திருவாவடுதுறை ஆதீனம்

வரலாறு

திருவாவடுதுறை ஆதீன வரலாறு

(திருமடாலயம் நிறுவியது 14 – ஆம் நுற்றாண்டு)

                திருக்கயிலாய மலையிலே, அருள்வடிவாகிய கல்லால மர நிழலிலே, தட்சிணாமூர்த்தியாய் எழுந்தருளியுள்ள ஸ்ரீகண்ட பரமசிவனிடத்திலே, சிவாகமங்களை எல்லாம் கேட்டருளிய திருநந்திதேவர் அவரை வணங்கி நின்று சுவாமி ! தேவரீர் அருளிய சிவாகமங்களில் நித்திய பதார்த்தங்கள் ஏழென்றும், ஆறென்றும், ஐந்தென்றும், மூன்றென்றும் பலவாகக் கூறப்பட்டுள்ளனவே : இவற்றின் பொருளொருமயை அடியேனுக்கு உணர்த்தியருள வேண்டுமென்று விண்ணப்பம் செய்தார்.

திருக்கயிலாய பரம்பரையும் அகச்சந்தனமும்

        ஸ்ரீ கண்ட முதல்வர் அவர் வேண்டுகோட்கிரங்கி எளிவந்து “நன்றே வினாயினாய், எல்லா ஆகமப் பொருள்களையும் மாறுகோள் இன்றி நன்கு விளங்குவது ஸ்ரீ ரெளரவாகமத்தில்’ சிவஞான போதர் என்பதோர்  படலம்.

அதனை உனக்கு இப்போது நன்கு விளங்குகின்றோம்”என்று அதனை நன்கு உபதேசித் தருளினார். அது கேட்ட துணையானே ‘நந்திதேவர்’ எல்லா ஐயங்களும் நீங்கிப் பொருளொருமை தெளிந்து போற்றுவாராயினார். சீகண்ட முதல்வர்பால் தாம் பெற்ற இச்சிவஞானத்தைத் தம் மாணவர்களுட் சிறந்த ‘சனற்குமார’ முனிவருக்கு அருளிச்செய்தார். அவர் அதனைத் தமது மாணவருட் சிறந்த ‘சத்தியஞான தரிசினி’களுக்கு அருளினார். அவர் அதனைத் தமது மாணவர்களுட் சிறந்த ‘பரஞ்சோதி யாமுனிவ’ருக்கு அருளிச்செய்தார். திருக்கயிலாயத்திலே நிகழ்ந்த நிகழ்ச்சி இது. திருநந்தி தேவர் முதலிய நால்வரும் இப் பரம்பரையிலே ‘தேவசந்தானத்தார்’ என்றும், அகச்சந்தனத்தார் என்றும் வழங்கப்படுவர்.

 

அகச்சந்தான குரவர்

திருநந்திதேவர்

|

சனற்குமார முனிவர்

|

சத்தியஞான தரிசினிகள்

|

பரஞ்சோதி முனிவர்.

புறச்சந்தான குரவர் நால்வருள் ஸ்ரீ மெய்கண்ட தேவர்

        இனி, நடுநாட்டிலே திருப்பெண்ணாகடத்திலே பரம்பரைச் சைவ வேளாளர் மரபிலே அச்சுத களப்பாளர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பெருஞ் செல்வர். அரச குடும்பத்தினர் போன்ற நன் மதிப்புடன் விளங்கினர். அவருக்கு நெடுநாள் வரை புத்திரப் பேறில்லை. வருந்தினார். தமது குலகுருவாகிய ‘சகலாகமபண்டித’ரிடத்தே சென்று தம் கவலையை தெரிவித்தார். திருத்துறையூரிலே எழுந்தருளியுள்ள சகலாகம பண்டிதர் தமது சீடருடைய குறையைத் தீர்க்கத் திருயுளங் கொண்டார். தமிழ் வேதமாகிய தேவாரத் திருமுறையை அர்ச்சித்துக் கயிறு சாத்துவித்தனர். அப்போது திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரத்திலே திருவென்காட்டுத் திருப்பதிகத்திலுள்ள-

“பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை

வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்

வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையா ரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே.’

(பி-ம்) வாயினவெ லாம்பெறுவர்.

என்னுந் திருப்பட்டு உதயமாயிற்று. அச்சுத களப்பாளர் அத்திருப்பாட்டிற் கூறப்பட்டவாறு தமது மனைவி யாரோடு திருவெண்காட்டினை அடைந்தார். முக்குள தீர்த்தத்திலே முறைப்படி நீராடினார். ஸ்ரீ சுவேதவனப் பெருமானையும் ஸ்ரீ பிரம வித்தியா நாயகியையும் நியாமமாக வழிப்பட்டு வருவாராயினர். அந்நாளில் தமது மனைவியார் கருக் கொண்டார். அச்சுத களப்பாளர் சிவாகம விதிப்படி பத்து மாதங்களிலும் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்தார். ஒரு நல்ல நாளில் சுப முகூர்த்தத்திலே அவருக்கு ஒரு சற்புத்திரர் திருவவதாரம் செய்தார். களப்பாளர் அகமிகமகிழ்ந்தார். ஸ்ரீ சுவேதவனப் பெருமான் திருவருளால் தோன்றிய தமது திருக்குமாரருக்குச் ‘சுவேதவன பெருமாள்’ என்னப் பிள்ளைத் திருநாமம் சாத்தித்தமது இருப்பிடமாகிய திருப்பெண்ணா கடத்துக்கு வந்து சேர்ந்தார்.

அக்காலத்திலே திருவெண்ணெய் நல்லூரிலே இருந்த காங்கேய பூபதியென்பவர் தமது சகோதரியின் புதல்வரைக் காணத் திருப்பெண்ணாகடத்துக்கு வந்தார். அக்குழந்தையைத் தம் வீட்டுக்குக்

கொண்டு சென்று வளர்த்து வராலாயினர். சுவேதவனப் பெருமாளும் தம் அம்மான் வீட்டிலே நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார். இஃது இவ்வாறாக, முன்பு நந்தி பரம்பரையிலே சிவஞானபோத உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர் மகத்துவ மிக்க அகத்திய முனிவரைக் காண வேணவாயுடன் பொதியிலுக்குச் சென்றார். வழியிலே திருவெண்ணெய் நல்லூரிலே இரண்டு வயதுக் குழந்தையாய்த் திருவீதியிலே விளையாட்டயரும் நமது சுவேதவனப் பெருமாளைக் கண்டார். அந்தச் சிறு பிராயத்திலே மெய்யுணர்வின் முற்றுப் பேறுடைய சாமுசித்தராய் விளங்கும் சுவேதவனப் பெருமாளது பக்குவந்தெரிந்து தீக்ஷைசெய்து தமது ஆசிரியர் திருபெயருக்கேற்ப ‘மெய்கண்டான்’ எனத்திருநாமம் சாத்தினர். தாம் பரம்பரையிற் கேட்ட சிவஞான போகத்தை அவருக்கு உபதேசித்தார். “இத்தமிழ் நாட்டார் உய்யத் திருவுளங்கொண்டு, தமிழிலே இதற்கு பொழிப்ப்புரைக்க” என்று அருளிச்சென்றனர். ஸ்ரீ மெய்கண்டதேவர் தாம் கேட்ட அச்சிவஞானபோத நூற்பொருள்களைச் சிந்தித்துத் தெளிந்தார். சிவஞானபோத சூத்திரங்களைத் தமிழிலே மொழிபெயர்த்து வார்த்திகப்பொழிப்பும் உரைத்தருளி வீற்றிருந்தார்.

சகலாகம பண்டிதர் என்னும் ஸ்ரீ அருநந்திதேவர்

             திரு த்துறையூரிலே எழுந்தருளியுள்ள சகலாகம பண்டிதர் இது தெரிந்து திருவெண்ணெய் நல்லூருக்கு வந்து ஸ்ரீ மெய்கண்டதேவரை வணங்கித் தம்மை ஆட்கொண்டருளுமாறு பிரார்த்திதிதார். அவரது பக்குவ நிலையைக் கண்டு ஸ்ரீ மெய்கண்ட தேவர் அவருக்குத் தீக்ஷை செய்து தாம் அருளிச்செய்த சிவஞான போதத்தை உபதேசித்து ‘இச்சிவஞான நூற் பொருளைப் பிற்காலத்தார் இனிது உணரும் பொருட்டு விரித்தல் யாப்பான் வழிநூல் செய்க’ எனக் கட்டளையிட்டருளி ‘அருணந்தி’ எனத் தீட்சாநாமமும் நல்கினர். தங்குரவரிட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு

சிவஞானபோதத்தின் வழிநூலாகச் சிவஞான சித்தியாரையருளிச்செய்தார் என்பது அவரருளிய,

“……….முன்னா ளிறைவனரு ணந்திதனக்கியம்ப நந்தி, கோதிலருட் சனற்குமா ரற்குக் கூறக்குவலயத்தி னவ்வழியெங் குருநாதன் கொண்டு, தீதகல வெமக்களித்த ஞான நூலைத் தேர்ந்துரைப்பன் சிவஞான

சித்தி யென்றெ.” என்னும் பரபக்கத் திருவிருத்தத் தானும்;

“என்னையிப் பவத்திற் சேரா வகையெடுத்

தென்சித் தத்தே

தன்னைவைத் தருளி னாலே தாளிணை

தலைமேற் சூட்டு

மின்னமர் பொழில்சூழ் வெண்ணெய் மேவிவாழ்

மெய்கண் டானூல்

சென்னியற் கொண்டு சைவத் திறத்தினைத்

தெரிக்க லுற்றாம்”

என்னும் சுபக்கத்திருவிருத்தத்தானும் தெளிவாக அறிய கிடைக்கின்றமை காண்க. இவ்வாசிரிய மூர்த்திகள் சிவ ஞானபோதத்தின் வழிநூலாகச் சிவ ஞான சித்தியாரும், இருபாஇருபது என்னும் மற்றொரு நூலும் அருளிச் செய்தார். பின்பு,

ஸ்ரீ மறைஞான சம்பந்தர்

         மருதூர்ப் பதியிலே திருவவதாரம் செய்து திருப்பெண்ணாகடத்திலே எழுந்தருளியுள்ள பராசர முனிகோத்தி ரோற்பவ ராகிய ஸ்ரீ மறைஞான சம்பந்தர் என்பவர் ஸ்ரீ அருணந்தி தேவ நாயனாரது பெருமையைக் கேள்விப்பட்டார். திருத்துறையூருக்குச் சென்றார். அருணந்தி தேவர் பால்

தீக்ஷை பெற்றுச் சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபாஇருபது என்னும் சாஸ்திரோபதேசம் கேட்டருளிச் சிவஞானங் கைவரப் பெற்றார்.

சிதம்பரத்துக்கு மேல்பா லுள்ள திருகளஞ் சேரியில் சிங்காரத் தோப்பிலே ஸ்ரீ பிரமபுரீசர் சந்நிதியிலே சிவானந்தன நிட்டையிலிருந்தார். இது நிற்க.

ஸ்ரீ உமாபதி சிவம் 

     சிதம்பரத்திலே உள்ள தில்லைவாழந்தணர் குலத்திலே தோன்றிய ஸ்ரீ உமாபதி சிவாசாரிய சுவாமிகள் ஸ்ரீ மறைஞான சம்பந்த சிவாசாரியருடைய மகிமைகளைத் தெரிந்து அவரிடத்தணுகிச் சிவதீட்சை பெற்றார். சிவஞான போத முதலிய சாஸ்திரோபதேசமும் செய்யப் பெற்றனர். சைவசித்தாந்த நூற் பொருள்களை யாவரும் எளிதினுணரும் பொருட்டுக் கருணை கூர்ந்து ஸ்ரீ உமாபதிசிவாசாரியர் சிவஞான போதத்திற்குச் சார்பு நூலாகச் ‘சிவப்பிரகாசம்’ என்னும் நூலையும், மற்றும் திருவருட்பயன், நெஞ்சுவிடு தூது, போற்றிப்பஃறொடை, உண்மை நெறி விளக்கம்,கொடிக்கவி, வினா வென்பா, சங்கற்ப நிராகரணம் என்னும் ஏழுநூல்களையும் தமிழிலே இயற்றியருளினார்கள். கோயிற் புராணம், சேக்கிழார் நாயனார் புராணம் முதலியவற்றையும் தமிழில் அருளிச் செய்தார்கள். வடமொழியிலே பௌஷ்கராகமத்திற்கு வியாக்கியான மும் அருளினார்கள். தாம் சிவஞானோபதேசம் பெற்றகால முதல் கொற்றவன் குடியிலே எழுந்தருளி யிருந்து கொண்டு சிவானந்த வாழ்விலே திளைத்து வந்தனர். பெற்றான் சாம்பானுக்குத் திருச்சிற்றம்பல முடையார் கைத்தீட்டுப்படி முத்தி கொடுத்தருளினர். பற்பல அற்புதங்களும் நிகழ்த்தினர் என்ப இனி, ஸ்ரீ உமாபதி சிவாசாரிய சுவாமிகள் தமது ஆசிரியர் பரம்பரையைத் தெளிவாகத் தாமருளிய   சிவப்பிரகாச நூலில் அருளிச் செய்திருக்கின்றனர். அத்திருவிருத்தம் வருமாறு :-

“தேவர்பிரான் வள்ர்கயிலைக் காவல் பூண்ட

திருநந்தி யவர்கணத்தோர் செல்வர் பாரிற்

பாவியசத் தியஞான தரிசனிக ளடிசேர்

பரஞ்சோதி மாமுனிகள் பதியா வெண்ணை

மேவியசீர் மெய்கண்ட திறலார் மாறா

விரவுபுக ழருணந்தி விறலார் செல்வத்

தாவிலருண் மறைஞான சம்பந்த ரிவரிச்

சந்தானத் தெமையாளுந் தன்மை யோரே.”

என்பது.

இங்கு ஓர் செல்வர் என்றது சனற்குமார முனிவரை.

புறச்சந்தான குரவர்

ஸ்ரீ மெய்கண்ட தேவர்

|

ஸ்ரீ அருணந்தி சிவம்

|

ஸ்ரீ மறைஞான சம்பந்தர்

|

ஸ்ரீ உமாபதி சிவம்

          ஸ்ரீ உமாபதி சிவம் கொற்றவன் குடியிலெழுந்தருளியிருந்தது கொண்டு சிவஞான நிட்டையிலிடையறாது வீற்றிருந்த காலத்திலே ‘அருணமச்சிவாயர்’ என்பவர் உமாபதி சிவத்தின் மகிமைகளைத் தெரிந்து அவரிடத்துச் சென்று தீட்சை பெற்றுச் சிவஞான போதம், சிவஞான சித்தியார்,

சிவப்பிரகாசம் முதலிய நூல்களையுங் கேட்டுச் சிந்தித்து தெளிந்து அங்கேயே சிவநிட்டையிலமர்ந்திருந்தார்.

இனி, வேதாரணியத்திலும் திருவாவடுதுறையிலுமாக எழுந்தருளியுள்ள சித்த மூர்த்திகளாகிய சிவப்பிரகாசர் மேற்கூறிய ஸ்ரீ

அருணமச்சிவாய தேசிகர்பால் தீக்ஷை பெற்றுச் சிவஞான போத முதலான ஞான நூல்களையும் உபதேசிக்கப் பெற்றுச் சிவஞானங் கைவரப்பெற்று விளங்கியிருந்தார்.

1. ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகர்

          இந்தச் சித்தர் சிவப்பிரகாசர் சிதம்பரத்தினின்று எழுந்தருளித் திருவாவடுதுறைக்கு வரும் வழியிலே மூவலூரிலே பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே அவதாரஞ் செய்தருளிய “வைத்திநாதர்” என்பவர் சிவபுண்ணிய முதிர்ச்சியாலே அச்சித்த மூர்த்திகளை யடைந்து தமக்குச் சிவ ஞானோபதேசம் செய்தருள வேண்டுமென விண்ணப்பித்தார். சித்த மூர்த்திகளும் அவருடைய தீவிரதர சத்திநி பாதத்தையும் திருவருளையுஞ் சிந்தித்து நோக்கினார். திருக்கடைக்கண் சாத்தி அவருக்குத் தீடசை செய்து தமது ஆசிரியர் திருநாமத்துக்கேற்ப ‘நமசிவாயன்’ தீட்சா நாமம் சாத்தினார். தமது பரம்பரையிலே உபதேசம் செய்யப் பெற்றுவரும் சிவஞான போத முதலிய ஞான நூல்களை அவருக்கு உபதேசித்தனர். இந்த நமச்சிவாய மூர்த்திகள் தமது ஆசிரியராகிய ஸ்ரீ சித்தர் சிவப்பிரகாச தேசிகர் திருவாவடுதுறையிலே வகுத்த அறையிலே அவராணைப்படி எழுந்தருளியிருந்து சிவஞான போத உபதேச சித்தாந்த சைவ பரம்பரை நிலவுலகத்திலே நின்று  நிலவுமாறு ஆதீனத்தை நிலைனிருத்தினார். இதனை,

“திருந்துவட கயிலைதனிற் பரமசிவ நளித்த

சிவஞான போதமுணர் நந்திமுதற் சிறந்தே

வருங்குரவர் வெண்ணெய்நல்லூர் மெய்கண்ட தேவன்

வழங்கருட்சந் ததியினமச் சிவாயதே சிகனா

மிருங்குரவ னளித்தசிவப் பிரகாச தேச

னிலங்குமறை வனத்தருகோர் வனக்குகையி

                                  [லுறைநாட்

   பொருந்தியவன் றிருவடிக்கீழ் அவனருளே வலினாற்

போந்தருளா வடுதுறைவாழ் நமச்சிவா

[யனைபுகழ்வாம்”.

என்னும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர் திருவாக்கானறிப்படும். மூவலூரிலே நமது பரமாசாரியர் அவதாரம் செய்தருளிய திருமாளிகை இவ்வாதீனத்துக்குச் சொந்தமாகவுள்ளது. ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் கி.பி.14ஆம் நூற்றாண்டில் திருவாவடுதுறையில் திருமடாலயம் நிறுவினார்கள். தமது ஆசாரியார் ஆணையின் வண்ணம் அருள்மிகு ஞானமா நடராசப் பெருமானையும் அருள்மிகு வைத்தியநாதப் பெருமானையும் சிவாகமம் தவறாமல் பூசனை புரிந்து வந்தார்கள். அருள்திரு நமசிவாய மூர்த்திகள் பெருமையைக் கேள்வியுற்ற சூரியனார்கோயில் ஆதீனம் குருமுதல்வர் அருள்திரு சிவாக்கிரயோகிகள் திருவாவடுதுறைக்கு எழுந்தருளி அருள்திரு நமசிவாய மூர்த்திகளோடு உரையாடி மகிழ்வார்கள். அன்று முதல் இன்று வரை சூரியனார் கோயில் ஆதீனமும் திருவாவடுதுறை ஆதீனமும் நல்தொடர்புடன் விளங்குகிறது. இவ்வாதின அடியவர்களாகிய தம்பிரான் சுவாமிகளே சூரியனார் கோயில் ஆதீனக் குரு மகாசன்னிதானமாக  எழுந்தருளச் செய்யும் வழக்கமும் இருந்து வருகிறது. அருள்திரு நமசிவாய மூர்த்திகள் தம் குருவை நினைவு கூறும் வண்ணம் தம் அணுக்கத் தொண்டர் ஒருவருக்குச் சிவப்பிரகாச தேசிகர் என்று பெயர் சூட்டினார்கள்.

சிதம்பரம் அருள்மிகு நடராசர் திருக்கோயில் பூசையை வேலூர் நாயக்கரின் உயர் அதிகாரி முட்டுப்பெற முனைந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் அருள்திரு நமசிவாயமூர்த்திகளிடம் முறையிட தம்முடைய அணுக்கத் தொண்டரான சிவப்பிரகாசரை வேலூருக்கு அனுப்பி இலிங்கம நாயக்கரின் உதவியால் தடுத்து நிறுத்தி, சிதம்பரத்தில் வழக்கம் போல் அருள்மிகு நடராசப் பெருமான் பூசை வழிபாடுகள் செவ்வனே நடைபெற செய்தருளினார்கள்.

அருள்திரு நமசிவாயமூர்த்திகள் திருவாவடுதுறையில் தைத்திங்கள் அசுபதி திருநட்சத்திரத்தன்று சிவபிரானோடு இரண்டறக் கலத்தலாகிய சுத்தாத்துவித பரிபூரண நிலையை அடைந்தருளினார்கள். ஆதீன மடாலயத்தில் அருள்திரு நமசிவாயமூர்த்திகள் திருக்கோயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய திருவுருவம் சின்முத்திரையுடன் அருட்காட்சித் தருகிறது. வெவ்வேறு காலங்களில் தோன்றிய அருளாளர்கள் நமசிவாயமூர்த்திகளைப் போற்றிப் பண்டாரசாத்திரங்கள் உட்பட 22 நூல்கள் அருளியுள்ளார்கள்.

Menu Title