாள் சென்று ஞானதேசிகர், செழிய நாட்டின்கண்ணும் சேரநாட்டின் கண்ணு முள்ள தமது சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்யத் திருவுளங்கொண்டு, துவிதீய ஆசாரியராகிய வேலப்ப தேசிகசுவாமிகளும், தம்பிரான்சுவாமிகளும், ஏனைய அடியவர் களும் உடன்வரத் திருவாவடுதுறை யயன்னும் அத்திவ்விய ஸ்தலத்தினின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பற்பல ஸ்தலங் களைத் தரிசித்துக் கொண்டும், ஆங்காங்கு பலரும் வழிபட்டேத்த, அவர்களுக்கு அருளுபதேசஞ் செய்துகொண்டும், பாண்டி நாடு கடந்து சேர நாட்டின் கண்ணதாகிய சுசீந்திரத்தைச் சேர்ந்து, அங்கு திருக் கோயிலிற்சென்று தாணுமாலயேசுவரர் தரிசனஞ்செய்து தமது ஈசானமடத்திற் கெழுந்தருளி, ஞானமூர்த்தியாகிய நமசிவாய தேசிகோத்தமர் பிரதிட்டாலயத் தினையணைந்து தரிசித்து வழிபாடியற்றி இருகுமாரசுவாமிதேசிகர் குருமூர்த்தங்கள் தரிசனம் பண்ணி அங்குச் சிலகாலம் அன்பர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து வீற்றிருந்தருளினர்.

பின்பு ஞானதேசிகர், துவிதீய ஆசாரியராகிய வேலப்பதேசிக சுவாமிகளை அங்கு சீடர்களுக்கு ஞானேபதேசஞ் செய்து கொண்டிருக்குமாறு கட்டளையிட்டுத் தாம் அங்குநின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பல ஸ்தலங்களையுந் தரிசித்துக்கொண்டு திருவாவடுதுறைக் கெழுந்தருளி அங்கு மாணவர் பலர்க்கும் அருளுபதேசஞ்செய்து கொண்டமர்ந்தருளினர்.

இங்ஙனம் நெடுங்காலம் அருளுப தேசஞ் செய்து அமர்ந்தருளுவாராகிய ஞானதேசிகர் அத்திருப்பதியிலே ஓர் கார்த்திகை மாதத்து  அனு­நக்ஷத்திரத்திலே அம்பலக் கூத்தனார் அருட்பாத  நீழலடைந்தனர்.

 

பத்தாவது  வேலப்பதேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

நிறைமதியா தித்தருப ராகத்தில் ராகுவொடு நிழலாங்கேது மறைவின்றி விளங்குதல்போ லிறைவனைத்தம் மனமலரின் வருண மைந்தின், முறைமை யினிற் காண்டலுறிற் றோன்றிடுமம் முதல்வனென முதிர்பா கர்க்குத், துறைசைதனி லறிவுறுத்து குருமுதல்வே லப்பன் மலர்த் துணைத்தாள் போற்றி.

ஞானதேசிகராகிய இராமலிங்கதேசி கோத்தமர், திருவருளாணை சிரமேற் கொண்டு துவிதீய ஆசாரியராய் சுசீந்திரத்தில் வீற்றிருந்து சேரநாட்டின்கண்ணும், பாண்டிய நாட்டின் கண்ணுமுள்ள சீடர்களுக்குத் தீக்கையாதிகளுஞ் சித்தாந்த சாத்தி ரோப தேசமுஞ்செய்து வருந் தேசிகசுவாமிகளாகிய வேலப்பதேசிகர் தமது ஞானாசாரியசுவாமிகள் சிவபரிபூரணதசை யடைந்தருளியதை உணர்ந்து, உடனே சுசீந்திரத்தினின்றும் நீங்கி, விரைவிற்றானே திருவாவடுதுறையை வந்தடைந்து தபோவனத்திடைச் சார்ந்து, தமது ஞானா சாரியசுவாமிகள் குருமூர்த்தம் பூசித்து வழிபாடியற்றி, மறைஞானதேசிகர், அம்பலவாணதேசிகர் குருமூர்த்தந் தரிசித்துத் திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ் செய்து, திருமடாலயத்தினை யடைந்து சிவப்பிரகாச விநாயகரையுந் திருமாளிகைத் தேவரையும் ஆதீன முதற்குரவராகிய நமச்சிவாய மூர்த்திகளையும் தரிசித்து வழிபட்டுக் கொண்டு, ஒடுக்கத்தி லெழுந்தருளி தமது ஞானதேசிகர் திருவடி யருச்சனை புரிந்து, திருவருளைச் சிந்தித்து ஆசனத்தமர்ந்து யாவர்க்குங் குருதரிசனக் காட்சியளித்துச் சீடர்களுக்குத் தீக்கையாதிகளும் சித்தாந்த சாத்திரோபதேசமுஞ் செய்துகொண்டு அங்கமர்ந் தருளு வாராயினர்.

அக்காலத்தில் ஞானதேசிகர் தமது அடியவருட் சிறந்த வேலப்ப தம்பிரானுக்கு ஆசாரியாபிடேகஞ்செய்து தமக்கு துவிதீய ஆசாரியராகவைத்தருளினர். பின்னர் சில நாள் சென்று, ஞானதேசிகர், அங்குநின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பல ஸ்தலங்களையுந் தரிசித்துக்கொண்டும், சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து கொண்டும், பாண்டிய நாடகன்று சேர நாட்டிற்கெழுந்தருளி கன்னியாகுமரி யடைந்து, கடலாடி பகவதியம்மையைத் தரிசித்து தமது ஈசானமடாலயத்திற் சென்று அங்குச் சிலநாள் அமர்ந்திருந்து அத்தலத் தினின்றும் புறப்பட்டுச் சுசீந்திரஞ் சார்ந்து திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ் செய்து, தமது ஈசான மடத்திற் கெழுந்தருளி ஆதீன பரமமுதற்குரவாகிய பஞ்சாக்கர தேசிகர் பிரதிட்டாலயத் தினையும், இரு குமாரசுவாமித்தேசிகர் குரு மூர்த்தங் களையுந் தரிசித்து, அங்குச்சில காலம் எழுந்தருளியிருந்து, பின்பு துவிதீய ஆசாரியராகிய வேலப்பதேசிக சுவாமிகளை அங்குச்சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்துகொண்டு அமருமாறு பணித்துத் தாம் அங்குநின்றும் புறப்பட்டுத் திருவாவடுதுறை யடைந்து அங்குச் சித்தாந்த ஞானதேசிகராகிய  நமசிவாயமூர்த்திகளின் துணை மலர்த்தாள்களை அருச்சித்து வழிபட்டுக் கொண்டு வீற்றிருந்து திருவருளுபதேசஞ் செய்துவருவாராயினர். இஃதிங்ஙனமாக.

சுசீந்திரத்தில் வீற்றிருக்கும் துவிதீய ஆசாரியராகிய வேலப்பதேசிகசுவாமிகள், தாம் அங்கு தம்பாற் சரண்புகும் பற்பல சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து கொண்டுவருவாராயினர். அப்பொழுது தாம் பஞ்சாக்கர பஃறொடை எனும் ஓர்ஞான நூலியற்றியருளினர்.

அக்காலத்தில் பாண்டி வளநாட்டிலே பொதியமலைச்சாரலிலே பாவநாசமென்னுந் திருப்பதியைச் சார்ந்த விக்கிரமசிங்க புரத்திலே, அகத்திய மகா முனிவரிடத்தே ஏழுதலைமுறையளவும் அருட்புலமை நிரம்பும்வண்ணம் வரம்பெற்ற பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே, சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்தவரும், கல்விச் செல்வம்போலப் பொருட்செல்வமும் ஒருங்குடையவரும் ஆகிய ஆனந்தக்கூத்தர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் தமக்கு உயர்வொப்பிலாத மயிலம்மையார் என்று எவராலுஞ் சிறப்பித்துச் சொல்லப்படுபவர். அவரது திருவயிற்றிலே ஏழாவது தலைமுறையாகத் தமிழ்நாடுசெய்த தவத்தானே ஒரு சற்புத்திரர் திருவவதாரஞ்செய்தனர். அவர் முக்களா லிங்கர் என்னும் பிள்ளைத் திருநாமம் பெற்றோராற் சாத்தப்பெற்று ஒழுக்கம், அன்பு, அருள் முதலிய நற்குணங்களோடு வளரு வாராயினர். இங்ஙனம் வளரும்நாளில் அவர்க்கு ஐந்தாவது பிராயம்வர அவர் பெற்றோரால் வித்தியாரம்பஞ் செய்விக்கப் பெற்றுப் பாடசாலையிற் சென்று கல்வி பயின்று வருவாராயினர்.

இங்ஙனம் வளரும்நாளில் அவர்க்கு ஐந்தாவது பிராயம்வர அவர் பெற்றோரால் வித்தியாரம்பஞ் செய்விக்கப்பெற்று பாடசாலையிற் சென்று கல்விபயின்று வருவாராயினர். இவ்வாறு கல்வி பயின்று வருநாளில் ஒருநாள் முக்களாலிங்கர் பாட சாலையினின்றும் வரும்வழியிலே, திருவாவடுதுறை ஆதீனத்தினின்றுஞ்சிவஸ்தல யாத்திரையாகப் போந்து விக்கிரமசிங்க புரத்து வீதியில்வந்த சில தம்பிரான் சுவாமிகளைக் கண்டனர். காண்டலும் விரைந்துசென்று அத்தம்பிரான் சுவாமிகளை வணங்கிச், “”சுவாமிகள்! அடியேன் வீட்டிற் கெழுந்தருளித் திருவமுது கொண்டருள வேண்டும் ” என்று பிரார்த்திக்க, அத்தம்பிரான் சுவாமிகள் ஆண்டின் இளைஞரும் அறிவின் முதியருமாகிய முக்களாலிங்கர் பிரார்த்தனைக்கு இரங்கி விருப்பத்தோடு உடன்படலும் அப்புத்திரர் அவர்களை வீட்டிற்கு அழைத்துச்சென்று ஆசனத்திருத்தித் தாயாரிடஞ் சென்று அம்மையே! நம்வீட்டிற்குச் சிவனடியார் சிலர் எழுந்தருளினர், அவர்களுக்கு அமுதளித்தல் வேண்டும் என வேண்டினர். அது கேட்ட அம்மையார் தம் அருமைப்புதல்வரது அரும்பெருஞ் செய்கையைக்கண்டு மனம் மிகமகிழ்ந்து அத்தம்பிரான்சுவாமிகளை வணங்கித் திருவமுதளித்தனர். அப்போது, அத்தம்பிரான் சுவாமிகள் திருவமுது கொண்டருளி அவ்வம்மையாரதுகற்பின் திறத்தையும் அன்பின் திறத்தையும் நோக்கி.

அருந்ததியயன் னம்மை  யடியவர்கட் கென்றுந்

திருந்த வமுதளிக் குஞ்செல்வி ‡ பொருந்தவே

யானந்தக் கூத்த ரகமகிழத் தொண்டுசெயு

மானந் தவாத மயில்,

என்னும் செய்யுளைப்பாடி பல ஆசிமொழி கூறிப்புறத்தே சென்று ஆங்குள்ள ஒரு திருமடத்திலுற்றுவைகினார். தமது அருந்தவப் புதல்வரது அன்பின் வாய்மையைப் புகழ்ந்து அவ்வம்மையார் அவரைப் பெற்ற ஞான்றினும் பெரிது மகிழ்ந்திருந்தனர்.

அப்பொழுது புறம்பே சென்றிருந்து தம் வீடு புக்க ஆனந்தக்கூத்தர் அங்கு நிகழ்ந்தவற்றை அறிந்து அடங்காத பேருவகையுற்றுத் தம்புதல்வரை மார்புறத் தழுவி, “நங்குலஞ்செய்த நற்றவக் கொழுந்தே! திருவமுதுகொண்டருளித் தம்பிரான் சுவாமிகள் எங்குச் சென்றனர்?’ என்று வினாவித் தம்புதல்வரோடு அச்சுவாமிகள் இருந்துழிச்சென்று அவர்களை  வணங்கி நின்றனர்.

அவ்வேளையில் முக்களாலிங்கர் “”பிறவியால் வருவனகேடுளவாதலாற் பெரியவின்பத் துறவியார்க் கல்லாது துன்பநீங்காதெனத்” திருவருளால் தம்முளத்துட்கொண்டு, “”இத்தம்பிரான் சுவாமிகளோடு சென்று ஞானகுருவைச் சரணடைந்து பிறப்பறுப்பேன்” எனத் துணிந்து? அக்கருத்தைத் தந்தையார்க் குணர்த்தினர். தந்தையார் தமது அருந்தவப் புதல்வரைப் பிரிதற்கு ஆற்றாதவராய் உளந்தளர்ந்து, பின் ஒருவாறுதேறி, மகனாரை சுவாமிகள்பால் விடுத்துத் தம்மில்லத்திற் கேகினர்.

தந்தையார் நீங்கியபின்பு முக்களா லிங்கர், ஆதீனத்துத் தம்பிரான் சுவாமி களோடு வழிக்கொண்டு சேரநாட்டின் கண்ணுள்ள சுசீந்திரத்தையடைந்து ஈசான மடாலயத்திற்சென்று, ஆதீன பரமுதற் குரவராகிய நமச்சிவாயமூர்த்திகளைத் தரிசித்துத் திருவருணோக்கம் பெற்றுக் கொண்டு ஒடுக்கத்திலேபோய் துவிதீய ஆசிரியராகிய வேலப்பதேசிகசுவாமிகளைத் தரிசித்துப் பேரன்போடு  வணங்கினார்.

பின்பு வேலப்பதேசிகசுவாமிகள், தம்மைவந்தடைந்த இளமைப்பருவத் தராகிய முக்களாலிங்கர் மீது பெருங் கருணைபாலித்து, அவருக்குச் சமயவிசேட மெனப்படும் இருவகைத்தீக்கையுமியற்றிச் சைவசந்நியாசமளித்தருள, அவர்தாம் அவ்வாசிரமத்திற்கு விதித்த சிறுநூல்களை ஐந்திரிபின்றியோதி யுணர்ந்து, அவ்வாறொழுகித்தவத்தான் மனந்தூயராகி அங்கு அமருநாளில், செந்தமிழும் ஆரியமுமாகிய தேவபாடைகள் இரண்டினை யும் ஒருங்கே உளங்கொளப் பயிலு வாராயினர். பின்பு, அத்தேசிகசுவாமிகள், முக்களாலிங்கர் என்னும் மூதறிஞராகிய அத்தவச் சிரேட்டருக்கு நிருவாண தீக்ஷைசெய்து சிவஞானத்தம்பிரான் எனத் தீக்ஷாநாமஞ்சாத்தி மெய்கண்ட சாத்திர மீபண்டாரசாத்திரங்களை உபதேசித்தருளினர். அங்ஙனம் உபதேசங் கேட்ட துணையானே அவர்தாம் சிந்தித்துத் தெளிந்து மெய்யுணர்வின் முற்றுப் பேறுடையவராய் அமர்ந்தருளினர்.

இங்ஙனம் நெடுங்காலமாக சுசீந்திரத்தில் சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்துகொண்டு, அமர்ந்தருளிய துவிதீய ஆசிரியராகிய வேலப்பதேசிகசுவாமிகள், தமது ஞானதேசிகரைத் தரிசிக்கவிரும்பி அங்கு நின்றும் புறப்பட்டு பாண்டிநாட்டிற் சென்று அங்கு பலதலங்களையும் தரிசித்துக் கொண்டு, இராசவல்லிய புரமெனப் பெயர் விளங்கும் செப்பறையயன்னுந் திவ்விய ஸ்தலத்திற் கெழுந்தருளி சிற்சபேசரைத் தரிசித்துப்பின் ஸ்ரீ மூலலிங்கமாகிய அக்கினீசுரரையும் அகிலாண்டேசுவரியையும் தெரிசனம்பண்ணி அங்கு சிலநாள் வசித்திருந்தனர்.  அக்காலத்தில் தேசிகசுவாமிகள் தமது அடியவர் கூட்டத்துட்சிறந்த மாதவச் சிவஞான சுவாமிகளால் அகிலாண்டேசுவரிமீது ஓர் பதிகம் செய்விக்கத்  திருவுளங்கொண்டு குறிப்பித்தருள அவ் ஆஞ்ஞை மேற்கொண்டு  அச்சுவாமிகள் ஓர்பதிகமியற்றி தேசிகசுவாமிகள் திருமுன்பு அரங்கேற்றி அத்தேசிகசுவாமிகளுடன் திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ்செய்து அகிலாண்டேசுவரியைத் தரிசித்துத் தமது சற்குரவர் ஆஞ்ஞாபித்தவாறு தாமியற்றிய பதிகத்தை தோத்திரஞ்செய்து நின்றனர்.

பின்பு தேசிக சுவாமிகள் அத்தலத்தினின்றும்மாதவச் சிவஞான சுவாமிகள் முதலாகிய மாணவர்களோடு புறப்பட்டு பாண்டிநாட்டைக் கடந்து கொங்கு நாட்டிற் சென்று அங்கும் சில திவ்யஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு ஆதி சிதம்பர மெனப்படும் திருப்பேரூரை யடைந்து அங்கு திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ்செய்து அங்கு சிலநாள் வசித்திருந்தனர். அந்நாட்களில் ஓர் ஆனி மாதத்திலே பரணி நக்ஷத்திரத்திலே தேசிக சுவாமிகள் சிவபரிபூரணமுற்றனர்.

பின்பு அடியவர்கள், அத்திவ்ய ஸ்தலத்திலே அத்தேசிக சுவாமிகளுக்குக் குருபூசை தசதினத்தினுஞ் சிறப்புறச்செய்து, பின் அவ்வாசிரியசுவாமிகள் குருமூர்த்தத்தின் பூசையின் பொருட்டு அவ்வடியவர்களி லொருவர் அங்கமர்ந்திருப்ப ஏனைய அடியவர்கள் அவ்விடத்தினின்றும் அரிதின் நீங்கித் திருவாவடுதுறையையடைந்து ஞான தேசிகரைத் தரிசித்துத் துவிதீயதேசிக சுவாமிகள் சிவபரிபூரணமுற்றருளியதை விண்ணப்பித்தனர்.

பின்பு ஓர் சுபதினத்தில் ஞான தேசிகராகிய வேலப்பதேசிக சுவாமிகள், தமது தம்பிரான் சுவாமிகள் பல்லோருள் ளுஞ்சிறந்த வேலப்பத் தம்பிரானுக்கு ஆசிரியாபிடேகஞ் செய்தருளினர். பின்பு சிலநாள் கழித்து ஞானதேசிகர் பாண்டி நாட்டின் கண்ணும் சேரநாட்டின் கண்ணும் உள்ள தமது சீடர்களுக்கு  ஞானோபதேசஞ் செய்யத் திருவுளங்கொண்டு துவிதீய ஆசிரியராகிய வேலப்பதேசிகசுவாமிகளும் தம்பிரான் சுவாமிகளும் ஏனைய அடியவர்களும் உடன்வர அங்கு நின்றும் அரிதின்நீங்கி ஆங்காங்குள்ள தமது சீடர்களுக்குத் தீக்கை யாதிகள் செய்து கொண்டு சுசீந்திரத்தை யடைந்து திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ் செய்து தமது திருமடத்திற்கு எழுந்தருளி திருவருளுபதேசஞ் செய்து கொண்டு சிலகாலம் அங்கு வீற்றிருந் தருளுவாராயினர்.

பின்பு ஞானதேசிகர், தமது துவிதீய ஆசிரியராகிய வேலப்ப தேசிக சுவாமிகளை அவ்விடத்தமர்ந்து அருளுபதேசஞ் செய்து வருமாறு கட்டளையிட்டுத் தாம் அங்கு நின்றும் புறப்பட்டு வழியிடையிலுள்ள ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு சங்கர நாராயணர்கோயிலுக்கு எழுந்தருளி அப் பதியில் சிலகாலம் வசித்திருந்தருளினர். அங்ஙனம் வசிக்கு நாட்களில் அநேகருக்கு உற்ற குட்டம் முதலிய நோய்களை நீக்கி யருளியதுமன்றி தமது பெருமையைக் கேள்வியுற்று தம்மிடத்து வந்து பணிந்து குறையிரந்த நெற்கட்டுஞ் செவ்வற் குறுநில மன்னராகிய சிவஞான பூலித்தேவர் என்பவருக்குற்ற குன்மநோயினையும் நீக்கியருளினர்.

பின்பு குறுநிலமன்னராகிய சிவஞான பூலித்தேவர், ஞான தேசிகருக்கு விளைநிலம் முதலானவை சிவபூசை, குருபூசை, மாகேசுர பூசையின் பொருட்டு சாசனஞ்செய்து கொடுத்து சிலகாலம் ஞானதேசிகர் தரிசனஞ் செய்து கொண்டிருந்து ஞானதேசிகர்பால் விடைபெற்றுத் தமது ஊருக்குச் சென்றனர். பின்பு ஞான தேசிகர், அத்திருப்பதியிலே சிலகாலம் வசித்திருந்து ஓர் புரட்டாசி மாதத்து மூலநக்ஷத்திரத்திலே சிவபிரான் திருவடியிணைமலர் சேர்ந்தின்பம் எய்தினர்.

Menu Title